முழுநேர ஊழியர்களை மறந்துவிடாதீர்கள்
“விசுவாசத்தினால் நீங்கள் செய்கிற ஊழியத்தையும், உங்களுடைய அன்பான உழைப்பையும், . . . இடைவிடாமல் நினைத்துக்கொள்கிறோம்.”—1 தெ. 1:3.
1. நற்செய்தியை அறிவிக்க கடும் முயற்சி எடுத்தவர்களைப் பற்றி பவுல் என்ன சொன்னார்?
“விசுவாசத்தினால் நீங்கள் செய்கிற ஊழியத்தையும், உங்களுடைய அன்பான உழைப்பையும், நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக நீங்கள் காட்டுகிற சகிப்புத்தன்மையையும் நமது தகப்பனாகிய கடவுளுக்குமுன் இடைவிடாமல் நினைத்துக்கொள்கிறோம்” என்று பவுல் சொன்னார். (1 தெ. 1:3) நற்செய்தியை அறிவிக்க கடும் முயற்சி எடுத்தவர்களை பவுல் மறந்துவிடவில்லை. விசுவாசத்தோடு ஊழியம் செய்பவர்களை யெகோவாவும் மறக்க மாட்டார். நாம் குறைவாகச் செய்தாலும் சரி அதிகமாகச் செய்தாலும் சரி, முழு மனதோடு செய்யும் சேவையை யெகோவா உயர்வாக நினைக்கிறார்.—எபி. 6:10.
2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
2 அன்றும் இன்றும் நற்செய்தியை அறிவிக்க நிறைய பேர் பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். முதல் நூற்றாண்டில் இருந்த சிலர் யெகோவாவுக்கு எப்படியெல்லாம் சேவை செய்தார்கள்? இன்று எந்தெந்த விதங்களில் நாம் முழுநேர ஊழியம் செய்யலாம்? முழுநேர ஊழியர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? இப்போது பார்க்கலாம்.
முழுநேர ஊழியர்கள்—அன்று
3, 4. (அ) முதல் நூற்றாண்டில் இருந்த சிலர் எப்படியெல்லாம் ஊழியம் செய்தார்கள்? (ஆ) அவர்களுடைய செலவுகளை எப்படிச் சமாளித்தார்கள்?
3 ஞானஸ்நானம் எடுத்த பிறகு இயேசு வைராக்கியமாக ஊழியம் செய்தார்; அதைச் செய்ய மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். (லூக். 3:21-23; 4:14, 15, 43) அவருடைய மரணத்திற்குப் பிறகு அப்போஸ்தலர்கள் இந்த வேலையை மும்முரமாகச் செய்தார்கள். (அப். 5:42; 6:7) பிலிப்புவைப் போன்ற சில கிறிஸ்தவர்கள் பாலஸ்தீனாவில் மிஷனரிகளாகச் சேவை செய்தார்கள். (அப். 8:5, 40; 21:8) பவுலும் அவரோடு சேர்ந்தவர்களும் தூரமான இடங்களுக்குச் சென்று ஊழியம் செய்தார்கள். (அப். 13:2-4; 14:26; 2 கொ. 1:19) மாற்கு, லூக்கா போன்றவர்கள் பைபிள் எழுத்தாளர்களாக இருந்தார்கள். சில்வானு (சீலா) கடிதங்களை எழுத உதவினார். (1 பே. 5:12) பெண்களும் நற்செய்தியை அறிவிக்கும் வேலையில் உதவினார்கள். (அப். 18:26; ரோ. 16:1, 2) இந்த முழுநேர ஊழியர்கள் செய்த சாதனைகள் எல்லாம் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் [புதிய ஏற்பாட்டில்] பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? யெகோவாவுக்கு ஊழியம் செய்பவர்களை அவர் ஒருபோதும் மறக்க மாட்டார்.
4 செலவுகளைச் சமாளிக்க இந்த முழுநேர ஊழியர்கள் என்ன செய்தார்கள்? சில நேரங்களில் சபையில் இருந்த சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவினார்கள். வீடுகளுக்கு அழைத்து அவர்களை உபசரித்தார்கள். அவர்களுக்கு வேண்டிய மற்ற உதவிகளையும் செய்தார்கள். ஆனால், அப்படி உதவி செய்ய வேண்டும் என்று முழுநேர ஊழியர்கள் அவர்களை ஒருபோதும் வற்புறுத்தவில்லை. (1 கொ. 9:11-15) தனி நபர்களாகவும் சபையாகவும் மனமுவந்து இவர்களுக்கு உதவியிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 16:14, 15-ஐயும்; பிலிப்பியர் 4:15-18-ஐயும் வாசியுங்கள்.) பவுலும் அவரோடு இருந்தவர்களும் வேலை செய்துகொண்டே ஊழியம் செய்தார்கள். அவர்களுடைய செலவுகளைச் சமாளிக்க இது உதவியது.
முழுநேர ஊழியர்கள்—இன்று
5. முழுநேர சேவையில் இருப்பதைப் பற்றி ஒரு தம்பதி என்ன சொல்கிறார்கள்?
5 நிறைய பேர் பல விதங்களில் இன்று முழுநேர ஊழியம் செய்கிறார்கள். (“முழுநேர ஊழியம்.” என்ற பெட்டியைப் பாருங்கள்) முழுநேர ஊழியம் செய்வது பற்றி அவர்கள் எப்படி உணர்கிறார்கள்? இந்தக் கேள்வியை அவர்களிடமே கேட்டுப் பாருங்கள். அவர்களுடைய பதில் நிச்சயம் உங்களைப் பலப்படுத்தும். ஒரு சகோதரர் ஒழுங்கான பயனியராகவும் விசேஷ பயனியராகவும் மிஷனரியாகவும் வேறொரு நாட்டில் பெத்தேல் ஊழியராகவும் சேவை செய்திருக்கிறார். அவர் இப்படிச் சொல்கிறார்: “முழுநேர சேவையில அடியெடுத்து வச்சதை நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். எனக்கு 18 வயசு இருக்கும்போது உயர் கல்வியை தேர்ந்தெடுக்குறதா வேலைக்குப் போறதா இல்லனா பயனியர் ஆகுறதானு ஒரே குழப்பமா இருந்துச்சு. முழுநேர சேவைக்காக நாம செய்ற எந்த தியாகத்தையும் யெகோவா மறக்க மாட்டார்னு என் சொந்த அனுபவத்திலிருந்து தெரிஞ்சுக்கிட்டேன். யெகோவா கொடுத்த திறமைகள் எல்லாத்தையும் அவரோட சேவைக்காகவே பயன்படுத்தியிருக்கேன். மத்தவங்க மாதிரியே நானும் படிப்பு, வேலைனு இருந்திருந்தா இதையெல்லாம் சாதிச்சிருக்க முடியாது.” அவருடைய மனைவி சொல்கிறார்: “ஒவ்வொரு நியமிப்பும் என்னோட திறமைகள வளர்க்க உதவி செஞ்சிருக்கு. எங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழாம, யெகோவாவுக்காக தியாகங்கள செஞ்சதுனால வாழ்க்கையில ஒவ்வொரு கட்டத்துலயும் யெகோவாவோட வழிநடத்துதலையும் பாதுகாப்பையும் உணர முடிஞ்சுது. இப்படியொரு வாழ்க்கைய கொடுத்ததுக்காக யெகோவாவுக்கு தினம் தினம் நன்றி சொல்றேன்.” இவர்களுக்குக் கிடைத்த சந்தோஷத்தை நீங்களும் அனுபவிக்க விரும்புகிறீர்களா?
6. நாம் யெகோவாவுக்குச் செய்யும் சேவையை அவர் எப்படிக் கருதுகிறார்?
6 சிலருக்கு முழுநேர சேவை செய்ய சூழ்நிலைமை அனுமதிப்பதில்லை. ஆனால், முழு மனதோடு நாம் யெகோவாவுக்குச் செய்யும் சேவையை அவர் உயர்வாக நினைக்கிறார். கொலோசெ சபையிலிருந்த சகோதர சகோதரிகளை பவுல் விசாரித்து எழுதினார்; சிலருடைய பெயரைச் சொல்லி விசாரித்தார். (பிலேமோன் 1-3-ஐ வாசியுங்கள்) அவர்கள் கடவுளுக்காகச் செய்த சேவையை பவுல் உயர்வாக மதித்தார். யெகோவாவும் அவர்களுடைய சேவையை மதித்தார். இன்றும் நாம் யெகோவாவுக்குச் செய்யும் சேவையை அவர் உயர்வாக மதிக்கிறார். முழுநேர ஊழியம் செய்பவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
பயனியர்களுக்கு உதவுங்கள்
7, 8. ஒழுங்கான பயனியர் சேவையைப் பற்றி விளக்குங்கள்; சபையில் இருப்பவர்கள் அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம்?
7 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே இன்றுள்ள பயனியர்கள் நற்செய்தியை வைராக்கியமாக அறிவிக்கிறார்கள். சபைக்குத் தூண்களாக இருக்கிறார்கள். ஒழுங்கான பயனியர்கள் மாதத்திற்கு 70 மணிநேரம் ஊழியம் செய்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவ முடியும்?
8 ஷாரீ என்ற பயனியர் சகோதரி சொல்கிறார்: “பயனியர்கள் தினமும் ஊழியத்துக்கு போறதுனால விசுவாசத்துல பலமா இருப்பாங்க. ஆனா, அவங்களுக்கும் உற்சாகம் தேவை.” (ரோ. 1:11, 12) சில வருடங்கள் பயனியராக இருந்த இன்னொரு சகோதரி அவருடைய சபையிலிருக்கும் பயனியர்களைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: ‘பயனியர்கள் வைராக்கியமாவும் மும்முரமாவும் ஊழியம் செய்றாங்க. மத்தவங்க செய்ற உதவிகளை பயனியர்கள் சந்தோஷமா ஏத்துக்குறாங்க. அவங்கள வண்டில கூட்டிட்டு போலாம், வீட்டுக்கு சாப்பிட கூப்பிடலாம், ஊழியத்துக்கு போற வர செலவுக்குக் கொஞ்சம் பணம் தரலாம், வேற விஷயங்களுக்கும் பண உதவி செய்யலாம். இப்படியெல்லாம் செஞ்சா, அவங்க மேல நீங்க எவ்ளோ அக்கறை வச்சிருக்கீங்கனு புரிஞ்சிப்பாங்க.’
9, 10. பயனியர்களுக்குச் சிலர் எப்படி உதவியிருக்கிறார்கள்?
9 நீங்களும் பயனியர்களுக்கு உதவ முடியும். ‘சாதாரணமா, சனி ஞாயிறுல நிறைய பேரு ஊழியத்துக்கு வருவாங்க. மத்த நாட்கள்ல யாராவது எங்களோட ஊழியத்துக்கு வந்தா ரொம்ப நல்லா இருக்கும்’ என்கிறார் பாபி என்னும் பயனியர் சகோதரி. இவருடைய சபையில் இருக்கும் மற்றொரு பயனியர் சகோதரி இப்படிச் சொல்கிறார்: “மத்தியான நேரத்துல, சேந்து ஊழியம் செய்றதுக்கு யாருமே இருக்க மாட்டாங்க.” முன்பு பயனியராக இருந்த ஒரு சகோதரி இப்போது புருக்லின் பெத்தேலில் சேவை செய்கிறார். அவர் சொல்கிறார்: “எங்க சபையில ஒரு சகோதரிகிட்ட கார் இருந்துச்சு. ‘உங்களோட ஊழியம் செய்றதுக்கு யாரும் இல்லைனா என்கிட்ட சொல்லுங்க, எப்ப வேணும்னாலும் நான் வரேன்’-னு அவங்க சொன்னாங்க. அவங்க மட்டும் உதவி செய்யலனா என்னால தொடர்ந்து பயனியர் செஞ்சிருக்க முடியாது.” திருமணமாகாத பயனியர்களைப் பற்றி ஷாரீ இப்படிச் சொல்கிறார்: “ஊழியத்துக்கு போயிட்டு வந்த பிறகு அவங்க பெரும்பாலும் தனியாதான் இருப்பாங்க. அடிக்கடி நம்ம குடும்ப வழிபாட்டுக்கு அவங்களையும் வர சொல்லலாம். குடும்பமா செய்ற மற்ற விஷயங்கள்லயும் அவங்கள சேத்துக்கிட்டா அவங்களுக்கு உற்சாகமா இருக்கும்.”
10 கிட்டத்தட்ட 50 வருடங்களாக முழுநேர ஊழியம் செய்கிற சகோதரி, தனக்கும் திருமணமாகாத மற்ற சகோதரிகளுக்கும் கிடைத்த உதவியைப் பற்றிச் சொல்கிறார்: “ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை மூப்பர்கள் எங்கள வந்து பாப்பாங்க. நாங்க நல்லா இருக்கோமானு கேப்பாங்க. வேலை செய்ற இடத்துல ஏதாவது பிரச்சினை இருக்கா, வேற ஏதாவது பிரச்சினை இருக்கானு விசாரிப்பாங்க. அவங்க இதையெல்லாம் சும்மா கடமைக்காக செய்யாம, எங்க மேல இருந்த அக்கறையினால செஞ்சாங்க. எங்களுக்கு ஏதாவது உதவி தேவையானு பார்க்கிறதுக்காகவே எங்க வீட்டுக்கு வருவாங்க.” எபேசுவில் இருந்த ஒரு சகோதரர் இப்படித்தான் பவுலைக் கவனித்துக்கொண்டார்; பவுல் அதை நன்றியோடு நினைத்துப் பார்த்தார்.—2 தீ. 1:18.
11. விசேஷ பயனியர்களின் சேவையைப் பற்றி விளக்குங்கள்.
11 சில சபைகளில் விசேஷ பயனியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு மாதத்திற்கு 130 மணிநேரம் ஊழியம் செய்கிறார்கள். அவர்கள் அதிக நேரம் ஊழியம் செய்வதாலும் மற்ற சகோதரர்களுக்கு உதவுவதாலும் அவர்கள் வேலைக்கு போவது கஷ்டம். அதனால், கிளை அலுவலகம் அவர்களுடைய செலவுகளைச் சமாளிக்க கொஞ்சம் பண உதவி செய்கிறது.
12. விசேஷ பயனியர்களுக்கு மூப்பர்கள் எப்படி உதவலாம், மற்றவர்கள் என்ன செய்யலாம்?
12 விசேஷ பயனியர்களுக்கு எப்படி உதவி செய்வது? அவர்களோடு அடிக்கடி பேசும் ஒரு மூப்பர் (கிளை அலுவலகத்தில் சேவை செய்பவர்) சொல்கிறார்: “மூப்பர்கள் அவங்ககிட்ட அடிக்கடி பேசணும். அப்பதான், அவங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கா, உதவி தேவைப்படுதானு கண்டுபிடிக்க முடியும். ‘அவங்களுக்குதான் கிளை அலுவலகம் பணம் தருதே! அவங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கப்போகுது’-னு நிறைய பேரு நினைக்கிறாங்க. ஆனா, அவங்களுக்கு நிறைய விதங்கள்ல சகோதர சகோதரிகள் உதவி செய்யலாம்.” ஊழியத்திற்கு, யாராவது அவர்கள் கூட வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்கள். உங்களால் அவர்களோடு ஊழியம் செய்ய முடியுமா?
வட்டாரக் கண்காணிகளுக்கு உதவுங்கள்
13, 14. (அ) வட்டாரக் கண்காணிகளுக்கு என்ன தேவை? (ஆ) அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
13 வட்டாரக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் விசுவாசத்தில் பலமானவர்கள், எந்தச் சூழ்நிலையிலும் வாழத் தெரிந்தவர்கள். இருந்தாலும், அவர்களுக்கும் உற்சாகம் தேவை; சேர்ந்து ஊழியம் செய்வதற்கு உதவி தேவை; அவர்களுக்கும் பொழுதுபோக்குத் தேவை. முக்கியமாக, அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, மருத்துவ மனையில் சேர்க்கப்படும்போது உதவி தேவை. ஒருவேளை அவர்களுக்கு அறுவை சிகிச்சையோ வேறு ஏதாவது மருத்துவ சிகிச்சையோ செய்ய வேண்டியிருக்கலாம். அதுபோன்ற நேரங்களில், சகோதர சகோதரிகள் அவர்களை அக்கறையாகக் கவனித்துக்கொண்டால் ரொம்பச் சந்தோஷப்படுவார்கள். அப்போஸ்தலர் புத்தகத்தை எழுதிய “அன்புக்குரிய மருத்துவர் லூக்கா” பவுலுக்கும் அவரோடு சேர்ந்து ஊழியம் செய்தவர்களுக்கும் இதேபோன்ற உதவிகளை நிச்சயம் செய்திருப்பார்.—கொலோ. 4:14; அப். 20:5–21:18.
14 வட்டாரக் கண்காணிகளுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் நெருங்கிய நண்பர்கள் தேவை. ஒரு வட்டாரக் கண்காணி சொல்கிறார்: “எனக்கு எப்போ உதவி தேவைனு என் நண்பர்களுக்கு தெரியும். அக்கறையா விசாரிப்பாங்க. அப்போ என் மனசுல உள்ளத அவங்ககிட்ட சொல்வேன். நான் சொல்றத அவங்க பொறுமையா கேட்குறதே எனக்கு செய்ற பெரிய உதவி.” சகோதர சகோதரிகள் இப்படி உண்மையான அக்கறை காட்டும்போது வட்டாரக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் ரொம்பச் சந்தோஷப்படுகிறார்கள்.
பெத்தேல் ஊழியர்களுக்கு உதவுங்கள்
15, 16. பெத்தேல் ஊழியர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
15 நற்செய்தி அறிவிக்கும் வேலையில் பெத்தேல் ஊழியர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. உங்கள் சபையில் அல்லது வட்டாரத்தில் இருக்கும் பெத்தேல் ஊழியர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
16 புதிய பெத்தேல் ஊழியர்களுக்கு அடிக்கடி வீட்டு ஞாபகம் வரலாம். குடும்பத்தாரையும் நண்பர்களையும் பிரிந்து அவர்கள் தவிக்கலாம். பெத்தேலிலும் சபையிலும் இருப்பவர்கள் அவர்களிடம் பாசமாக நடந்துகொள்ளும்போது அவர்கள் சந்தோஷப்படுவார்கள். (மாற். 10:29, 30) வாரம் முழுக்க பெத்தேலில் வேலை செய்தாலும் கூட்டங்களிலும் ஊழியத்திலும் அவர்கள் தவறாமல் கலந்துகொள்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் பெத்தேலில் கூடுதலான வேலைகள் இருக்கலாம். அதுபோன்ற நேரங்களில் கூட்டங்களுக்கோ ஊழியத்திற்கோ வரமுடியவில்லை என்றால் சபையார் அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் பெத்தேல் ஊழியர்களின் வேலையை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டலாம்.—1 தெசலோனிக்கேயர் 2:9-ஐ வாசியுங்கள்.
வேறு நாடுகளில் இருந்து வரும் முழுநேர ஊழியர்கள்
17, 18. வேறு நாடுகளில் இருந்து வரும் முழுநேர ஊழியர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.
17 வேறு நாடுகளில் இருந்து வரும் முழுநேர ஊழியர்களுக்கு நிறைய சவால்கள் இருக்கும். உணவு, மொழி, கலாச்சாரம், வாழும் விதம் எல்லாமே வித்தியாசமாக இருக்கலாம். அவர்கள் ஏன் இந்தச் சேவையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்?
18 சில மிஷனரிகள், விசேஷ பயிற்சி பெற்று ஊழியம் செய்வதற்காக வேறு நாடுகளில் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய வீட்டு வாடகையையும் அடிப்படை தேவைகளைச் சமாளிப்பதற்கு ஆகும் செலவையும் கிளை அலுவலகம் கவனித்துக்கொள்கிறது. இன்னும் சிலர் வேறு நாடுகளிலிருக்கும் கிளை அலுவலகத்தில் அல்லது கட்டுமான வேலையில் நியமிக்கப்படுகிறார்கள். கிளை அலுவலகம், மொழிபெயர்ப்பு அலுவலகம் (RTO), ராஜ்ய மன்றம், மாநாட்டு மன்றம் போன்றவற்றை கட்டுவதற்கு உதவுகிறார்கள். தங்கும் இடம், உணவு, இன்னும் சில உதவிகள் இவர்களுக்குச் செய்யப்படுகின்றன. பெத்தேல் ஊழியர்களைப் போலவே இவர்களும் தவறாமல் கூட்டங்களிலும் ஊழியத்திலும் கலந்துகொள்கிறார்கள். சபைகளுக்குப் பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறார்கள்.
19. வேறு நாடுகளிலிருந்து வரும் முழுநேர ஊழியர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
19 இந்த முழுநேர ஊழியர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? அவர்களுடைய உணவு பழக்கங்கள் வித்தியாசமாக இருக்கலாம். அதனால், அவர்களைச் சாப்பிட அழைக்கும்போது முதலில், என்ன சாப்பிட விரும்புவார்கள் என்று கேளுங்கள். புதிய மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள அவர்கள் ஆசைப்படுவார்கள். ஆனால், அதற்குக் கொஞ்ச காலம் எடுக்கும். நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளவும் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கவும் அவர்களுக்கு உதவி தேவைப்படும். பொறுமையாகவும் அன்பாகவும் அவர்களுக்கு உதவுங்கள்.
20. முழுநேர ஊழியர்களின் பெற்றோர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
20 முழுநேர ஊழியர்களின் பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ளவும் உதவி தேவைப்படலாம். யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பெற்றோர், தங்களுடைய பிள்ளைகள் தொடர்ந்து முழுநேர ஊழியம் செய்ய வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். (3 யோ. 4) பெற்றோரைக் கவனித்துக்கொள்வதற்கு முழுநேர ஊழியர்கள் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார்கள். நீங்கள் எப்படி உதவலாம்? முழுநேர ஊழியர்களின் பெற்றோரைக் கவனித்துக்கொள்ள உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். இந்தக் கடைசி நாட்களில் முழுநேர ஊழியர்கள் மிக முக்கியமான வேலையைச் செய்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். (மத். 28:19, 20) தனி நபர்களாகவும் சபையாகவும் உங்களால் அவர்களுடைய பெற்றோர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடியுமா?
21. மற்றவர்கள் உதவி செய்யும்போதும் உற்சாகப்படுத்தும்போதும் முழுநேர ஊழியர்கள் எப்படி உணர்கிறார்கள்?
21 முழுநேர ஊழியர்கள் பணத்திற்காகச் சேவை செய்வதில்லை. மற்றவர்களுக்கு உதவுவதற்காகவும் யெகோவாவுக்கு தங்களால் முடிந்த சிறந்ததைச் செய்வதற்காகவுமே கடினமாக உழைக்கிறார்கள். நீங்கள் செய்யும் எல்லா உதவிகளையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார்கள். வேறு நாட்டிற்குச் சென்று சேவை செய்யும் ஒரு சகோதரி சொல்கிறார்: “அவங்கள பாராட்டி நாலு வார்த்தை எழுதி குடுக்கிறதுகூட அவங்க மேல நீங்க எவ்ளோ அக்கறை வச்சிருக்கீங்கனு காட்டும்; அவங்களோட சேவையை நீங்க உயர்வா மதிக்கிறீங்கனு காட்டும்.”
22. முழுநேர சேவையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
22 யெகோவாவுக்காக முழுநேர சேவை செய்வதுதான் வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோஷமான விஷயம். அதில் நிறைய சவால்கள் இருக்கின்றன. ஆனால், அப்படிச் செய்தால் நிறைய கற்றுக்கொள்ள முடியும், திருப்தி கிடைக்கும். பூஞ்சோலையில் செய்யப்போகும் சேவைக்கு ஓர் அடித்தளமாகவும் இருக்கும். கடவுளுடைய அரசாங்கத்தில் நாம் எல்லோருமே முழுநேர சேவை செய்யப் போகிறோம். எனவே, முழுநேர ஊழியர்கள் ‘செய்கிற ஊழியத்தையும், அவர்களுடைய அன்பான உழைப்பையும்’ நாம் மறந்துவிடாதிருப்போமாக!—1 தெ. 1:3.