உதவிக்காகக் கூப்பிடுவோரை யார் விடுவிப்பார்?
‘தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளை . . . கொடுத்தருளும் . . . [ஏனெனில்] கூப்பிடுகிற எளியவனை . . . அவர் விடுவிப்பார்.’—சங். 72:1, 12.
1. தாவீதின் விஷயத்தில், யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
பண்டைய இஸ்ரவேலில் வாழ்ந்த தாவீது ராஜா எழுதியதாகத் தெரிகிற இந்த வார்த்தைகள் மனதிற்கு எவ்வளவாய் ஆறுதலளிக்கின்றன! இதை எழுதுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர் பத்சேபாளுடன் தவறான உறவு கொண்டதால் மனமுடைந்து போயிருந்தார். அந்தச் சமயத்தில், யெகோவாவிடம் அவர் இவ்வாறு கெஞ்சி மன்றாடினார்: “உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். . . . என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. . . . இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.” (சங். 51:1-5) இரக்கமுள்ளவரான யெகோவா நாம் பாவிகள் என்பதைப் புரிந்துகொள்கிறார்.
2. சங்கீதம் 72 நமக்கு என்ன சொல்கிறது?
2 நம்முடைய பரிதாபகரமான சூழ்நிலையை யெகோவா நன்கு அறிந்திருக்கிறார். என்றாலும், ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்டபடி, கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜா, “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் . . . விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.” (சங். 72:12, 13) அந்த விடுதலை எப்படிக் கிடைக்கும்? சங்கீதம் 72 இதற்குப் பதிலளிக்கிறது. தாவீதின் மகனாகிய சாலொமோனின் ஆட்சி சம்பந்தமாக இயற்றப்பட்ட இந்தப் பாடல், கடவுளின் மகனான இயேசு கிறிஸ்துவின் ஆட்சி மனிதரின் துயரை எப்படித் துடைக்கும் என்பதற்கு ஒரு முற்காட்சியை அளிக்கிறது.
கிறிஸ்துவினுடைய ஆட்சியின் முற்காட்சி
3. சாலொமோன் எதைத் தரும்படி கேட்டார், கடவுள் அவருக்கு எதைக் கொடுத்தார்?
3 வயது முதிர்ந்த தாவீது தன் மகன் சாலொமோனை ராஜாவாக்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்த பிறகு, அவருக்கு அறிவுரைகளைக் கொடுத்தார்; அவற்றை, சாலொமோன் உண்மையோடு கடைப்பிடித்தார். (1 இரா. 1:32-35; 2:1-3) பிறகு, ஒரு சொப்பனத்தில் யெகோவா சாலொமோனுக்குத் தரிசனமாகி, “நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்” என்று சொன்னார். சாலொமோன் ஒரேவொரு காரியத்தையே கேட்டார். அதாவது, “உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்” என்று கேட்டார். சாலொமோனின் இந்தத் தாழ்மையான வேண்டுகோளுக்கு இணங்க அவர் கேட்டதற்கும் அதிகமாக கடவுள் கொடுத்தார்.—1 இரா. 3:5, 9-13.
4. சாலொமோனுடைய ஆட்சியைப் பற்றி அவருடைய காலத்தில் வாழ்ந்த ஒரு ராணி என்ன சொன்னார்?
4 சாலொமோனுடைய ஆட்சிமீது யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்ததால், அவருடைய ஆட்சிக்காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் கண்டிராதளவுக்கு சமாதானமும் செழுமையும் கொடிகட்டிப் பறந்தன. (1 இரா. 4:25) சாலொமோனுடைய ஆட்சியின் மகிமையைப் பார்க்க வந்தவர்களில் பெரும் பரிவாரத்தோடு வந்த சேபா நாட்டு ராணியும் அடங்குவார். சாலொமோனிடம் அவர்: ‘உம்மை . . . குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று. . . . இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை . . . நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது’ என்று சொன்னார். (1 இரா. 10:1, 6, 7) சாலொமோனை விடவும் அதிகமான ஞானத்தை இயேசு பெற்றிருந்தார்; அதனால்தான், “இதோ! சாலொமோனைவிடப் பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்” என்று தம்மைப் பற்றி இயேசுவால் சொல்ல முடிந்தது.—மத். 12:42.
பெரிய சாலொமோனின் ஆட்சியில் விடுதலை
5. சங்கீதம் 72 எதை வெளிப்படுத்துகிறது, அது என்ன முற்காட்சியை அளிக்கிறது?
5 பெரிய சாலொமோனாகிய இயேசு கிறிஸ்துவின் ஆட்சியில் கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு 72-ஆம் சங்கீதத்திலுள்ள வசனங்களை நாம் இப்போது ஆராயலாம். (சங்கீதம் 72:1-4-ஐ வாசியுங்கள்.) ‘சமாதானப் பிரபுவாகிய’ தமது மகன் இயேசு கிறிஸ்துவின் ‘ராஜாதிகாரத்தை’ பற்றி யெகோவா எப்படி உணருகிறார் என்பதை இந்தச் சங்கீதம் வெளிப்படுத்துகிறது. (ஏசா. 9:6, 7, திருத்திய மொழிபெயர்ப்பு.) கடவுளுடைய கட்டளைப்படி, அந்தப் பெரிய சாலொமோன் ‘சிறுமைப்படுகிறவர்களை நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சிப்பார்.’ அவருடைய ஆட்சி சமாதானமுள்ளதாயும் நீதியுள்ளதாயும் இருக்கும். இயேசு பூமியில் இருந்தபோது, வரவிருக்கும் தம்முடைய ஆயிர வருட ஆட்சியில் என்னவெல்லாம் செய்வார் என்பதைச் சிறிய அளவில் செய்து காட்டினார்.—வெளி. 20:4.
6. இயேசு தம் ஆட்சியில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றிய என்ன முற்காட்சிகளை அளித்தார்?
6 சங்கீதம் 72-ன் நிறைவேற்றமாக இயேசு கிறிஸ்து மனிதகுலத்திற்கு என்ன செய்வார் என்பதற்கு முற்காட்சியை அளிக்கும் சில காரியங்களைச் சிந்திக்கலாம். துன்பப்படுவோரிடம் அவர் மிகுந்த கரிசனை காட்டியது நம்மை அவரிடம் ஈர்க்கிறது. (மத். 9:35, 36; 15:29-31) உதாரணமாக, தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவிடம் வந்து, “உங்களுக்கு மனமிருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்” என்று சொல்லி மன்றாடினான். அதற்கு இயேசு, “எனக்கு மனமிருக்கிறது, நீ சுத்தமாகு” என்றார். உடனே தொழுநோய் நீங்கி அவன் குணமானான். (மாற். 1:40-42) பிறகு, தன் ஒரே மகனை மரணத்தில் பறிகொடுத்திருந்த ஒரு கைம்பெண்ணை இயேசு பார்த்தார். “அவள்மீது மனதுருகி,” இறந்துபோயிருந்த மகனைப் பார்த்து “எழுந்திரு!” என்றார். அவன் மீண்டும் உயிர்பெற்று எழுந்து உட்கார்ந்தான்!—லூக். 7:11-15.
7, 8. இயேசுவுக்கு அளிக்கப்பட்ட வல்லமையால் அவர் செய்த சில காரியங்கள் யாவை?
7 அற்புதங்களைச் செய்யும் அதிகாரத்தை இயேசுவுக்கு யெகோவா அளித்திருந்தார். ‘பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் கஷ்டப்பட்டுவந்த ஒரு பெண்ணை’ அவர் குணமாக்கியதிலிருந்து இது தெரிகிறது. “அநேக மருத்துவர்கள் அளித்த சிகிச்சைகளால் அவள் மிகுந்த வேதனை அடைந்திருந்தாள், தன்னிடம் இருந்ததையெல்லாம் செலவழித்திருந்தாள்;” ஆனாலும், அவளுடைய நிலைமை மிகவும் மோசமாகவே ஆனது. அதனால், அவள் கூட்டத்திற்குள் நுழைந்து இயேசுவைத் தொட்டாள்; இது, இரத்தப்போக்கு உள்ளவருக்கான திருச்சட்டத்தை மீறிய செயலாகும். (லேவி. 15:19, 25) தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதை இயேசு உடனடியாக உணர்ந்தார்; அதனால் என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். அப்போது அந்தப் பெண், “பயத்தோடும் நடுக்கத்தோடும் அவர்முன் வந்து மண்டியிட்டு, எல்லா உண்மையையும் சொன்னாள்.” யெகோவாதான் அந்தப் பெண்ணைக் குணப்படுத்தினார் என்பதை உணர்ந்த இயேசு அவளிடம் கனிவாக நடந்துக்கொண்டு, இவ்வாறு சொன்னார்: “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது. சமாதானமாகப் போ. உன்னைப் பாடுபடுத்திய நோயிலிருந்து விடுபட்டு நலமாயிரு.”—மாற். 5:25-27, 30, 33, 34.
8 இயேசுவுக்குக் கடவுள் கொடுத்திருந்த வல்லமையால் வியாதிப்பட்டவர்களைக் குணமாக்க முடிந்தது; அது, பார்வையாளர்கள் மீதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். உதாரணமாக, தம்முடைய பிரசித்திபெற்ற மலைப்பிரசங்கத்தைக் கொடுப்பதற்கு முன்பு மக்களை இயேசு குணப்படுத்தியதைக் கண்ட அநேகர் நிச்சயமாகவே அசந்துபோயிருப்பார்கள். (லூக். 6:17-19) இயேசுதான் மேசியா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள யோவான் ஸ்நானகர் தன் இரண்டு சீடர்களை அனுப்பியபோது இயேசு, ‘பலவித நோய்களையும் கொடிய வியாதிகளையும் நீக்கி, பேய்களைத் துரத்தி அநேகரை அவர் குணமாக்குவதையும், பார்வையற்ற அநேகருக்குப் பார்வை அளிப்பதையும்’ அவர்கள் கண்டார்கள். இயேசு அந்த இரண்டு சீடர்களிடம், “நீங்கள் பார்த்ததையும் கேட்டதையும் யோவானிடம் போய்த் தெரிவியுங்கள்: பார்வையற்றவர்கள் பார்வை பெறுகிறார்கள், நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள், தொழுநோயாளிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதவர்கள் கேட்கிறார்கள், இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி சொல்லப்படுகிறது” என்றார். (லூக். 7:19-22) அந்தச் செய்தி யோவானை எந்தளவு உற்சாகப்படுத்தியிருக்கும்!
9. இயேசு செய்த அற்புதங்கள் எதற்கு முற்காட்சிகளாக இருந்தன?
9 ஆம், பூமியில் தம்முடைய ஊழியக் காலத்தின்போது துன்பப்படுவோருக்கு இயேசு அளித்த விடுதலை தற்காலிகமானதாகவே இருந்தது. இயேசு யாரையெல்லாம் குணப்படுத்தினாரோ, உயிர்த்தெழுப்பினாரோ அவர்களெல்லாரும் பிற்பாடு மரித்தார்கள். என்றாலும், அவர் பூமியில் இருந்தபோது செய்த அற்புதங்கள் எல்லாம் தம்முடைய மேசியானிய ஆட்சியில் மனிதகுலம் அனுபவிக்கவிருக்கும் நிரந்தரமான விடுதலைக்கு முற்காட்சிகளாக இருந்தன.
ஒரு பூஞ்சோலை பூமி அதிவிரைவில்!
10, 11. (அ) கடவுளுடைய அரசாங்கத்தின் ஆசீர்வாதங்கள் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும், இயேசுவின் ஆட்சி எப்படிப்பட்டதாய் இருக்கும்? (ஆ) பூஞ்சோலை பூமியில் கிறிஸ்துவுடன் யார் இருப்பார், என்றென்றும் வாழ அவன் என்ன செய்ய வேண்டும்?
10 பூஞ்சோலை பூமியில் வாழ்க்கை எப்படியிருக்கும் என சற்று கற்பனை செய்து பாருங்கள். (சங்கீதம் 72:5-9-ஐ வாசியுங்கள்.) உண்மையான ஒரே கடவுளை வழிபடுவோர் சூரியனும் சந்திரனும் இருக்கும் வரையில், ஆம் என்றென்றும், பூஞ்சோலை பூமியில் சந்தோஷமாய் வாழ்வார்கள்! ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, ‘புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போல’ புத்துணர்ச்சி அளிப்பவராய் இருப்பார்.
11 இந்தச் சங்கீதத்தின் நிறைவேற்றத்தை மனக்கண்ணில் காண்கையில், பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பு உங்கள் இதயத்தில் பொங்கியெழுகிறது, அல்லவா? கழுமரத்தில் அறையப்பட்ட குற்றவாளி ஒருவனிடம், “நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று இயேசு சொன்னபோது அவன் நிச்சயமாகவே சிலிர்த்துப் போயிருப்பான். (லூக். 23:43) இயேசுவின் ஆயிர வருட ஆட்சியின்போது அவன் உயிர்த்தெழுப்பப்படுவான். கிறிஸ்துவின் ஆட்சிக்கு அவன் கீழ்ப்பட்டு நடந்தால், பரிபூரண ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் அவனால் பூமியில் என்றென்றும் வாழ முடியும்.
12. கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது, உயிர்த்தெழுப்பப்படும் அநீதிமான்களுக்கு என்ன வாய்ப்பு அளிக்கப்படும்?
12 பெரிய சாலொமோனாகிய இயேசு கிறிஸ்துவின் ஆட்சியில், “நீதிமான் செழிப்பான்.” (சங். 72:7) அப்போது கிறிஸ்துவின் அன்பும் கனிவான பராமரிப்பும் அவர் பூமியில் இருந்தபோது காட்டிய விதமாகவே அபரிமிதமாக இருக்கும். கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகில், உயிர்த்தெழுப்பப்படும் ‘அநீதிமான்களுக்கும்’ யெகோவாவின் நீதிநெறிகளுக்கு இசைவாக வாழ்வதற்கு அருமையான வாய்ப்பு அளிக்கப்படும். (அப். 24:15) ஆனால், கடவுளுடைய சட்டங்களுக்கு இசைய நடக்காதவர்கள், அங்கே தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள்; புதிய உலகின் சமாதானத்தையும் அமைதியையும் கெடுத்துப் போடவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
13. கடவுளுடைய அரசாங்கம் எந்தளவு பரவலாக இருக்கும், அதன் சமாதானம் ஏன் ஒருபோதும் கெடுத்துப்போடப்படுவதில்லை?
13 பெரிய சாலொமோன் முழு பூமியையும் ஆட்சி செய்வார் என்பதைப் பின்வரும் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன: “ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், [ஐப்பிராத்து] நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார். வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்.” (சங். 72:8, 9) ஆம், இயேசு கிறிஸ்து முழு பூமியையும் ஆட்சி செய்வார். (சக. 9:9, 10) அவருடைய ஆட்சியையும் அது பொழியும் ஆசீர்வாதங்களையும் மதித்துணருபவர்கள் அதை மனதார ஏற்றுக்கொள்ளும் விதத்தில் “குனிந்து வணங்குவார்கள்.” மறுபட்சத்தில், மனம்திரும்பாத பாவிகள், ‘நூறு வயதுள்ளவர்களாக’ இருந்தாலும் சரி அழிக்கப்படுவார்கள். (ஏசா. 65:20) அவர்கள் “மண்ணை நக்குவார்கள்.”
இயேசு காட்டும் அனுதாபம்
14, 15. மனிதருடைய உணர்ச்சிகளை இயேசு அறிந்திருக்கிறார் என்றும் ‘கூப்பிடுகிற எளியவனை விடுவிப்பார்’ என்றும் நமக்கு எப்படித் தெரியும்?
14 அவல நிலையில் இருக்கிற பாவமுள்ள மனிதர், உதவிக்காக தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. (சங்கீதம் 72:12-14-ஐ வாசியுங்கள்.) பெரிய சாலொமோனாகிய இயேசு, நாம் அபூரணராய் இருப்பதை அறிந்திருப்பதால் நம்மீது அனுதாபம் காட்டுகிறார். அதுமட்டுமல்ல, அவர் நீதியின் நிமித்தம் துன்பப்பட்டார்; அதோடு, சோதனைகளைச் சந்திக்க கடவுளே அவரை அனுமதித்தார். ஏன், ‘வியர்வை இரத்தத் துளிகள்போல் தரையில் விழுமளவுக்கு’ அவர் உணர்ச்சிப்பூர்வமாயும் அவதிப்பட்டிருக்கிறாரே! (லூக். 22:44) அதன் பிறகு, கழுமரத்தில் “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று மிகுந்த சப்தமிட்டார். (மத். 27:45, 46) அவர் பட்ட எல்லாக் கஷ்டங்களின் மத்தியிலும், யெகோவாவிடமிருந்து அவரை விலக்க சாத்தான் எடுத்த எல்லா முயற்சியின் மத்தியிலும், யெகோவா தேவனுக்கு உண்மையுள்ளவராய் அவர் நிலைத்திருந்தார்.
15 நம்முடைய வேதனையை இயேசு பார்க்கிறார் என்றும் “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்” என்றும் நாம் நிச்சயமாய் இருக்கலாம். தம் தகப்பனைப் போல அவர் அன்போடும் கரிசனையோடும் ‘எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்பார்’; ‘இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குவார், அவர்களுடைய காயங்களைக் கட்டுவார்.’ (சங். 69:33; 147:3) இயேசு, ‘நம்மைப் போல் எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டவர்’; அதனால், ‘நம் பலவீனங்களைக் குறித்து [அவரால்] அனுதாபப்பட முடியும்.’ (எபி. 4:15) ராஜாவாகிய இயேசு கிறிஸ்து இப்போது பரலோகத்தில் ஆட்சி செய்வதையும் துன்பப்படுகிற மனிதருக்கு விடுதலை அளிக்க ஆவலாய் இருப்பதையும் அறிவது எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறது!
16. சாலொமோனால் எப்படித் தன் குடிமக்களிடம் அனுதாபம் காட்ட முடிந்தது?
16 சாலொமோனுக்கு ஞானமும் புத்திக்கூர்மையும் இருந்ததால், அவர் ‘எளியவனுக்கு இரங்கினார்’ என்று நிச்சயம் சொல்லலாம். அதே சமயத்தில், சோகமும் துயரமும் அவருடைய வாழ்க்கையையும் வாட்டி வதைத்தன. அவருடைய சகோதரனான அம்னோன் தன்னுடைய சகோதரியான தாமாரைக் கற்பழித்ததால், சாலொமோனுடைய இன்னொரு சகோதரனாகிய அப்சலோம் அம்னோனைக் கொலை செய்தான். (2 சா. 13:1, 14, 28, 29) அப்சலோம் தன் தகப்பனாகிய தாவீதின் சிம்மாசனத்தை அபகரிக்க முயன்றான், ஆனால் அது பலிக்கவில்லை; பிறகு, அவன் யோவாபால் கொலை செய்யப்பட்டான். (2 சா. 15:10, 14; 18:9, 14) பிற்பாடு, சாலொமோனுடைய சகோதரனாகிய அதோனியா தன்னை ராஜாவாக்கிக்கொள்ள முயன்றான். அவன் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் சாலொமோனுக்கு சாவு நிச்சயம். (1 இரா. 1:5) யெகோவாவுடைய ஆலயப் பிரதிஷ்டையின்போது சாலொமோன் ஜெபித்த விதத்திலிருந்து மனித துயரங்களைப் பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. தன்னுடைய குடிமக்கள் சம்பந்தமாக அவர் இவ்வாறு ஜெபித்தார்: அவனவன் ‘தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்திருக்கிறான் . . . தேவரீர் கேட்டு மன்னித்து, . . . அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலன் அளிப்பீராக.”—2 நா. 6:29-31.
17, 18. கடவுளுடைய ஊழியர்கள் சிலர் எப்படிப்பட்ட வேதனைகளைச் சமாளிக்க வேண்டியிருந்திருக்கிறது, அவற்றை அவர்கள் எப்படிச் சமாளித்திருக்கிறார்கள்?
17 நம்முடைய கடந்த கால வாழ்க்கையின் பாதிப்புகளால் நாம் ஒருவேளை ‘வியாகுலப்படலாம்.’ 30 வயதைத் தாண்டிய மேரிa என்ற கிறிஸ்தவச் சகோதரி இவ்வாறு எழுதுகிறார்: “நான் எப்போதுமே சந்தோஷமாய் இருக்க நல்ல காரணங்கள் இருக்கின்றன, ஆனால் முன்பு செய்த தவறுகள் அடிக்கடி நினைவுக்கு வரும்போது அவமானமும் அருவருப்பும் அடைகிறேன். அதனால் சோகத்தில் ஆழ்ந்துவிடுகிறேன். எல்லாமே நேற்று நடந்ததுபோல் நினைவுக்கு வரும்போது அழ வேண்டும்போல் இருக்கிறது. அந்த நீங்கா நினைவுகள், என்னை உதவாக்கரைபோல் உணரச் செய்கின்றன, குற்றவுணர்வும் என்னை வாட்டி வதைக்கிறது.”
18 கடவுளுடைய ஊழியர்கள் பலரும் இதே விதமாக உணரலாம்; ஆனால், அப்படிப்பட்ட எண்ணங்களைச் சமாளிப்பதற்கான பலத்தை அவர்கள் எப்படிப் பெறலாம்? “நம்பகமான நண்பர்களும் சபையிலுள்ள சகோதர சகோதரிகளுமே இப்போது என்னைச் சந்தோஷமாக வைத்துக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, யெகோவா கொடுத்துள்ள எதிர்கால வாக்குறுதிகள்மீது கவனம் செலுத்த முயலுகிறேன். உதவிக்காக நான் சிந்தும் கண்ணீரெல்லாம் ஆனந்தக் கண்ணீராய் மாறுமென உறுதியாய் நம்புகிறேன்” என மேரி கூறுகிறார். (சங். 126:5) கடவுள் நியமித்துள்ள ஆட்சியாளரான அவரது மகன்மீது நாம் நம்பிக்கை வைப்பது அவசியம். அவரைக் குறித்து இவ்வாறு முன்னறிவிக்கப்பட்டுள்ளது: “பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.” (சங். 72:13, 14) எவ்வளவு ஆறுதலளிக்கும் வார்த்தைகள்!
அமோக விளைச்சல் தரும் புதிய உலகம்
19, 20. (அ) சங்கீதம் 72 காட்டுகிறபடி, கடவுளுடைய அரசாங்கம் என்ன பிரச்சினையைத் தீர்க்கும்? (ஆ) கிறிஸ்துவின் ஆட்சிக்கான புகழ் முக்கியமாய் யாரைச் சேரும், அந்த ஆட்சி செய்யப்போகிற காரியங்களைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
19 கடவுளுடைய புதிய உலகில் பெரிய சாலொமோனுடைய ஆட்சியின்கீழ் நல்மனமுள்ளவர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என மீண்டும் உங்கள் மனத்திரையில் ஓடவிடுங்கள். “பூமியில் ஏராளமான தானியம் விளையும். மலைகளின் உச்சியில் அது நிரம்பிவழியும்” என நமக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. (சங். 72:16, NW) பொதுவாக, மலைகளின் உச்சியில் தானியம் விளையாது என்பதால், இந்த வார்த்தைகள் பூமி எந்தளவுக்கு மிகுந்த விளைச்சலைத் தரும் என்பதை வலியுறுத்துகின்றன. அதன் விளைச்சல் ‘லீபனோனைப் போல’ இருக்கும்; சாலொமோனுடைய ஆட்சியின்போது அந்த இடத்தில் ஏராளமான விளைச்சல் இருந்தது. சற்று யோசித்துப் பாருங்கள்! உணவு பற்றாக்குறையோ, ஊட்டச்சத்து குறைவோ, பட்டினியோ இனி இருக்காது! அப்போது, எல்லாருமே ‘கொழுமையான பதார்த்தங்கள்’ நிறைந்த ‘விருந்தை’ அனுபவித்து மகிழ்வார்கள்.—ஏசா. 25:6-8; 35:1, 2.
20 இந்த எல்லா ஆசீர்வாதங்களுக்கான புகழ் யாரைச் சேரும்? நித்திய ராஜாவும் சர்வலோக ஆட்சியாளருமான யெகோவா தேவனுக்கே முக்கியமாய்ச் சேரும். சொல்லப்போனால், நாம் எல்லாருமே ஆனந்தமாய் நம் சத்தத்தை உயர்த்தி அழகான இச்சங்கீதத்தின் நெஞ்சைத் தொடும் முடிவான வரிகளைப் பாடுவோம்: “அவருடைய நாமம் [ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவுடைய பெயர்] என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள். இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு [யெகோவா தேவனுக்கு] ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர். அவருடைய மகிமைபொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.”—சங். 72:17-19.
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• சங்கீதம் 72-லுள்ள தீர்க்கதரிசனம் எதற்கு முற்காட்சியை அளித்தது?
• பெரிய சாலொமோன் யார், அவருடைய ஆட்சி எவ்வளவு பரவலாக இருக்கும்?
• சங்கீதம் 72-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களில் உங்கள் மனதைக் கவர்ந்தது எது?
[பக்கம் 29-ன் படம்]
சாலொமோனுடைய ஆட்சியில் இருந்த செழுமை எதற்கு முன்நிழலாக இருந்தது?
[பக்கம் 32-ன் படம்]
பெரிய சாலொமோனுடைய ஆட்சியில் பூஞ்சோலை பூமியில் வாழ எடுக்கும் எந்த முயற்சியும் வீண்போகாது