இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
அவன் ‘யெகோவாவின் சந்நிதியில் வளர்ந்தான்’
திரண்டிருந்த இஸ்ரவேல் மக்கள்மீது சாமுவேல் தன் பார்வையைப் பதித்தார். ஆண்டாண்டு காலமாக அவர்களுக்குத் தீர்க்கதரிசியாகவும் நியாயாதிபதியாகவும் அவர் சேவை செய்து வந்திருந்தார். அவர்தான் அவர்களை கில்காலுக்கு வரச் சொல்லியிருந்தார். நம்முடைய காலண்டர்படி பார்த்தால் அது மே அல்லது ஜூன் மாதமாக இருந்திருக்கலாம்; வெயில் கொளுத்துகிற கோடைக்காலம் அது. அங்கிருந்த வயல்களில், அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த கோதுமைப் பயிர்கள் சூரிய ஒளியில் தகதகவென மின்னின. மக்கள் மத்தியிலோ மயான அமைதி! அவர்கள் செய்திருந்த தவறை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்! அதற்கு சாமுவேல் என்ன செய்தார்?
தாங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அந்த மக்கள் உணரவில்லை. தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் எனக் கேட்டு சாமுவேலை நச்சரித்திருந்தார்கள். இப்படிச் செய்தது... கடவுளாகிய யெகோவாவையும் அவருடைய தீர்க்கதரிசியையும் அவர்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டியது. அப்படியானால், அதுவரை அவர்களுக்கு ராஜாவாக இருந்த யெகோவாவையே அவர்கள் ஒதுக்கித்தள்ளிவிட்டார்கள்! அவர்களுடைய தவறை உணர்த்த சாமுவேல் என்ன செய்தார்?
அங்கே நிலவிய நிசப்தத்தைக் கலைத்து... சாமுவேல் அவர்களிடம் பேசத் தொடங்கினார். “எனக்கோ வயதாகித் தலை நரைத்துவிட்டது. . . . என் இளமைமுதல் இந்நாள்வரை நான் உங்களை வழிநடத்தியிருக்கிறேன்” என்றார். பஞ்சுபோல் வெண்மையாக இருந்த அவருடைய தலைமுடி அவருடைய வார்த்தைகளுக்கு வலு சேர்த்தது. (1 சாமுவேல் 11:14, 15; 12:2; பொது மொழிபெயர்ப்பு) சாமுவேலுக்கு வயதாகிவிட்ட போதிலும்... அவருடைய இளமைக் காலத்தில் நடந்தவையெல்லாம் அவர் மனதில் இன்னும் பசுமையாகவே இருந்தன. சிறு வயதில் எடுத்த நல்ல தீர்மானங்கள்தான் வயதான பிறகும் கடவுளாகிய யெகோவாவுக்கு விசுவாசமாக இருக்க... அவருக்குப் பயந்து நடக்க... சாமுவேலுக்கு உதவின.
அவரைச் சுற்றியிருந்த மக்கள் கடவுள்-பயம் இல்லாதவர்களாகவும் நம்பிக்கைத் துரோகிகளாகவும் இருந்ததால் சாமுவேல் தன் விசுவாசத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியிருந்தது; அதை அடிக்கடி பலப்படுத்திக்கொள்ளவும் வேண்டியிருந்தது. இன்றைக்கு நாமும் கடவுள்-பயம் இல்லாத ஓர் உலகத்தில்... ஊழல் நிறைந்த ஓர் உலகத்தில்... வாழ்வதால், நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சுலபமல்ல. சாமுவேலின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
சிறுவயதிலேயே ‘யெகோவாவுக்கு முன்பாகப் பணிவிடை செய்தவர்’
சாமுவேலின் பிள்ளைப்பருவம் சற்று வித்தியாசமானது. அவர் பால்குடி மறந்ததும் சீக்கிரத்திலேயே... சொல்லப்போனால், கிட்டத்தட்ட நான்கு வயதிலேயே... சீலோவிலிருந்த வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார். அந்த வழிபாட்டுக் கூடாரம், ராமாவில் இருந்த அவருடைய வீட்டிலிருந்து 30 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் அமைந்திருந்தது. அவருடைய பெற்றோர்... எல்க்கானாவும் அன்னாளும்... அவரை யெகோவாவுக்கே அர்ப்பணித்துவிட்டார்கள்; அதாவது, வாழ்நாளெல்லாம் நசரேயனாய் இருந்து விசேஷ சேவை செய்வதற்கு அர்ப்பணித்துவிட்டார்கள்.a அப்படியென்றால், அவர்கள் சாமுவேலை அம்போவென... அநாதையாக விட்டுவிட்டார்கள் என்று அர்த்தமா?
இல்லவே இல்லை! சீலோவில் இருப்பவர்கள் அவனைக் கவனித்துக்கொள்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஏனென்றால், தலைமைக் குரு ஏலி எல்லாவற்றையும் நன்றாகப் பார்த்துக்கொண்டார்; அவருக்குக் கீழ்தான் சாமுவேல் வேலை செய்துவந்தார். அதுமட்டுமல்ல, வழிபாட்டுக் கூடாரத்தில் நிறைய பெண்களும் முறைப்படி சேவை செய்து வந்தார்கள்.—யாத்திராகமம் 38:8.
அதற்காக, அன்னாளும் எல்க்கானாவும் தங்கள் தலைப் பிள்ளையை... அன்பு மகனை... மறந்துவிடவில்லை. என்ன இருந்தாலும், யெகோவாவிடம் அழுது அழுது கேட்டுப் பெற்ற பிள்ளை ஆயிற்றே! ஆம், அன்னாள் தனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தால் அவனைக் கடவுளுக்கே அர்ப்பணிப்பதாகப் பொருத்தனை செய்திருந்தார். எல்க்கானாவுடன் சேர்ந்து சாமுவேலை வருடா வருடம் போய்ச் சந்தித்தபோது கூடார சேவைக்கு வசதியாக ஒரு சிறிய மேலங்கியை அவனுக்கென்று தைத்து எடுத்துச் சென்றார். ஒவ்வொரு முறையும் அப்பா-அம்மா வந்து போன பிறகு சிறுவன் சாமுவேலுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்திருக்கும். யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்வது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று சொல்லி அவனுடைய பெற்றோர் உற்சாகப்படுத்தியபோது அவன் ரொம்பவே குதூகலம் அடைந்திருப்பான்.
அன்னாள்-எல்க்கானா தம்பதியிடமிருந்து இன்றுள்ள பெற்றோரும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். பிள்ளைகள் நன்றாகப் படித்து, வேலைக்குப் போய், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதிலேயே பெரும்பாலான பெற்றோர் அக்கறையாக இருப்பார்கள்; பிள்ளைகள் ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு அவர்கள் உதவுவதில்லை. ஆனால், சாமுவேலின் பெற்றோர் அவருடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கே முதலிடம் கொடுத்தார்கள். சாமுவேல் ஒரு நல்ல பிள்ளையாக வளர்ந்ததற்கு அதுவே முக்கியக் காரணம்.—நீதிமொழிகள் 22:6.
சாமுவேல் சற்றுப் பெரிய பையனாய் வளர்ந்துவந்தபோது சீலோவைச் சுற்றியிருந்த மலைகளில் ஏறி அங்கே என்னதான் இருக்கிறதென்று பார்க்கப் போயிருப்பான். அப்போது... கீழ்நோக்கிப் பார்வையை வீசியிருப்பான். ஒருபுறத்தில் பள்ளத்தாக்கு படர்ந்திருந்ததையும், அதற்குச் சற்று உயரத்தில் அமைந்திருந்த சீலோவில் யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரம் ஒய்யாரமாய் வீற்றிருந்ததையும் பார்த்துப் பெருமிதம் அடைந்திருப்பான், ஆனந்தத்தில் திளைத்திருப்பான். அந்தக் கூடாரம் ஒரு புனிதமான இடமாக இருந்தது.b அது கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு முன்பு மோசேயின் மேற்பார்வையில் கட்டப்பட்டிருந்தது; அந்தச் சமயத்தில் உலகிலேயே அது ஒன்றுதான் யெகோவாவின் தூய வழிபாட்டு மையமாகத் திகழ்ந்தது.
சிறுவன் சாமுவேல் வளர வளர, அந்தக் கூடாரத்தின் மீது அவனுக்கு அலாதிப் பிரியம் ஏற்பட்டது. ‘நார்ப்பட்டாலான ஏபோது [அதாவது, சிறிய மேலங்கி] அணிந்திருந்த’ ‘சிறுவன் சாமுவேல் ஆண்டவர்முன் ஊழியம் செய்தான்’ என்று அவரே பின்னர் எழுதியிருப்பதை நாம் வாசிக்கிறோம். (1 சாமுவேல் 2:18, பொ.மொ.) வழிபாட்டுக் கூடாரத்தில் குருமார்களுக்கு அவன் பணிவிடை செய்ததை அந்த மேலங்கி சுட்டிக்காட்டியது. சாமுவேல், குருமார் வகுப்பைச் சேர்ந்தவன் அல்ல; என்றாலும், வழிபாட்டுக் கூடாரத்தின் பிராகாரத்துக் கதவுகளை ஒவ்வொரு நாள் காலையிலும் திறப்பது... முதியவராய் இருந்த ஏலிக்கு உதவுவது... போன்ற பணிவிடைகளைச் செய்துவந்தான். இந்நிலையில்... யெகோவாவின் வீட்டில் நடக்கக் கூடாதது நடந்துவந்தது.
ஊழல் சாம்ராஜ்யத்தில் ஓர் உத்தமன்
அட்டூழியமும் அநியாயமும் மலிந்திருந்த ஒரு சூழலில்தான் சாமுவேல் வளர்ந்துவந்தான். ஏலிக்கு ஓப்னி, பினெகாஸ் என்ற இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களைக் குறித்து சாமுவேல் பதிவு செய்ததாவது: ‘ஏலியின் மகன்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாக இருந்தார்கள்; அவர்கள் யெகோவாவைத் துளியும் மதிக்கவில்லை.’ (1 சாமுவேல் 2:12, NW) அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாக இருந்ததற்கும் யெகோவாவை மதிக்காததற்கும் தொடர்பு இருந்ததை இந்த வசனம் எடுத்துக்காட்டுகிறது; ஆம், ஓப்னியும் பினெகாஸும் யெகோவாவைத் துளியும் மதிக்காததால் ஒன்றுக்கும் உதவாதவர்களாக இருந்தார்கள்; அதாவது, கீழ்த்தரமானவர்களாக இருந்தார்கள். அவருடைய நீதி நெறிகளைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவே இல்லை. அதனால்தான் பாவத்துக்குமேல் பாவத்தைச் செய்துவந்தார்கள்.
குருமார்களுக்கான பொறுப்புகள் என்னவென்றும், வழிபாட்டுக் கூடாரத்தில் பலிகளை எப்படிச் செலுத்த வேண்டுமென்றும் திருச்சட்டம் திட்டவட்டமாகச் சொல்லியிருந்தது. ஏனென்றால்... மக்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, கடவுளுடைய பார்வையில் சுத்தமாய் இருப்பதற்காக அந்தப் பலிகளை அவர்கள் செலுத்த வேண்டியிருந்தது; அதன் பின்னரே அவருடைய ஆசீர்வாதத்தையும் அங்கீகாரத்தையும் அவர்களால் பெற முடிந்தது. ஆனால், பலி சம்பந்தப்பட்ட சட்டங்களை ஓப்னியும் பினெகாஸும் மதிக்கவில்லை; சக குருமார்களையும் மதிக்க விடவில்லை.c
சிறுவன் சாமுவேலின் கண்களுக்கு முன் இந்த அநியாயமெல்லாம் நடந்துகொண்டிருந்தது... தட்டிக்கேட்பார் யாருமே இல்லை. ஒடுக்கப்பட்ட ஏழை எளியோர் ஆறுதல் தேடி சாரைசாரையாய் அந்த வழிபாட்டுக் கூடாரத்திற்கு வந்திருந்ததை அவன் பார்த்திருப்பான்; ஆனால், கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் வழிய, ஏமாற்றத்தோடு அவர்கள் வீடுதிரும்புவதையும் பார்த்திருப்பான். அப்போதெல்லாம் அவனுக்கு எவ்வளவு துக்கமாய் இருந்திருக்கும் என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். யெகோவாவின் நெறிகளுக்குத் துளியும் மதிப்புக் காட்டாமல், வழிபாட்டுக் கூடார வளாகத்தில் சேவைசெய்த சில பெண்களிடம் ஓப்னியும் பினெகாஸும் முறைகேடாக நடந்துகொண்டதைப் பார்த்தபோது சாமுவேலுக்கு எவ்வளவு எரிச்சலாய் இருந்திருக்கும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். (1 சாமுவேல் 2:22) இதையெல்லாம் ஏலி ஒருநாள் சரிசெய்வார் என்று அந்தச் சிறுவன் நம்பிக்கையோடு இருந்திருப்பான்.
ஏலி நினைத்திருந்தால்... தொடர்கதையாய் வளர்ந்துவந்த அக்கிரமத்தை அடியோடு அகற்றியிருக்கலாம்; அவருக்கு அதற்கான அதிகாரமும் இருந்தது. அவர் தலைமைக் குருவாக இருந்ததால், வழிபாட்டுக் கூடாரத்தில் என்ன நடந்தாலும் சரி... அவற்றுக்கெல்லாம் அவர்தான் கணக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. மறுபட்சத்தில், அவர் ஒரு தகப்பனாக இருந்ததால், தன்னுடைய மகன்களின் அட்டூழியங்களுக்காக அவர்களைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது. சொல்லப்போனால்... அவர்கள் தங்களுக்குக் கேடு விளைவித்துக்கொண்டதோடு, எண்ணற்ற இஸ்ரவேல் மக்களுக்கும் கேடு விளைவித்தார்கள். ஆகவே, ஒரு தலைமைக் குருவாகவும் சரி... ஒரு தகப்பனாகவும் சரி... ஏலி தன் கடமையைச் சரிவரச் செய்யவில்லை. தன் மகன்கள் தப்புத்தண்டா செய்தபோதெல்லாம்... அவர்கள் மனம் நோகாதவாறு லேசாகத் தட்டிக்கேட்டதோடு சரி! (1 சாமுவேல் 2:23-25) பார்க்கப்போனால், திருச்சட்டப்படி... அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் மரண தண்டனை பெறும் அளவுக்குப் பாவங்கள் செய்துவந்திருந்தார்கள்!
நிலைமை உச்சக்கட்டத்தை எட்டியதால்... யெகோவா நடவடிக்கை எடுத்தார். எப்படி? ஒரு தீர்க்கதரிசியை ஏலியிடம் அனுப்பி... ‘நீ என்னைப் பார்க்கிலும் உன் மகன்களுக்கு மதிப்புக் கொடுக்கிறாய்’ என்று கண்டனம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஏலியின் அடாவடி மகன்கள் இருவரும் ஒரே நாளில் அழிந்துபோவார்கள்... ஏலியின் குடும்பத்திற்கு அடிமேல் அடி விழும்... குருமாராகச் சேவை செய்கிற பாக்கியத்தையும் அவர்கள் இழக்க நேரிடும்... என்று கடவுள் முன்னறிவித்தார். சரி... இதைக் கேட்ட பிறகாவது ஏலியின் குடும்பத்தில் மாற்றம் ஏற்பட்டதா? அதுதான் இல்லை! அடுத்து நடந்தவை அதற்கு அத்தாட்சி அளிக்கின்றன.—1 சாமுவேல் 2:27–3:1.
தன்னைச் சுற்றி இத்தனை அடாவடித்தனம் நடந்துகொண்டிருக்க... சிறுவன் சாமுவேல் எப்படி நடந்துகொண்டான்? ஓப்னி, பினெகாஸ் செய்த அட்டூழியங்களைப் பற்றிய பதிவுகளுக்கு இடையிடையே சாமுவேலைப் பற்றிய நல்ல பதிவுகளையும் நாம் வாசிக்கிறோம். அவர் ஆன்மீக முன்னேற்றம் அடைந்துவந்ததாக நாம் வாசிக்கிறோம். 1 சாமுவேல் 2:18-ல், “ஆண்டவர்முன் ஊழியம் செய்த சிறுவன் சாமுவேல்” என்று வாசித்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்தச் சின்ன வயதிலேயே... சாமுவேல், கடவுளுடைய சேவைக்குத் தன் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தான். அதே அதிகாரம், வசனம் 21-ல், ‘யெகோவாவின் சந்நிதியில் வளர்ந்தான்’ என வாசிக்கும்போது நம் உள்ளமெல்லாம் குளிர்கிறது! அவன் வளர வளர... பரம தகப்பனோடு அவன் வைத்திருந்த பந்தமும் வளர்ந்துவந்தது. ஆக... நாமும் யெகோவாவுடன் நெருங்கிய பந்தம் வைத்திருக்க வேண்டும்; அதுவே, அனைத்து அடாவடித்தனத்திலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும்!
‘தலைமைக் குருவும் அவருடைய மகன்களுமே இப்படி நடந்துகொள்ளும்போது, நானும் என் இஷ்டத்திற்கு நடந்தால் என்ன தப்பு?’ என்று சாமுவேல் நினைத்திருக்கலாம். ஆனால், மற்றவர்கள் செய்கிற... ஏன் பொறுப்புள்ள ஸ்தானங்களில் இருக்கிறவர்கள் செய்கிற... அநியாயத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு தவறு செய்வது சரியல்ல. இன்றுங்கூட... அநேக கிறிஸ்தவ இளைஞர்கள், சாமுவேலின் விசுவாசத்தைப் பின்பற்றுகிறார்கள்; தங்களைச் சுற்றியுள்ளவர்கள் நல்ல முன்மாதிரி வைக்கத் தவறினாலும், ‘யெகோவாவின் பிள்ளைகளாக வளருகிறார்கள்.’
சாமுவேல் நல்ல பிள்ளையாக வளர்ந்ததால் அவருக்கு என்ன பலன் கிடைத்தது? “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்” என்று பைபிளில் நாம் வாசிக்கிறோம். (1 சாமுவேல் 2:26) ஆகவே, கடவுளுக்குப் பயந்து நடந்த மக்களுக்கு... சாமுவேலை மிகவும் பிடித்திருந்தது. இந்தச் சிறுவன் உத்தமனாய் நடந்துகொண்டதைப் பார்த்து யெகோவாவும் உள்ளம் பூரித்தார். சீலோவில் தொடர்கதையாய் நடந்துவந்த அனைத்து அநியாய அக்கிரமங்களுக்கும் கடவுள் ஒருநாள் நிச்சயம் முடிவுகட்டுவார் என்று சாமுவேல் நம்பிக்கையாய் இருந்தார்; ஆனால் எப்போது சரிசெய்வார் என்பதுதான் அவர் உள்ளத்தில் கேள்விக்குறியாகவே இருந்தது.
“ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்”
அவருடைய கேள்விக்கு ஒருநாள் பதில் கிடைத்தது. விடிந்தும் விடியாத அதிகாலை நேரம் அது; வழிபாட்டுக் கூடாரத்தின் பெரிய விளக்கு கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டி எரிந்துகொண்டிருந்தது. நிசப்தமாய் இருந்த அவ்வேளையில் ஒரு குரல் ஒலித்தது, யாரோ தன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதுபோல சிறுவன் சாமுவேலுக்குக் கேட்டது! ஏலிதான் தன்னைக் கூப்பிடுகிறார் என்று அவன் நினைத்தான்; ஏனென்றால் அப்போது ஏலி தள்ளாத வயதில் இருந்தார், அவருடைய கண்பார்வையும் மங்கிப்போயிருந்தது. அதனால் அவன் எழுந்து ஏலியினிடத்தில் ‘ஓடினான்.’ என்ன ஆனதோ, ஏது ஆனதோ என்று பதறியடித்துக்கொண்டு... வெறுங்காலோடு அந்தச் சிறுவன் ஓடியதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஏலியின் மீது அத்தனை தவறு இருந்தபோதிலும் அவர் இன்னும் தலைமைக் குருவாக யெகோவாவுக்குச் சேவை செய்துவந்தார்; ஏலிக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதையை சிறுவன் சாமுவேல் கொடுத்தான். இது நம் உள்ளத்தை நெகிழச் செய்கிறது.—1 சாமுவேல் 3:2-5
ஏலியை எழுப்பி, “இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று சிறுவன் சாமுவேல் கேட்டான். ‘நான் கூப்பிடவில்லை... போய்ப் படுத்துக்கொள்...’ என்று ஏலி அவனிடம் சொன்னார். இரண்டாந்தரமும் அப்படியே நடந்தது; ஏன் மூன்றாந்தரமும் அப்படியே நடந்தது! கடைசியில், ஏலிக்குப் பிடிபட்டது. கடவுளிடமிருந்து தரிசனமோ தீர்க்கதரிசன செய்தியோ கிடைத்து வெகுநாள் ஆகியிருந்தது; அதற்கான காரணமும் நமக்குத் தெரிந்ததுதான்! மறுபடியும் யெகோவா பேச ஆரம்பித்திருக்கிறார்... இப்போது இந்தக் குட்டிப் பையனிடம்... என்பதை ஏலி புரிந்துகொண்டார். சிறுவன் சாமுவேலை மீண்டும் போய்ப் படுத்துக்கொள்ளச் சொன்னதோடு, அடுத்த முறை அந்தக் குரலைக் கேட்டால் பதிலுக்கு என்ன சொல்ல வேண்டுமென்றும் சொல்லியனுப்பினார். அவன் அதற்குக் கீழ்ப்படிந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் “சாமுவேலே சாமுவேலே” என்று மீண்டும் அதே குரல் அவனுக்குக் கேட்டது. “ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று அவன் பதிலுக்குச் சொன்னான்.—1 சாமுவேல் 3:1, 5-10; பொ.மொ.
ஒரு வழியாக... எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு, யெகோவாவின் பேச்சைக் கேட்பதற்கு சீலோவில் ஓர் ஊழியன்! சாமுவேல் தன் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தார். நீங்களும் அப்படிக் கேட்டு நடக்கிறீர்களா? இரவு நேரத்தில் வானத்திலிருந்து ஒரு குரல் கேட்குமென்று நாம் காத்திருக்க வேண்டியதில்லை. சொல்லப்போனால்... கடவுளின் குரலை நாம் எப்போதுமே கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்; ஆம், கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய பைபிளின் மூலமாகக் கேட்கிறோம். அப்படியானால்... கடவுளுடைய பேச்சை நாம் எந்தளவு கேட்டு நடக்கிறோமோ அந்தளவு நம்முடைய விசுவாசம் பலப்படும். சாமுவேல் அப்படித்தான் செய்தார்.
சீலோவில் அன்றிரவு சாமுவேலுக்குக் கிடைத்த அனுபவம் அவருடைய வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவம் எனலாம். ஏனென்றால், அதுமுதல் அவருக்கும் யெகோவாவுக்கும் இடையே ஒரு விசேஷமான பந்தம் உருவானது; அவர் கடவுளுடைய தீர்க்கதரிசியாகவும் பிரதிநிதியாகவும் ஆனார். யெகோவா தன்னிடம் சொன்ன செய்தியை ஏலியிடம் சொல்வதற்கு சிறுவன் சாமுவேல் முதலில் பயந்தான். ஏனென்றால், அது ஏலியின் குடும்பத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தண்டனைத் தீர்ப்பு நிறைவேறப்போகிறது என்ற கண்டனச் செய்தி! ஆனால், ஒரு வழியாக தைரியத்தை ஒன்றுதிரட்டி அதை ஏலிக்குத் தெரியப்படுத்தினான். ஏலியும் கடவுளுடைய தீர்ப்பை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். சீக்கிரத்திலேயே யெகோவா சொல்லியிருந்த எல்லாம் நிறைவேறின. பெலிஸ்தியருக்கு எதிராக இஸ்ரவேலர் போருக்குச் சென்றார்கள்; அந்தச் சமயத்தில் ஓப்னியும் பினெகாஸும் ஒரே நாளில் மடிந்தார்கள். ஒப்பந்தப் பெட்டி பிடிபட்டதைக் கேள்விப்பட்ட ஏலியும் அதிர்ச்சி தாளாமல் இறந்துவிட்டார்.—1 சாமுவேல் 3:10-18; 4:1-18.
என்றாலும், சாமுவேல் யெகோவாவின் உண்மைத் தீர்க்கதரிசி என்பது எல்லாருக்கும் தெரியவந்தது. ‘யெகோவா சாமுவேலுடன் இருந்தார்’ என்று பைபிள் சொல்கிறது; அதோடு, சாமுவேல் மூலமாக அவர் உரைத்த எந்தத் தீர்க்கதரிசனமும் நிறைவேறாமல்போக அவர் விடவில்லை என்றும்கூட அது சொல்கிறது.—1 சாமுவேல் 3:19.
‘சாமுவேல் யெகோவாவை நோக்கி விண்ணப்பம் பண்ணினார்’
இதையெல்லாம் பார்த்து, சாமுவேலின் வழிநடத்துதலுக்கு இஸ்ரவேலர் மறுபேச்சின்றி கீழ்ப்படிந்தார்களா..? ஆன்மீக மக்களாய், உத்தமப் புத்திரர்களாய் மாறினார்களா..? இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்! காலம் செல்லச் செல்ல... தங்களுடைய வழக்குகளை விசாரிக்க ஒரு தீர்க்கதரிசி இருந்தால் மட்டும் போதாது என்று நினைத்தார்கள். மற்ற தேசத்தாரைப் போலவே தங்களுக்கும் ஓர் அரசர் வேண்டுமென ஆசைப்பட்டார்கள். யெகோவாவின் சம்மதத்தோடு, சாமுவேல் அவர்கள் கோரிக்கையை நிறைவுசெய்தார். ஆனாலும், அவர்கள் செய்த பாவம் கொடிய பாவம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியிருந்தது. அவர்கள் ஒதுக்கித்தள்ளியது ஒரு மனிதனை அல்ல, யெகோவாவை! ஆகவே, சாமுவேல் அந்த மக்களை கில்காலில் கூடிவரச் செய்தார்.
இப்போது... கில்காலில் திரண்டிருந்த இஸ்ரவேல் மக்களுக்குமுன் நின்ற வயதான சாமுவேல் அந்தப் பதற்றமான சூழலை எப்படிச் சமாளித்தாரென்று பார்ப்போம். அவர், தன் வாழ்நாளெல்லாம் யெகோவாவுக்கு உத்தமமாய் நடந்துவந்திருந்ததை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். அதன்பிறகு, ‘யெகோவாவை நோக்கி விண்ணப்பம் பண்ணினார்.’ இடியுடன் கூடிய மழையைப் பொழியப் பண்ணும்படி யெகோவாவிடம் விண்ணப்பித்தார்.—1 சாமுவேல் 12:17, 18.
என்ன... வெயில் கொளுத்துகிற கோடைக்காலத்தில் இடியுடன் கூடிய மழையா! நம்ப முடியவில்லை, அல்லவா? ‘இதெல்லாம் நடக்கிற விஷயமா...’ என்று அந்தக் கூட்டத்தில் யாராவது கிசுகிசுத்திருந்தால், அல்லது பரிகசித்திருந்தால்... அவர்கள் பேசி வாய்மூடுவதற்குள் கிடைத்தது ஒரு நெற்றியடி! மேகம் திரண்டது... வானம் இருண்டது... கண்மண் தெரியாமல் வீசிய காற்று வயலில் நின்ற கோதுமைக் கதிர்களையெல்லாம் அடித்துக்கொண்டு போனது. காதைப் பிளக்கும் ஒலியோடு ‘டம டம’-வென்று இடி இடித்தது. சோ...வென்று மழை பெய்தது! பலதும் பேசிய மக்கள் வாயடைத்துப்போனார்கள். அவர்கள் ‘எல்லாரும் யெகோவாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தார்கள்.’ அதையெல்லாம் பார்த்த பின்புதான்... தாங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறென்று உணர்ந்தார்கள்.—1 சாமுவேல் 12:18, 19.
அந்தக் கலகக்கார மக்களுடைய தவறைப் புரியவைத்தது சாமுவேல் அல்ல, யெகோவாவே! சிறுவயது முதல் முதிர்வயது வரை கடவுளே தனக்குத் தஞ்சம் என்று சாமுவேல் விசுவாசத்தோடு வாழ்ந்துவந்தார். அதற்காக யெகோவா அவருக்குப் பலன் அளித்தார். இன்றும் யெகோவா அப்படியே இருக்கிறார். சாமுவேலின் விசுவாசத்தைப் பின்பற்றுவோருக்கு அவர் உறுதுணையாக இருக்கிறார். (w10-E 10/01)
[அடிக்குறிப்புகள்]
a நசரேய விரதம் காத்தவர்கள்... மது அருந்த மாட்டார்கள்; தலை முடியை வெட்டிக்கொள்ள மாட்டார்கள்; முகச் சவரம் செய்துகொள்ள மாட்டார்கள். அநேகர், பெரும்பாலும் தற்காலிகமாக அந்த விரதத்தை மேற்கொண்டார்கள். ஆனால்... சிம்சோன், சாமுவேல், யோவான் ஸ்நானகர் போன்ற சிலர் மட்டுமே நிரந்தரமாக அந்த விரதத்தை மேற்கொண்டார்கள்.
b அது செவ்வக வடிவத்தில் ஒரு பெரிய கூடாரமாக இருந்தது. மரச் சட்டங்களை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டிருந்தபோதிலும் உயர் ரக பொருட்களால் போர்த்தப்பட்டிருந்தது; அதாவது, சீல் என்ற கடல்நாயின் தோல் விரிப்புகளாலும், அழகிய நூல் வேலைப்பாடு கொண்ட விரிப்புகளாலும் போர்த்தப்பட்டிருந்தது. அதோடு, அதன் கட்டமைப்பு, விலையுயர்ந்த மரங்களால் செய்யப்பட்டு, அவற்றின் மேல் தங்கம் அல்லது வெள்ளித் தகடுகள் அடிக்கப்பட்டிருந்தன. செவ்வக வடிவில் அமைந்திருந்த பிராகாரத்தின் நடுவே இந்தக் கூடாரம் அமைந்திருந்தது; பிராகாரத்தின் ஒரு பக்கத்தில், பலிகளைச் செலுத்துவதற்காக கண்கவர் பலிபீடம் ஒன்று அமைந்திருந்தது. காலப்போக்கில், கூடாரத்தின் இரண்டு பக்கங்களிலும் அறைகள் அமைக்கப்பட்டன; அவற்றைக் குருமார்கள் புழங்கினார்கள். அப்படிப்பட்ட ஓர் அறையில்தான் சாமுவேல் தங்கியிருந்திருப்பாரென்று தெரிகிறது.
c இதற்கு இரண்டு உதாரணங்களை பைபிள் குறிப்பிடுகிறது. ஒன்று... பலி செலுத்தப்பட்ட மிருகங்களின் எந்தெந்தப் பாகங்களைக் குருமார்கள் சாப்பிட வேண்டுமென்று திருச்சட்டத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. (உபாகமம் 18:3) ஆனால், அடாவடிக் குருமார்களோ முற்றிலும் தலைகீழாக நடந்தார்கள். அவர்களுக்குக்கீழ் வேலை செய்தவர்களிடம் சொல்லி... இறைச்சி வெந்துகொண்டிருந்த பாத்திரத்தில் ஒரு பெரி...ய முள்கரண்டியால் குத்தி அதில் வருகிற நல்ல நல்ல துண்டுகளை எடுத்துவரச் செய்தார்கள்! இன்னொன்று... பலி செலுத்துவதற்காக மக்கள் கொண்டுவந்த மிருகங்களை அடித்தபின் அவற்றின் கொழுப்பைப் பலிபீடத்தில் யெகோவாவுக்கென்று தகனிப்பதற்கு முன்பே அவற்றின் இறைச்சியை அவர்களிடம் மிரட்டி வாங்கினார்கள்.—லேவியராகமம் 3:3-5; 1 சாமுவேல் 2:13-17.
[பக்கம் 17-ன் படம்]
சாமுவேல் முதலில் பயந்தாலும் ஒரு வழியாக தைரியத்தை ஒன்றுதிரட்டி யெகோவா சொன்ன கண்டனச் செய்தியை ஏலிக்குத் தெரியப்படுத்தினார்
[பக்கம் 18-ன் படம்]
சாமுவேல் விசுவாசத்தோடு விண்ணப்பம் செய்தார், யெகோவா இடியுடன் கூடிய மழையைப் பொழியச் செய்தார்