ராஜ்ய மன்றம் நம் வணக்கத்துக்கான இடம்!
“உமது வீட்டைக் குறித்த பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்.”—யோவா. 2:17.
1, 2. (அ) அன்று, யெகோவாவின் ஊழியர்கள் வணக்கத்துக்காக எங்கெல்லாம் கூடிவந்தார்கள்? (ஆ) எருசலேமில் இருந்த ஆலயத்தைப் பற்றி இயேசுவுக்கு என்ன உணர்வு இருந்தது? (இ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
அன்றும் சரி இன்றும் சரி, கடவுளை வணங்குவதற்கு என்று யெகோவாவின் மக்களுக்கு ஒரு இடம் இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு, யெகோவாவுக்குப் பலி கொடுப்பதற்காக ஆபேல் ஒரு பலிபீடத்தைக் கட்டியிருக்கலாம். (ஆதி. 4:3, 4) நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே ஆகியவர்களும் பலிபீடங்களைக் கட்டினார்கள். (ஆதி. 8:20; 12:7; 26:25; 35:1; யாத். 17:15) ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டும்படி யெகோவா இஸ்ரவேலர்களிடம் சொன்னார். (யாத். 25:8) பிறகு, ஆலயத்தைக் கட்டும்படி அவர்களிடம் சொன்னார். (1 இரா. 8:27, 29) பாபிலோனிலிருந்து திரும்பி வந்த பிறகு, கடவுளுடைய மக்கள் ஜெபக்கூடங்களில் தவறாமல் கூடினார்கள். (மாற். 6:2; யோவா. 18:20; அப். 15:21) ஆரம்ப கால கிறிஸ்தவர்கள், அன்று இருந்த சகோதர சகோதரிகளின் வீடுகளில் கூடினார்கள். (அப். 12:12; 1 கொ. 16:19) இன்று, உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் மக்கள், அவரை வணங்குவதற்கும் அவரைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் ஆயிரக்கணக்கான ராஜ்ய மன்றங்களில் கூடுகிறார்கள்.
2 எருசலேமில் இருந்த யெகோவாவுடைய ஆலயத்தின்மீது இயேசுவுக்கு ஆழ்ந்த மரியாதையும் அன்பும் இருந்தது. “உமது வீட்டைக் குறித்த பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்” என்று இயேசுவைப் பற்றி சங்கீதக்காரன் சொன்னார். இயேசுவின் பக்திவைராக்கியத்தை சீடர்கள் பார்த்தபோது, சங்கீதக்காரன் சொன்ன இந்த விஷயம் அவர்களுடைய ஞாபகத்துக்கு வந்திருக்கும். (சங். 69:9; யோவா. 2:17) எருசலேமில் இருந்த ஆலயம், ‘கர்த்தருடைய வீடு’ என்பதாக சொல்லப்பட்டது. ஆனால், ராஜ்ய மன்றங்களை நாம் அப்படி சொல்வது இல்லை. (2 நா. 5:13; 33:4) இருந்தாலும், வணக்கத்துக்காக கூடிவரும் இடத்துக்கு நாம் ஆழ்ந்த மதிப்பு காட்ட வேண்டும். ராஜ்ய மன்றத்தில் இருக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்ளலாம்? அதை எப்படிப் பராமரிக்கலாம்? அதற்கு எப்படிப் பண உதவி செய்யலாம்? இதைப் புரிந்துகொள்ள என்ன பைபிள் நியமங்கள் நமக்கு உதவும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.a—அடிக்குறிப்பைப் பாருங்கள்.
சபைக் கூட்டங்களை மதிக்கிறோம்
3-5. ராஜ்ய மன்றம் என்றால் என்ன, நம் கூட்டங்களைப் பற்றி நமக்கு எப்படிப்பட்ட உணர்வு இருக்க வேண்டும்?
3 யெகோவாவை வணங்குவதற்காக நாம் கூடிவரும் முக்கிய இடம்தான் ராஜ்ய மன்றம். யெகோவா நமக்கு கொடுத்திருக்கும் பரிசுகளில் ஒன்றுதான் ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்கள். அவரோடு நமக்கு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்த சபைக் கூட்டங்கள் உதவுகின்றன. அங்குதான் நமக்குத் தேவையான உற்சாகத்தையும் ஆலோசனையையும் கடவுளுடைய அமைப்பு நமக்குக் கொடுக்கிறது. ‘தம்முடைய மேஜையில்’ சாப்பிடுவதற்காக யெகோவாவும் அவருடைய மகனும் நம்மை ஒவ்வொரு வாரமும் அழைக்கிறார்கள். (1 கொ. 10:21) இது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது.
4 தம்மை வணங்கவும் மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் நாம் கூட்டங்களுக்கு வர வேண்டும் என்று யெகோவாவே சொல்கிறார். (எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.) நாம் யெகோவாமீது ஆழ்ந்த மரியாதை வைத்திருக்கிறோம். அதனால், தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தவிர, நாம் கூட்டங்களை ஒருபோதும் தவறவிடுவது இல்லை. நாம் கூட்டங்களுக்கு நன்றாக தயாரிக்கிறோம், உற்சாகமாக பதில் சொல்கிறோம். இப்படி செய்வதால், யெகோவா தந்த பரிசுக்கு, அதாவது கூட்டங்களுக்கு, நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.—சங். 22:22.
5 நாம் கூட்டங்களில் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதும் ராஜ்ய மன்றங்களை எப்படிப் பராமரிக்கிறோம் என்பதும் முக்கியம். ஏனென்றால், நாம் யெகோவாமீது எந்தளவு மரியாதை வைத்திருக்கிறோம் என்பதை இது காட்டும். ராஜ்ய மன்றத்தில் நாம் நடந்துகொள்ளும் விதம் யெகோவாவுடைய பெயருக்குப் புகழ் சேர்க்க வேண்டும். யெகோவாவுடைய பெயர் ராஜ்ய மன்றத்தின் பெயர் பலகையில் இருப்பதை மறந்துவிடாதீர்கள்!—1 இராஜாக்கள் 8:17-ஐ ஒப்பிட்டு பாருங்கள்.
6. நம்மை பற்றியும் ராஜ்ய மன்றங்களைப் பற்றியும் மக்கள் என்ன சொல்கிறார்கள்? (ஆரம்பப் படம்)
6 ராஜ்ய மன்றத்துக்கு நாம் எந்தளவு மதிப்பு காட்டுகிறோம் என்பதை மற்றவர்கள் கவனிக்கிறார்கள். உதாரணத்துக்கு, துருக்கியில் இருக்கும் ஒருவர் இப்படி சொன்னார்: “ராஜ்ய மன்றத்துல எல்லாமே சுத்தமாவும் ஒழுங்காவும் இருந்தது. அதோட எல்லாரும் நேர்த்தியா உடை உடுத்தியிருந்தது, சிரிச்ச முகமா இருந்தது, என்னை அன்பா வரவேற்றது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.” அந்த நபர் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார், சீக்கிரத்தில் ஞானஸ்நானமும் எடுத்தார். இந்தோனேஷியாவில் இருக்கும் ஒரு ஊரில், நம் சகோதரர்கள் ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டி முடித்தார்கள். அதைப் பார்ப்பதற்காக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களையும், அந்த ஊரின் மேயரையும் மற்ற அதிகாரிகளையும் அழைத்தார்கள். ராஜ்ய மன்றத்தையும், அதன் வடிவமைப்பையும் அங்கு அமைக்கப்பட்டிருந்த அழகான தோட்டத்தையும் பார்த்து மேயர் அசந்துபோனார். ‘இங்க இருக்கிற சுத்தத்தை பார்க்கும்போது உண்மையான விசுவாசம் உங்களுக்குத்தான் இருக்குனு தெரிஞ்சிக்கிட்டேன்’ என்றும் சொன்னார்.
7, 8. நாம் யெகோவாமீது மரியாதை வைத்திருக்கிறோம் என்பதை ராஜ்ய மன்றத்தில் இருக்கும்போது எப்படிக் காட்டலாம்?
7 யெகோவாதான் நம்மை கூட்டங்களுக்கு அழைக்கிறார். அதனால், ராஜ்ய மன்றத்துக்கு வரும்போது நாம் எப்படி உடை உடுத்துகிறோம், அங்கு எப்படி நடந்துகொள்கிறோம் என்பது ரொம்ப முக்கியம். இந்த விஷயத்தில் நாம் ரொம்ப கறாராகவும் இருக்கக் கூடாது. அதே சமயத்தில், ஏனோதானோ என்றும் இருக்கக் கூடாது. ராஜ்ய மன்றத்தில் இருக்கும்போது நாமும் சரி, நம் கூட்டங்களுக்கு வருபவர்களும் சரி, தர்மசங்கடமாக உணரக் கூடாது என்று யெகோவா விரும்புகிறார். நாம் உடை உடுத்தும் விதம் எந்த வகையிலும் கூட்டங்களின் மதிப்பை குறைத்துவிடக் கூடாது. அதனால், நாம் கூட்டங்களுக்கு வரும்போது ஏனோதானோ என்று உடை உடுத்துவது இல்லை. அதோடு, கூட்டங்கள் நடக்கும்போது சாப்பிடுவது, ஃபோனில் மெசேஜ் அனுப்புவது, பேசுவது எல்லாம் சரியாக இருக்காது. ராஜ்ய மன்றத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கக் கூடாது என்று பிள்ளைகளுக்கு அப்பா-அம்மாதான் சொல்லித் தர வேண்டும்.—பிர. 3:1.
8 ஆலயத்தில் வியாபாரம் செய்துகொண்டிருந்த ஆட்களைப் பார்த்தபோது, இயேசுவுக்கு ரொம்ப கோபம் வந்தது. அதனால், அவர்களை அங்கிருந்து துரத்தினார். (யோவா. 2:13-17) ராஜ்ய மன்றங்களில் நாம் யெகோவாவை வணங்குகிறோம், அவரைப் பற்றி கற்றுக்கொள்கிறோம். அதனால், அங்கு இருக்கும்போது எந்த விதமான வியாபார விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது.—நெகேமியா 13:7, 8-ஐ ஒப்பிட்டு பாருங்கள்.
ராஜ்ய மன்றங்களைக் கட்ட உதவுகிறோம்
9, 10. (அ) யெகோவாவின் மக்கள் ராஜ்ய மன்றங்களை எப்படிக் கட்டுகிறார்கள், இதனால் என்ன பலன் கிடைத்திருக்கிறது? (ஆ) ராஜ்ய மன்றம் கட்ட போதுமான பணம் இல்லாத சபைகளுக்கு கடவுளுடைய அமைப்பு எப்படி உதவியிருக்கிறது?
9 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் மக்கள் ராஜ்ய மன்றங்களைக் கட்ட கடினமாக உழைக்கிறார்கள். அவற்றை வடிவமைக்கவும், கட்டவும், புதுப்பிக்கவும் வாலண்டியர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் வேலை செய்கிறார்கள். அதனால் கடந்த 15 வருடங்களில், உலகம் முழுவதும் 28,000-க்கும் அதிகமான ராஜ்ய மன்றங்கள், அல்லது ஒவ்வொரு நாளும் சுமார் 5 ராஜ்ய மன்றங்கள் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றன.
10 நன்கொடையாக வரும் பணத்தை வைத்து நம் அமைப்பு ராஜ்ய மன்றங்களைக் கட்டுகிறார்கள். இதற்கு, நிறைய வாலண்டியர்களை அனுப்புகிறார்கள். யாரிடம் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. ராஜ்ய மன்றத்தைக் கட்டும் விஷயத்தில், நாம் இந்த பைபிள் நியமத்தைப் பின்பற்றுகிறோம். (2 கொரிந்தியர் 8:13-15-ஐ வாசியுங்கள்.) ராஜ்ய மன்றம் கட்ட போதுமான பணம் இல்லாத நிறைய சபைகளுக்கு, ராஜ்ய மன்றங்களைக் கட்டிக்கொடுத்து இருக்கிறோம்.
11. தங்களுடைய புதிய ராஜ்ய மன்றத்தைப் பற்றி சகோதரர்கள் என்ன சொல்கிறார்கள், இதை கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?
11 கோஸ்டா ரிகாவிலுள்ள ஒரு சபையில் இருக்கும் சகோதரர்கள் இப்படி எழுதினார்கள்: “நாங்கள் ராஜ்ய மன்றத்துக்கு முன்பு நின்றது ஏதோ கனவு போல் இருந்தது! எங்களால் நம்பவே முடியவில்லை! வெறும் 8 நாட்களில் எங்களுடைய ராஜ்ய மன்றத்தைக் கட்டி முடித்தார்கள். யெகோவாவுடைய ஆசீர்வாதமும், நம் அமைப்புடைய உதவியும், சகோதரர்களுடைய ஒத்துழைப்பும் இருந்ததால்தான் இதை செய்ய முடிந்தது. எங்கள் ராஜ்ய மன்றம் யெகோவா கொடுத்த ஒரு பொன்னான பரிசு. இதை நினைக்கும்போது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.” இதே போன்ற சந்தோஷத்தை உலகம் முழுவதும் இருக்கிற சகோதரர்கள் அனுபவிப்பதை நினைக்கும்போது... யெகோவா செய்த உதவிக்கு சகோதர சகோதரிகள் நன்றி சொல்வதைப் பார்க்கும்போது... நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. யெகோவாவுடைய ஆசீர்வாதம் இருப்பதால்தான் ராஜ்ய மன்றங்களைக் கட்ட முடிகிறது. ஏனென்றால், ராஜ்ய மன்றங்கள் கட்டி முடிக்கப்பட்ட உடனேயே நிறைய பேர் கூட்டங்களுக்கு வருகிறார்கள், யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள்.—சங். 127:1.
12. ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு நீங்கள் எப்படி எல்லாம் உதவி செய்யலாம்?
12 ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு நீங்கள் எப்படி எல்லாம் உதவி செய்யலாம்? முடிந்தால், இந்தக் கட்டிடங்களைக் கட்டும் வேலையில் நீங்கள் ஈடுபடலாம். அதோடு, நாம் எல்லாருமே இந்த வேலைக்கு பணம் கொடுத்தும் உதவலாம். இப்படி நம்மால் முடிந்த உதவிகளை செய்யும்போது, கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை நாம் அனுபவிப்போம். அதைவிட முக்கியமாக, நாம் யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்போம். இந்த விஷயத்தில், பைபிள் காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களின் உதாரணத்தை நாம் பின்பற்றலாம். யெகோவாவுடைய வணக்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக அவர்கள் நன்கொடைகளைக் கொடுக்க ஆர்வமாக இருந்தார்கள்.—யாத். 25:2; 2 கொ. 9:7.
சுத்தமாக வைக்கிறோம்
13, 14. ராஜ்ய மன்றத்தை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைப்பதைப் பற்றி பைபிளிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
13 யெகோவா பரிசுத்தமுள்ள கடவுள்; எல்லா விஷயங்களையும் சீராகவும் ஒழுங்காகவும் செய்கிற கடவுள். அதனால்தான் நாம், ராஜ்ய மன்றங்களை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைக்கிறோம். (1 கொரிந்தியர் 14:33, 40-ஐ வாசியுங்கள்.) நாம் யெகோவாவைப் போல் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்றால் நம் வணக்கம், யோசனை, செயல் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது, நம் உடலும் சுத்தமாக இருக்க வேண்டும்.—வெளி. 19:8.
14 யெகோவாவை வணங்கும் இடம் சுத்தமாக இருந்தால், மற்றவர்களை ராஜ்ய மன்றத்துக்கு அழைக்க நாம் தயங்க மாட்டோம். நாம் சுத்தமான புதிய உலகத்தைப் பற்றி நாம் மக்களிடம் பேசுகிறோம். அவர்கள் ராஜ்ய மன்றத்தில் இருக்கும் சுத்தத்தைப் பார்க்கும்போது, நாம் ‘சொல்வதை செய்பவர்கள்’ என்பதைப் புரிந்துகொள்வார்கள். அதோடு, நாம் பரிசுத்தமான கடவுளை வணங்குகிறோம் என்பதையும் சீக்கிரத்தில் அவர் இந்த முழு பூமியையும் ஒரு அழகான தோட்டமாக மாற்றுவார் என்பதையும் புரிந்துகொள்வார்கள்.—ஏசா. 6:1-3; வெளி. 11:18.
15, 16. (அ) ராஜ்ய மன்றத்தை சுத்தமாக வைப்பது ஏன் கஷ்டமாக இருக்கலாம்? ஆனால், நாம் ஏன் அதை சுத்தமாக வைக்க வேண்டும்? (ஆ) உங்கள் ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்ய என்ன ஏற்பாடு இருக்கிறது, நமக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது?
15 சுத்தத்தைப் பற்றி மக்களுக்கு வித்தியாசமான கருத்துகள் இருக்கின்றன. அதற்குக் காரணம், அவர்கள் வளர்க்கப்பட்ட விதமாக இருக்கலாம். சிலர், தூசி படிந்த இடத்திலும் சேரும் சகதியுமான இடத்திலும் வாழ்கிறார்கள். வேறு சிலர், சுத்தம் செய்வதற்குத் தேவையான தண்ணீரோ பொருளோ இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். நாம் எங்கு வாழ்ந்தாலும் சரி, சுத்தத்தைப் பற்றி மக்களுடைய கருத்து எதுவாக இருந்தாலும் சரி, நாம் ராஜ்ய மன்றத்தை சுத்தமாக வைக்க வேண்டும். ஏனென்றால், ராஜ்ய மன்றம் யெகோவாவை வணங்கும் இடம்!—உபா. 23:14.
16 ராஜ்ய மன்றத்தை சுத்தமாக வைக்க, நன்றாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். அதற்கு, சபையில் இருக்கும் மூப்பர்கள் ஒரு அட்டவணை போட வேண்டும். சுத்தம் செய்வதற்கான பொருட்கள் தேவையான அளவு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கூட்டத்துக்குப் பிறகும், சுத்தம் செய்யும் ஒரு சில வேலைகளை மட்டும் செய்ய வேண்டியிருக்கும். மற்ற வேலைகளை அவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டியிருக்காது. சுத்தம் செய்யும் வேலை திட்டமிட்டபடி ஒழுங்காக நடக்கிறதா என்பதை மூப்பர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்யும் வாய்ப்பு நமக்கு இருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்!
நன்றாக பராமரிக்கிறோம்
17, 18. (அ) கடவுளுடைய ஊழியர்கள் ஆலயத்தைப் பராமரித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) ராஜ்ய மன்றத்தை நாம் ஏன் பராமரிக்க வேண்டும்?
17 ராஜ்ய மன்றத்தை நாம் எப்போதும் நல்ல நிலையில் வைக்கிறோம். அதற்குத் தேவையான பராமரிப்பு வேலைகளையும் செய்கிறோம். பைபிள் காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்களும் இதைத்தான் செய்தார்கள். உதாரணத்துக்கு யோவாஸ் ராஜா, ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்காக மக்கள் கொடுத்த நன்கொடைகளைப் பயன்படுத்தும்படி ஆசாரியர்களிடம் சொன்னார். (2 இரா. 12:4, 5) இருநூறு வருடங்களுக்குப் பிறகு யோசியா ராஜாவும், ஆலயத்துக்கு வந்த நன்கொடையை பழுது பார்க்கும் வேலைக்காகப் பயன்படுத்தினார்.—2 நாளாகமம் 34:9-11-ஐ வாசியுங்கள்.
18 சில நாடுகளில் இருப்பவர்கள் தங்கள் கட்டிடங்களையும் பொருட்களையும் நல்ல நிலையில் வைப்பதை முக்கியமாக நினைப்பதில்லை என்பதை கிளை அலுவலகங்கள் கவனித்திருக்கின்றன. ஒருவேளை, எப்படிப் பராமரிப்பது என்று அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இல்லையென்றால், பழுது பார்க்கும் வேலை செய்ய போதுமான பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ராஜ்ய மன்றத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் அது சீக்கிரத்தில் பாழாகிவிடும், அதனுடைய அழகும் குறைந்துவிடும். இது, கடவுளுக்குக் கெட்ட பெயரை கொண்டுவரும். ராஜ்ய மன்றங்களை நாம் நன்றாக பராமரிக்கும்போது, யெகோவாவுடைய பெயருக்குப் புகழ் சேர்ப்போம். நம் சகோதரர்கள் கொடுத்த நன்கொடையையும் வீணாக்க மாட்டோம்.
19. யெகோவாவை வணங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் இடங்களுக்கு நீங்கள் எப்படி மதிப்பு காட்டுகிறீர்கள்?
19 ராஜ்ய மன்றங்களை நாம் யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்திருக்கிறோம். அதனால், அவை எந்தவொரு தனி மனிதனுக்கோ சபைக்கோ சொந்தமானது கிடையாது. வணக்கத்துக்கான இடங்களுக்கு நாம் எப்படி மதிப்பு காட்டலாம் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரையில் சில பைபிள் நியமங்களை பார்த்தோம். யெகோவாமீது நமக்கு ஆழ்ந்த மரியாதை இருப்பதால், ராஜ்ய மன்றங்களையும் கூட்டங்களையும் நாம் மதிக்கிறோம். ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்காக நம்மால் முடிந்த நன்கொடைகளைக் கொடுக்கிறோம். ராஜ்ய மன்றத்தை சுத்தமாக வைக்கவும், அதை பராமரிக்கவும் நாம் கடினமாக உழைக்கிறோம். கடவுளுடைய ஆலயத்தின்மீது இயேசுவுக்கு இருந்த அதே மரியாதையும் பக்திவைராக்கியமும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்!—யோவா. 2:17.
a இந்தக் கட்டுரையில் ராஜ்ய மன்றங்களைப் பற்றி படித்தாலும், இதில் இருக்கும் விஷயங்கள் யெகோவாவை வணங்குவதற்காக நாம் பயன்படுத்தும் மாநாட்டு மன்றங்களுக்கும் மற்ற இடங்களுக்கும்கூட பொருந்தும்.