மோசே விசுவாசத்துக்குப் பேர்போனவர்!
விசுவாசம் என்றால் என்ன?
பைபிள் சொல்கிறபடி, “விசுவாசம்” என்பது ஆணித்தரமான அத்தாட்சிகளை வைத்து ஒரு விஷயத்தை உறுதியாக நம்புவதாகும். விசுவாசமுள்ள ஒரு நபர் கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என நம்புவார்.
மோசே எப்படி விசுவாசத்தைக் காட்டினார்?
கடவுளுடைய வாக்குறுதிகளைக் கண்முன் வைத்தே மோசே எல்லாத் தீர்மானங்களையும் எடுத்தார். (ஆதியாகமம் 22:15-18) அவர் நினைத்திருந்தால், எகிப்திலிருந்த சகல சுகபோகங்களையும் அனுபவித்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம்; ஆனால், அவர் அதையெல்லாம் உதறித் தள்ளினார். ‘பாவத்தினால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களை அனுபவிப்பதைவிட, கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்பங்களை அனுபவிப்பதையே தேர்ந்தெடுத்தார்.’ (எபிரெயர் 11:25) தான் எடுத்த முடிவை நினைத்து அவர் என்றாவது வருத்தப்பட்டாரா? இல்லவே இல்லை! ஏனென்றால், அவர் கடவுள்மீதுள்ள “விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:27) விசுவாசத்தோடு எடுத்த தீர்மானங்களை நினைத்து மோசே என்றுமே வருத்தப்படவில்லை.
கடவுள்மீது உறுதியான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள மோசே மற்றவர்களுக்கும் உதவினார். இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். ஒருசமயம், இஸ்ரவேல் மக்கள் பார்வோனின் படைக்கும் செங்கடலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார்கள்; இனி தங்களால் தப்பிக்கவே முடியாதென நினைத்தார்கள்; அதனால் பீதியடைந்தார்கள். மரண பயத்தில் யெகோவாவிடமும் மோசேயிடமும் கூக்குரலிட்டார்கள். அப்போது மோசே என்ன செய்தார்?
கடவுள் செங்கடலைப் பிளப்பார் என்றும், தப்பிச்செல்ல இஸ்ரவேலருக்கு வழி உண்டாக்குவார் என்றும் அப்போது மோசேக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். என்றாலும், தம்முடைய மக்களைக் காப்பாற்ற கடவுள் எதையாவது செய்வார் என உறுதியாய் நம்பினார். மற்ற இஸ்ரவேலருடைய மனதிலும் இந்த நம்பிக்கையை விதைக்க விரும்பினார். அதனால் அந்த ஜனங்களைப் பார்த்து: “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்கு [யெகோவா] உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்” என்று சொன்னார். (யாத்திராகமம் 14:13) மற்ற இஸ்ரவேலருடைய விசுவாசத்தை அவரால் பலப்படுத்த முடிந்ததா? நிச்சயமாக! “விசுவாசத்தினால்தான் அவர்கள், வறண்ட தரையில் நடப்பதுபோல் செங்கடலில் நடந்து போனார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:29) ஆம், மோசேயின் விசுவாசம் அவருக்கு மட்டுமல்ல இஸ்ரவேலர் எல்லோருக்குமே பயனளித்தது.
நமக்குப் பாடங்கள்:
மோசேயைப் போல நாமும் கடவுளுடைய வாக்குறுதிகளைக் கண்முன் வைத்தே எல்லாத் தீர்மானங்களையும் எடுக்க வேண்டும். உதாரணமாக, ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுத்தால் நம்முடைய பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதாகக் கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். (மத்தேயு 6:33) ஆனால், பணம்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற இந்த உலகில் எளிமையாக வாழ்வது நமக்குச் சவால்தான். இருந்தாலும், நம் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டு, யெகோவாவின் சேவையில் மும்முரமாய் ஈடுபட்டால் நம் தேவைகளையெல்லாம் அவர் பூர்த்தி செய்வார். “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் உறுதியளிக்கிறார்.—எபிரெயர் 13:5.
மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தவும் மோசேயைப் போல நாம் முயற்சி செய்ய வேண்டும். உதாரணமாக, ஞானமுள்ள பெற்றோர்கள் பிள்ளைகளின் மனதில் விசுவாசத்தை வளர்க்க வேண்டும், அதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் அவர்களுக்கு இருக்கின்றன. பிள்ளைகள் வளர வளர, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், எது சரி எது தவறு என்பதற்கான நெறிமுறைகளைத் தந்திருக்கிறார் என்றும் கற்றுக்கொடுப்பது மிக முக்கியம். அதோடு, அவருடைய நெறிமுறைகளின்படி வாழ்ந்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். (ஏசாயா 48:17, 18) கடவுள் “உண்மையாகவே இருக்கிறார் . . . தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுப்பார்” என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் உதவ வேண்டும். (எபிரெயர் 11:6, ஈஸி டு ரீட் வர்ஷன்) இந்த விசுவாசம்தான் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கிற மிகப் பெரிய சொத்து. (w13-E 02/01)