கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
சுயதெரிவு—மனிதருக்குக் கடவுள் தந்த பரிசு
பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி வைப்பது பெற்றோரின் கடமை. பெற்றோர் நல்ல முன்மாதிரி வைத்தால் பிள்ளைகள் நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளலாம், வாழ்க்கையில் ஞானமான தீர்மானங்களைச் செய்யலாம். வருத்தகரமாக, அநேக பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி வைப்பதில்லை. அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த பிள்ளைகள் நல்லவர்களாக இருக்க வாய்ப்பே இல்லையா? அப்படிச் சொல்ல முடியாது. நம்பிக்கையளிக்கும் விஷயம் என்னவென்றால், கடவுளாகிய யெகோவா, நம் ஒவ்வொருவருக்கும் சுயமாய்த் தெரிவுசெய்யும் சுதந்திரத்தைக் கொடுத்து நம்மைக் கௌரவித்திருக்கிறார். எசேக்கியாவின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்; இதை 2 இராஜாக்கள் 18:1-7-ல் பார்க்கலாம்.
யூதாவை ஆண்ட ஆகாஸ் ராஜாவின் மகன்தான் எசேக்கியா. (வசனம் 1) ஆகாஸ், தனது குடிமக்களை யெகோவாவின் உண்மை வணக்கத்திலிருந்து வழிவிலகச் செய்தான். இந்தப் பொல்லாத ராஜா, பாகால் வணக்கத்தில் ஈடுபட்டான்; நரபலி செலுத்துகிற பழக்கமும் அந்த வணக்கத்தில் உட்பட்டிருந்ததால் எசேக்கியாவின் சொந்த சகோதரர்களில் சிலரையும் வெட்டிக் கொன்றான். அதுமட்டுமல்ல, கடவுளுடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டான்; “எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டுபண்ணி . . . தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான்.” (2 நாளாகமம் 28:3, 24, 25) எசேக்கியாவின் அப்பா ஆகாஸ் மகா மட்டமானவர் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காக, எசேக்கியாவும் தன் அப்பாவின் வழியிலேயே நடந்தாரா?
எசேக்கியா, ராஜாவாக முடிசூட்டப்பட்ட பிறகு, தன் தகப்பனைப் போல் தான் நடக்கப்போவதில்லை என்பதைச் சீக்கிரத்திலேயே காட்டினார். அவர் எப்போதும் ‘கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தார்.’ (வசனம் 3) எசேக்கியா யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்தார்; ‘யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவரைப்போல் ஒருவரும் இருந்ததில்லை.’ (வசனம் 5) ஆட்சிக்கு வந்த முதல் வருடத்திலேயே இந்த இளம் ராஜா, உண்மை வணக்கம் சம்பந்தமாகப் பல சீர்திருத்தங்களைச் செய்தார்; மேடைகளை அகற்றினார், சிலைகளைத் தகர்த்தார், கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தார், உண்மை வணக்கத்தை நிலைநாட்டினார். (வசனம் 4; 2 நாளாகமம் 29:1-3, 27-31) அவர் ‘கர்த்தரைச் சார்ந்திருந்தார், . . . ஆகையால் கர்த்தர் அவரோடிருந்தார்.’—வசனங்கள் 6, 7.
தன் அப்பா போன வழியிலேயே தானும் போகாதிருக்க எசேக்கியாவுக்கு எது உதவியது? அவருடைய அம்மா அபியாவைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாவிட்டாலும், அவர் வைத்த நல்ல முன்மாதிரி எசேக்கியாவுக்கு ஒருவேளை உதவியிருக்குமோ? எசேக்கியாவின் பிறப்பிற்கு முன்பிருந்தே தீர்க்கதரிசனம் சொல்லிவந்த ஏசாயாவின் நல்ல முன்மாதிரி, இளவரசராய் இருந்த எசேக்கியாவுக்கு ஒருவேளை உதவியிருக்குமோ?a இதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. எதுவாயிருந்தாலும் சரி, ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது: எசேக்கியா தன் அப்பாவின் கெட்ட வழியைத் தெரிவுசெய்யாமல் கடவுள் காட்டிய நல்ல வழியைத் தெரிவுசெய்தார்.
பெற்றோர் வைத்த கெட்ட முன்மாதிரியால் பிள்ளைப் பருவத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்திருப்போர், எசேக்கியாவின் உதாரணத்திலிருந்து ஆறுதல் பெறலாம். கடந்த காலத்தில் நடந்தது நடந்ததுதான், அந்தக் கசப்பான அனுபவங்களை அகற்ற முடியாது. என்றாலும், அந்த அனுபவங்கள் நம்மைக் கெட்டவர்களாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. இன்று நாம் நல்ல தெரிவுகளைச் செய்தால், எதிர்காலத்தில் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிக்கலாம். எனவே, எசேக்கியாவைப் போல் நாமும் உண்மைக் கடவுளாகிய யெகோவாவை நேசிக்கவும் அவரை வழிபடவும் தெரிவுசெய்யலாம். அப்படிச் செய்தோமென்றால், இப்போது நமக்குத் திருப்தியான வாழ்க்கை அமையும், எதிர்காலத்தில் கடவுளுடைய புதிய உலகில் முடிவில்லா வாழ்வு கிடைக்கும். (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4) சுயதெரிவு எனும் ஒப்பற்ற பரிசைத் தந்து நம்மைக் கௌரவித்திருக்கும் அன்பான கடவுளுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! (w10-E 09/01)
[அடிக்குறிப்பு]
a ஏறக்குறைய கி.மு. 778 முதல் கி.மு. 732-க்குச் சற்றுப் பின்பு வரை ஏசாயா தீர்க்கதரிசனம் சொன்னார். எசேக்கியா ஆட்சி செய்ய ஆரம்பித்த வருடம் கி.மு. 745; அப்போது அவருக்கு 25 வயது.