ஏதேன் தோட்டத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?
ஏதேன் தோட்டம் இருந்ததைச் சில நிபுணர்கள் நம்புவதில்லை. ஏனென்றால், ஆதியாகமத்தின் ஒருசில அதிகாரங்களைத் தவிர பைபிளில் வேறு எங்கும் அதைப் பற்றி இல்லை என்று சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, பால் மாரிஸ் என்ற இறையியல் பேராசிரியர், “ஏதேன் கதையைப் பற்றி பைபிளில் வேறு எங்குமே நேரடியாகச் சொல்லப்படவில்லை” என்று எழுதினார். நிறைய பேர் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், ஆதியாகமப் பதிவில் இருப்பதைப் பொய் என்று சொல்வது சாதாரண விஷயம் கிடையாது. ஏனென்றால், உண்மை வேறு விதமாக இருக்கிறது. ஏதேன் தோட்டத்தையும் ஆதாம் ஏவாளையும் பாம்பையும் பற்றி பைபிளில் மற்ற நிறைய இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.a அதனால் ஆதியாகமப் பதிவை உண்மை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லும் மதத் தலைவர்களும் பைபிள் விமர்சகர்களும் முழு பைபிளையுமே பொய் என்று சொல்வதாகத்தான் அர்த்தம். அது எப்படி?
பைபிளில் இருக்கும் மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கு ஏதேன் தோட்டத்தில் நடந்த சம்பவங்களைப் புரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு, மனிதர்களின் மனதைக் குடையும் பல முக்கியமான கேள்விகளுக்கு பைபிள் தரும் பதில்கள், ஏதேன் தோட்டத்தில் நடந்த சம்பவங்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சில கேள்விகளைக் கவனியுங்கள்.
● நமக்கு ஏன் வயதாகிறது, நாம் ஏன் சாகிறோம்? ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் சாவே இல்லாமல் என்றென்றும் உயிரோடு வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள். அதனால் வயதாகி இறந்துபோனார்கள். (ஆதியாகமம் 2:16, 17; 3:19) அவர்கள் பரிபூரணத்தை இழந்துவிட்டதால் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளும் பரிபூரணமாகப் பிறக்காமல் பாவ இயல்போடு பிறந்தார்கள். அதனால்தான், “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது” என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 5:12.
● கெட்ட விஷயங்களைக் கடவுள் ஏன் விட்டுவைத்திருக்கிறார்? கடவுள் பொய் சொல்கிறவர் என்றும், மனிதர்களுக்கு நல்லது செய்யாதவர் என்றும் ஏதேன் தோட்டத்தில் சாத்தான் சொன்னான். (ஆதியாகமம் 3:3-5) இப்படி, யெகோவா ஒரு நல்ல ஆட்சியாளர் கிடையாது என்று மறைமுகமாகச் சொன்னான். ஆதாமும் ஏவாளும் யெகோவாவின் ஆட்சியை ஒதுக்கித்தள்ளிவிட்டு சாத்தானின் பக்கம் சேர்ந்துவிட்டார்கள். நல்லது எது, கெட்டது எது என்று அவர்களே முடிவு செய்துகொள்ள நினைத்தார்கள். யெகோவா நியாயமும் ஞானமும் உள்ளவராக இருப்பதால், தன்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைப் பொய் என்று நிரூபிப்பதற்குக் காலம் கொடுக்க வேண்டுமென்று அவருக்குத் தெரியும். அதனால்தான், மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ள விட்டுவிட்டார். கடவுள் இப்படிக் காலத்தை அனுமதித்ததால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, சாத்தானுடைய ஆதிக்கத்தின்கீழ் இருக்கும் மனிதர்களால் தங்களைத் தாங்களே நல்லபடியாக ஆட்சி செய்ய முடியாது என்று தெரிகிறது.—எரேமியா 10:23.
● கடவுள் ஏன் இந்தப் பூமியைப் படைத்தார்? இந்த முழு பூமியும் எப்படி இருக்க வேண்டுமென்று யெகோவா ஆசைப்பட்டாரோ அப்படித்தான் ஏதேன் தோட்டத்தை உருவாக்கினார். அதன்பின் ஆதாம் ஏவாளிடம், பிள்ளைகளைப் பெற்றெடுத்து பூமியை நிரப்பி அதைப் ‘பண்படுத்த’ வேண்டுமென்று சொன்னார். ஏனென்றால், இந்த முழு பூமியும் ஏதேன் தோட்டம்போல் அழகு கொஞ்சும் இடமாக மாற வேண்டுமென்று நினைத்தார். (ஆதியாகமம் 1:28) அப்படியென்றால், ஒரு பூஞ்சோலை பூமியில் ஆதாம் ஏவாளின் பரிபூரணமான பிள்ளைகள் எல்லாருமே ஒரே குடும்பமாக… சந்தோஷமாக… வாழ வேண்டுமென்றுதான் யெகோவா விரும்பினார். இப்போது நாம் பைபிளில் படிக்கும் கிட்டத்தட்ட எல்லாமே, யெகோவா எப்படி இதை நிறைவேற்றுவார் என்ற விஷயத்தோடுதான் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
● இயேசு கிறிஸ்து ஏன் பூமிக்கு வந்தார்? ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமல் போனதால், அவர்களுக்கும் அவர்களுடைய வம்சத்துக்கும் சாவு வந்தது. ஆனாலும், கடவுள் மனிதர்களைக் கைவிட்டுவிடவில்லை. அவருக்கு நம்மேல் அன்பு இருப்பதால், நமக்காக மீட்புவிலையைக் கொடுக்க தன் மகனையே இந்தப் பூமிக்கு அனுப்பினார். (மத்தேயு 20:28) மீட்புவிலை என்றால் என்னவென்று இப்போது பார்க்கலாம். பைபிள் இயேசுவை “கடைசி ஆதாம்” என்று சொல்கிறது. ஆனால், அவர் ஆதாமைப் போல் இல்லாமல், கடைசிவரை கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். தன் உயிரையே நமக்காகத் தியாகம் செய்தார். இப்படி, பாவங்களுக்கு மன்னிப்பு கிடைப்பதற்கும், எதிர்காலத்தில் ஏதேன் தோட்டத்தைப் போன்ற ஒரு பூமியில் வாழ்வதற்கும் நமக்கு வாய்ப்பைத் திறந்து வைத்தார். (1 கொரிந்தியர் 15:22, 45; யோவான் 3:16) இயேசு தன் உயிரைத் தியாகம் செய்ததால், யெகோவா ஆசைப்பட்டது போலவே இந்தப் பூமி ஏதேனைப்போல் ஒரு பூஞ்சோலையாக மாறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.b
ஏதேன் தோட்டம் இருந்தது உண்மை, அங்கே மிருகங்களும் மனிதர்களும் வாழ்ந்ததும் உண்மை. அதேபோல், எதிர்காலத்தைப் பற்றிக் கடவுள் தந்திருக்கும் வாக்குறுதிகளும் நூற்றுக்கு நூறு உண்மை! அவை கண்டிப்பாக நிறைவேறும்! அவை நிறைவேறுவதைப் பார்க்க நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அது உங்கள் கையில்தான் இருக்கிறது! உங்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே இந்த வாய்ப்பைக் கடவுள் கொடுக்கிறார். சொல்லப்போனால், கெட்டவர்கள்கூட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.—1 தீமோத்தேயு 2:3, 4.
இயேசு இறக்கும் சமயத்தில் அவருக்குப் பக்கத்தில் ஒரு குற்றவாளியும் மரக் கம்பத்தில் அறையப்பட்டிருந்தான். தனக்கு மரண தண்டனை கிடைத்தது சரிதான் என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும், தனக்குக் கருணை காட்டும்படி இயேசுவிடம் கேட்டான். அப்போது இயேசு என்ன சொன்னார்? “நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று சொன்னார். (லூக்கா 23:43) ஒரு குற்றவாளியே திரும்பவும் உயிரோடு வந்து பூஞ்சோலையில் வாழ வேண்டுமென்று இயேசு ஆசைப்பட்டார் என்றால், நீங்கள் அங்கே வாழ வேண்டுமென்று ஆசைப்பட மாட்டாரா? கண்டிப்பாக ஆசைப்படுவார்! அவர் மட்டுமல்ல, அவருடைய அப்பா யெகோவாவும் ஆசைப்படுகிறார்! நீங்கள் அந்தப் பூஞ்சோலையில் வாழ வேண்டுமென்றால், ஏதேன் தோட்டத்தை உருவாக்கிய கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள எல்லா முயற்சியும் எடுங்கள்!
[அடிக்குறிப்பு]
a உதாரணத்துக்கு, இந்த வசனங்களைப் பாருங்கள்: ஆதியாகமம் 13:10; உபாகமம் 32:8; 2 சாமுவேல் 7:14; 1 நாளாகமம் 1:1; ஏசாயா 51:3; எசேக்கியேல் 28:13; 31:8, 9; லூக்கா 3:38; ரோமர் 5:12-14; 1 கொரிந்தியர் 15:22, 45; 2 கொரிந்தியர் 11:3; 1 தீமோத்தேயு 2:13, 14; வெளிப்படுத்துதல் 12:9.
b இயேசு தந்த மீட்புவிலையைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டிருக்கும் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 5-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.
[பெட்டி]
பைபிளின் மற்ற பகுதிகளைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு தீர்க்கதரிசனம்
“உனக்கும் [அதாவது, பாம்புக்கும்] பெண்ணுக்கும் உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.”—ஆதியாகமம் 3:15.
ஏதேன் தோட்டத்தில் கடவுள் சொன்ன இந்த வார்த்தைகள்தான் பைபிளில் இருக்கும் முதல் தீர்க்கதரிசனம். இதில் சொல்லப்பட்டிருக்கும் பெண்ணும், அவள் சந்ததியும், பாம்பும், அதன் சந்ததியும் யார்? எந்த விதத்தில் இவர்களுக்கு இடையில் “பகை” உண்டாகும்?
பாம்பு
பிசாசாகிய சாத்தான்.—வெளிப்படுத்துதல் 12:9.
பெண்
தேவதூதர்களைக் கொண்ட யெகோவாவின் பரலோக அமைப்பு. (கலாத்தியர் 4:26, 27) இந்தப் பெண் அடையாள அர்த்தமுள்ள ஒரு தேசத்துக்குத் தாயாக ஆவாள் என்று ஏசாயா முன்கூட்டியே சொன்னார்.—ஏசாயா 54:1; 66:8.
பாம்பின் சந்ததி
சாத்தானுடைய இஷ்டப்படி நடக்கிறவர்கள்.—யோவான் 8:44.
பெண்ணின் சந்ததி
யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவை இது முக்கியமாகக் குறிக்கிறது. அதுமட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆட்சி செய்கிறவர்களையும் இந்த “சந்ததி” குறிக்கிறது. இவர்கள் அடையாள அர்த்தமுள்ள ஒரு தேசமாக, அதாவது ‘கடவுளுடைய இஸ்ரவேலர்களாக’ இருக்கிறார்கள்.—கலாத்தியர் 3:16, 29; 6:16; ஆதியாகமம் 22:18.
குதிங்கால் நசுக்கப்படுவது
மேசியா கடுமையாகத் தாக்கப்பட்டார், ஆனால் அவருக்கு நிரந்தரமான பாதிப்பு வரவில்லை. அதாவது, இந்தப் பூமியில் இயேசுவை சாத்தான் கொலை செய்தான், ஆனால் யெகோவா அவரை உயிரோடு எழுப்பிவிட்டார்.
தலை நசுக்கப்படுவது
சாத்தானுக்கு விழும் மரண அடி. அதாவது, சாத்தானை இயேசு நிரந்தரமாக அழிக்கப்போகிறார். அதற்குமுன், சாத்தானால் வந்திருக்கும் எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்துவிடுவார்.—1 யோவான் 3:8; வெளிப்படுத்துதல் 20:10.
பைபிளின் முக்கிய செய்தியைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டிருக்கும் பைபிள் ஒரு கண்ணோட்டம் என்ற சிறு புத்தகத்தைப் பாருங்கள்.
[படம]
பாவம் செய்ததால் வந்த படுமோசமான விளைவுகளை ஆதாமும் ஏவாளும் அனுபவித்தார்கள்