‘தீங்கு நாட்களிலும்’ யெகோவாவை சேவியுங்கள்
“என்னோட உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாயிட்டே போகுது” என்று கவலைப்படுகிறார் 70 வயதைக் கடந்த எர்னஸ்ட் என்ற சகோதரர்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) உங்களுக்கும் வயதாகிவிட்டதா? உங்கள் உடல்நிலையும் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறதா? அப்படியென்றால், பிரசங்கி 12-ஆம் அதிகாரத்தில் இருக்கிற விஷயங்கள் உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். வயதான காலத்தை “தீங்குநாட்கள்” என்று பிரசங்கி 12:1 சொல்கிறது. இருந்தாலும், நீங்கள் கவலையிலேயே மூழ்கிவிட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், முதிர்வயதிலும் நீங்கள் யெகோவாவை சந்தோஷமாக சேவிக்க முடியும், மனநிறைவோடு வாழ முடியும்!
விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
முதிர்வயதால் கஷ்டப்படும் எங்கள் அருமையான சகோதர சகோதரிகளே, மனம் தளர்ந்து விடாதீர்கள்! அன்று வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்களும் உங்களைப் போலவே முதிர்வயதால் கஷ்டப்பட்டார்கள். உதாரணத்துக்கு ஈசாக்கு, யாக்கோபு, அகியா போன்றவர்கள் கண்பார்வையை இழந்து தவித்தார்கள். (ஆதி. 27:1; 48:10; 1 இரா. 14:4) தாவீது, “குளிரை தாங்க” முடியாமல் கஷ்டப்பட்டார். (1 இரா. 1:1, பொது மொழிபெயர்ப்பு) பணக்காரராக இருந்த பர்சிலாவால் ருசியான சாப்பாட்டையும் இனிமையான இசையையும் அனுபவிக்க முடியவில்லை. (2 சா. 19:32-35) ஆபிரகாமும் நகோமியும் தங்கள் மணத்துணையை மரணத்தில் பறிகொடுத்ததால் வேதனையில் தவித்தார்கள்.—ஆதி. 23:1, 2; ரூத் 1:3, 12.
கஷ்டங்கள் வந்தாலும் அவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள், சந்தோஷத்தைக் காத்துக்கொண்டார்கள். அதற்கு என்ன காரணம்? வயதான காலத்திலும் ஆபிரகாம் கடவுளுடைய வாக்குறுதியில் நம்பிக்கை வைத்ததால் ‘விசுவாசத்தில் பலமுள்ளவரானார்’ என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 4:19, 20) நமக்கும் கடவுள்மீது அசைக்க முடியாத விசுவாசம் வேண்டும். ஆனால், நமக்கு கடவுள்மீது எந்தளவு விசுவாசம் இருக்கிறது என்பதை நம் சூழ்நிலை, வயது, சக்தியை எல்லாம் வைத்து சொல்லிவிட முடியாது. நம் மூதாதையான யாக்கோபு பலவீனமாக இருந்தார், கண்பார்வையை இழந்திருந்தார், படுத்த படுக்கையாக இருந்தார். இருந்தாலும் கடவுளுடைய வாக்குறுதிகள்மீது அசைக்க முடியாத விசுவாசம் வைத்தார். (ஆதி. 48:1-4, 10; எபி. 11:21) ஈனஸ் என்ற 93 வயதுள்ள சகோதரி தசை பலவீனத்தால் அவதிப்படுகிறார். “யெகோவாவோட ஆசீர்வாதத்தை ஒவ்வொரு நாளும் என்னால நல்லா உணர முடியுது. பூஞ்சோலை பூமியை பத்தி நான் தினமும் யோசிச்சு பார்ப்பேன். வாழ்க்கையில நம்பிக்கையோட இருக்க இது எனக்கு உதவியா இருக்கு” என்று அவர் சொல்கிறார். இந்த வயதிலும் அவருக்கு இருக்கும் நம்பிக்கையான மனநிலையை பார்த்தீர்களா?
ஜெபம் செய்வது, பைபிளை ஆராய்ந்து படிப்பது, கூட்டங்களில் கலந்துகொள்வது எல்லாம் நம் விசுவாசத்தைப் பலப்படுத்த உதவும். தள்ளாத வயதிலும் தானியேல் தீர்க்கதரிசி யெகோவாவிடம் ஒவ்வொரு நாளும் 3 முறை ஜெபம் செய்தார். கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படித்தார். (தானி. 6:10; 9:2) கணவனை இழந்த வயதான அன்னாளும் தவறாமல் ஆலயத்துக்குப் போனார். (லூக். 2:36, 37) நீங்களும் முடிந்தபோதெல்லாம் கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள், பதில் சொல்லுங்கள். அப்படி செய்யும்போது, உங்களுக்கு மட்டுமல்ல அங்கு வரும் எல்லாருக்கும் அது உற்சாகமாக இருக்கும். உங்களால் அதிகம் செய்ய முடியவில்லை என்றாலும் நீங்கள் செய்யும் ஜெபங்களை கேட்கும்போது யெகோவா நிச்சயம் சந்தோஷப்படுவார்.—நீதி. 15:8.
நீங்கள் எல்லாரும் கூட்டங்களுக்குப் போகவும் நம் பிரசுரங்களைப் படிக்கவும் நிச்சயம் ஆசைப்படுவீர்கள். ஆனால், உங்களில் சிலருக்கு இது கஷ்டமாக இருக்கலாம். அப்போது, உங்களிடம் இருப்பதை வைத்து என்ன செய்யலாம் என்று பாருங்கள். உதாரணத்துக்கு, கூட்டங்களுக்கு வர முடியாத நிறையப் பேர் அங்கு சொல்லப்படும் விஷயங்களை ஃபோனிலேயே கேட்கிறார்கள். இங்கா என்ற 79 வயது சகோதரிக்குக் கண்பார்வை மங்கிக்கொண்டே வருகிறது. இருந்தாலும், சபையில் இருக்கிற ஒரு சகோதரர் நம் பிரசுரங்களைப் பெரிய எழுத்துக்களில் ‘பிரிண்ட்’ எடுத்து கொடுப்பதால் அவரால் கூட்டங்களுக்குத் தயாரிக்க முடிகிறது.
உங்களுக்கு இப்போது நிறைய நேரம் இருக்கும்; அதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பைபிளை, பைபிள் புத்தகங்களை, பேச்சுகளை, ஆடியோ நாடகங்களைக் கேளுங்கள். முடிந்தால், சகோதர சகோதரிகளுக்கு நீங்களே ஃபோன் செய்யுங்கள். உற்சாகம் அளிக்கும் பைபிள் விஷயங்களை அவர்களிடம் சொல்லுங்கள். அப்போது, அவர்கள் ஊக்கம் பெறுவார்கள். அதோடு, அவர்கள் சொல்லும் விஷயங்களைக் கேட்டு நீங்களும் ‘ஊக்கம் பெறுவீர்கள்.’—ரோ. 1:11, 12.
கடவுளுக்கு எப்போதும் சேவை செய்யுங்கள்
“முன்னாடி செஞ்ச மாதிரி எல்லாம் இப்போ என்னால செய்ய முடியறது இல்ல. அதை நினைச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு” என்று 80 வயதைக் கடந்த சகோதரி கிறிஸ்டா புலம்புகிறார். சந்தோஷமாக இருக்க வயதானவர்கள் என்ன செய்யலாம்? “நம்பிக்கையான மனநிலையோடு இருப்பது ரொம்ப முக்கியம்” என்று 75 வயது பீட்டர் சொல்கிறார். அதோடு, “உங்களால செய்ய முடியாததை நினைச்சு கவலைப்படுறதுக்கு பதிலா இப்போ உங்களால செய்ய முடிஞ்சதை நினைச்சு சந்தோஷப்படுங்க” என்றும் சொல்கிறார்.
அப்படியென்றால், நற்செய்தியை சொல்ல உங்களுக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஹைடி என்ற சகோதரிக்கு சுமார் 85 வயது இருக்கும். முன்பு போல் இப்போது அவரால் வீட்டுக்கு வீடு ஊழியத்துக்குப் போக முடியாது. அதனால், கம்ப்யூட்டரின் மூலமாக கடிதங்கள் எழுத அவர் கற்றுக்கொண்டார். வயதான பிரஸ்தாபிகள் சிலர், பூங்காக்களிலோ பஸ் ஸ்டாப்புகளிலோ உட்கார்ந்து பைபிளைப் பற்றி பேசுகிறார்கள். ஒருவேளை, நீங்கள் முதியோர் காப்பகங்களில் இருந்தால் உங்களை கவனித்துக்கொள்ளும் ஆட்களிடமும் உங்களோடு தங்கி இருப்பவர்களிடமும் நற்செய்தியைப் பற்றி பேசுங்கள்.
வயதான காலத்தில் தாவீது ராஜா உண்மை வணக்கத்தின் முன்னேற்றத்துக்காக நிறைய உதவிகளை செய்தார். ஆலயத்தைக் கட்ட தன்னிடமிருந்த பொருட்களைத் தந்தார். அதற்கு முழு ஆதரவும் கொடுத்தார். (1 நா. 28:11–29:5) நீங்களும், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தமாக உலகம் முழுவதும் செய்யப்படும் வேலைக்காக உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சபையில் இருக்கும் பயனியர்களிடமும் ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிற பிரஸ்தாபிகளிடமும் உற்சாகமாக பேசுங்கள். அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து டீ, காஃபி கொடுங்கள் அல்லது அவர்களுக்கு ஏதாவது சின்ன பரிசு கொடுங்கள். அதோடு, உங்கள் சபையில் இருக்கும் குடும்பங்களுக்காக, இளைஞர்களுக்காக, முழுநேர ஊழியர்களுக்காக, வியாதியில் இருப்பவர்களுக்காக, பொறுப்புகளில் உள்ளவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்.
நீங்கள் செய்துவரும் சேவையையும் உங்களையும் யெகோவா மிக உயர்வாக மதிக்கிறார். யெகோவா உங்களை நெஞ்சார நேசிக்கிறார், ஒரு பொக்கிஷமாகப் பார்க்கிறார். அவர் ஒருபோதும் உங்களை கைவிட மாட்டார். (சங். 71:9) எதிர்காலத்தில், நம் எல்லாருக்குமே வயதாகும். இருந்தாலும், அதன் பாதிப்புகளையோ வேதனைகளையோ நாம் அனுபவிக்க மாட்டோம். முழு ஆரோக்கியத்தோடு வாழ்வோம், யெகோவாவை என்றென்றும் சேவிப்போம்!
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.