யெகோவாவை நேசிக்கிறவர்களுக்கு “இடறலில்லை”
“உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.”—சங். 119:165.
1. நம்பிக்கை இழக்காமல் உறுதியோடு இருந்த ஒருவரின் உதாரணத்தை விளக்குங்கள்.
பதின் பருவத்தில் கால் பதித்த நாளிலிருந்தே மேரி டெக்கர் பேர் பெற்ற ஓர் ஓட்டப் பந்தய வீராங்கனையாகக் கருதப்பட்டாள். 1984-ஆம் வருடம் நடந்த ஸம்மர் ஒலிம்பிக்ஸில் 3,000 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தைத் தட்டிச்செல்ல விரும்பினாள். ஆனால், வெற்றிக் கோட்டை அவளால் தாண்ட முடியவில்லை. இன்னொருவரின் கால் தடுக்கி முகங்குப்புற விழுந்ததில் காயம் ஏற்பட்டது. வலியில் துடித்துக்கொண்டிருந்த அவளை வெளியே தூக்கிச்செல்ல வேண்டியதாயிற்று. தோல்வியைக் கண்டு அவள் துவண்டுவிடவில்லை. அடுத்த வருடமே மீண்டும் பெண்களுக்கான ஒரு மைல் ஓட்டத்தில் கலந்துகொண்டு உலக சாதனை புரிந்தாள்.
2. கிறிஸ்தவர்களாகிய நாம் எப்படிப்பட்ட ஓட்டப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம், என்ன நோக்கத்தோடு ஓட வேண்டும்?
2 கிறிஸ்தவர்களாகிய நாம் அடையாள அர்த்தமுள்ள ஓர் ஓட்டப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதில் வெற்றி பெறும் நோக்கத்தோடு ஓட வேண்டும். வேகமாக ஓடினால் போதும் ஜெயித்துவிடலாம் என்று நினைக்க இது ஒன்றும் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் அல்ல. அதே சமயம் நின்று நிதானமாக ஓட இது ஒன்றும் ஜாகிங்கும் அல்ல. மாறாக, இது மாரத்தான் ஓட்டத்தைப் போன்றது; சகிப்புத்தன்மையோடு ஓடினால்தான் வெற்றி கிடைக்கும். கொரிந்து கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்தில் ஒரு ஓட்டப் பந்தய வீரரை உருவகப்படுத்தி விளக்கினார்; ஏனெனில் அந்த நகரம் போட்டி விளையாட்டுகளுக்குப் பேர்போனது. அவர் எழுதினார்: “ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்கிற எல்லாரும் ஓடுவார்கள், ஆனால் ஒருவர் மட்டுமே பரிசைப் பெறுவார் என்று உங்களுக்குத் தெரியாதா? பரிசைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் நீங்களும் ஓடுங்கள்.”—1 கொ. 9:24.
3. முடிவில்லா வாழ்வைப் பரிசாகப் பெறுபவர்கள் யார்?
3 அடையாள அர்த்தமுள்ள இந்த ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடும்படி பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 9:25-27-ஐ வாசியுங்கள்.) அதில் வெற்றி பெறுகிற பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் பூமிக்குரிய நம்பிக்கையுள்ளவர்களும் முடிவில்லா வாழ்வைப் பரிசாகப் பெறுவார்கள். இந்த ஓட்டத்தில் கடைசிவரை சகிப்புத்தன்மையுடன் ஓடுகிற எல்லோருக்கும் பரிசு நிச்சயம். (மத். 24:13) சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்காதவர்களும் வெற்றிக் கோட்டைத் தாண்டாதவர்களுமே பரிசை இழப்பார்கள். முடிவில்லா வாழ்வைப் பரிசாக வழங்கும் ஒரே பந்தயம் இதுதான்.
4. முடிவில்லா வாழ்வைப் பெற முட்டுக்கட்டையாய் இருப்பது எது?
4 வெற்றிக் கோட்டைத் தாண்டுவது சுலபம் அல்ல. சுயக்கட்டுப்பாடுடனும் குறிக்கோளுடனும் ஓடுவது அவசியம். ஒருமுறைகூட தடுக்கி விழாமல் வெற்றிக் கோட்டைத் தாண்டியவர் இயேசு கிறிஸ்து மட்டுமே. ஆனால், அவரைப் பின்பற்றுகிற “எல்லாரும் பலமுறை இடறிவிழுகிறோம்” என சீடனாகிய யாக்கோபு எழுதினார். (யாக். 3:2, அடிக்குறிப்பு) அது எவ்வளவு உண்மை! நம்முடைய குறைபாடுகளும் மற்றவர்களுடைய குறைபாடுகளுமே அதற்குக் காரணம். சில சமயங்களில் ஏதோவொன்று நம்மைத் தடுக்கிவிடலாம்; அதனால் தடுமாற்றம் ஏற்படலாம், வேகம் குறைந்து விடலாம், ஏன் கீழேகூட விழுந்துவிடலாம். ஆனால், எழுந்து தொடர்ந்து ஓடுவோம். சிலர் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டதால், எழுந்து மீண்டும் ஓட்டத்தைத் தொடர உதவி தேவைப்பட்டது. ஆகவே, நாம் அவ்வப்போதோ அடிக்கடியோ இடறுவது அல்லது விழுவது இயல்புதான்.—1 இரா. 8:46.
இடறினாலும் தொடர்ந்து ஓடுங்கள்
5, 6. (அ) ஒரு கிறிஸ்தவருக்கு எந்தவொரு ‘இடறலும் இல்லை’ என்று எப்படிச் சொல்லலாம், அவர் ‘எழுந்திருக்க’ எது உதவும்? (ஆ) இடறி விழுந்த சிலர் ஏன் எழுந்திருப்பதில்லை?
5 ஒருவருடைய ஆன்மீக நிலையை விவரிக்க ‘இடறுவது,’ ‘விழுவது’ ஆகிய வார்த்தைகளை நீங்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அந்த இரு வார்த்தைகளும் எப்போதுமே ஒரே அர்த்தத்தைத் தருவதில்லை. உதாரணத்திற்கு, நீதிமொழிகள் 24:16-ஐக் கவனியுங்கள்: “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.”
6 தம்மீது நம்பிக்கை வைப்பவர்கள் இடறுவதற்கோ விழுவதற்கோ யெகோவா விடமாட்டார்; அதாவது, அவரை வழிபடுவதில் பிரச்சினையோ தடங்கலோ ஏற்பட்டு அதிலிருந்து மீளவே முடியாதபடி விட்டுவிட மாட்டார். நாம் ‘எழுந்திருக்க’ யெகோவா நிச்சயம் உதவுவார்; அப்போது, மிகுந்த பக்தியுள்ளவர்களாக நம்மால் தொடர்ந்து இருக்க முடியும். யெகோவாவை உள்ளப்பூர்வமாக நேசிப்போருக்கு இது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது! துன்மார்க்கருக்கோ எழுந்திருக்க வேண்டுமென்ற ஆசையே இல்லை. அவர்கள், கடவுளுடைய சக்தியின் உதவியையோ, அவருடைய மக்களின் உதவியையோ நாடுவதில்லை, உதவிக்கரம் நீட்டினாலும் அதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், ‘யெகோவாவின் வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு’ எந்தவொரு இடறலும் இல்லை; அவர்கள் வாழ்வுக்கான ஓட்டத்தில் தொடர்ந்து ஓடுவார்கள்.—சங்கீதம் 119:165-ஐ வாசியுங்கள்.
7, 8. ஒருவர் ‘விழுந்தாலும்’ கடவுளுடைய தயவை எப்படிப் பெறலாம்?
7 பலவீனத்தின் காரணமாக சிலர் சிறிய பாவத்தில் விழுகிறார்கள், பல முறைகூட விழுகிறார்கள். இருந்தாலும் அவர்கள் ‘எழும்பினால்,’ அதாவது உள்ளப்பூர்வமாக மனந்திரும்பி மீண்டும் கடவுளை உண்மையோடு சேவிக்க கடும் முயற்சி செய்தால், யெகோவாவுக்கு முன் நீதியுள்ளவர்களாக இருப்பார்கள். பூர்வ இஸ்ரவேலரிடம் யெகோவா நடந்துகொண்ட விதத்திலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம். (ஏசா. 41:9, 10) நீதிமொழிகள் 24:16 நம்முடைய குறைகளை, அதாவது நாம் ‘விழுவதை’ பெரிதுபடுத்திக் காட்டுவதில்லை. மாறாக, நாம் ‘எழுந்திருக்க’ கடவுள் நிச்சயம் உதவுவார் என்பதையே வலியுறுத்திக் காட்டுகிறது. (ஏசாயா 55:7-ஐ வாசியுங்கள்.) யெகோவா தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நம்மீது நம்பிக்கை இருப்பதால் நாம் ‘எழுந்திருக்க’ தயவோடு உதவுகிறார்கள்.—சங். 86:5; யோவா. 5:19.
8 மாரத்தான் ஓட்டத்தில் ஒருவர் இடறினாலோ விழுந்தாலோ உடனடியாகச் செயல்பட்டால், தன்னை சரிப்படுத்திக்கொண்டு ஓட்டத்தை முடிக்க போதுமான நேரம் இருக்கும். நம் ஆன்மீக ஓட்டம் முடிவுக்கு வருகிற “அந்த நாளும் அந்த நேரமும்” நமக்குத் தெரியாது. (மத். 24:36) இருந்தாலும், முடிந்தளவு இடறலைத் தவிர்த்தால் ஒரே சீராக ஓடி வெற்றி கோட்டைத் தாண்டிவிடலாம். அப்படியானால், இடறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
முன்னேற்றத்தைத் தடுக்கும் இடறல்
9. என்ன இடறல்களைப் பற்றி நாம் இப்போது சிந்திப்போம்?
9 ஐந்து இடறல்களைப் பற்றி இப்போது சிந்திப்போம்: நம்முடைய குறைபாடுகள், பாவ இச்சைகள், சக கிறிஸ்தவர்களால் அநியாயம் இழைக்கப்படுதல், உபத்திரவம் அல்லது துன்புறுத்தல், மற்றவர்களின் அபூரணம். நாம் இடறும்போது நம்மை நம்பிக்கை துரோகிகள் என யெகோவா முத்திரை குத்திவிட மாட்டார். நம்மிடம் மிகவும் பொறுமையாக நடந்துகொள்வார்.
10, 11. தாவீதுக்கு என்ன குறைபாடு இருந்தது?
10 நம்முடைய குறைபாடுகள், ஓடும் தடத்தில் ஆங்காங்கே கிடக்கும் கற்களைப் போன்றவை. தாவீது ராஜா மற்றும் அப்போஸ்தலன் பேதுருவின் வாழ்க்கையிலிருந்து இரண்டு குறைப்பாடுகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஒன்று, சுயக்கட்டுப்பாடற்ற நடத்தை; இரண்டு, மனித பயம்.
11 பத்சேபாளுடைய விஷயத்தில் தாவீது ராஜா சுயக்கட்டுப்பாடில்லாமல் நடந்துகொண்டார். நாபால் அவரைக் கேவலமாகப் பேசியபோது, கொலை செய்யுமளவுக்கு சென்றுவிட்டார். ஆம், சுயக்கட்டுப்பாட்டை இழந்தார். ஆனாலும் யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்யவே எப்போதும் விரும்பினார். மற்றவர்களின் உதவியோடு தன்னுடைய குறையை நிறைவு செய்தார்.—1 சா. 25:5-13, 32, 33; 2 சா. 12:1-13.
12. இடறல் ஏற்பட்டாலும் பேதுரு எப்படித் தொடர்ந்து ஓடினார்?
12 மனித பயத்தின் காரணமாக சில நேரங்களில் பேதுருவுக்கு இடறல் ஏற்பட்டது; என்றாலும், இயேசுவுக்கும் யெகோவாவுக்கும் உண்மையோடு இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில், எல்லோருக்கும் முன்பாக தன் எஜமானரை மறுதலித்தார், ஒருமுறை அல்ல, மூன்று முறை. (லூக். 22:54-62) மற்றொரு சமயம், கிறிஸ்தவ குணத்தைக் காட்டத் தவறினார்; யூத கிறிஸ்தவர்களை உயர்வாக நினைத்துக்கொண்டு புறதேசத்து கிறிஸ்தவர்களைத் தாழ்வாக நடத்தினார். பேதுருவின் இந்த மனப்பான்மை தவறாக இருந்தது. ஆனால் சபையில் பாகுபாடு இருக்கக்கூடாது என்பதை அப்போஸ்தலன் பவுல் நன்கு அறிந்திருந்தார். பேதுருவின் இந்த நடத்தையை மற்றவர்கள் பின்பற்றிவிடக் கூடாது என்பதற்காக, அவர் பேதுருவுக்கு உடனடியாக ஆலோசனை கொடுத்தார். (கலா. 2:11-14) அதைக் கௌரவக் குறைச்சலாக நினைத்து வாழ்வுக்கான ஓட்டத்தை பேதுரு நிறுத்திவிட்டாரா? இல்லை. பவுலின் ஆலோசனையை மனமார ஏற்றுக்கொண்டு, தன்னைச் சரிசெய்துகொண்டு, ஓட்டத்தைத் தொடர்ந்தார்.
13. உடல்நல பிரச்சினைகள் எப்படி இடறலடையச் செய்யலாம்?
13 உடல்நல பிரச்சினையும் நம்முடைய குறைபாடுகளில் ஒன்று. இதுவும் ஒரு பெரிய இடறலாக இருக்கலாம். இது ஆன்மீக ஓட்டத்தில் சீராக ஓட விடாமல் தடுக்கலாம், தடுமாற வைக்கலாம், சோர்வூட்டலாம். ஜப்பானைச் சேர்ந்த ஒரு சகோதரி, ஞானஸ்நானம் எடுத்து 17 வருடங்களுக்குப் பின் வியாதியால் அவதிப்பட்டார். தன்னுடைய உடல்நல பிரச்சினையைப் பற்றியே யோசித்து யோசித்து, ஆன்மீக ரீதியில் பலவீனமானார். கடைசியில் செயலற்ற பிரஸ்தாபியாகவே ஆனார். இரண்டு மூப்பர்கள் அவரைச் சந்தித்துப் பேசினார்கள். அவர்களுடைய அன்பான வார்த்தைகள் அவருக்குத் தெம்பளித்தன. மீண்டும் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தார். “சகோதரர்கள் என்னை அன்போடு வரவேற்றத்தைப் பார்த்து கண்ணீரே வந்துவிட்டது” என்று அவர் சொல்கிறார். அவர் திரும்பவும் ஆன்மீக ஓட்டத்தைத் தொடர்ந்தார்.
14, 15. பாவ இச்சைகள் தலைதூக்கும்போது என்ன கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்? விளக்குங்கள்.
14 பாவ இச்சைகள் அநேகரை இடற வைத்திருக்கிறது. இந்தச் சோதனையை நாம் எதிர்படும்போது, மன ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் சுத்தமாயிருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமக்கு இடறல் உண்டாக்குகிற எதையும், கண்ணோ கையோ எதுவாக இருந்தாலும், இயேசு சொன்னதுபோல் ஒரு கருத்தில் அதை ‘பிடுங்கியோ’ ‘வெட்டியோ’ எறிந்துவிட வேண்டும். ஒழுக்கக்கேடான சிந்தனையும் செயல்களும் அதில் அடங்கும். இது சிலரை ஆன்மீக ஓட்டப் பந்தயத்திலிருந்து விலக வைத்திருக்கிறது.—மத்தேயு 5:29, 30-ஐ வாசியுங்கள்.
15 ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் பல காலமாகவே தன்னைப் பாடாய்ப்படுத்தியதாக ஒரு சகோதரர் எழுதினார். அவர் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் வளர்ந்திருந்தாலும் “யார்கிட்டேயும் என்னால சகஜமா பழக முடியல” என்று சொன்னார். 20 வயதிலேயே ஒழுங்கான பயனியராகவும் உதவி ஊழியராகவும் ஆனார். அதற்குப் பிறகுதான் இடறி விழுந்தார். அதனால் அவருக்குச் சிட்சை கொடுக்கப்பட்டது. மூப்பர்களின் உதவியைப் பெற்றார். ஜெபிப்பது, பைபிள் படிப்பது, மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது இவையெல்லாம் ஆன்மீக ஓட்டத்தில் மீண்டும் சீராக ஓட அவருக்குக் கைகொடுத்தன. பல வருடங்களுக்குப் பிறகு அவர் சொல்கிறார்: “இப்பவும் சில சமயம் அந்த நினைப்பு வரும், ஆனாலும் என்னை கட்டுப்படுத்திக்குவேன். சமாளிக்க முடியாதளவுக்கு சோதிக்கப்பட யெகோவா என்னை விட மாட்டாருனு தெரியும். நான் இத நிச்சயம் சமாளிச்சிடுவேன்னு கடவுள் நினைக்கிறாரு.” “நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் புதிய உலகத்துல பலன் கிடைக்கும். அதுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன்! அதுவரைக்கும் போராடிகிட்டே இருப்பேன்.” ஆன்மீக ஓட்டத்தில் விடாமல் ஓட அவர் தீர்மானமாய் இருக்கிறார்.
16, 17. (அ) அநியாயம் இழைக்கப்பட்டதாக நினைத்த ஒரு சகோதரருக்கு எது உதவியது? (ஆ) இடறலடையாமல் இருக்க யார்மீது கவனம் செலுத்த வேண்டும்?
16 சக கிறிஸ்தவர்களால் அநியாயம் இழைக்கப்படுவது நம்மை இடற வைக்கலாம். பிரான்சில், முன்பு மூப்பராய் இருந்த ஒருவர் தனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக நினைத்து, கோபப்பட்டார். அதனால், சபைக்கு வருவதை நிறுத்தினார், செயலற்ற பிரஸ்தாபியானார். இரண்டு மூப்பர்கள் அவரைச் சந்தித்துப் பேசினார்கள். மனதிலிருந்ததை அவர் சொன்னபோது, மூப்பர்கள் இடையில் குறுக்கிடாமல் கரிசனையோடு எல்லாவற்றையும் கேட்டார்கள். எல்லாப் பாரத்தையும் யெகோவாமீது போட்டுவிடும்படி அவரிடம் சொன்னார்கள்; கடவுளைப் பிரியப்படுத்துவதுதான் மிக முக்கியம் என்பதையும் வலியுறுத்தினார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டுத் திரும்பவும் சபைக் காரியங்களில் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்தார். மீண்டும் ஆன்மீக ஓட்டத்தைத் தொடர்ந்தார்.
17 இயேசு கிறிஸ்துவே சபையின் தலைவர் என்பதை நாம் மறக்கக்கூடாது. அபூரண மனிதர்கள் செய்வதைப் பார்த்து வீணாகக் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால், இயேசுவின் கண்கள் “தீ ஜுவாலையை” போன்றது என பைபிள் சொல்கிறது. (வெளி. 1:13-16) அதனால், அவர் எல்லாவற்றையும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கிறார். மனிதர்களைப் போல் இல்லாமல் சபையில் நடக்கும் எல்லாவற்றையும் நன்கு புரிந்துகொள்கிறார். உதாரணமாக, நாம் ஒரு விஷயத்தை தவறாகப் புரிந்துகொண்டதால்தான் நமக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக நினைக்கிறோம் என்று அவருக்குத் தெரியும். சபையின் குறைகளை சரியான விதத்தில், சரியான நேரத்தில் இயேசு சரிசெய்வார். அதனால், சபையில் இருக்கும் ஒருவரின் செயல்களாலோ தீர்மானத்தாலோ நாம் இடறலடையக் கூடாது.
18. கஷ்டங்களை நாம் எப்படிச் சகிக்கலாம்?
18 மற்ற இரண்டு இடறல்கள்: உபத்திரவம் அல்லது துன்புறுத்தல், சபையிலுள்ள மற்றவர்களின் அபூரணம். கடவுளுடைய வார்த்தையின் காரணமாக “உபத்திரவமோ துன்புறுத்தலோ” வரும்போது சிலர் இடறலடைவார்கள் என, விதைப்பவரைப் பற்றிய உவமையில் இயேசு சொன்னார். குடும்பத்தாரிடமிருந்து... மற்றவர்களிடமிருந்து... அரசாங்க அதிகாரிகளிடமிருந்து... என யாரிடமிருந்து துன்புறுத்தல் வந்தாலும், தங்களுக்குள் ‘வேர் விடாதவர்களே,’ அதாவது ஆன்மீக ரீதியில் உறுதியற்றவர்களே முக்கியமாக பாதிக்கப்படுவார்கள். (மத். 13:21) ஆனால், நாம் எப்போதும் நல்மனமுள்ளவர்களாக இருந்தால் ராஜ்ய விதை வேர்விட்டு நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும். எனவே, கஷ்டங்கள் வரும்போது ஜெபம் செய்யுங்கள், “பாராட்டுக்குரிய” விஷயங்களைத் தியானித்துப் பாருங்கள். (பிலிப்பியர் 4:6-9-ஐ வாசியுங்கள்.) யெகோவா தரும் பலத்தால் கஷ்டங்களைச் சகிப்போம், இடறலடைய மாட்டோம்.
19. யாராவது புண்படுத்தும்போது இடறலடையாமல் இருப்பது எப்படி?
19 மற்றவர்களுடைய அபூரணத்தால் இடறி, சிலர் ஓட்டப் பந்தயத்தைவிட்டு விலகியிருப்பது சோகமான விஷயம். மனசாட்சியின்படி தீர்மானம் எடுக்க வேண்டிய விஷயங்களில் வித்தியாசப்பட்ட கருத்துகள் இருப்பதைப் பார்த்து அவர்கள் இடறல் அடைந்திருக்கிறார்கள். (1 கொ. 8:12, 13) யாராவது நம்மைப் புண்படுத்திவிட்டால் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு சத்தியத்தை விட்டே விலகிவிடுவோமா? மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், மன்னியுங்கள், சொந்த கருத்துகளைத் திணிக்காதீர்கள் என்று கிறிஸ்தவர்களுக்கு பைபிள் அறிவுரை தருகிறது. (லூக். 6:37) அப்படிப்பட்ட இடறல் ஏற்பட்டால், ‘என்னுடைய கருத்துகளின் அடிப்படையில் மற்றவர்களை நியாயந்தீர்க்கிறேனா? சகோதரர்கள் எல்லோரும் அபூரணர் என்பதை அறிந்திருந்தும், ஒருவர் செய்த தவறைக் காரணங்காட்டி வாழ்வுக்கான ஓட்டத்திலிருந்து விலகி விடுவேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். யெகோவாமீது அன்பு இருந்தால், மற்றவர் செய்யும் எந்த விஷயமும் வெற்றிக் கோட்டைத் தாண்ட நமக்குத் தடையாக இருக்காது.
இடறலைத் தவிர்த்து சகிப்புத்தன்மையோடு ஓடுங்கள்
20, 21. வாழ்வுக்கான ஓட்டத்தில் ஓடும்போது என்ன செய்யத் தீர்மானமாய் இருக்கிறீர்கள்?
20 ‘கடைசிவரை ஓடி முடிக்க’ தீர்மானமாய் இருக்கிறீர்களா? (2 தீ. 4:7, 8) அதற்குத் தனிப்பட்ட படிப்பு மிக முக்கியம். பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் ஆராய்ச்சி செய்யுங்கள், தியானியுங்கள், எவையெல்லாம் இடறலாக இருக்குமென கண்டுபிடியுங்கள். ஆன்மீகத் தெம்பு பெற கடவுளுடைய சக்திக்காக மன்றாடுங்கள். தற்காலிகமாக இடறியதால் அல்லது விழுந்ததால் ஒருவர் வாழ்வுக்கான ஓட்டத்தில் தோல்வி அடைய மாட்டார். அவர் எழுந்து மீண்டும் ஓடலாம். தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றி, சவால்களிலிருந்து நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
21 முடிவில்லா வாழ்வுக்கான ஓட்டப்பந்தயத்தைப் பற்றி பைபிள் சொல்லும்போது அதில் ஒரு செயல் உட்பட்டிருக்கிறது. இது ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து வெற்றிக்கோட்டை அடைவது போன்றது அல்ல. நாம்தான் ஓட வேண்டும். அப்படிச் செய்யும்போது, யெகோவாவிடமிருந்து வரும் ‘மிகுந்த சமாதானம்’ பின்னாலிருந்து அடிக்கும் காற்றைப் போல் நமக்கு உதவும். (சங். 119:165) ஆம் இப்போதும், ஓட்டத்தை முடித்த பின்பும் யெகோவாவிடமிருந்து அளவற்ற ஆசீர்வாதங்களை நிச்சயம் பெறுவோம்!—யாக். 1:12.