இயேசு செய்த ஜெபத்திற்கு இசைய செயல்படுங்கள்
“தகப்பனே, . . . உங்கள் மகன் உங்களை மகிமைப்படுத்தும்படி நீங்கள் உங்கள் மகனை மகிமைப்படுத்துங்கள்.”—யோவா. 17:1.
1, 2. கி.பி. 33-ல், பஸ்காவை அனுசரித்த பிறகு, தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களுடன் இயேசு என்ன செய்தார்?
கி.பி. 33, நிசான் 14-ன் இரவு நேரம் அது. இயேசுவும் அவருடைய சீடர்களும் அப்போதுதான் பஸ்கா பண்டிகையை அனுசரித்து முடித்திருக்கிறார்கள்; இது, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர்களை கடவுள் எப்படி விடுவித்தார் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டியிருக்கும். ஆனால், இதைவிட மகத்தான ஒரு “நிரந்தர விடுதலையை” அவருடைய சீடர்கள் பெறப்போகிறார்கள். மறுநாள், இயேசுவின் எதிரிகள் அவரைக் கொலை செய்யப்போகிறார்கள். ஆனால், அவருடைய சாவு ஓர் ஆசீர்வாதமாகவே அமையப்போகிறது. ஏனென்றால், இயேசுவின் மரணம் மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கப்போகிறது.—எபி. 9:12-14.
2 அந்த அன்பான ஏற்பாட்டை நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக வருடந்தோறும் அனுசரிக்கப்படும் ஒரு புதிய ஆசரிப்பை இயேசு ஆரம்பித்து வைத்தார்; அது பஸ்காவை முடிவுக்குக் கொண்டு வந்தது. அந்த அனுசரிப்பின்போது என்ன நடந்தது? இயேசு புளிப்பில்லாத ரொட்டியை எடுத்து, அதைப் பிட்டு, தம்முடைய 11 அப்போஸ்தலர்களிடம் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடலைக் குறிக்கிறது. என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்றார். பிறகு, திராட்சைமதுவை அவர்களிடம் கொடுத்து, “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படப்போகிற என் இரத்தத்தின் அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது” என்று சொன்னார்.—லூக். 22:19, 20.
3. (அ) இயேசுவின் மரணத்திற்குப் பிறகு நடந்த மிகப்பெரிய மாற்றம் என்ன? (ஆ) யோவான் 17-ல் பதிவாகியுள்ள இயேசுவின் ஜெபத்தைப் பற்றிச் சிந்திக்கையில் என்ன கேள்விகளுக்கான பதில்களைக் கவனிப்போம்?
3 கடவுளுக்கும் இஸ்ரவேல் தேசத்துக்கும் இடையே இருந்த பழைய திருச்சட்ட ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வரவிருந்தது. அதற்குப் பதிலாக, யெகோவாவுக்கும் பரலோக நம்பிக்கையுள்ள இயேசுவின் சீடர்களுக்கும் இடையே ஒரு புதிய ஒப்பந்தம் செய்யப்படவிருந்தது. இந்தப் புதிய ஆன்மீக தேசத்தின்மீது இயேசுவுக்கு அதிக அக்கறை இருந்தது. ஆனால், இஸ்ரவேல் தேசம் கடவுளை ஒன்றுசேர்ந்து வழிபடவில்லை, கடவுளுடைய பெயருக்கு களங்கமும் ஏற்படுத்தியது. (யோவா. 7:45-49; அப். 23:6-9) இவர்களைப்போல் தம்முடைய சீடர்கள் இருக்கக்கூடாது என்று இயேசு நினைத்தார். இவர்கள் ஒற்றுமையாக இருந்து கடவுளுடைய பெயருக்கு மகிமை சேர்க்க வேண்டுமென விரும்பினார். அதற்காக அவர் என்ன செய்தார்? மிக அற்புதமான ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார்; அதை பைபிளிலிருந்து வாசிப்பது ஒரு பெரிய பாக்கியம். (யோவா. 17:1-26; முதல் படத்தைக் காண்க.) இந்த ஜெபத்தைப் பற்றிச் சிந்திக்கையில் பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைக் கவனிக்கலாம்: “இயேசுவின் ஜெபத்திற்குக் கடவுள் பதிலளித்தாரா? நான் அந்த ஜெபத்திற்கு இசைவாகச் செயல்படுகிறேனா?”
இயேசுவின் முன்னுரிமைகள்
4, 5. (அ) இயேசு செய்த ஜெபத்தின் ஆரம்ப வார்த்தைகளிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) இயேசு தமக்காகச் செய்த வேண்டுகோளுக்கு யெகோவா எப்படி பதிலளித்தார்?
4 இரவு வெகுநேரம் வரையாக இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்; அநேக அருமையான விஷயங்களைக் கற்பித்துக்கொண்டிருந்தார். அதன்பின் கண்களை வானத்துக்கு ஏறெடுத்து இவ்வாறு ஜெபம் செய்தார்: “தகப்பனே, வேளை வந்துவிட்டது; உங்கள் மகன் உங்களை மகிமைப்படுத்தும்படி நீங்கள் உங்கள் மகனை மகிமைப்படுத்துங்கள்; ஏனென்றால், நீங்கள் அவருக்குத் தந்துள்ள எல்லாருக்கும் அவர் முடிவில்லா வாழ்வை அளிப்பதற்காக மனிதர்கள் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறீர்கள். . . . நீங்கள் எனக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடித்து பூமியில் உங்களை மகிமைப்படுத்தியிருக்கிறேன். அதனால் தகப்பனே, உலகம் உண்டாவதற்கு முன்பு உங்கள் அருகில் எனக்கிருந்த அதே மகிமையைத் தந்து இப்போது உங்கள் அருகில் என்னை மகிமைப்படுத்துங்கள்.”—யோவா. 17:1-5.
5 ஜெபத்தின் ஆரம்ப வார்த்தைகளில் இயேசு எதற்கெல்லாம் முன்னுரிமை கொடுத்தார் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். பரலோகத் தகப்பனை மகிமைப்படுத்துவது அவருடைய முக்கிய நோக்கமாக இருந்தது. இது, “தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று இயேசு கற்றுக்கொடுத்த மாதிரி ஜெபத்தின் முதல் வேண்டுகோளுக்கு இசைவாக இருக்கிறது. (லூக். 11:2) இரண்டாவதாக, சீடர்களின் தேவைகளுக்காக ஜெபம் செய்தார். அதாவது, அவர் தம்முடைய சீடர்களுக்கு ‘முடிவில்லா வாழ்வை அளிக்க’ வேண்டுமென கேட்டார். அதன் பிறகுதான் சொந்த விஷயத்திற்காக ஜெபம் செய்தார். “உலகம் உண்டாவதற்கு முன்பு உங்கள் அருகில் எனக்கிருந்த அதே மகிமையைத் தந்து இப்போது உங்கள் அருகில் என்னை மகிமைப்படுத்துங்கள்” என்று கேட்டார். இயேசு கேட்டுக்கொண்டதைவிட யெகோவா அவரை அதிகமாகவே மகிமைப்படுத்தினார்; ஆம், தேவதூதர்களைவிட “மிகச் சிறந்த பெயரை” அவருக்குக் கொடுத்தார்.—எபி. 1:4.
‘உண்மையான கடவுளை அறிந்துகொண்டே இருப்பது’
6. அப்போஸ்தலர்கள் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டியிருந்தது, அதை அவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்?
6 நாம் பாவிகளாக இருப்பதால், முடிவில்லா வாழ்வைப் பரிசாகப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இயேசு அந்த ஜெபத்தில் குறிப்பிட்டார். (யோவான் 17:3-ஐ வாசியுங்கள்.) நாம் கடவுளைப் பற்றியும் கிறிஸ்துவைப் பற்றியும் “அறிந்துகொண்டே” இருக்க வேண்டும் என்று சொன்னார். நாம் இதை எப்படிச் செய்யலாம்? முதலாவது, யெகோவாவைப் பற்றியும் அவருடைய மகனைப் பற்றியும் தெரிந்துகொள்ள நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இரண்டாவதாக, நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அப்போஸ்தலர்கள் இவற்றை ஏற்கெனவே கடைப்பிடித்ததால், தம்முடைய ஜெபத்தில் ‘நீங்கள் எனக்குச் சொன்ன வார்த்தைகளை நான் இவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; இவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டார்கள்’ என்று இயேசு சொன்னார். (யோவா. 17:8) ஆனால், முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கு அவர்கள் கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து தியானிப்பதும் அதைத் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் அவசியமாக இருந்தது. அப்படியானால், அப்போஸ்தலர்கள் பூமியில் வாழ்ந்த காலமெல்லாம் இதைச் செய்துகொண்டிருந்தார்களா? ஆம், நிச்சயமாகவே! பரலோக நம்பிக்கையுள்ளவர்களால் ஆன புதிய எருசலேமின் 12 அஸ்திவாரக் கற்களில், அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவருடைய பெயர்களும் நிரந்தரமாக எழுதப்பட்டதிலிருந்து இதை நாம் தெரிந்துகொள்கிறோம்.—வெளி. 21:14.
7. கடவுளை ‘அறிந்துகொண்டே இருப்பது’ என்றால் என்ன, அது ஏன் மிக முக்கியம்?
7 நாம் முடிவில்லா வாழ்வைப் பெற வேண்டுமானால், கடவுளைப் பற்றி “அறிந்துகொண்டே” இருக்க வேண்டும். இது எதை அர்த்தப்படுத்துகிறது? நாம் கடவுளைப் பற்றி அதிகமதிகமாகக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என அர்த்தப்படுத்துகிறது. அப்படியானால், கடவுளுடைய குணங்களையும் நோக்கத்தையும் மட்டும் அறிந்துகொண்டால் போதாது. அவரை நெஞ்சார நேசிக்க வேண்டும், அவரோடு நெருங்கிய நட்புறவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, சகக் கிறிஸ்தவர்களையும் நேசிக்க வேண்டும். “அன்பு காட்டாதவன் கடவுளை அறியாதிருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோ. 4:8) எனவே, கடவுளை அறிவது, அவருக்குக் கீழ்ப்படிவதை உட்படுத்துகிறது. (1 யோவான் 2:3-5-ஐ வாசியுங்கள்.) யெகோவாவை அறிந்திருப்பவர்களில் நாமும் ஒருவராக இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஆனால், யூதாஸ் இஸ்காரியோத்து கடவுளோடிருந்த நட்புறவை முறித்துவிட்டான். அவனைப்போல் இல்லாமல், கடவுளோடுள்ள நட்புறவை காத்துக்கொள்ள நாம் கடினமாக உழைக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, முடிவில்லா வாழ்வு எனும் அற்புதமான பரிசை யெகோவா நமக்குத் தருவார்.—மத். 24:13.
“உங்கள் பெயரை முன்னிட்டு”
8, 9. இயேசுவுக்கு அதிமுக்கியமாக இருந்தது எது, எந்தப் பாரம்பரியத்தை அவர் வெறுத்திருப்பார்?
8 யோவான் 17-ஆம் அதிகாரத்தில் பதிவாகியுள்ள இயேசுவின் ஜெபத்தை நாம் வாசிக்கும்போது, அவருக்கு அப்போஸ்தலர்கள்மீது மட்டுமல்ல நம்மீதும் ஆழமான அன்பு இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. (யோவா. 17:20) அதேசமயம், நாம் மீட்படைய வேண்டும் என்பதைவிட தம்முடைய தகப்பனின் பெயர் மகிமைப்பட வேண்டும் என்பதே அவருக்கு அதிமுக்கியமானதாக இருந்தது. ஆம், பூமியில் இருந்த காலமெல்லாம் இயேசு தம் தகப்பனின் பெயரை மகிமைப்படுத்தினார். உதாரணத்திற்கு, தாம் பூமிக்கு வந்த காரணத்தை முதன்முறையாக விளக்கியபோது, ஏசாயாவின் சுருள்களிலிருந்து இப்படி வாசித்தார்: “யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது, ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை நியமித்தார்.” இயேசு இதை வாசித்தபோது, கடவுளுடைய பெயரை சரியாக உச்சரித்திருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.—லூக். 4:16-21.
9 இயேசு பூமிக்கு வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தக்கூடாது என யூத மதத் தலைவர்கள் போதித்திருந்தார்கள். இயேசு இந்தப் பாரம்பரியத்தை எந்தளவு வெறுத்திருப்பார் என்று கற்பனை செய்துபாருங்கள். அந்த மதத் தலைவர்களிடம், “நான் என்னுடைய தகப்பனின் பெயரில் வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை; வேறொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், அவனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்” என்று சொன்னார். (யோவா. 5:43) பிறகு, தாம் மரிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, “தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று ஜெபம் செய்வதன் மூலம் தமக்கு எது அதிமுக்கியமானது என்பதை வெளிக்காட்டினார். (யோவா. 12:28) தம்முடைய தகப்பனின் பெயர் மகிமைப்படுவதே இயேசுவுக்கு வாழ்க்கையில் அதிமுக்கியமானதாக இருந்தது என்பதை யோவான் 17-ல் பதிவாகியிருக்கும் ஜெபமும் காட்டுகிறது.
10, 11. (அ) இயேசு, தம்முடைய தகப்பனின் பெயரை சீடர்களுக்கு எப்படி வெளிப்படுத்தினார்? (ஆ) இயேசுவின் சீடர்கள், என்ன நோக்கத்தோடு யெகோவாவின் பெயரைத் தெரியப்படுத்தி வருகிறார்கள்?
10 “நீங்கள் இந்த உலகத்திலிருந்து தேர்ந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உங்களுடைய பெயரை வெளிப்படுத்தியிருக்கிறேன். இவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்களாக இருந்தார்கள், இவர்களை என்னிடம் தந்தீர்கள், இவர்கள் உங்களுடைய வார்த்தையைக் கடைப்பிடித்திருக்கிறார்கள். இனியும் நான் இந்த உலகத்தில் இருக்கப்போவதில்லை; ஆனால், இவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள், நான் உங்களிடம் வருகிறேன். பரிசுத்த தகப்பனே, நாம் ஒன்றாயிருப்பது போல் இவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிற உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைப் பாதுகாத்தருளுங்கள்” என்று இயேசு ஜெபித்தார்.—யோவா. 17:6, 11.
11 இயேசு, தம்முடைய தகப்பனின் பெயரை சீடர்களுக்கு வெளிப்படுத்தியபோது வெறுமென அந்தப் பெயரை உச்சரிக்கவில்லை. மாறாக, யெகோவா எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவினார். கடவுளுடைய அருமையான குணங்களைப் பற்றியும் மக்களிடம் அவர் நடந்துகொள்ளும் விதத்தைப் பற்றியும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (யாத். 34:5-7) இயேசு இப்போது பரலோகத்தில் ராஜாவாக இருக்கிறார்; தம் சீடர்கள் யெகோவாவின் பெயரைப் பூமியெங்கும் தெரியப்படுத்த இப்போதும் உதவிக்கொண்டிருக்கிறார். என்ன நோக்கத்தோடு இந்த வேலை செய்யப்பட்டு வருகிறது? இந்தப் பொல்லாத உலகம் முடிவடைவதற்குமுன் இன்னும் அநேகர் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடே செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பொல்லாத உலகம் முடிவடையும் சமயத்தில், தமக்கு விசுவாசமாயிருக்கிற ஜனங்களை யெகோவா காப்பாற்றுவார். அப்போது, அவருடைய மகத்தான பெயரை எல்லோரும் அறிந்துகொள்வார்கள்.—எசே. 36:23.
“இந்த உலகம் நம்புவதற்காக”
12. உயிர்காக்கும் வேலையைச் செய்து முடிக்க என்ன மூன்று விஷயங்கள் நமக்குத் தேவை?
12 சீடர்கள், தங்களுடைய பலவீனங்களை மேற்கொள்ள இயேசு பலமுறை உதவினார். பலவீனங்களை மேற்கொள்ளும்போதுதான் இயேசு ஆரம்பித்துவைத்த வேலையை அவர்களால் செய்து முடிக்க முடியும். “நீங்கள் என்னை இந்த உலகத்திற்குள் அனுப்பியது போலவே நானும் இவர்களை இந்த உலகத்திற்குள் அனுப்பினேன்” என்று இயேசு ஜெபித்தார். இந்த உயிர்காக்கும் வேலையைச் செய்து முடிக்க அவர்களுக்கு மூன்று விஷயங்கள் தேவை என்பதை வலியுறுத்தினார். ஒன்று, தம் சீடர்கள் இந்த உலகத்தின் பாகமாக இருக்கக்கூடாது. இரண்டு, தம் சீடர்கள் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து பரிசுத்தமானவர்களாக இருக்க வேண்டும். மூன்று, தாமும் யெகோவாவும் ஒற்றுமையாக இருப்பது போல தம்முடைய சீடர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமெனத் திரும்பத் திரும்ப கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். இதைத் தம் சீடர்கள் செய்யும்போது அவர்களுடைய செய்திக்கு அநேகர் செவிசாய்ப்பார்கள் என்ற நம்பிக்கை இயேசுவிற்கு இருந்தது. அப்படியானால், நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: “இயேசு, ஜெபத்தில் குறிப்பிட்ட மூன்று விஷயங்களுக்கு இசைய நான் செயல்படுகிறேனா?”—யோவான் 17:15-21-ஐ வாசியுங்கள்.
13. இயேசுவின் ஜெபத்திற்கு முதல் நூற்றாண்டில் யெகோவா எப்படிப் பதிலளித்தார்?
13 யெகோவா, இயேசுவின் ஜெபத்திற்கு பதிலளித்தார்; பைபிளிலுள்ள அப்போஸ்தலர் புத்தகம் இதற்கு அத்தாட்சி அளிக்கிறது. முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் யூதர்கள்-புறதேசத்தார், ஏழை-பணக்காரர், அடிமைகள்-எஜமானர்கள் என எல்லோரும் இருந்தனர். அவர்களுக்கிடையே பிரிவினை உண்டாக அநேக வாய்ப்புகள் இருந்தன. என்றாலும், அவர்கள் ஐக்கியப்பட்டவர்களாக இருந்தார்கள். அதனால்தான் ஒரு உடலிலுள்ள பல பாகங்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள்; இயேசுவே அந்த உடலின் தலை. (எபே. 4:15, 16) சாத்தானுடைய உலகில் காண முடியாத ஒற்றுமை அங்கு இருந்தது; அதைச் செய்தவர் யெகோவாவே. அவர் தம்முடைய வல்லமையுள்ள சக்தியைப் பயன்படுத்தி இதைச் சாதித்திருக்கிறார்.—1 கொ. 3:5-7.
14. இயேசுவின் ஜெபத்திற்கு நம் நாளில் யெகோவா எப்படி பதிலளித்திருக்கிறார்?
14 ஆனால், வருத்தகரமாக இந்த நிலை அப்போஸ்தலர்களின் மறைவுக்குப்பின் மாறியது. விசுவாசதுரோகம் பெரியளவில் தலைதூக்க ஆரம்பித்தது. சபைக்குள் பொய் போதனைகள் நுழைய ஆரம்பித்ததால் ஒற்றுமை குலைந்துபோனது. (அப். 20:29, 30) ஆனால், 1919-ல் பொய் மதத்தின் செல்வாக்கிலிருந்து பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை இயேசு விடுவித்து, ‘பரிபூரணமான பிணைப்பில்’ அவர்களை ஒன்றுசேர்த்தார். (கொலோ. 3:14) இவர்கள் இவ்வாறு ஒன்றுசேர்ந்து பிரசங்கித்ததால் கிடைத்த பலன் என்ன? “எல்லாத் தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த” எழுபது லட்சத்திற்கும் அதிகமான ‘வேறே ஆடுகள்,’ பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுடன் ஒன்றுசேர்ந்து யெகோவாவை வழிபட்டு வருகிறார்கள். (யோவா. 10:16; வெளி. 7:9) “நீங்களே என்னை அனுப்பினீர்கள் என்பதையும், நீங்கள் என்மீது அன்பு காட்டுவது போலவே அவர்கள்மீதும் அன்பு காட்டுகிறீர்கள் என்பதையும் இந்த உலகம் அறிந்துகொள்ளும்” என்று இயேசு செய்த ஜெபத்திற்கு யெகோவா அளித்த அற்புதமான பதில் இது.—யோவா. 17:23.
ஜெபத்தை அருமையாக நிறைவு செய்கிறார்
15. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்காக இயேசு என்ன விசேஷ வேண்டுகோளை விடுத்தார்?
15 சற்று முன்புதான், நிசான் 14-ன் மாலை வேளையில் இயேசு, பரலோக அரசாங்கத்தில் தம்மோடு சேர்ந்து ஆட்சி செய்வதற்கான ஓர் ஒப்பந்தத்தை சீடர்களோடு செய்து அவர்களை மகிமைப்படுத்தினார், அதாவது, கௌரவப்படுத்தினார். (லூக். 22:28-30; யோவா. 17:22) தம்மோடு பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகிற எல்லோருக்காகவும் இயேசு இவ்வாறு ஜெபம் செய்தார்: “தகப்பனே, இந்த உலகம் உண்டாவதற்குமுன் நீங்கள் என்மீது அன்பு காட்டியதால் எனக்கு மகிமை அளித்தீர்கள்; நீங்கள் எனக்குத் தந்தவர்கள் அந்த மகிமையைப் பார்ப்பதற்காக நான் இருக்கும் இடத்தில் அவர்கள் என்னோடிருக்க வேண்டுமென விரும்புகிறேன்.” (யோவா. 17:24) இதைக் குறித்து வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் பொறாமைப்படுவதில்லை, மாறாக, சந்தோஷப்படுகிறார்கள். உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்பதற்கு இதுவும்கூட ஓர் அத்தாட்சி.
16, 17. (அ) ஜெபத்தின் முடிவில் எதைத் தொடர்ந்து செய்யப்போவதாக இயேசு சொன்னார்? (ஆ) என்ன செய்ய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்?
16 யெகோவாவுக்கு ஒன்றுபட்ட ஜனங்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் யெகோவாவை நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதையும் அநேகர் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால், மதத் தலைவர்களால் அவர்களுக்கு அப்படிக் கற்றுத்தரப்படுகிறது. இயேசுவின் காலத்திலும் அப்படித்தான் நடந்தது. அதனால்தான் இந்த அருமையான வார்த்தைகளோடு இயேசு தம் ஜெபத்தை நிறைவு செய்கிறார்: “நீதியுள்ள தகப்பனே, இந்த உலகம் உண்மையில் உங்களை அறிந்துகொள்ளவில்லை; ஆனால், நான் உங்களை அறிந்திருக்கிறேன்; நீங்களே என்னை அனுப்பினீர்கள் என்பதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். நீங்கள் என்மீது காட்டிய அன்பை இவர்கள் காட்டுவதற்காகவும், நான் இவர்களோடு ஒன்றுபட்டிருப்பதற்காகவும் இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்.”—யோவா. 17:25, 26.
17 இயேசு, தம்முடைய தகப்பனின் பெயரைத் தெரியப்படுத்தினார் என்பதை யாரால்தான் மறுக்க முடியும்? கிறிஸ்தவ சபையின் தலைவராக, இப்போதும் தொடர்ந்து தம்முடைய தகப்பனின் பெயரையும் நோக்கத்தையும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த நமக்கு இயேசு உதவிக்கொண்டிருக்கிறார். எனவே, நாம் ஆர்வத்துடன் பிரசங்கித்து, சீடர்களை உருவாக்குவதன் மூலம் இயேசுவின் தலைமைக்குக் கீழ்ப்பட்டிருப்போமாக! (மத். 28:19, 20; அப். 10:42) நம் மத்தியில் நிலவும் ஒற்றுமையைக் காத்துக்கொள்ள கடினமாக உழைப்போமாக! இப்படிச் செய்யும்போதுதான் இயேசுவின் ஜெபத்திற்கு இசைய நாம் வாழ்கிறோம் என்று நம்மால் சொல்ல முடியும். இது யெகோவாவுடைய பெயருக்கு மகிமையைச் சேர்க்கும், நமக்கு நிரந்தர சந்தோஷத்தை அளிக்கும்.