தைரியமாயிருங்கள், யெகோவா உங்களோடு இருக்கிறார்!
“தைரியமாயிரு, உறுதியாயிரு. . . . உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருக்கிறார்.”—யோசு. 1:9, NW.
1, 2. (அ) சோதனைகளைச் சமாளிக்க என்ன குணங்கள் நமக்கு உதவும்? (ஆ) விசுவாசம் என்றால் என்ன? விளக்குங்கள்.
யெகோவாவின் ஊழியம் நமக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. என்றாலும், பொதுவாக நாம் எல்லோருமே கஷ்டங்களை எதிர்ப்படுகிறோம், ‘நீதிக்காகத் துன்பப்படுகிறோம்.’ (1 பே. 3:14; 5:8, 9; 1 கொ. 10:13) இத்தகைய சோதனைகளையெல்லாம் வெற்றிகரமாய்ச் சமாளிக்க நமக்கு விசுவாசமும் தைரியமும் தேவை.
2 விசுவாசம் என்றால் என்ன? அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்; பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைக் காண்பதாகும்.” (எபி. 11:1) இன்னொரு மொழிபெயர்ப்பு இவ்வாறு சொல்கிறது: “விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்களின் உரிமைப் பத்திரமாகும், . . . பார்க்க முடியாத காரியங்கள் நிச்சயம் நடக்கும் என்ற உறுதியாகும்.” (த சிம்பிள் இங்லீஷ் பைபிள்) ஏதோவொரு சொத்து நமக்கு ஒரு பத்திரமாக எழுதித் தரப்பட்டால் அது நமக்கே சொந்தம் என்பது உறுதியாகிவிடும். யெகோவா சொல்வதெல்லாமே நிறைவேறும் என்ற விசுவாசம் நமக்கிருப்பதால், அது நம் கையிலுள்ள மதிப்புமிக்க பத்திரத்தைப் போல் இருக்கிறது. நாம் எதிர்பார்க்கிற பைபிள் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேறுமென்றும், அவற்றைப் பார்க்கப் போகிறோமென்றும் உறுதி அளிக்கிறது. அப்படி நிறைவேறப்போகிற காரியங்களை இப்போது நாம் பார்க்க முடியாவிட்டாலும் அவற்றைக் குறித்து நிச்சயமாய் இருக்கிறோம்.
3, 4. (அ) தைரியம் என்றால் என்ன? (ஆ) நம்முடைய விசுவாசத்தையும் தைரியத்தையும் பலப்படுத்திக்கொள்வதற்கான ஒரு வழி எது?
3 தைரியம் என்றால் என்ன? “எத்தகைய துன்பங்கள் வந்தாலும் ஆபத்துகள் வந்தாலும் பயமில்லாமல் பேசவும் செயல்படவும் தூண்டுகிற ஆன்மீக பலம், மன பலம், தார்மீக பலம்” என்று ஓர் அகராதி தைரியத்திற்கு விளக்கமளிக்கிறது. (த நியூ இன்டர்பிர்ட்டெர்ஸ் டிக்ஷ்னரி ஆஃப் த பைபிள்) தைரியமிருந்தால் நாம் உறுதியானவர்களாக, வீரதீர மிக்கவர்களாக, சில சமயங்களில் துணிவு மிக்கவர்களாகவும் இருப்போம்.—மாற். 6:49, 50; 2 தீ. 1:7.
4 விசுவாசமும் தைரியமும் விரும்பத்தக்க குணங்கள். இந்தக் குணங்கள் நம்மில் குறைவுபடுவதாக ஒருவேளை நாம் நினைக்கலாம். இந்தக் குணங்களை வெளிக்காட்டிய ஆயிரக்கணக்கானோரின் உதாரணங்கள் பைபிளில் உள்ளன. எனவே, நம்முடைய விசுவாசத்தையும் தைரியத்தையும் பலப்படுத்திக்கொள்வதற்கான ஒரு வழி, அவர்களில் சிலருடைய முன்மாதிரியை அலசி ஆராய்வதாகும்.
யெகோவா யோசுவாவோடு இருந்தார்
5. இஸ்ரவேலரை வழிநடத்த யோசுவாவுக்கு என்னவெல்லாம் தேவைப்பட்டது?
5 கால ஓட்டத்தில் சுமார் 3,500 ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம். யெகோவாவின் பலத்த கரத்தின்கீழ் லட்சக்கணக்கான இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி 40 வருடங்கள் உருண்டோடியிருக்கின்றன. அவர்களை மோசே முன்நின்று வழிநடத்துகிறார். 120-ஆம் வயதில் நேபோ மலை உச்சிக்குச் சென்று வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பார்க்கிறார். பிற்பாடு, அங்கேயே இறந்துவிடுகிறார். அவருக்குப் பிறகு இஸ்ரவேலரை முன்நின்று வழிநடத்த நியமிக்கப்படுகிற யோசுவா ‘ஞானத்தின் ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்.’ (உபா. 34:1-9) சீக்கிரத்தில், இஸ்ரவேலருக்கு கானான் தேசம் சொந்தமாகப்போகிறது. அவர்களை வழிநடத்த தெய்வீக ஞானம் யோசுவாவுக்குத் தேவைப்படுகிறது. அதோடு, யெகோவாமீது விசுவாசமும் உறுதியான நம்பிக்கையும் தைரியமும் தேவைப்படுகிறது.—உபா. 31:22, 23.
6. (அ) தைரியத்தைப் பெற என்ன செய்ய வேண்டுமென யோசுவா 23:6 சொல்கிறது? (ஆ) அப்போஸ்தலர் 4:18-20; 5:29-லிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
6 கானான் தேசத்தைக் கைப்பற்ற நீண்ட காலமெடுத்தது; அந்தக் காலப்பகுதியில், யோசுவாவின் ஞானத்தையும் விசுவாசத்தையும் தைரியத்தையும் பார்த்த இஸ்ரவேலர் பலப்பட்டிருக்க வேண்டும். போர்க்களத்தைச் சந்திக்க இஸ்ரவேலருக்கு வீரதீரம் மட்டுமல்ல, யோசுவா கட்டளையிட்டவற்றைச் செய்ய அஞ்சாநெஞ்சமும் தேவைப்பட்டது. இறப்பதற்குமுன் யோசுவா அவர்களிடம் கடைசியாக இவ்வாறு சொன்னார்: “மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள் [அதாவது, தைரியமாய் இருங்கள்].” (யோசு. 23:6) எல்லாச் சமயத்திலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய நமக்கும்கூட தைரியம் தேவை. முக்கியமாக, யெகோவாவுடைய சித்தத்திற்கு எதிராக நாம் செயல்படும்படி அற்ப மனிதர்கள் கட்டளையிடுகிற சமயங்களில் நமக்குத் தைரியம் தேவை. (அப்போஸ்தலர் 4:18-20; 5:29-ஐ வாசியுங்கள்.) அச்சமயங்களில், யெகோவாவிடம் ஜெபம் செய்து அவர்மேல் நம்பிக்கையோடு இருந்தால் தைரியமாய்ச் செயல்பட அவர் நமக்கு உதவுவார்.
வாழ்வில் வெற்றி காண்பது எப்படி?
7. தைரியமாய்ச் செயல்படவும் வெற்றி காணவும் யோசுவா என்ன செய்ய வேண்டுமென யெகோவா சொன்னார்?
7 கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்குத் தேவையான தைரியத்தைப் பெற நாம் பைபிளைக் கருத்தூன்றிப் படிக்க வேண்டும், படித்ததைப் பின்பற்ற வேண்டும். மோசேக்குப் பிறகு இஸ்ரவேலரை வழிநடத்த நியமிக்கப்பட்ட யோசுவாவிடம் அதைத்தான் யெகோவா சொன்னார்: ‘என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருப்பதற்கு மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; . . . இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய் [அதாவது, வாழ்வில் வெற்றி காண்பாய்], அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.’ (யோசு. 1:7, 8) யோசுவா அந்த அறிவுரைப்படி நடந்தார், ‘வாழ்வில் வெற்றி கண்டார்.’ நாமும் அவரைப் போல் நடந்தால், கடவுளுக்கு ஊழியம் செய்ய அதிக தைரியம் பெறுவோம், அதில் வெற்றியும் காண்போம்.
2013-ன் வருடாந்தர வசனம்: தைரியமாயிரு; உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருக்கிறார். —யோசுவா 1:9
8. 2013-க்கான வருடாந்தர வசனம் என்ன, அதன் வார்த்தைகள் உங்களுக்கு எப்படி உதவுமென நினைக்கிறீர்கள்?
8 யெகோவா தொடர்ந்து கூறிய வார்த்தைகளைக் கேட்டபோது யோசுவா பெருமளவு பலப்பட்டிருக்க வேண்டும்: “தைரியமாயிரு, உறுதியாயிரு. பயப்படாதே, கலங்காதே, ஏனென்றால் உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருக்கிறார்.” (யோசு. 1:9, NW) யெகோவா நம்மோடும் இருக்கிறார். எனவே, என்ன சோதனைகளைச் சந்தித்தாலும் நாம் ‘பயப்படவோ கலங்கவோ’ தேவையில்லை. “தைரியமாயிரு, உறுதியாயிரு. . . . உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருக்கிறார்” என்ற வார்த்தைகளை முக்கியமாய் நாம் கவனத்தில் வைக்க வேண்டும். யோசுவா 1:9-லுள்ள இந்த வார்த்தைகளே 2013-ஆம் ஆண்டுக்கான வருடாந்தர வசனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. விசுவாசத்திற்கும் தைரியத்திற்கும் முன்மாதிரிகளாக விளங்கியவர்களின் வார்த்தைகளும் செயல்களும் மட்டுமல்ல, இந்த வசனத்திலுள்ள வார்த்தைகளும்கூட வரவிருக்கிற மாதங்களில் நம்மைப் பலப்படுத்துமென நாம் நிச்சயமாய் இருக்கலாம்.
அவர்கள் தைரியமாய்ச் செயல்பட்டார்கள்
9. ராகாப் எவ்விதங்களில் தனக்கு விசுவாசமும் தைரியமும் இருப்பதைக் காட்டினாள்?
9 கானான் தேசத்தை உளவு பார்க்க யோசுவா இரண்டு பேரை அனுப்பியபோது ராகாப் என்ற விலைமகள் அவர்களை ஒளித்துவைத்து, எதிரிகளிடமிருந்து காப்பாற்றினாள். விசுவாசத்தோடும் தைரியத்தோடும் செயல்பட்டதால்தான் எரிகோ அழிக்கப்பட்ட சமயத்தில் அவளும் அவளுடைய குடும்பத்தாரும் பாதுகாக்கப்பட்டார்கள். (எபி. 11:30, 31; யாக். 2:25) அதன்பின், யெகோவாவைப் பிரியப்படுத்த தன் கேவலமான வாழ்க்கை முறையை அவள் மாற்றிக்கொண்டாள். விசுவாசமும் தைரியமும் தார்மீக பலமும் இருந்ததால்தான் இன்றும்கூட கிறிஸ்தவர்கள் சிலர் யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காக அதுபோன்ற மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.
10. எந்தச் சூழ்நிலைகளில் ரூத் உண்மை வணக்கத்தை ஆதரித்தாள், என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றாள்?
10 யோசுவாவின் காலத்துக்குப் பிறகு, மோவாபியப் பெண்ணான ரூத் உண்மை வணக்கத்தை ஆதரிப்பதில் தைரியம் காட்டினாள். ஓர் இஸ்ரவேலனை மணந்து விதவையாகியிருந்த அவளுக்கு யெகோவாவைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்தது. மோவாபில் குடியிருந்த அவளுடைய விதவை மாமியார் நகோமி, இஸ்ரவேலிலுள்ள பெத்லகேம் நகருக்குக் குடிமாறிச் செல்லத் தீர்மானித்தார். வழியில், ரூத்திடம் அவளுடைய ஜனங்களிடமே திரும்பிப் போகும்படி அவர் மீண்டும் மீண்டும் சொன்னார். ஆனால் ரூத், “நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக் குறித்து, என்னோடே பேச வேண்டாம்; . . . உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” என்று சொன்னாள். (ரூத் 1:16) சொன்னபடியே வாழ்ந்தும் காட்டினாள். கொஞ்சக் காலத்தில் நகோமியின் உறவினரான போவாஸுக்கு மனைவியானாள், ஒரு மகனைப் பெற்றெடுத்தாள், தாவீதுக்கும் இயேசுவுக்கும் மூதாதை ஆனாள். ஆம், விசுவாசமாகவும் தைரியமாகவும் செயல்படுபவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்.—ரூத் 2:12; 4:17-22; மத். 1:1-6.
அநேகர் தங்கள் உயிரையே பணயம் வைத்தார்கள்!
11. யோய்தாவும் யோசேபாளும் எப்படித் தைரியமாய்ச் செயல்பட்டார்கள், இதன் பலன் என்ன?
11 உண்மை வணக்கத்திற்கும் சக வணக்கத்தாரின் நலனுக்கும் முதலிடம் தந்த தம் ஊழியர்களோடு யெகோவா இருந்திருக்கிறார்; அதைப் பார்க்கும்போது நம்முடைய விசுவாசமும் தைரியமும் பலப்படுகிறது. உதாரணத்திற்கு, தலைமைக் குருவான யோய்தாவையும் அவரது மனைவி யோசேபாளையும் எடுத்துக்கொள்வோம். அகசியா ராஜா இறந்த பிறகு அவருடைய தாய் அத்தாலியாள், ராஜாவின் வாரிசுகளையெல்லாம் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்றினாள். அகசியாவின் மகனான யோவாஸ் மட்டும் உயிர்தப்பினான்; காரணம், யோய்தாவும் யோசேபாளும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து யோவாசைக் காப்பாற்றி, ஆறு வருடங்களுக்கு மறைத்து வைத்தார்கள். அதன்பின், ஏழாவது வருடம் யோய்தா யோவாசை ராஜாவாக ஆக்கினார், அத்தாலியாளைக் கொன்றுபோடக் கட்டளையிட்டார். (2 இரா. 11:1-16) ஆலயத்தைச் சீரமைக்கும் பணியில் யோவாசுக்கு யோய்தா ஒத்தாசையாக இருந்தார். 130-ஆம் வயதில் இறந்துபோனார்; “தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மை செய்தபடியினால்” ராஜாக்களுடன் அவர் அடக்கம் செய்யப்பட்டார். (2 நா. 24:15, 16) யோய்தாவும் அவருடைய மனைவியும் தைரியமாய்ச் செயல்பட்டதால் மேசியா வரவிருந்த வம்சாவளியை—தாவீதின் வம்சாவளியை—அவர்களால் பாதுகாக்க முடிந்தது.
12. எபெத்மெலேக்கு எப்படித் தைரியமாய்ச் செயல்பட்டார்?
12 சிதேக்கியா ராஜாவின் வீட்டிலிருந்த எபெத்மெலேக்கு என்ற எத்தியோப்பியன் எரேமியாவின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரையே பணயம் வைத்தார். எரேமியா தேசதுரோகச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டிய யூதாவின் பிரபுக்களுடைய கைகளில் சிதேக்கியா ராஜா எரேமியாவை ஒப்படைத்திருந்தார். அவர்கள் அவரை சேறும் சகதியுமாய் இருந்த பாழுங்கிணற்றில் சாகும்படி போட்டிருந்தார்கள். (எரே. 38:4-6) எரேமியாவை எல்லோரும் வெறுக்கிறார்கள் என்பது தெரிந்தும் எபெத்மெலேக்கு தன் உயிரைப் பணயம் வைத்து ராஜாவிடம் போய் அவருக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். ராஜாவும் சம்மதித்தார். 30 பேரைக் கூட்டிக்கொண்டுபோய் எரேமியாவைக் காப்பாற்றவும் கட்டளையிட்டார். எபெத்மெலேக்கு அப்படிக் காப்பாற்றியதால், எருசலேமை பாபிலோனியர் கைப்பற்றுகிற சமயத்தில் அவரைக் காப்பாற்றுவதாக எரேமியா மூலம் யெகோவா அவருக்கு உறுதியளித்தார். (எரே. 39:15-18) ஆம், தைரியமாய்ச் செயல்படுபவர்களுக்கு யெகோவா பலனளிக்கிறார்.
13. மூன்று எபிரெயர்கள் எப்படித் தைரியமாய்ச் செயல்பட்டார்கள், அவர்களுடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
13 விசுவாசமாகவும் தைரியமாகவும் செயல்படுகிறவர்களுக்கு யெகோவா பலனளிக்கிறார் என்பதற்கான அத்தாட்சியை, கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று எபிரெயர்கள் தங்கள் வாழ்க்கையில் கண்டார்கள். நேபுகாத்நேச்சார் ராஜா பாபிலோனிலிருந்த அரசதிகாரிகள் எல்லோரையும் கூடிவரச் செய்தார், வானளாவிய பொற்சிலையை வணங்கும்படி கட்டளையிட்டார். வணங்க மறுப்பவர்கள் அக்கினிச் சூளையில் போடப்படுவார்கள் என எச்சரித்தார். அந்த மூன்று எபிரெயர்களோ மரியாதையுடன் ராஜாவை நோக்கி, “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது” என்றார்கள். (தானி. 3:16-18) அந்த மூவரும் அற்புதமாய்க் காப்பாற்றப்பட்டதைப் பற்றிய விவரம் தானியேல் 3:19-30-ல் உள்ளது. அக்கினிச் சூளையில் நாம் போடப்பட மாட்டோம் என்றாலும், நம் உத்தமத்திற்குச் சவால்விடும் சோதனைகளைச் சிலசமயம் எதிர்ப்படுகிறோம்; அச்சமயங்களில், நம்முடைய விசுவாசத்திற்கும் தைரியத்திற்கும் கடவுள் பலனளிப்பார் என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம்.
14. தானியேல் 6-ஆம் அதிகாரத்தின்படி, தானியேல் எப்படித் தைரியமாய் நடந்துகொண்டார், விளைவு என்ன?
14 தானியேலின் எதிரிகள் தரியு ராஜாவை அணுகி, ‘எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத் தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம் பண்ணினால், அவன் சிங்கங்களின் குகையிலே போடப்படுவான்’ என்ற கட்டளையைப் பிறப்பிக்கச் சொன்னார்கள், ராஜாவும் சம்மதித்தார். அந்தச் சமயத்தில் தானியேல் விசுவாசத்தையும் தைரியத்தையும் வெளிக்காட்டினார். அந்தக் கட்டளைப் பத்திரத்தில் ராஜா கையெழுத்திட்டதை தானியேல் அறிந்தபோதிலும், ‘தன் வீட்டுக்குள்ளே போய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன்செய்து வந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினார்.’ (தானி. 6:6-10) இப்படித் தைரியமாய் நடந்துகொண்ட தானியேல் சிங்கக் குகையில் தள்ளப்பட்டார், ஆனால் யெகோவா அவரைக் காப்பாற்றினார்.—தானி. 6:16-23.
15. (அ) விசுவாசத்தையும் தைரியத்தையும் வெளிக்காட்டுவதில் ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் என்ன முன்மாதிரி வைத்தார்கள்? (ஆ) யோவான் 13:34-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன, அத்தகைய அன்பை அநேக கிறிஸ்தவர்கள் எப்படிக் காட்டியிருக்கிறார்கள்?
15 ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் பவுலின் ‘உயிரைக் காக்க தங்களுடைய உயிரையே பணயம் வைத்தார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (அப். 18:2; ரோ. 16:3, 4) அவர்கள் இயேசுவின் பின்வரும் வார்த்தைகளுக்கு இசைய தைரியமாய்ச் செயல்பட்டார்கள்: “நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்; நான் உங்கள்மீது அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.” (யோவா. 13:34) ஒருவர் தன்மீது அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மீதும் அன்பு காட்ட வேண்டுமென திருச்சட்டம் கட்டளையிட்டது. (லேவி. 19:18) அப்படியானால், இயேசு கொடுத்த கட்டளை எந்த அர்த்தத்தில் “புதிய” கட்டளையாக இருக்கிறது? மற்றவர்களுக்காக உயிரைக் கொடுக்குமளவுக்கு அவரைப் போலவே அன்பு காட்ட வேண்டும் என்ற அர்த்தத்திலேயே அது புதிய கட்டளையாக இருக்கிறது. சக வணக்கத்தார் எதிரிகளின் கைகளில் சிக்கி சித்திரவதைக்குள்ளாகாதபடி அல்லது கொல்லப்படாதபடி அவர்களைப் பாதுகாப்பதற்காக அநேக கிறிஸ்தவர்கள், தைரியமாய் ‘தங்களுடைய உயிரையே பணயம் வைத்து’ அன்பை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.—1 யோவான் 3:16-ஐ வாசியுங்கள்.
16, 17. கிறிஸ்துவின் ஆரம்பகால சீடர்கள் என்ன விசுவாச சோதனையை எதிர்ப்பட்டார்கள், அது எப்படி இன்றுள்ள கிறிஸ்தவர்கள் சிலருடைய அனுபவத்தோடு ஒத்திருக்கிறது?
16 இயேசுவைப் போலவே ஆரம்பகால கிறிஸ்தவர்களும் யெகோவாவை மட்டுமே தைரியமாக வழிபட்டார்கள். (மத். 4:8-10) ரோமப் பேரரசரைக் கௌரவிக்கும் விதத்தில் தூபப்பொருளை எரிக்க அவர்கள் மறுத்தார்கள். (படத்தைப் பாருங்கள்.) “நெருப்பு எரிந்துகொண்டிருந்த தூபபீடம் கிறிஸ்தவர்களின் வசதி கருதி பொதுவாக வட்டரங்கில் வைக்கப்பட்டிருந்தபோதிலும், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தூபப்பொருளை எரிக்க மறுத்தார்கள். சிறைக்கைதிகள், ஒரு சிட்டிகை தூபப்பொருளை எடுத்து எரிந்துகொண்டிருக்கும் தூபபீடத்தில் போடும்படி எதிர்பார்க்கப்பட்டார்கள். அப்படிச் செய்தபோது அவர்கள் பலிசெலுத்தியதாகச் சான்றிதழ் வழங்கி, விடுதலை செய்யப்பட்டார்கள். தூபப்பொருளை எரிப்பது ரோமப் பேரரசரை வழிபடுவதைக் குறிக்காதென்றும், அவரை ஒரு கடவுளென ஒப்புக்கொள்வதை மட்டுமே குறிக்கிறதென்றும் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இப்படி, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வாய்ப்பு இருந்தும் ஒருசில கிறிஸ்தவர்களே அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள்” என்று டானியல் பி. மானிக்ஸ் எழுதினார்.—சாவைச் சந்திக்கவிருந்தவர்கள் (ஆங்கிலம்).
17 நாசி சித்திரவதை முகாமில் மரணத்தை எதிர்நோக்கியிருந்த நவீனகால கிறிஸ்தவர்களும் அதுபோன்ற வாய்ப்புகளை அடிக்கடி எதிர்ப்பட்டார்கள். யெகோவாவை வழிபடுவதை நிறுத்திவிடுவதாகச் சொல்லும் ஆவணத்தில் கையெழுத்திட்டால் விடுதலை நிச்சயம் என்று சொல்லப்பட்டார்கள். ஆனால், அற்பசொற்ப எண்ணிக்கையினரே அதில் கையெழுத்திட்டார்கள். சமீப காலத்தில் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையின்போது ஹுட்டு சாட்சிகளும் டுட்ஸி சாட்சிகளும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஒருவரையொருவர் காப்பாற்றினார்கள். இத்தகைய சோதனைகளின்போது உண்மைக் கிறிஸ்தவர்களுக்குத் தைரியமும் விசுவாசமும் தேவைப்படுகிறது.
யெகோவா நம்மோடு இருக்கிறார், மறந்துவிடாதீர்கள்!
18, 19. விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்டிய யாருடைய உதாரணங்கள் நற்செய்தியை அறிவிக்க நமக்கு உதவும்?
18 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து சீடராக்கும் மிகப் பிரமாண்டமான வேலையைக் கடவுள் இன்று மனிதர்களிடம் ஒப்படைத்துள்ளார். எப்பேர்ப்பட்ட பாக்கியம்! (மத். 24:14; 28:19, 20) இந்த வேலையில் இயேசு ஒப்பற்ற முன்மாதிரி வைத்திருப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! அவர், “நகரம் நகரமாகவும் கிராமம் கிராமமாகவும் சென்று கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்தும் அறிவித்தும் வந்தார்.” (லூக். 8:1) அந்த நற்செய்தியை அறிவிக்க நமக்கு அவரைப் போலவே விசுவாசமும் தைரியமும் தேவைப்படுகிறது. ‘தேவபக்தியற்றவர்கள் நிறைந்த உலகத்தில்,’ அதாவது ஜலப்பிரளயத்தில் அழிக்கப்படவிருந்த உலகத்தில், ‘நீதியைப் பிரசங்கித்த’ நோவாவைப் போலவும் நாம் தைரியமாக இருக்கலாம், கடவுளுடைய உதவியோடு!—2 பே. 2:4, 5.
19 நற்செய்தியைப் பிரசங்கிக்க ஜெபம் நமக்கு உதவுகிறது. துன்புறுத்தலைச் சந்தித்த கிறிஸ்துவின் சீடர்கள் சிலர் ‘கடவுளுடைய வார்த்தையை முழு தைரியத்தோடு பேச’ உதவும்படி ஜெபம் செய்தபோது தைரியத்தைப் பெற்றார்கள். (அப்போஸ்தலர் 4:29-31-ஐ வாசியுங்கள்.) வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய உங்களுக்குக் கொஞ்சம் பயமாக இருக்கிறதென்றால், அதிக விசுவாசத்தையும் தைரியத்தையும் தரும்படி யெகோவாவிடம் கேளுங்கள், அவர் அதை நிச்சயம் உங்களுக்குத் தருவார்.—சங்கீதம் 66:19, 20-ஐ வாசியுங்கள்.a
20. யெகோவாவின் ஊழியர்களாக நமக்கு யாரெல்லாம் பக்கபலமாக இருக்கிறார்கள்?
20 தீமையும் துயரமும் சோதனையும் நிறைந்த இந்த உலகத்தில் கடவுளுக்குப் பிரியமாய் நடப்பது சவாலான விஷயம்தான். என்றாலும், நாம் தனியாக இல்லை. யெகோவா நம்மோடு இருக்கிறார். கிறிஸ்தவ சபையின் தலைவரான அவரது மகனும் நம்மோடு இருக்கிறார். உலகம் முழுக்க 70 லட்சத்திற்கும் மேலான சக வணக்கத்தாரும் நம்மோடு இருக்கிறார்கள். இவர்கள் இத்தனை பேரும் இருப்பதால், நாம் தொடர்ந்து விசுவாசத்தைக் காட்டுவோமாக! நற்செய்தியை அறிவிப்போமாக! ‘தைரியமாயிரு; உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருக்கிறார்’ என்ற 2013-ன் வருடாந்தர வசனத்தை மனதில் வைப்போமாக!—யோசு. 1:9.
a தைரியத்திற்கு முன்மாதிரியாய்த் திகழ்ந்த இன்னும் சிலருடைய உதாரணங்களைத் தெரிந்துகொள்ள 2012, பிப்ரவரி 15 தேதியிட்ட காவற்கோபுரத்தில் ‘உறுதியோடும் தைரியத்தோடும் இருங்கள்’ என்ற கட்டுரையைப் பாருங்கள்.