யெகோவா கொடையாளர், பாதுகாப்பவர்
“அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் [அதாவது, பாதுகாப்பேன்].”—சங். 91:14.
1, 2. நம்முடைய குடும்ப சூழ்நிலைகளும் ஆன்மீகப் பின்னணியும் எப்படி வேறுபடுகின்றன?
குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவர் யெகோவாவே. (எபே. 3:14, 15) நாம் அனைவரும் யெகோவாவை வணங்கும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்கள். என்றாலும், நம்முடைய சுபாவமும் சூழ்நிலைகளும் நபருக்கு நபர் வேறுபடுகின்றன. ஒருவேளை, நீங்கள் பிறந்ததிலிருந்து பெரியவர்களாகும்வரை பெற்றோர்களின் அரவணைப்பில் இருந்திருக்கலாம். மற்றவர்கள் நோய், விபத்து, அல்லது வேறெதாவது சோக சம்பவத்தில் பெற்றோரைப் பறிகொடுத்திருக்கலாம். இன்னும் சிலருக்கு தங்களுடைய பெற்றோர் யாரென்றுகூட தெரியாதிருக்கலாம்.
2 நம்முடைய ஆன்மீகப் பின்னணியும் வேறுபடுகிறது. ஒருவேளை நீங்கள் சத்தியத்தில் பிறந்து வளர்ந்திருக்கலாம்; உங்களுடைய பெற்றோர் பைபிள் நியமங்களை உங்கள் இருதயத்தில் ஆழப் பதிய வைத்திருக்கலாம். (உபா. 6:6, 7) அல்லது யெகோவாவின் சாட்சி ஒருவர் உங்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுத்ததால் நீங்கள் சத்தியத்திற்கு வந்திருக்கலாம்.—ரோ. 10:13-15; 1 தீ. 2:3, 4.
3. நம் அனைவருக்கும் இருக்கிற சில பொதுவான விஷயங்கள் யாவை?
3 இப்படிப் பல வேறுபாடுகள் இருந்தாலும், நம் அனைவருக்கும் பொதுவான சில விஷயங்கள் இருக்கின்றன. ஆதாம் கீழ்ப்படியாமல் போனதால், அபூரணமும் பாவமும் மரணமும் நமக்குக் கடத்தப்பட்டன. (ரோ. 5:12) இருந்தாலும், யெகோவாவை “எங்கள் தகப்பனே” என்று நாம் அழைக்கிறோம். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேலர்கள், யெகோவாவை “நீர் எங்களுடைய பிதா” என்று அழைத்தார்கள். (ஏசா. 64:8) இயேசுவும் மாதிரி ஜெபத்தில் இவ்வாறு சொன்னார்: “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்.”—மத். 6:9.
4, 5. நம் பரலோகத் தகப்பன்மீதான அன்பை அதிகரிக்க, என்ன மூன்று விஷயங்களைச் சிந்திக்கப் போகிறோம்?
4 நம் பரலோகத் தகப்பனான யெகோவா, விசுவாசத்தோடு தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவரையும் பராமரிக்கிறார், பாதுகாக்கிறார். “அவன் [உண்மையோடு வழிபடும் ஒருவர்] என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்” என்று சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார். (சங். 91:14) அவருடைய மக்களான நாம் பூமியிலிருந்து துடைத்தழிக்கப்படாமல் இருப்பதற்காக, விரோதிகளிடமிருந்து யெகோவா நம்மை அன்போடு விடுவிக்கிறார், பாதுகாக்கிறார்.
5 நம் பரலோகத் தகப்பன்மீதான அன்பை அதிகரிக்க, அவரைப் பற்றிய மூன்று விஷயங்களை இப்போது சிந்திக்கலாம்: (1) அவர் நம் கொடையாளர், (2) நம்மைப் பாதுகாப்பவர், (3) நம் மிகச் சிறந்த நண்பர். இந்த விஷயங்களை ஆராய்வது, கடவுளோடுள்ள நம் பந்தத்தைப் பற்றி தியானிக்க... நம் தகப்பனான யெகோவாவுக்கு எப்படி மகிமை சேர்க்கலாம் என்பதைப் பற்றி யோசிக்க... அவரிடம் நெருங்கி வருவோரை அவர் எப்படியெல்லாம் ஆசீர்வதிக்கிறார் என்பதைப் பற்றி சிந்திக்க... உதவும்.—யாக். 4:8.
யெகோவா, மாபெரும் கொடையாளர்
6. “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும்” யெகோவாவிடமிருந்து வருகிறதென சொல்வதற்கு ஒரு உதாரணம் என்ன?
6 “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், தலைசிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் பரலோகத்திலிருந்தே வருகின்றன, ஆம், ஒளியின் தகப்பனிடமிருந்தே வருகின்றன” என்று யாக்கோபு எழுதினார். (யாக். 1:17) நம்முடைய உயிர், யெகோவா தந்த ஓர் அருமையான பரிசு. (சங். 36:9) அந்தப் பரிசை அவருடைய சித்தத்தைச் செய்வதற்காகப் பயன்படுத்தும்போது, இப்போதே ஏராளமான ஆசீர்வாதங்களையும் புதிய பூமியில் முடிவில்லா வாழ்வையும் பெறுவோம். (நீதி. 10:22; 2 பே. 3:13) ஆனால், ஆதாம் கீழ்ப்படியாமல் போனதால் விளைந்த அவலங்களின் மத்தியிலும் இது சாத்தியமா?
7. யெகோவாவிடம் நாம் நெருங்கிய பந்தம் வைத்துக்கொள்வதற்கு அவர் எப்படி வழி திறந்திருக்கிறார்?
7 கொடை வள்ளலான யெகோவா நம் தேவைகளை அநேக வழிகளில் பூர்த்தி செய்கிறார். உதாரணத்திற்கு, தமது அளவற்ற கருணையினால் நம்மை விடுவித்திருக்கிறார். நாம் அனைவரும் ஆதாம் செய்த தவறினால் பாவிகளாகவும் அபூரணர்களாகவும் இருக்கிறோம். (ரோ. 3:23) இருந்தாலும், நம்மீதுள்ள அன்பின் காரணமாக நாம் அவரிடம் நெருங்கிய பந்தம் வைத்துக்கொள்வதற்கு அவரே வழி திறந்துவைத்திருக்கிறார். “தம்முடைய ஒரே மகன் மூலம் நாம் வாழ்வு பெறுவதற்காகக் கடவுள் அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினார்; இதன் மூலம் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்படுத்தப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு காட்டியதால் அல்ல, அவர் நம்மீது அன்பு காட்டி நம் பாவங்களுக்குப் பிராயச்சித்த பலியாகத் தமது மகனை அனுப்பினார், இதுவே அன்பு” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார்.—1 யோ. 4:9, 10.
8, 9. தாம் ஒரு மாபெரும் கொடையாளர் என்பதை ஆபிரகாம்-ஈசாக்கு காலத்தில் யெகோவா எப்படி நிரூபித்தார்? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.)
8 கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் முடிவில்லா வாழ்வை அனுபவிப்பதற்காக யெகோவா ஓர் அன்பான ஏற்பாடு செய்திருப்பதை, கி.மு. 19-ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு தீர்க்கதரிசன சம்பவம் காட்டுகிறது. இதைப் பற்றி, எபிரெயர் 11:17-19 இவ்வாறு விவரிக்கிறது: “விசுவாசத்தினால். . . ஆபிரகாம், தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலி செலுத்தும் அளவுக்குச் சென்றார்; வாக்குறுதிகளைச் சந்தோஷத்துடன் பெற்றிருந்த அவர், தன்னுடைய ஒரே மகனைப் பலி செலுத்த முன்வந்தார். ‘“உன்னுடைய சந்ததி” என அழைக்கப்படுவது ஈசாக்கின் மூலமே உண்டாகும்’ என்று அவருக்குச் சொல்லப்பட்டிருந்தபோதிலும் அப்படிச் செய்ய முன்வந்தார். ஏனென்றால், இறந்தவனை உயிர்த்தெழுப்பக் கடவுளால் முடியும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்; அதனால், மரணத்திடமிருந்து அவனைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்; எதிர்காலத்தில் நடக்கவிருந்ததற்கு இது ஓர் அடையாளமாக இருந்தது.” ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலி செலுத்த முன்வந்ததற்கு இணையான ஒரு சம்பவம் இப்போது உங்கள் மனதிற்கு வரலாம். ஆம், யெகோவா தம்முடைய ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை மனிதர்கள் எல்லோருக்கும் மீட்பு பலியாகக் கொடுத்தார்.—யோவான் 3:16, 36-ஐ வாசியுங்கள்.
9 பலி செலுத்தப்படுவதிலிருந்து மீட்கப்பட்டதை நினைத்து ஈசாக்கு நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்! தனக்கு பதிலாக புதரில் சிக்கியிருந்த ஆட்டுக்கடாவைப் பலி செலுத்தும்படி யெகோவா சொன்னபோது, ஈசாக்கு மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். (ஆதி. 22:10-13) ஆபிரகாம் அந்த இடத்திற்கு, “யெகோவா-யீரே” என்று பெயரிட்டது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! அதற்கு, “யெகோவா கொடுப்பார்” என்று அர்த்தம்.—ஆதி. 22:14, NW, அடிக்குறிப்பு.
சமரசமாவதற்கான ஏற்பாடு
10, 11. “சமரசமாக்கும் ஊழியத்தை” யார் முன்நின்று வழிநடத்தினார்கள், அதை எப்படிச் செய்தார்கள்?
10 யெகோவா ஒரு மாபெரும் கொடையாளர் என்பதைத் தியானிக்கும்போது, முக்கியமாக நம் நினைவுக்கு வருவது இயேசுவின் பலியே. இந்த ஏற்பாட்டை யெகோவா செய்திருக்காவிட்டால், நாம் ஒருபோதும் கடவுளோடு சமரசமாக முடிந்திருக்காது. இதை உணர்ந்த பவுல் இவ்வாறு எழுதினார்: “எல்லாருக்காகவும் அவர் ஒருவரே இறந்தார்; சொல்லப்போனால், எல்லாரும் இறந்த நிலையில் இருந்தார்களே. அவர் எல்லாருக்காகவும் இறந்திருப்பதால், வாழ்கிறவர்கள் இனி தங்களுக்காக வாழாமல் தங்களுக்கென்று இறந்து உயிர்த்தெழுந்தவருக்காகவே வாழ வேண்டுமென உணர்ந்திருக்கிறோம்.”—2 கொ. 5:14, 15.
11 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், “சமரசமாக்கும் ஊழியத்தை” சந்தோஷமாக ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், கடவுள்மீதிருந்த அன்பும், அவருக்குச் செய்யும் சேவையை ஒப்பற்ற பாக்கியமாகக் கருதியதும்தான். இந்த ஊழியத்தில், அதாவது பிரசங்கித்து சீடராக்கும் வேலையில், அவர்கள் ஈடுபட்டதால் நல்மனமுள்ளவர்கள் கடவுளோடு சமரசமாகவும் அவரோடு நட்பு கொள்ளவும் இறுதியில் அவருடைய ஆன்மீக பிள்ளைகளாக ஆகவும் முடிந்தது. இன்று, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் இதே வேலையைச் செய்கிறார்கள். கடவுளுக்கும் இயேசுவுக்கும் தூதுவர்களாக இதை அவர்கள் செய்வதால், நல்மனமுள்ள ஆட்கள் யெகோவாவிடம் ஈர்க்கப்படுகிறார்கள்; அவருடைய சாட்சிகளாகவும் ஆகிறார்கள்.—2 கொரிந்தியர் 5:18-20-ஐ வாசியுங்கள்; யோவா. 6:44; அப். 13:48.
12, 13. யெகோவா அளித்திருக்கும் எல்லாவற்றிற்கும் நாம் எப்படி நன்றி காட்டலாம்?
12 பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் மாபெரும் கொடையாளரான யெகோவாவுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதால், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களோடு சேர்ந்து நற்செய்தியை அறிவிக்கிறார்கள். அவர் நமக்கு அள்ளி கொடுத்திருப்பவற்றில் ஒன்றுதான் பைபிள்; அதை இந்த வேலையில் பயன்படுத்துகிறோம். (2 தீ. 3:16, 17) கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளை நாம் திறம்படப் பயன்படுத்தி முடிவில்லா வாழ்வைப் பெற மற்றவர்களுக்கு உதவுகிறோம். இந்த வேலையைச் செய்வதற்கு, யெகோவா மற்றொன்றையும் அளித்திருக்கிறார்; அதுதான் அவருடைய சக்தி. (சக. 4:6; லூக். 11:13) இவற்றைப் பயன்படுத்துவதால் வரும் பலன்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக்கில் ஒவ்வொரு வருடமும் வாசிக்கிறோம். இந்த வேலையில் ஈடுபடுவதன் மூலம் நம்முடைய மாபெரும் கொடையாளரும் தகப்பனுமான யெகோவாவைப் போற்றிப் புகழ்வது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
13 யெகோவா நமக்கு அளித்திருக்கும் எல்லாவற்றையும் பார்க்கும்போது, நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘யெகோவா எனக்கு அளித்திருக்கும் எல்லாவற்றிற்கும் நன்றி காட்ட என்னால் முடிந்தளவு ஊழியத்தில் ஈடுபடுகிறேனா? நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் என் திறமையை எப்படிப் பட்டைதீட்டலாம்?’ அவர் அளித்திருக்கும் எல்லாவற்றிற்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருந்தால், வாழ்க்கையில் கடவுளுடைய சேவைக்கே முதலிடம் கொடுப்போம். அப்படிச் செய்யும்போது, யெகோவா நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார். (மத். 6:25-33) ஆகவே, அவர் காட்டும் அன்புக்குக் கைமாறாக, அவரைப் பிரியப்படுத்தவும் அவருடைய இருதயத்தை சந்தோஷப்படுத்தவும் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோமாக!—நீதி. 27:11.
14. யெகோவா தம்முடைய மக்களை எப்படிக் காப்பாற்றி வந்திருக்கிறார்?
14 “நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்” என்று சங்கீதக்காரனாகிய தாவீது பாடினார். (சங். 40:17) யெகோவா தம்முடைய மக்களை கடும் துன்புறுத்துதலிலிருந்தும் எதிரிகளின் விடாப்பிடியான தாக்குதலிலிருந்தும் ஒரு தொகுதியாக காப்பாற்றி வந்திருக்கிறார். அப்படிப்பட்ட சமயங்களில், விசுவாசத்தில் நிலைத்திருக்க அவர் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறார். அதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!
யெகோவா பாதுகாப்பவர்
15. ஓர் அன்பான அப்பா தன் பிள்ளையை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை விவரியுங்கள்.
15 ஓர் அன்பான அப்பா தன்னுடைய பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு அவர்களைப் பாதுகாப்பதற்கு வேண்டியவற்றையும் செய்வார். ஏதாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டால், அவர்களை உடனே காப்பாற்றுவார். சிறுவயதில் நடந்த ஒரு சம்பவம் ஒரு சகோதரரின் நினைவுக்கு வருகிறது. ஊழியத்திற்குப் பிறகு அவரும் அவருடைய அப்பாவும் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்கள். ஓர் ஓடையைக் கடந்துதான் வீட்டிற்குச் செல்ல வேண்டும். பலத்த மழையால் அந்த ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரிய பெரிய கற்களில் கால்வைத்து தாவித் தாவிதான் அதைக் கடக்க வேண்டியிருந்தது. தன் அப்பாவிற்கு முன்னே அவர் அப்படிப் போய்க் கொண்டிருந்தபோது, திடீரென கால் இடறி இரண்டு முறை ஓடைக்குள் மூழ்கிவிட்டார். அவருடைய அப்பா சட்டென தோள்பட்டையைப் பிடித்து இழுத்து, அவரைக் காப்பாற்றினார். மூழ்கிவிடாமல் காப்பாற்றிய அப்பாவுக்கு அவர் எவ்வளவு நன்றியுள்ளவராக இருந்திருப்பார்! அதேபோல், இந்தப் பொல்லாத உலகிலிருந்தும் அதன் ஆட்சியாளனான சாத்தானிடமிருந்தும் பெருக்கெடுத்துவரும் துன்ப வெள்ளத்தில் மூழ்கிவிடாபடி நம் பரலோகத் தகப்பன் நம்மைக் காப்பாற்றுகிறார். ஆம், யெகோவாவைப்போல் நம்மைப் பாதுகாப்பவர் வேறு யாருமில்லை!—மத். 6:13; 1 யோ. 5:19.
16, 17. அமலேக்கியரிடம் யுத்தம் செய்தபோது, இஸ்ரவேலர்களை யெகோவா எப்படிப் பாதுகாத்தார்?
16 கி.மு. 1513-ல், இஸ்ரவேலர்களை யெகோவா எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அற்புதகரமாக சிவந்த சமுத்திரத்தைக் கடக்கச் செய்தார். அந்தச் சம்பவமும் அதன்பிறகு நடந்த சம்பவங்களும் யெகோவா பாசமாய்ப் பாதுகாப்பவர் என்பதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அவர்கள் வனாந்தர வழியாக சீனாய் மலையை நோக்கிச் செல்கையில், ரெவிதீம் என்ற இடத்தை அடைந்தார்கள்.
17 ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்திற்கு இசைய, ரெவிதீமில் எந்தப் பாதுகாப்பும் இல்லாததுபோல் தெரிந்த இஸ்ரவேலர்களை எப்படியாவது தாக்க வேண்டுமென்று சாத்தான் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தான். இஸ்ரவேலரின் எதிரிகளாக இருந்த அமலேக்கியரை இதற்குப் பயன்படுத்தினான். (எண். 24:20) அப்போது யோசுவா, மோசே, ஆரோன், ஊர் என்ற நான்கு உண்மையுள்ள ஆட்களைப் பயன்படுத்தி யெகோவா என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் நின்றுகொண்டிருந்தபோது, யோசுவா அமலேக்கியரோடு யுத்தம் பண்ணினார். மோசே தன் கையை உயர்த்தியபோது, யுத்தத்தில் இஸ்ரவேலர்கள் ஜெயித்தார்கள். மோசேயின் கைகள் தளர்ந்தபோது, ஆரோனும் ஊரும் அவருக்கு உதவினார்கள். யெகோவாவின் உதவியோடும், பாதுகாப்போடும், ‘யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தார்.’ (யாத். 17:8-13) அங்கே, மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு “யெகோவா-நிசி” என்று பெயரிட்டார். அதற்கு “யெகோவா என் கொடிக்கம்பம்” என்று அர்த்தம்.—யாத்திராகமம் 17:14, 15-ஐ வாசியுங்கள், NW; அடிக்குறிப்பு.
சாத்தானின் பிடியிலிருந்து பாதுகாக்கிறார்
18, 19. நம் நாட்களில் தம் ஊழியர்களை யெகோவா எப்படிப் பாதுகாத்திருக்கிறார்?
18 தம்மை நேசிக்கிறவர்களையும் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களையும் யெகோவா பாதுகாக்கிறார். ரெவிதீமில் இருந்த இஸ்ரவேலர்களைப் போலவே, யெகோவா நம்மையும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பார் என்று நம்புகிறோம். நம்மை ஒரு தொகுதியாக, சாத்தானுடைய பிடியிலிருந்து யெகோவா பாதுகாத்து வந்திருக்கிறார். அநேக சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவ நடுநிலையைக் காத்துக்கொண்ட நம் சகோதரர்களை யெகோவா பாதுகாத்திருக்கிறார். உதாரணத்திற்கு, 1930-களிலும் 1940-களின் ஆரம்பத்திலும் ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில் நாசிக்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த சமயத்தில் அவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கை சரிதைகளையும் கடவுள் அவர்களைப் பாதுகாத்த விதத்தைப் பற்றி இயர்புக்கில் கொடுக்கப்பட்டுள்ள பதிவுகளையும் தியானிக்கும்போது, யெகோவா நம் அடைக்கலம் என்ற நம்பிக்கை நமக்குள் வேர்விடும்.—சங். 91:2.
19 நம்மைப் பாதுகாப்பதற்கு, யெகோவாவின் அமைப்பும் பைபிள் பிரசுரங்களும் அன்பான நினைப்பூட்டுதல்களை அளித்து வருகின்றன. சமீப வருடங்களில், இதை நாம் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம். செக்ஸ், குடிவெறி, ஆபாசம் போன்ற புதைகுழிகளுக்குள் இந்த உலக மக்கள் புதைந்துகொண்டிருக்கிறார்கள். அதில் நாம் புதைந்துவிடாதிருக்க அவ்வப்போது யெகோவா மிக முக்கியமான நினைப்பூட்டுதல்களையும் நடைமுறையான ஆலோசனைகளையும் கொடுத்து வருகிறார். உதாரணத்திற்கு, சோஷியல் நெட்வொர்க்கிங்-ஐத் தவறாகப் பயன்படுத்துவதால் விளையும் கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க நம் பரலோகத் தகப்பன் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.a—1 கொ. 15:33.
20. கிறிஸ்தவச் சபையின் மூலம் நமக்கு என்ன அறிவுரையும் பாதுகாப்பும் கிடைக்கின்றன?
20 நாம் ‘கர்த்தரால் போதிக்கப்பட்டிருக்கிறோம்’ என்பதை எப்படிக் காட்டலாம்? அவருடைய கட்டளைகளுக்குச் செவிசாய்ப்பதன் மூலமே. (ஏசா. 54:13) புகலிடமாகத் திகழும் சபைகளில், நமக்குத் தேவையான அறிவுரையும் பாதுகாப்பும் கிடைக்கின்றன. சபை மூப்பர்கள், வேதப்பூர்வ உதவியையும் ஆலோசனையையும் கொடுக்கிறார்கள். (கலா. 6:1) ‘பரிசுகளாக’ இருக்கும் இந்த மூப்பர்கள் மூலம் யெகோவாவின் அன்பான அரவணைப்பைப் பெறுகிறோம். (எபே. 4:7, 8) அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும்? அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடக்க வேண்டும். அப்படிச் செய்தால், யெகோவாவின் ஆசீர்வாதத்தை அனுபவிப்போம்.—எபி. 13:17.
21. (அ) நாம் எதைச் செய்ய தீர்மானமாய் இருக்க வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி சிந்திப்போம்?
21 ஆகவே, கடவுளுடைய சக்தியில் சார்ந்திருந்து, நம்முடைய பரலோகத் தகப்பனின் ஆலோசனைகளை ஏற்று நடக்கத் தீர்மானமாய் இருப்போமாக. அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைபாணியைத் தியானித்து, அவருடைய தன்னிகரற்ற முன்மாதிரியைப் பின்பற்றுவோமாக. அவர் இறுதி மூச்சுவரை உண்மையோடு இருந்ததால், நிறைவான பலனைப் பெற்றார். (பிலி. 2:5-11) நாமும் யெகோவாமீது முழு இருதயத்தோடு நம்பிக்கை வைத்தால், இயேசுவைப் போலவே அளவில்லா ஆசீர்வாதங்களைப் பெறுவோம். (நீதி. 3:5, 6) கொடுப்பதிலும் பாதுகாப்பதிலும் ஒப்பற்று விளங்கும் யெகோவாவையே எப்போதும் நம்பி இருப்போமாக. அவருக்குச் சேவை செய்வது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! அதில் கிடைக்கும் சந்தோஷமே தனிதான். யெகோவா நம் நண்பராகவும் இருக்கிறார். அதைப் பற்றி நாம் தியானிக்கும்போது அவர்மீதுள்ள அன்பு பெருக்கெடுக்கும். யெகோவா எப்படி நம் மிகச் சிறந்த நண்பராக இருக்கிறார் என்பதை அடுத்த கட்டுரை அலசும்.
a இது போன்ற நினைப்பூட்டுதல்களுக்கு, காவற்கோபுரம் ஆகஸ்ட் 15, 2011, பக்கங்கள் 3-5-லுள்ள, “இன்டர்நெட்—ஞானமாய் உபயோகியுங்கள்” என்ற கட்டுரையையும், காவற்கோபுரம் ஆகஸ்ட் 15, 2012, பக்கங்கள் 20-29-லுள்ள, “பிசாசின் கண்ணிகள்—உஷார்!” மற்றும் “உறுதியாய் நில்லுங்கள், சாத்தானின் கண்ணியில் சிக்காதீர்கள்!” என்ற கட்டுரைகளையும் பாருங்கள்.