நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்!
“இவையெல்லாம் அழியப்போவதால், நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் தேவபக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்!”—2 பே. 3:11.
1. பேதுருவின் இரண்டாவது கடிதம் அன்று இருந்த கிறிஸ்தவர்களுக்குக் காலத்துக்கேற்ற வேண்டுகோள் என்று ஏன் சொல்லலாம்?
அப்போஸ்தலன் பேதுரு தேவ சக்தியின் தூண்டுதலால் தன்னுடைய இரண்டாவது கடிதத்தை எழுதிய சமயத்தில் கிறிஸ்தவச் சபை ஏற்கெனவே ஏகப்பட்ட துன்புறுத்தல்களை அனுபவித்திருந்தது; ஆனால், இது அவர்களுடைய பக்திவைராக்கியத்திற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் கொஞ்சமும் தடையாக இருக்கவில்லை. அதனால் சாத்தான் வேறொரு உத்தியைக் கையாண்டான்; இதை அவன் பலமுறை கையாண்டு வெற்றியும் கண்டிருக்கிறான். பேதுரு குறிப்பிடும் விதமாக, பொய்ப் போதகர்களைப் பயன்படுத்தி கடவுளுடைய மக்களின் மனதைக் கெடுக்க சாத்தான் முயன்றான். இந்தப் பொய்ப் போதகர்கள் ‘காமவெறி நிறைந்த கண்களை உடையவர்களாகவும்,’ ‘கட்டுக்கடங்கா பேராசையில் தேர்ச்சிபெற்ற இருதயத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.’ (2 பே. 2:1-3, 14; யூ. 4) அதனால்தான் கடவுளுக்குத் தொடர்ந்து உண்மையாய் இருக்கும்படியான இதயம் கனிந்த வேண்டுகோளைத் தன்னுடைய இரண்டாவது கடிதத்தில் பேதுரு விடுத்தார்.
2. பேதுருவின் இரண்டாவது கடிதத்தின் மூன்றாம் அதிகாரம் முக்கியமாக எதைப் பற்றி குறிப்பிடுகிறது, நம்மையே என்ன கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்?
2 “நான் இந்தக் கூடாரத்தில் இருக்கும்வரை உங்களுக்கு நினைப்பூட்டி உங்களைத் தூண்டியெழுப்புவது சரியென்று நினைக்கிறேன். ஏனென்றால், . . . சீக்கிரத்தில் நான் இந்தக் கூடாரத்தைவிட்டுப் போக வேண்டியிருக்கும். நான் போன பின்பு இந்த விஷயங்களை உங்களுக்கு நீங்களே எப்போதும் நினைப்பூட்டிக் கொள்வதற்காக, இப்போது என்னால் முடிந்த அனைத்தையும் செய்யப்போகிறேன்” என்று பேதுரு எழுதினார். (2 பே. 1:13-15) ஆம், சீக்கிரத்தில் தான் சாகப்போவதை பேதுரு அறிந்திருந்தார்; ஆனால், காலத்துக்கேற்ற அந்த அறிவுரை என்றும் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆம், அது பைபிளின் பாகமாக ஆனதால் இன்றுகூட நம் எல்லாராலும் அதை வாசிக்க முடிகிறது. பேதுருவின் இரண்டாவது கடிதத்தின் மூன்றாம் அதிகாரம் இன்று நமக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. ஏனென்றால், இந்தப் பொல்லாத உலகின் ‘கடைசி நாளை’ பற்றியும் அடையாள அர்த்தமுடைய வானமும் பூமியும் அழிந்துபோவதைப் பற்றியும் அது குறிப்பிடுகிறது. (2 பே. 3:3, 7, 10) அதில் பேதுரு நமக்கு என்ன அறிவுரை வழங்குகிறார்? அவருடைய அறிவுரைக்குக் கீழ்ப்படிவது யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற நமக்கு எப்படி உதவுகிறது?
3, 4. (அ) பேதுரு வியப்பூட்டும் தொனியில் என்ன சொல்கிறார், என்ன எச்சரிப்பை அளிக்கிறார்? (ஆ) என்ன மூன்று அம்சங்களைக் குறித்து நாம் சிந்திப்போம்?
3 சாத்தானின் உலகம் அழியப்போவதைப் பற்றிக் குறிப்பிட்ட பிறகு பேதுரு இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் தேவபக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்!” (2 பே. 3:11, 12) பேதுரு இங்கே கேள்வி கேட்கவில்லை, ஆனால், வியப்பூட்டும் தொனியில் சொல்கிறார் என்பது தெளிவாக உள்ளது. யெகோவாவின் சித்தத்தைச் செய்து தெய்வீக குணங்களைக் காட்டுகிறவர்கள் மட்டும்தான் ‘நீதியைச் சரிக்கட்டும் நாளில்’ பாதுகாக்கப்படுவார்கள் என்று பேதுரு அறிந்திருந்தார். (ஏசா. 61:2) எனவே, அவர் கூடுதலாக இவ்வாறு சொன்னார்: “அன்பானவர்களே, இவற்றை முன்கூட்டியே அறிந்திருக்கிற நீங்கள், நெறிகெட்டவர்களுடைய [பொய்ப் போதகர்களுடைய] தவறான கருத்துகளினால் கவர்ந்திழுக்கப்பட்டு நிலைதடுமாறிவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.”—2 பே. 3:17.
4 இந்த விஷயங்களை ‘முன்கூட்டியே அறிந்தவர்களோடு’ பேதுரு இருந்ததால், கடைசி நாட்களில் உத்தமத்தைக் காட்டுவதில் கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிக முக்கியம் என்பதை அவர் அறிந்திருந்தார். ஏன் முக்கியம் என்பதை அப்போஸ்தலன் யோவான் பின்னர் தெளிவாக விளக்கினார். பரலோகத்திலிருந்து சாத்தான் தள்ளப்பட்டதையும் ‘கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, இயேசுவுக்குச் சாட்சி கொடுக்கும் வேலையைச் செய்கிறவர்கள்’ மீது அவன் “மிகுந்த கோபத்தோடு” இருப்பதையும் அவர் தரிசனத்தில் கண்டார். (வெளி. 12:9, 12, 17) பரலோக நம்பிக்கையுள்ள கடவுளுடைய உண்மை ஊழியர்களும் உத்தமர்களாய் வாழும் அவர்களுடைய நண்பர்களான “வேறே ஆடுகளும்” சாத்தானின் தாக்குதல்களைத் தாக்குப்பிடிப்பதில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். (யோவா. 10:16) ஆனால், தனி நபர்களாக நாம் ஒவ்வொருவரும் என்ன செய்வோம்? நம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொள்வோமா? பின்வரும் அம்சங்களில் நாம் கடினமாக உழைத்தால் உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியும். (1) கடவுளுக்குப் பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்வது, (2) ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் எப்போதும் கறையற்றவர்களாகவும் மாசற்றவர்களாகவும் இருப்பது, (3) சோதனைகளைக் குறித்து சரியான மனநிலையைக் கொண்டிருப்பது. இவற்றை நாம் இப்போது சிந்திப்போம்.
கடவுளுக்குப் பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்
5, 6. என்ன குணங்களை வளர்த்துக்கொள்ள நாம் கடினமாய் முயல வேண்டும், அதற்கு நாம் ஏன் ‘முழு முயற்சியெடுக்க’ வேண்டும்?
5 தன்னுடைய இரண்டாவது கடிதத்தின் ஆரம்பத்தில் பேதுரு இவ்வாறு எழுதினார்: “உங்கள் விசுவாசத்தோடு ஒழுக்கத்தையும், ஒழுக்கத்தோடு அறிவையும், அறிவோடு சுயக்கட்டுப்பாட்டையும், சுயக்கட்டுப்பாடோடு சகிப்புத்தன்மையையும், சகிப்புத்தன்மையோடு தேவபக்தியையும், தேவபக்தியோடு சகோதரப் பாசத்தையும், சகோதரப் பாசத்தோடு அன்பையும் தாராளமாக வழங்குவதற்கு முழு முயற்சியெடுங்கள். இந்தப் பண்புகள் உங்களுக்குள் அதிகமதிகமாகப் பெருகினால், நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவில் நீங்கள் செயலற்றவர்களாகவும் பலனற்றவர்களாகவும் ஆகிவிட மாட்டீர்கள்.”—2 பே. 1:5-8.
6 கடவுளுக்குப் பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்ள உதவும் வேலைகளில் ஈடுபட நாம் ‘முழு முயற்சியெடுக்க’ வேண்டும் என்பது உண்மைதான். உதாரணத்திற்கு எல்லாக் கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ளவும், தினமும் பைபிள் வாசிக்கவும், தவறாமல் தனிப்பட்ட படிப்பில் ஈடுபடவும் முயற்சி தேவை. பிரயோஜனமான விதத்திலும் உற்சாகமூட்டும் விதத்திலும் குடும்ப வழிபாட்டைத் தொடர்ந்து செய்வதற்கு கடினமாய் முயற்சியும் நன்கு திட்டமிடுவதும் அவசியமாக இருக்கலாம். ஆனால், இவற்றை நாம் பழக்கமாகச் செய்து வந்தால் இவை நம் வாழ்க்கையின் அம்சமாகவே ஆகிவிடும், அதுவும் அதன் பலன்களை நாம் ருசித்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.
7, 8. (அ) குடும்ப வழிபாட்டைக் குறித்து சிலர் என்ன சொல்லியிருக்கிறார்கள்? (ஆ) இந்த ஏற்பாட்டிலிருந்து நீங்கள் எப்படிப் பயனடைந்திருக்கிறீர்கள்?
7 குடும்ப வழிபாட்டைக் குறித்து ஒரு சகோதரி சொல்கிறார்: “நிறையப் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள எங்களால் முடிந்தது.” மற்றொரு சகோதரி சொல்கிறார்: “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் புத்தகப் படிப்பை ஏன் நிறுத்தினார்களோ என்று நினைத்தேன். ஏனென்றால், எனக்கு ரொம்ப பிடித்த கூட்டம் அது. ஆனால், இப்போது நாங்கள் குடும்ப வழிபாட்டைச் செய்கையில் நமக்கு என்ன தேவை, எப்போது தேவை என்று யெகோவாவுக்கு மட்டும்தான் தெரியும் என்பதைப் புரிந்துகொண்டேன்.” ஒரு கணவர் சொல்கிறார்: “குடும்ப வழிபாடு எங்களுக்கு எந்தளவுக்கு உதவியிருக்கிறது என்பதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனக்கும் என் மனைவிக்கும் இருக்கும் குறிப்பிட்ட தேவைகளை மனதில் வைத்து நடத்தப்படும் இந்தக் கூட்டம் அருமையோ அருமை! கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களைக் காட்டுவதில் நாங்கள் இருவருமே முன்னேற்றம் செய்திருப்பது தெரிகிறது. அதோடு, முன்பைவிட இப்போது நாங்கள் ஊழியத்தை அனுபவித்து செய்கிறோம்.” ஒரு குடும்பத் தலைவர் சொல்கிறார்: “பிள்ளைகளே சொந்தமாக ஆராய்சி செய்கிறார்கள், நிறையப் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அப்படிச் செய்வதில் அவர்கள் அலாதி ஆனந்தம் அடைகிறார்கள். யெகோவாவுக்கு நம்முடைய கவலைகளெல்லாம் தெரியும், நம்முடைய ஜெபங்களுக்கு அவர் பதிலளிக்கிறார் என்பதை உறுதியாக நம்ப இந்த ஏற்பாடு எங்களுக்கு உதவியிருக்கிறது.” இந்த அருமையான ஆன்மீக ஏற்பாட்டைக் குறித்து நீங்களும் இப்படித்தான் உணர்கிறீர்களா?
8 சின்ன சின்ன விஷயங்களுக்காகக் குடும்ப வழிபாட்டை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள். ஒரு தம்பதியர் சொல்கிறார்கள்: “கடந்த நான்கு வாரமாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்கள் குடும்ப வழிபாட்டிற்கு ஏதாவது ஒரு தடை வந்தது, ஆனால் நாங்கள் அதற்கு இடம்கொடுக்காமல் தொடர்ந்து நடத்தினோம்.” உண்மைதான், சிலசமயம் ஏதாவது தவிர்க்க முடியாத காரணங்களினால் நீங்கள் இந்தப் படிப்பை வேறு நேரத்தில் செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால், ஒருகாலும் அதைச் செய்யாமல் இருந்துவிடாதீர்கள், ஆம், ஒரு வாரத்திற்குக்கூட!
9. எரேமியாவுக்கு யெகோவா எதை அளித்தார், அவருடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
9 இந்த விஷயத்தில் எரேமியா தீர்க்கதரிசி நமக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு. யெகோவா அளித்த ஆன்மீக உணவு அவருக்கு அவசியமாக இருந்தது, அதற்காக அவர் அதிக நன்றியுள்ளவராக இருந்தார். செவிகொடுத்து கேட்காத மக்களிடம் சகிப்புத்தன்மையுடன் தொடர்ந்து பிரசங்கிக்க தேவையான பலத்தை அந்த ஆன்மீக உணவிலிருந்து பெற்றார். ‘கர்த்தருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் இருந்தது’ என்று அவர் சொன்னார். (எரே. 20:8, 9) எருசலேம் அழியும்வரை அவர் எதிர்ப்பட்ட கஷ்டங்களைச் சகித்துக்கொள்வதற்கும் அது அவருக்கு உதவியது. இன்று நம்மிடம் முழு பைபிள் இருக்கிறது. அதை நாம் கருத்தூன்றி படித்து, கடவுள் சிந்திக்கும் விதமாகவே நாமும் சிந்தித்தால் எரேமியாவைப் போலவே நம்மாலும் சந்தோஷமாய் ஊழியத்தில் தொடர்ந்து ஈடுபடவும், சோதனையின் மத்தியிலும் உத்தமமாய் நிலைத்திருக்கவும், ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் எப்போதும் சுத்தமாக இருக்கவும் முடியும்.—யாக். 5:10.
எப்போதும் “கறையற்றவர்களாகவும் மாசற்றவர்களாகவும்” இருங்கள்
10, 11. “கறையற்றவர்களாகவும் மாசற்றவர்களாகவும்” இருப்பதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் ஏன் செய்ய வேண்டும், அப்படிச் செய்வதில் என்னவெல்லாம் உட்படுகிறது?
10 நாம் முடிவின் காலத்தில் வாழ்ந்துவருகிறோம் என்பதை கிறிஸ்தவர்களான நாம் அறிந்திருக்கிறோம். எனவே, யெகோவா வெறுக்கும் காரியங்களான பேராசை, ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை, வன்முறை போன்றவற்றில் இந்த உலகம் ஊறிப்போயிருப்பதை நினைத்து நாம் ஆச்சரியப்படுவதில்லை. வெளிப்படுத்துதல் 2:13, 14-ன்படி சாத்தானின் தந்திரத்தை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்: ‘கடவுளுடைய மக்களை பயமுறுத்தி என் வழிக்கு கொண்டுவர முடியவில்லை என்றால், அவர்களுடைய மனதைக் கெடுத்து என் வழிக்குக் கொண்டுவர முடியும்.’ எனவே, பேதுருவின் அன்பான எச்சரிப்பை நாம் மனதில் வைக்க வேண்டும்: “[கடவுள்] முன்னிலையில் கறையற்றவர்களாகவும் மாசற்றவர்களாகவும் சமாதானமுள்ளவர்களாகவும் காணப்படுவதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.”—2 பே. 3:14.
11 “உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்” என்ற சொற்றொடர் “முழு முயற்சியெடுங்கள்” என்று பேதுரு ஆரம்பத்தில் கொடுத்த ஊக்கமூட்டுதலைப் போலவே இருக்கிறது. சாத்தானின் உலகிலுள்ள அசிங்கங்களிலிருந்து “கறையற்றவர்களாகவும் மாசற்றவர்களாகவும்” இருப்பதற்கு நாம் ஊக்கமாய் முயற்சி செய்ய வேண்டும் என்று யெகோவாவுக்கு நன்கு தெரியும்; அதனால்தான் பேதுருவை இப்படி எழுதும்படி தம் சக்தியால் தூண்டினார். கெட்ட ஆசைகளிலிருந்து நம்முடைய இருதயத்தைப் பாதுகாக்கவும் நாம் கடின முயற்சி எடுக்க வேண்டும். (நீதிமொழிகள் 4:23-ஐயும் யாக்கோபு 1:14, 15-ஐயும் வாசியுங்கள்.) அதோடு, நாம் கிறிஸ்தவர்களாக வாழ்வதைப் பார்த்து திகைப்படைகிறவர்களுக்கும் ‘[நம்மை] சதா பழித்துப் பேசுகிறவர்களுக்கும்’ எதிராக உறுதியாய் நிற்கவும் கடின முயற்சி எடுக்க வேண்டும்.—1 பே. 4:4.
12. லூக்கா 11:13-ல் என்ன வாக்குறுதி அளிக்கப்படுகிறது?
12 நாம் அபூரணர்களாக இருப்பதால் நல்லது செய்வது நமக்குக் கடினமாக இருக்கிறது. (ரோ. 7:21-25) நாம் யெகோவாமீது சார்ந்திருந்தால் மட்டும்தான் நம்மால் இதில் வெற்றிக்கான முடியும்; ஏனென்றால், அவருடைய சக்திக்காக உண்மையாய் கேட்பவர்களுக்கு அவர் அதைத் தாராளமாக அளிக்கிறார். (லூக். 11:13) கடவுளுக்குப் பிரியமான குணங்களை வளர்க்க அந்தச் சக்தி நமக்கு உதவுகிறது. இந்தக் குணங்கள் வாழ்க்கையில் நாம் எதிர்ப்படும் சோதனைகளை வெல்வதற்கு மட்டுமல்ல, அந்தச் சோதனைகளால் வரும் கஷ்டங்களை, அதுவும் யெகோவாவின் நாள் நெருங்க நெருங்க அதிகரிக்கும் கஷ்டங்களை, சமாளிப்பதற்கும் நமக்கு உதவும்.
கஷ்டங்கள் உங்களைப் பலப்படுத்தட்டும்
13. வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்ப்படும்போது அவற்றைச் சகிக்க எது நமக்கு உதவும்?
13 நாம் இந்தப் பொல்லாத உலகத்தில் இருக்கும்வரை பிரச்சினை இல்லாத வாழ்க்கை என்பது வெறும் கனவுதான். ஆனால், பிரச்சினைகளைக் கண்டு சோர்ந்து போவதைவிட கடவுள்மீது உங்களுக்கு இருக்கும் அன்பை நிரூபிப்பதற்கும், அவர்மீதும் அவருடைய வார்த்தைமீதும் உங்களுக்கு இருக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கும் கிடைத்த வாய்ப்பாக அவற்றை ஏன் கருதக்கூடாது? சீடரான யாக்கோபு எழுதினார்: “என் சகோதரர்களே, நீங்கள் பல்வேறு சோதனைகளை எதிர்ப்படும்போது அதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுங்கள். இப்படிச் சோதனைகளால் பரீட்சிக்கப்படுகிற உங்கள் விசுவாசம் சகிப்புத்தன்மையை உண்டாக்கும் என்று அறிந்திருக்கிறீர்களே.” (யாக். 1:2-4) அதுமட்டுமல்ல, “தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுவிக்க . . . யெகோவா அறிந்திருக்கிறார்” என்பதையும் மறந்துவிடாதீர்கள்.—2 பே. 2:9.
14. யோசேப்பின் உதாரணம் உங்களுக்கு எப்படி உற்சாகம் அளிக்கிறது?
14 யாக்கோபின் மகன் யோசேப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய அண்ணன்களே அவரை அடிமையாக விற்றுவிட்டார்கள். (ஆதி. 37:23-28; 42:21) துளிகூட நெஞ்சில் ஈரமில்லாமல் அவரை அப்படி நடத்தியதற்காக கடவுள் மேல் விசுவாசம் இழந்துவிட்டாரா? கடவுள் கஷ்டங்களை அனுமதித்ததால் அவர்மீது கோபம் கொண்டாரா? இல்லை என பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. யோசேப்பின் கஷ்டங்கள் அத்துடன் முடிந்துவிடவில்லை. கற்பழிக்க முயன்றதாகப் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறையும் தேவபக்தி காட்டுவதில் அவர் கொஞ்சமும் தளரவில்லை. (ஆதி. 39:9-21) மாறாக, துன்பங்கள் தன்னைப் பலப்படுத்த அனுமதித்தார், அதனால் ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெற்றார்.
15. நகோமியின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
15 உண்மைதான், கஷ்டங்கள் நம்மைத் துவளச் செய்யலாம், மனஉளைச்சலை அளிக்கலாம். ஒருவேளை யோசேப்பும் சிலசமயம் அப்படி உணர்ந்திருக்கலாம். கடவுளுடைய உண்மை ஊழியர்கள் சிலரும் அப்படி உணர்ந்திருக்கிறார்கள். நகோமியை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தன்னுடைய கணவனையும் இரண்டு மகன்களையும் மரணத்தில் பறிகொடுத்துவிட்டார். “என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் [அதாவது, கசப்பு] என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்” என்றார். (ரூத் 1:20, 21) நகோமியின் உணர்ச்சிகள் இயல்பானவை, அவருடைய வேதனையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. என்றாலும், யோசேப்பைப் போலவே அவரும் தன்னுடைய விசுவாசத்தில் துவண்டுவிடவும் இல்லை, யெகோவாவுக்குத் தன் உத்தமத்தைக் காட்டுவதில் தளரவும் இல்லை. அதற்காக அந்த அருமையான பெண்மணியை யெகோவா ஆசீர்வதித்தார். (ரூத் 4:13-17, 22) அதுமட்டுமல்ல, சீக்கிரத்தில் இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறும்போது சாத்தானும் அவனுடைய பொல்லாத உலகமும் செய்த எல்லா அக்கிரமங்களையும் அவர் சுவடு தெரியாமல் ஒழிக்கப் போகிறார். அப்போது “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.”—ஏசா. 65:17.
16. ஜெபத்தைக் குறித்த நம்முடைய மனநிலை எப்படி இருக்க வேண்டும், ஏன்?
16 நமக்கு எப்படிப்பட்ட துன்பங்கள் வந்தாலும் சரி, கடவுள் எப்போதும் நம்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதை அறிவது சகித்திருக்க நமக்கு உதவும். (ரோமர் 8:35-39-ஐ வாசியுங்கள்.) நம்மைச் சோர்வடையச் செய்வதற்கு சாத்தான் தொடர்ந்து முயலலாம். ஆனால், நாம் ‘தெளிந்த புத்தியோடும்’ ‘ஜெபம் செய்ய விழிப்புடனும்’ இருந்தால் அவன் நிச்சயம் தோல்வி அடைவான். (1 பே. 4:7) “ஆகவே, விழித்திருந்து எந்நேரமும் மன்றாடுங்கள்; அப்படிச் செய்தால்தான், நடக்கப்போகிற இவை எல்லாவற்றிலிருந்தும் உங்களால் தப்பிக்க முடியும், மனித குமாரனுக்கு முன்பாக நிற்கவும் முடியும்.” (லூக். 21:36) “மன்றாடுங்கள்” என்று இயேசு சொன்னதைக் கவனியுங்கள். அது மிகவும் கெஞ்சி வேண்டிக்கொள்வதைக் குறிக்கிறது. இப்படி மன்றாடும்படி இயேசு கொடுத்த அறிவுரை, நாம் அவருக்கு முன்பும் அவருடைய தகப்பனுக்கு முன்பும் நிற்பதை ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ள இது சமயமல்ல என்பதை வலியுறுத்தியது. யெகோவாவால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் உள்ளவர்கள் மட்டும்தான் அவருடைய நாளில் தப்பித்துக்கொள்வார்கள்.
யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய் இருங்கள்
17. உங்கள் பிராந்தியத்தில் ஊழியம் செய்வது சவாலாக இருந்தால் பூர்வ கால தீர்க்கதரிசிகளின் நல்ல உதாரணத்திலிருந்து நீங்கள் எப்படிப் பயனடையலாம்?
17 “நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் தேவபக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்!” என்று பேதுரு சொன்ன வார்த்தைகள், புத்துணர்ச்சி அளிக்கும் ஆன்மீக காரியங்களில், அதாவது ‘தேவபக்திக்குரிய செயல்களில்’ ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைப்பூட்ட வேண்டும். (2 பே. 3:11) அப்படிப்பட்ட செயல்களில், நற்செய்தியைப் பிரசங்கிப்பதுதான் பிரதான செயலாகும். (மத். 24:14) சில பிராந்தியங்களில் பிரசங்க வேலையைச் செய்வது நமக்குச் சவாலாக இருக்கலாம். உதாரணத்திற்கு, மக்கள் நாம் சொல்வதை அலட்சியம் செய்யும்போதோ நம்மை எதிர்க்கும்போதோ அன்றாட வேலைகளில் மூழ்கிவிடும்போதோ அப்படி இருக்கலாம். பூர்வ காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்களும் இதேபோன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் பிரசங்கிப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை, மாறாக கடவுளின் செய்தியை “தினந்தினம்” சொல்லி வந்தார்கள். (எரேமியா 7:24-26-ஐ வாசியுங்கள்; 2 நா. 36:15, 16) பொறுமையாய் சகித்திருக்க எது அவர்களுக்கு உதவியது? அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மக்களுடைய கண்ணோட்டத்தில் பார்க்காமல் யெகோவாவுடைய கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். அதோடு, கடவுளுடைய பெயரைத் தாங்கியிருப்பதை மாபெரும் பாக்கியமாகவும் கருதினார்கள்.—எரே. 15:16.
18. எதிர்காலத்தில் கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்துவதில் பிரசங்க வேலை என்ன முக்கியப் பங்கு வகிக்கும்?
18 யெகோவாவுடைய பெயரையும் நோக்கத்தையும் அறிவிக்கும் பாக்கியம் நமக்கும் கிடைத்திருக்கிறது. இதைச் சற்று யோசித்து பாருங்கள்: நாம் பிரசங்க வேலையில் ஈடுபடுவதால், கடவுள் கொண்டுவரப்போகும் மகா நாளில், ‘இந்த விஷயமெல்லாம் எங்களுக்கு தெரியவே தெரியாது’ என்று எதிரிகளால் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. சொல்லப்போனால், பூர்வ காலத்தில் வாழ்ந்த பார்வோனைப் போல் இவர்களும் யெகோவாவே தங்களுக்கு எதிராக யுத்தம் செய்கிறார் என்று ஒத்துக்கொள்வார்கள். (யாத். 8:1, 20; 14:25) அதேசமயம், தம்முடைய உண்மை ஊழியர்கள்தான் தமக்குப் பிரதிநிதிகளாக இருந்தார்கள் என்று யெகோவா தெளிவாகத் தெரிவிப்பதன் மூலம் அவர்களைக் கௌரவிப்பார்.—எசேக்கியேல் 2:5; 33:33-ஐ வாசியுங்கள்.
19. யெகோவா பொறுமையாக இருக்கும் இந்தக் காலத்தை நாம் நல்ல விதத்தில் பயன்படுத்த விரும்புவதை எப்படிக் காட்டலாம்?
19 தன்னுடைய இரண்டாவது கடிதத்தின் முடிவில் பேதுரு சக வணக்கத்தாருக்கு இவ்வாறு எழுதினார்: “நம் எஜமானருடைய பொறுமை நமக்கு மீட்பு என்று எண்ணுங்கள்.” (2 பே. 3:15) யெகோவா பொறுமையாக இருக்கும் இந்தக் காலத்தை நாம் நல்ல விதத்தில் பயன்படுத்துவோமாக. எப்படி? அவருக்குப் பிடித்தமான குணங்களை வளர்த்துக்கொண்டு, “கறையற்றவர்களாகவும் மாசற்றவர்களாகவும்” நிலைத்திருந்து, துன்பங்களைக் குறித்து சரியான மனநிலையை வளர்த்துக்கொண்டு, கடவுளுடைய சேவையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதன் மூலம். அப்படிச் செய்கையில், “புதிய வானமும் புதிய பூமியும்” அள்ளித்தருகிற ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் வாய்ப்பை நாம் பெறுவோம்.—2 பே. 3:13.
நினைவிருக்கிறதா?
• கடவுளுக்குப் பிடித்த குணங்களை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
• நாம் எப்படித் தொடர்ந்து “கறையற்றவர்களாகவும் மாசற்றவர்களாகவும்” இருக்கலாம்?
• யோசேப்பிடமிருந்தும் நகோமியிடமிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
• பிரசங்க வேலையில் கலந்துகொள்வதை ஏன் ஒரு மாபெரும் பாக்கியம் என்று சொல்லலாம்?
[பக்கம் 9-ன் படம்]
கணவர்களாகிய நீங்களும் உங்கள் குடும்பமும் கடவுளுக்குப் பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்ள எது உதவும்?
[பக்கம் 10-ன் படங்கள்]
பிரச்சினைகளை யோசேப்பு சமாளித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?