உங்கள் மனசாட்சி உங்களை சரியாக வழிநடத்துகிறதா?
“இந்தக் கட்டளையின் நோக்கம், சுத்தமான இருதயத்தோடும் நல்மனசாட்சியோடும் . . . நாம் அன்பு காட்ட வேண்டும் என்பதே.”—1 தீ. 1:5.
1, 2. நமக்கு மனசாட்சியைக் கொடுத்தது யார், அதைக் கொடுத்ததற்காக நாம் ஏன் நன்றியோடு இருக்க வேண்டும்?
சொந்தமாக தீர்மானம் எடுக்கும் உரிமையோடு யெகோவா நம்மை படைத்திருக்கிறார். அப்படித் தீர்மானம் எடுக்க யெகோவா நமக்கு ஒரு நல்ல வழிகாட்டியைக் கொடுத்திருக்கிறார். அதுதான் மனசாட்சி! மனசாட்சி என்பது நமக்குள் இருக்கும் அறிவு. எது சரி, எது தவறு என்பதைத் தெரிந்துகொள்ள இந்த மனசாட்சி நமக்கு உதவி செய்யும். மனசாட்சியை சரியான விதத்தில் பயன்படுத்தும்போது, நாம் கெட்ட விஷயங்களை செய்ய மாட்டோம், நல்ல விஷயங்களையே செய்வோம். யெகோவா நமக்கு மனசாட்சியைக் கொடுத்திருப்பதால், நம்மீது அவருக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதோடு நாம் நல்ல விஷயங்களை செய்ய வேண்டும், சந்தோஷமாக வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
2 நல்லதையே செய்ய வேண்டும், கெட்டதை செய்யக் கூடாது என்பது பைபிளைப் பற்றி தெரியாதவர்களுக்குகூட நன்றாகத் தெரியும். (ரோமர் 2:14, 15-ஐ வாசியுங்கள்.) அதற்குக் காரணம், அவர்களுடைய மனசாட்சி! மனசாட்சியின்படி நடப்பதால்தான் இன்று நிறைய பேர் மோசமான விஷயங்களை செய்வதில்லை. மக்களுக்கு மனசாட்சியே இல்லையென்றால் இந்த உலகம் இன்னும் எவ்வளவு மோசமாக இருக்கும்! இன்று நடப்பதைவிட அநியாயமும் அக்கிரமமும் இன்னும் அதிகமாக நடக்கும். யெகோவா நமக்கு மனசாட்சியைக் கொடுத்திருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!
3. நம் மனசாட்சியை நன்றாகப் பயிற்றுவிப்பதால் என்ன நன்மை?
3 இன்று பொதுவாக நிறைய பேர், மனசாட்சியைப் பயிற்றுவிப்பதைப் பற்றி யோசித்துக்கூட பார்ப்பதில்லை. ஆனால், யெகோவாவுடைய மக்கள் மனசாட்சியைப் பயிற்றுவிக்க விரும்புகிறார்கள். அப்போதுதான், சபை ஒற்றுமையாக இருக்க அவர்களால் உதவி செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். எது நல்லது, எது கெட்டது என்பதை நம்முடைய மனசாட்சி நமக்கு சொல்ல வேண்டும். நம் மனசாட்சியைப் பயிற்றுவிக்கவும் அதை நல்ல விதத்தில் பயன்படுத்தவும் பைபிளைப் படித்தால் மட்டும் போதாது. பைபிளில் இருக்கும் ஆலோசனைகளை நாம் நேசிக்க வேண்டும். அந்த ஆலோசனைகள் எல்லாம் நம்முடைய நன்மைக்காகத்தான் இருக்கின்றன என்று நம்பவும் வேண்டும். இதைப் பற்றி பவுல் என்ன சொன்னார் என்று கவனியுங்கள்: “இந்தக் கட்டளையின் நோக்கம், சுத்தமான இருதயத்தோடும் நல்மனசாட்சியோடும் வெளிவேஷமற்ற விசுவாசத்தோடும் நாம் அன்பு காட்ட வேண்டும் என்பதே.” (1 தீ. 1:5) நம் மனசாட்சியைப் பயிற்றுவித்து அதன்படி நடக்கும்போது, யெகோவாமீது நமக்கு இருக்கும் அன்பும் நம்பிக்கையும் அதிகமாகும். மனசாட்சியைப் பயன்படுத்தும் விதத்தில் இருந்தே, நாம் யெகோவாவோடு எந்தளவு நெருக்கமாக இருக்கிறோம்... நாம் எந்தளவு அவருக்குப் பிடித்த மாதிரி நடக்க விரும்புகிறோம்... என்று தெரிந்துகொள்ளலாம். நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்று நம் மனசாட்சியே நமக்கு சொல்லிவிடும்!
4. நம்முடைய மனசாட்சியை எப்படிப் பயிற்றுவிக்கலாம்?
4 மனசாட்சியைப் பயிற்றுவிக்க பைபிளைத் தினமும் படிக்க வேண்டும், படித்த விஷயங்களை நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும், அதன்படி நடக்க யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும். பைபிளில் இருக்கிற சட்டங்களையும் உண்மைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே பைபிளைப் படிக்கக் கூடாது. யெகோவாவைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே படிக்க வேண்டும். அவர் எப்படிப்பட்டவர், அவருக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்றெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். யெகோவாவைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போது, அவருடைய பார்வையில் எது சரி, எது தவறு என்பதை நம் மனசாட்சி உடனே கண்டுபிடித்துவிடும். நாம் எந்தளவு நம்முடைய மனசாட்சியைப் பயிற்றுவிக்கிறோமோ அந்தளவு யெகோவாவைப் போலவே யோசிக்க ஆரம்பிப்போம்.
5. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
5 ஒருவேளை நாம் இப்படி யோசிக்கலாம்: நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி தீர்மானங்கள் எடுக்க எப்படி உதவி செய்யும்? நம் சகோதர சகோதரிகளுடைய மனசாட்சிக்கு நாம் எப்படி மரியாதை காட்டலாம்? சரியானதை செய்ய நம்முடைய மனசாட்சி எப்படி உதவி செய்யும்? (1) உடல்நலம், (2) பொழுதுபோக்கு, (3) ஊழியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி நமக்கு ஏன் தேவை என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
நியாயமானவர்களாக இருங்கள்
6. எது சம்பந்தமாகத் தீர்மானம் எடுக்க நிறைய பேர் கேள்வி கேட்கிறார்கள்?
6 நம் உடல்நலத்துக்குக் கெடுதல் உண்டாக்கும் எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடக் கூடாது என்று பைபிள் சொல்கிறது. சாப்பிடுவது, குடிப்பது போன்ற விஷயங்களிலும் நாம் அளவோடு இருக்க வேண்டும் என்று சொல்கிறது. (நீதி. 23:20; 2 கொ. 7:1) பைபிள் சொல்கிற ஆலோசனையின்படி நடந்தால் நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியும். இருந்தாலும், வயதாவதையும் வியாதி வருவதையும் நம்மால் தடுக்க முடியாது. ஒருசில உடல்நல பிரச்சினைகளுக்கு சில நாடுகளில், காலங்காலமாக பயன்படுத்தி வரும் நிறைய மருந்துகளும் சிகிச்சை முறைகளும் இருக்கின்றன. இப்போது, புது புது மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும்கூட கண்டுபிடித்திருக்கிறார்கள். நிறைய சகோதர சகோதரிகள், எப்படிப்பட்ட சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டு கிளை அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதுகிறார்கள். பொதுவாக நிறைய பேர், “யெகோவாவின் சாட்சிகள் இந்த சிகிச்சையை செய்யலாமா வேண்டாமா?” என்று கேட்கிறார்கள்.
7. என்ன சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் எப்படித் தீர்மானம் எடுக்க வேண்டும்?
7 ஒரு கிறிஸ்தவர் என்ன சிகிச்சையை எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை கிளை அலுவலகத்துக்கோ சபை மூப்பர்களுக்கோ கிடையாது. அதைப் பற்றி ஒரு கிறிஸ்தவரே வந்து கேட்டால்கூட, அவர்கள் அப்படி செய்ய முடியாது. (கலா. 6:5) ஆனால், சரியான தீர்மானம் எடுக்க மூப்பர்கள் அவருக்கு உதவி செய்யலாம். அதைப் பற்றி யெகோவா என்ன சொல்லியிருக்கிறார் என்பதை மூப்பர்கள் அவருக்கு சொல்லலாம். உதாரணத்துக்கு, ‘இரத்தத்திற்கு விலகியிருங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (அப். 15:29) இரத்தத்தையும் இரத்தத்தில் இருக்கும் 4 முக்கியமான பாகங்களையும் பயன்படுத்தி செய்யும் எந்தவொரு சிகிச்சையையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதை இதிலிருந்து ஒரு கிறிஸ்தவர் தெளிவாகப் புரிந்துகொள்வார். ஆனால், இரத்தத்தின் முக்கிய பாகங்களிலிருந்து எடுக்கப்பட்ட சிறு கூறுகளை ஒரு கிறிஸ்தவர் ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்பதை அவருடைய மனசாட்சிதான் தீர்மானிக்க வேண்டும்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) சிகிச்சை எடுத்துக்கொள்வதைப் பற்றி சரியான தீர்மானம் எடுக்க பைபிளில் வேறு என்ன ஆலோசனை இருக்கிறது?
8. உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல தீர்மானம் எடுக்க பிலிப்பியர் 4:5 எப்படி உதவி செய்யும்?
8 “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என்று நீதிமொழிகள் 14:15 சொல்கிறது. இன்று, ஒருசில நோய்களைக் குணப்படுத்தவே முடியாது. ஆனால், அப்படிப்பட்ட நோய்களுக்கும் சிகிச்சைகள் இருக்கின்றன என்று சிலர் சொல்லலாம். அந்த நோய்கள் குணமாகும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனால், அப்படிப்பட்ட சிகிச்சைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள். “நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்திருக்கட்டும்” என்று பவுல் சொன்னார். (பிலி. 4:5) நாம் நியாயமானவர்களாக இருந்தால் நம்முடைய உடல்நலத்தைப் பற்றி தேவையில்லாமல் கவலைப்பட மாட்டோம். யெகோவாவை வணங்குவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவோம். உடல்நலத்தைப் பற்றி நாம் அதிகமாக கவலைப்பட்டால் நம்முடைய விஷயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுபவர்களாக ஆகிவிடுவோம். (பிலி. 2:4) சாத்தானுடைய இந்த உலகத்தில் நோயே இல்லாமல் வாழ முடியாது. அதனால், யெகோவாவை சேவிப்பதற்கே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.—பிலிப்பியர் 1:10-ஐ வாசியுங்கள்.
9. உடல்நலத்தைப் பற்றி தீர்மானம் எடுக்கும்போது நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும் என்று ரோமர் 14:13, 19 சொல்கிறது? எது சபையின் ஒற்றுமையைக் கெடுத்துவிடலாம்?
9 ஒரு கிறிஸ்தவர் நியாயமாக நடந்துகொள்கிறார் என்றால், அவர் நினைப்பதையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டார். ஒரு தம்பதி என்ன செய்தார்கள் என்று கவனியுங்கள். குறிப்பிட்ட உணவு பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும் ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும் அவர்கள் மற்றவர்களிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னதை சிலர் கேட்டார்கள், சிலர் கேட்கவில்லை. அவர்கள் சொன்னதைக் கேட்டவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்காமல் போனது. அதனால், அவர்கள் எல்லாரும் சோர்ந்துபோனார்கள். என்னென்ன மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும், என்ன உணவு பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமை அந்தத் தம்பதிக்கு இருக்கிறது. ஆனால், உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி, சபையின் ஒற்றுமையைக் கெடுக்க நினைப்பது நியாயமா? ரோமில் இருந்த சில கிறிஸ்தவர்களுக்கு உணவு பழக்கத்தைப் பற்றியும் கொண்டாட்டங்களைப் பற்றியும் வித்தியாசமான கருத்துக்கள் இருந்தன. அவர்களுக்கு பவுல் என்ன ஆலோசனை கொடுத்தார்? “ஒருவன் ஒரு நாளை மற்றொரு நாளைவிட விசேஷமாகக் கருதுகிறான்; வேறொருவனோ எல்லா நாட்களையும் ஒன்றுபோல் கருதுகிறான்; எதுவானாலும் சரி, அவனவன் தன் மனதில் நன்கு உறுதிப்படுத்திக்கொள்ளட்டும்” என்று அவர் சொன்னார். அதனால், மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்கும் விதத்தில் நாம் எதையும் செய்யக் கூடாது.—ரோமர் 14:5, 13, 15, 19, 20-ஐ வாசியுங்கள்.
10. மற்றவர்கள் எடுக்கிற தீர்மானத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும்? (ஆரம்பப் படம்)
10 சபையில் இருக்கும் ஒரு கிறிஸ்தவர் அவருடைய சொந்த விஷயங்களில் ஏதாவது ஒரு தீர்மானம் எடுத்திருக்கலாம். அவர் ஏன் அப்படித் தீர்மானம் எடுத்தார் என்று நமக்குப் புரியாமல் இருக்கலாம். உடனே, அவர் எடுத்த தீர்மானம் தவறு என்று முடிவுகட்டிவிடக் கூடாது. அல்லது அவருடைய தீர்மானத்தை மாற்றிக்கொள்ள நாம் கட்டாயப்படுத்தக் கூடாது. ஏனென்றால், அவருடைய மனசாட்சியை அவர் இன்னும் பயிற்றுவிக்க வேண்டியிருக்கலாம்; அல்லது அவருடைய மனசாட்சி சீக்கிரத்தில் புண்பட்டுவிடலாம். (1 கொ. 8:11, 12) அதுமட்டுமில்லாமல், நம்முடைய மனசாட்சியைகூட நாம் இன்னும் பயிற்றுவிக்க வேண்டியிருக்கலாம். அதனால், நம் உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் மற்ற விஷயத்திலும் நாம்தான் தீர்மானம் எடுக்க வேண்டும். நாம் எடுக்கிற தீர்மானத்திற்கு நாம்தான் பொறுப்பு!
புத்துணர்ச்சியூட்டும் பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுங்கள்
11, 12. நல்ல பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க பைபிள் எப்படி உதவி செய்கிறது?
11 பொழுதுபோக்கை நாம் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக யெகோவா நம்மை படைத்திருக்கிறார். அதோடு, எந்தவொரு பொழுதுபோக்கும் நமக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். ‘சிரிப்பதற்கு ஒரு காலமுண்டு, நடனமாடுவதற்கு ஒரு காலமுண்டு’ என்று சாலொமோன் சொன்னார். (பிர. 3:4, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆனால், எல்லா பொழுதுபோக்கும் பிரயோஜனமுள்ளதாக, புத்துணர்ச்சி தருவதாக இருப்பதில்லை. அதோடு, நாம் அதிக நேரம் பொழுதுபோக்கிலேயே செலவு செய்யக் கூடாது. சந்தோஷத்தைத் தருகிற... பிரயோஜனமாக இருக்கிற... யெகோவாவுக்குப் பிடித்த... ஒரு பொழுதுபோக்கில் ஈடுபட நம் மனசாட்சி நமக்கு எப்படி உதவும்?
12 ‘பாவ இயல்புக்குரிய செயல்களில்’ ஈடுபடக் கூடாது என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. “பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, வெட்கங்கெட்ட நடத்தை, உருவ வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு, பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோபாவேசம், வாக்குவாதம், பிரிவினை, மதப்பிரிவு, பிறரைக் கண்டு வயிறெரிதல், வெறிக்கவெறிக்கக் குடித்தல், குடித்துக் கும்மாளம் போடுதல்” போன்றவை எல்லாம் பாவ இயல்புக்குரிய செயல்கள். “இப்படிப்பட்டவற்றைச் செய்து வருகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று பவுல் சொன்னார். (கலா. 5:19-21) அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘கோபத்தை, போட்டி மனப்பான்மையை, தேசப்பற்றை, சண்டையை தூண்டுற விளையாட்டுல கலந்துக்காம இருக்க என் மனசாட்சி உதவி செய்யுதா? அசிங்கமான படங்களை பார்க்கணுங்கிற ஆசை வரும்போது அது தப்புனு என்னோட மனசாட்சி சொல்லுதா... ஒழுக்கக்கேடு, குடிவெறி, ஆவியுலகம் சம்பந்தமான விஷயங்களை தூண்டுற எதையும் பார்க்காம இருக்க என் மனசாட்சி என்னை எச்சரிக்குதா?’
13. பொழுதுபோக்கு சம்பந்தமாக 1 தீமோத்தேயு 4:8-ம் நீதிமொழிகள் 13:20-ம் நமக்கு என்ன ஆலோசனை தருகிறது?
13 பொழுதுபோக்கு விஷயத்தில் நம் மனசாட்சியைப் பயிற்றுவிக்க பைபிள் ஆலோசனைகள் நமக்கு உதவி செய்யும். உதாரணத்துக்கு, “உடற்பயிற்சி ஓரளவுதான் நன்மை தரும்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீ. 4:8) உடற்பயிற்சி செய்தால் ஆரோக்கியமாக இருக்க முடியும், அது நமக்கு புத்துணர்ச்சி தரும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். நீங்கள் நிறைய பேரோடு சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் யாரோடு உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பது ரொம்ப முக்கியம். ஏனென்றால், “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் [நட்பு வைத்துக்கொள்கிறவன்] ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என்று நீதிமொழிகள் 13:20 சொல்கிறது. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியைப் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
14. ரோமர் 14:2-4-ல் இருக்கிற ஆலோசனையை ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படிப் பின்பற்றினார்கள்?
14 யெகோவாவின் சாட்சியாக இருக்கும் கிறிஸ்டியன்-டானியலா தம்பதிக்கு 2 இளம் மகள்கள் இருக்கிறார்கள். கிறிஸ்டியன் சொல்கிறார், ‘குடும்ப வழிபாட்டுல நாங்க பொழுதுபோக்கை பத்தி பேசுனோம். பொழுதுபோக்கு நமக்கு தேவைதான். ஆனா, எல்லா பொழுதுபோக்கும் நல்லது இல்லனு நாங்க முடிவு செஞ்சோம். அதோட, யாரை நண்பர்களா தேர்ந்தெடுக்கணும்னு பேசுனோம். ஸ்கூல் இடைவேளை சமயத்தில, யெகோவாவின் சாட்சியா இருக்கிற மத்த பிள்ளைங்க நடந்துக்கிட்ட விதம் என் மகளுக்கு பிடிக்கல. அவளும் அந்த மாதிரியே நடந்துக்கணும்னு அவங்க கட்டாயப்படுத்துனதா என் மகள் சொன்னா. நம்ம எல்லாருக்கும் மனசாட்சினு ஒண்ணு இருக்குனு அவகிட்ட சொன்னேன். யாரோட பழகணும், என்ன செய்யணும்னு நம்ம மனசாட்சி சொல்லுதோ அதுபடி செய்யணும்னு அவகிட்ட சொன்னேன்’.—ரோமர் 14:2-4-ஐ வாசியுங்கள்.
15. பொழுதுபோக்கு விஷயத்தில் மத்தேயு 6:33-ல் இருக்கும் ஆலோசனை நமக்கு எப்படி உதவி செய்யும்?
15 பொழுதுபோக்குக்காக நீங்கள் எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள்? கூட்டங்கள், ஊழியம், பைபிள் படிப்பு எல்லாவற்றிற்கும் முதலிடம் கொடுக்கிறீர்களா அல்லது பொழுதுபோக்குக்கு முதலிடம் கொடுக்கிறீர்களா? நீங்கள் எதை முக்கியமாக நினைக்கிறீர்கள்? “முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்” என்று இயேசு சொன்னார். (மத். 6:33) இயேசு சொன்னது போல, முக்கியமான விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க உங்கள் மனசாட்சி உங்களை ஞாபகப்படுத்துகிறதா?
சுறுசுறுப்பாக ஊழியம் செய்யுங்கள்
16. ஊழியம் செய்வதற்கு நம் மனசாட்சி எப்படி உதவி செய்கிறது?
16 தவறான விஷயங்களை செய்யக்கூடாது என்று பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி நம்மை எச்சரிக்கும். அதே நேரத்தில், நல்ல விஷயங்களை செய்வதற்கு நம்மை உற்சாகப்படுத்தும். முக்கியமாக வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யவும், சந்தர்ப்ப சாட்சி கொடுக்கவும் நம்மை உற்சாகப்படுத்தும். சுறுசுறுப்பாக ஊழியம் செய்ய பவுலுக்கு அவருடைய மனசாட்சி உதவி செய்தது. “அதை [நற்செய்தியை] அறிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. உண்மையில், நற்செய்தியை நான் அறிவிக்காவிட்டால் எனக்கு ஐயோ!” என்று பவுல் சொன்னார். (1 கொ. 9:16) நாமும் பவுலுடைய உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். அப்படி செய்யும்போது, நாம் சரியானதையே செய்கிறோம் என்று நம்முடைய மனசாட்சி நமக்கு சொல்லும். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்கும்போது, நாம் நல்ல முன்மாதிரியாக இருக்கிறோம்; உண்மைகளைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவி செய்கிறோம். அதனால்தான், “சத்தியத்தை வெளிப்படுத்துவதால் கடவுளுடைய முன்னிலையில் எல்லா மனிதர்களுக்கும் [அடிக்குறிப்பு, மனிதர்களுடைய மனசாட்சிக்கும்] முன்மாதிரிகளாக விளங்குகிறோம்” என்று பைபிள் சொல்கிறது.—2 கொ. 4:2.
17. ஒரு சகோதரி எப்படி பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின்படி நடந்துகொண்டார் என்று சொல்லுங்கள்.
17 ஜாக்லின் என்ற சகோதரிக்கு 16 வயது இருக்கும்போது, அவருடைய பள்ளியில் என்ன நடந்தது என்று கவனியுங்கள். பரிணாமத்தைப் பற்றி, அதாவது மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதைப் பற்றி அவருடைய ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். “பொதுவா, பாடம் எடுக்கும்போது நான் நல்லா கவனிப்பேன். ஆனா, பரிணாமத்தை பத்தி சொல்லும்போது, அதை கேட்டுட்டு சும்மா இருக்க என் மனசாட்சி அனுமதிக்கல. அதனால, நான் ஆசிரியர்கிட்ட நம்மளோட நம்பிக்கைகளை பத்தி சொன்னேன். நான் சொன்னதை அவர் அமைதியா கேட்டார். அதுமட்டும் இல்ல, கடவுள்தான் எல்லாத்தையும் படைச்சார்னு கிளாஸ்ல இருந்த மத்தவங்களுக்கும் சொல்றதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.” ஜாக்லினுடைய மனசாட்சி பைபிளால் பயிற்றுவிக்கப்பட்டு இருந்தது. அந்த மனசாட்சி சொன்னபடி நடந்துகொண்டதை நினைத்து ஜாக்லினுக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. சரியானதை செய்ய உங்களுடைய மனசாட்சி உங்களுக்கு உதவி செய்கிறதா?
18. நம்மை சரியாக வழிநடத்துகிற மனசாட்சி நமக்கு ஏன் தேவை?
18 யெகோவா கொடுத்திருக்கிற சட்டங்களின்படியும் ஆலோசனைகளின்படியும் வாழ வேண்டும் என்பதுதான் நம் குறிக்கோள். அதற்கு நம்முடைய மனசாட்சி நமக்கு உதவி செய்யும். மனசாட்சியைப் பயிற்றுவிக்க பைபிளைத் தினமும் படிக்க வேண்டும், படித்த விஷயங்களை நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும், அதன்படி நடக்க வேண்டும். அப்படி செய்தால், யெகோவா கொடுத்திருக்கும் இந்தப் பரிசு நம் வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
a காவற்கோபுரம் ஜூன் 15, 2004, பக். 29-31-ல் இருக்கும் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையையும் கடவுளது அன்பு என்ற புத்தகத்தில் பக். 246-249-ல் இருக்கும் பிற்சேர்க்கையையும் பாருங்கள்.