வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
எபிரெய வேதாகமத்தில் மேசியாவைப் பற்றி எத்தனை தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன எனத் திட்டவட்டமாகச் சொல்ல முடியுமா?
எபிரெய வேதாகமத்தைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தால், இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றம் அடைந்த பல தீர்க்கதரிசனங்களைக் கண்டறிய முடியும். இந்தத் தீர்க்கதரிசனங்கள் மேசியாவின் பின்னணி, அவர் தோன்றிய காலம், அவரது செயல்கள், அவர் நடத்தப்பட்ட விதம், யெகோவாவின் ஏற்பாட்டில் அவருடைய பங்கு ஆகிய விவரங்களை முன்னுரைத்தன. இவை அனைத்தும் சேர்ந்து, இயேசுவே மேசியா எனப் புரிந்துகொள்ள நமக்குப் பெரிதும் உதவுகின்றன. என்றாலும், எபிரெய வேதாகமத்தில் மேசியாவைப் பற்றி எத்தனை தீர்க்கதரிசனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதைத் திட்டவட்டமாகக் கணக்கிட முயன்றால், கவனம் தேவை.
மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எவை என்பதன்பேரில் பல கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. எபிரெய வேதாகமத்திலுள்ள 456 பகுதிகள் மேசியாவைப் பற்றியவை என்று பூர்வ யூத போதகர்களின் எழுத்துக்கள் குறிப்பிட்டதாக மேசியாவாகிய இயேசுவின் வாழ்க்கையும் காலமும் என்ற ஆங்கில புத்தகத்தில் ஆல்ஃப்ரேட் எடர்ஷைம் என்பவர் எழுதினார்; அவற்றில் அநேக பகுதிகள் மேசியாவைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடாதபோதிலும் அவை அவரைப் பற்றியவையே என்று அவர்கள் நம்பியதாக எழுதினார். ஆனால், அந்த 456 பகுதிகளையும் ஆழமாக ஆராய்ந்தால் அவற்றில் சில இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்தானா என்ற கேள்வி எழுகிறது. உதாரணத்திற்கு, ஆதியாகமம் 8:11 மேசியாவைப் பற்றி முன்னுரைத்ததென யூதர்கள் நம்பியதாக எடர்ஷைம் குறிப்பிட்டார். “மேசியாவின் மலையிலிருந்துதான் ஒலிவமர இலையைப் புறா கொண்டுவந்தது” என யூதர்கள் நம்பினார்களாம். யாத்திராகமம் 12:42-ஐயும் எடர்ஷைம் குறிப்பிட்டார். இந்த வசனத்தை யூதர்கள் தவறாகப் புரிந்துகொண்டார்கள் என்பதை விளக்குகையில், “மோசே வனாந்தரத்திலிருந்து வந்ததுபோல் மேசியா ரோமிலிருந்து வருவார்” என்று அவர் எழுதினார். இந்த இரண்டு வசனங்களையும் அவற்றிற்கான தவறான விளக்கங்களையும் இயேசு கிறிஸ்துவோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பது அறிஞர்கள் பலருக்கும் மற்றவர்களுக்கும் கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இயேசு கிறிஸ்துவில் நிஜமாகவே நிறைவேறிய தீர்க்கதரிசனங்களை மட்டும் எடுத்துக்கொண்டால்கூட, அவற்றின் எண்ணிக்கையைத் திட்டவட்டமாகக் கணக்கிடுவது கடினம். உதாரணத்திற்கு, ஏசாயா 53-ஆம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளலாம்; மேசியாவைப் பற்றிய பல விவரங்கள் அதில் முன்னுரைக்கப்பட்டன. ஏசாயா 53:2-7 இவ்வாறு கூறியது: ‘அவருக்கு அழகுமில்லை . . . அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவருமாயிருந்தார் . . . அவர் நம்முடைய பாடுகளை [“வியாதிகளை,” NW] ஏற்றுக்கொண்டார் . . . நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார் . . . அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போல இருந்தார்.’ ஏசாயா, 53-ஆம் அதிகாரத்தில் உள்ள இந்த முழு பகுதியும் மேசியாவைப் பற்றிய ஒரே தீர்க்கதரிசனமாகக் கணக்கிடப்பட வேண்டுமா? அல்லது, இந்தப் பகுதியிலுள்ள ஒவ்வொரு விவரமும் ஒவ்வொரு தீர்க்கதரிசனமாகக் கணக்கிடப்பட வேண்டுமா?
ஏசாயா 11:1-ஐயும் எடுத்துக்கொள்ளுங்கள். “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்” என்று அது சொல்கிறது. 10-வது வசனத்தில் இதேபோன்ற வார்த்தைகளில் இந்தத் தீர்க்கதரிசனம் மறுபடியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வசனங்களையும் இரண்டு தனித்தனி தீர்க்கதரிசனங்களாக நாம் கணக்கிட வேண்டுமா, அல்லது திரும்பக் குறிப்பிடப்படும் ஒரே தீர்க்கதரிசனமாகக் கணக்கிட வேண்டுமா? ஏசாயா, 53-ஆம் அதிகாரத்தையும் 11-ஆம் அதிகாரத்தையும் பற்றி எடுக்கப்படும் முடிவு, மேசியாவைப் பற்றி எத்தனை தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிடுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
ஆகவே, எபிரெய வேதாகமத்தில் மேசியாவைப் பற்றி எத்தனை தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள தேவையில்லை. இயேசுவைப் பற்றிய பல தீர்க்கதரிசனங்களையும் அவற்றின் நிறைவேற்றங்களையும் பற்றிய பட்டியல்களை யெகோவாவின் அமைப்பு வெளியிட்டிருக்கிறது.a இந்தப் பட்டியல்கள், நம் விசுவாசத்தைப் பலப்படுத்தி, தனிப்பட்ட படிப்பின்போதும் குடும்பப் படிப்பின்போதும் வெளி ஊழியத்தின்போதும் நமக்கு உதவும். ஆக, மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் சரி, அவை அனைத்துமே இயேசுதான் கிறிஸ்து அல்லது மேசியா என்பதற்கு வலுவான அத்தாட்சி அளிக்கின்றன.
[அடிக்குறிப்பு]
a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கம் 1223; தொகுதி 2, பக்கம் 387; ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது,’ பக்கங்கள் 343-344; பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? பக்கம் 200.