யெகோவா அவருடைய மக்களிடம் எப்படிப் பேசுகிறார்?
“நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்.” —யோபு 42:4.
1-3. (அ) மனிதர்களுடையதைவிட கடவுளுடைய யோசனையும் மொழியும் உயர்ந்தது என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?
தாம் மட்டுமே சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று யெகோவா நினைக்கவில்லை. அதனால், தேவதூதர்களையும் மனிதர்களையும் படைத்தார். (சங். 36:9; 1 தீ. 1:11) அவர் முதன்முதலில் படைத்த இயேசுவை “வார்த்தை” என்று பைபிள் சொல்கிறது. (யோவா. 1:1; வெளி. 3:14) யெகோவா தம்முடைய யோசனைகளையும் உணர்வுகளையும் இயேசுவிடம் சொன்னார். (யோவா. 1:14, 17; கொலோ. 1:15) தேவதூதர்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள், அவர்களுக்கும் ஒரு மொழி இருக்கிறது என்று அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார். அவர்களுடைய மொழி மனிதர்கள் பேசும் மொழியைவிட உயர்ந்ததாக இருக்கிறது.—1 கொ. 13:1.
2 யெகோவாவுக்கு அவர் படைத்த கோடிக்கணக்கான தேவதூதர்களைப் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் நன்றாகத் தெரியும். ஒரே நேரத்தில் எத்தனை பேர் ஜெபம் செய்தாலும், எந்த மொழியில் ஜெபம் செய்தாலும் அவரால் கேட்க முடியும். மனிதர்களுடைய ஜெபங்களைக் கேட்டுக்கொண்டே அவர் தேவதூதர்களிடமும் பேசுகிறார்; அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார். இதையெல்லாம் செய்வதற்கு, மனிதர்களுடைய யோசனையையும் மொழியையும்விட யெகோவாவுடைய யோசனையும் மொழியும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். (ஏசாயா 55:8, 9-ஐ வாசியுங்கள்.) இருந்தாலும், அவர் மனிதர்களிடம் பேசும்போது அவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாக பேசுகிறார்.
3 மனிதர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் யெகோவா எப்படித் தெளிவாகப் பேசுகிறார் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். சூழ்நிலை மாறியபோது அவர் எப்படிப் பேசினார் என்றும் பார்ப்போம்.
கடவுள் மனிதர்களிடம் பேசுகிறார்
4. (அ) மோசே, சாமுவேல், தாவீதிடம் யெகோவா எந்த மொழியில் பேசினார்? (ஆ) பைபிளில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன?
4 ஏதேன் தோட்டத்தில் ஆதாமிடம் யெகோவா பழங்கால எபிரெய மொழியில் பேசியிருக்கலாம். மோசே, சாமுவேல், தாவீது போன்றவர்களிடமும் யெகோவா அதே மொழியில் பேசியிருக்கலாம். அவர்கள் எல்லாரும் அவர்களுடைய சொந்த வார்த்தைகளிலும் சொந்த நடையிலும் பைபிளை எழுதினாலும் அவையெல்லாம் கடவுளுடைய கருத்துக்களாகவே இருந்தன. சிலசமயம் யெகோவா சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எழுதினார்கள். அதோடு, யெகோவா அவருடைய மக்களிடம் எப்படி நடந்துகொண்டார் என்றும் எழுதினார்கள். உதாரணத்துக்கு, மக்களுக்கு கடவுள்மீது இருந்த விசுவாசத்தையும் அன்பையும் பற்றி எழுதினார்கள். அதோடு, அவர்கள் செய்த தவறுகளைப் பற்றியும் யெகோவாவுக்கு உண்மையாக இல்லாமல் போனதைப் பற்றியும் எழுதினார்கள். இவையெல்லாம் நம் நன்மைக்காகவே எழுதப்பட்டிருக்கின்றன.—ரோ. 15:4.
5. யெகோவா மனிதர்களிடம் எபிரெய மொழியில் மட்டும்தான் பேசினாரா? விளக்குங்கள்.
5 சூழ்நிலை மாறியபோது யெகோவா மனிதர்களிடம் மற்ற மொழிகளிலும் பேசினார். இஸ்ரவேலர்கள் பாபிலோனில் இருந்து விடுதலையாகி வந்த பிறகு அவர்களில் சிலர் அரமேயிக் மொழியில் பேசினார்கள். அதனால்தான் தானியேல், எரேமியா, எஸ்றா ஆகியோர் பைபிளிலுள்ள சில பகுதிகளை அரமேயிக் மொழியில் எழுதினார்கள்.—எஸ்றா 4:8; 7:12; எரே. 10:11; தானி. 2:4.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
6. எபிரெய வேதாகமம் ஏன் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது?
6 மகா அலெக்ஸாண்டர் நிறைய நாடுகளைக் கைப்பற்றியதால் கொய்னி கிரேக்கு உலகின் முக்கிய மொழியாக ஆனது. நிறைய யூதர்கள் கிரேக்க மொழியைப் பேசியதால் எபிரெய வேதாகமம் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு செப்டுவஜின்ட் என்று அழைக்கப்படுகிறது. இதுதான் பைபிளின் முதல் மொழிபெயர்ப்பு; முக்கியமான பைபிள் மொழிபெயர்ப்புகளில் இதுவும் ஒன்று! இதை 72 பேர் மொழிபெயர்த்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) சிலர் அதை எபிரெய வேதாகமத்தில் இருந்து வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தார்கள்; ஆனால், எல்லாரும் அப்படிச் செய்யவில்லை. இருந்தாலும், கிரேக்க மொழி பேசிய யூதர்களும் அதற்குப் பிறகு வந்த கிறிஸ்தவர்களும் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டார்கள்.
7. இயேசு அவருடைய சீடர்களுக்கு எந்த மொழியில் கற்றுக்கொடுத்திருக்கலாம்?
7 இயேசு பூமியில் இருந்தபோது எபிரெய மொழியில் பேசியிருக்கலாம்; அதே மொழியில் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கலாம். (யோவா. 19:20; 20:16; அப். 26:14) அந்தக் காலத்தில் எல்லாருக்கும் பொதுவாகத் தெரிந்த சில அரமேயிக் வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியிருக்கலாம். மோசேயும் தீர்க்கதரிசிகளும் பேசிய பழங்காலத்து எபிரெய மொழியும் இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் எழுதியவற்றை ஜெப ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் வாசித்தார்கள். (லூக். 4:17-19; 24:44, 45; அப். 15:21) இயேசுவின் காலத்தில் கிரேக்க மொழியும் லத்தீன் மொழியும் பேசப்பட்டாலும் அவர் அந்த மொழிகளில் பேசினார் என்று பைபிளில் எந்தப் பதிவும் இல்லை.
8, 9. சில பைபிள் புத்தகங்கள் ஏன் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன, இதிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?
8 இயேசுவின் ஆரம்பகால சீடர்கள் எபிரெய மொழியில் பேசினார்கள். ஆனால், இயேசுவின் மரணத்துக்குப் பிறகு சீடர்கள் மற்ற மொழிகளிலும் பேச ஆரம்பித்தார்கள். (அப்போஸ்தலர் 6:1-ஐ வாசியுங்கள்.) நற்செய்தி பரவ ஆரம்பித்தபோது நிறைய கிறிஸ்தவர்கள் எபிரெய மொழிக்குப் பதிலாக கிரேக்க மொழியைப் பேசினார்கள். மக்கள் கிரேக்க மொழியை அதிகமாக பேசியதால் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய புத்தகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்டன.c (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதோடு, பவுல் எழுதிய கடிதங்களும் மற்ற பைபிள் புத்தகங்களும் கிரேக்கில் எழுதப்பட்டன.
9 கிரேக்க வேதாகமத்தை எழுதியவர்கள் எபிரெய வேதாகமத்தில் இருந்து மேற்கோள் காட்ட செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பையே பெரும்பாலும் பயன்படுத்தினார்கள். சிலநேரங்களில், அவர்கள் மேற்கோள் காட்டியது முதன்முதலில் எழுதப்பட்ட எபிரெய வார்த்தையிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதனால், தவறு செய்யும் இயல்புடைய மனிதர்கள் மொழிபெயர்த்த பைபிள்தான் நம்மிடம் இருக்கிறது. ஒரு மொழி அல்லது கலாச்சாரத்தை மட்டும் யெகோவா முக்கியமாக நினைப்பதில்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.—அப்போஸ்தலர் 10:34-ஐ வாசியுங்கள்.
10. யெகோவா மனிதர்களிடம் என்ன எதிர்பார்ப்பதில்லை?
10 சூழ்நிலை மாறும்போது யெகோவா மற்ற மொழிகளிலும் மக்களிடம் பேசுகிறார் என்று தெரிந்துகொண்டோம். அப்படியென்றால், அவரை பற்றியும் அவருடைய விருப்பத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு குறிப்பிட்ட மொழியில் நாம் பேச வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. (சகரியா 8:23; வெளிப்படுத்துதல் 7:9, 10-ஐ வாசியுங்கள்.) பைபிள் எழுத்தாளர்களுக்கு யெகோவா அவருடைய சக்தியைக் கொடுத்து பைபிளை எழுத வைத்தார். இருந்தாலும், அவருடைய எண்ணங்களை தங்கள் சொந்த வார்த்தையில் எழுத அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தார்.
பைபிள் பாதுகாக்கப்பட்டிருக்கிறது
11. எந்த மொழியை சேர்ந்த மக்களிடமும் யெகோவா தேவனால் பேச முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?
11 மனிதர்கள் வித்தியாசமான மொழிகளில் பேசுகிறார்கள். இருந்தாலும், யெகோவா அவர்களிடம் பேசுவதற்கு மொழிகள் ஒரு தடையாக இல்லை. அதை எப்படிச் சொல்லலாம்? சில விஷயங்களை மட்டும்தான் இயேசு எந்த மொழியில் சொன்னாரோ அதே மொழியில் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. (மத். 27:46; மாற். 5:41; 7:34; 14:36) ஆனால், இயேசு சொன்ன எல்லா விஷயங்களையும் யெகோவா கிரேக்க மொழியிலேயே எழுத வைத்தார். பிறகு, மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்படவும் செய்தார். யூதர்களும் கிறிஸ்தவர்களும் பைபிளை திரும்பத் திரும்ப நகல் எடுத்ததால் பைபிள் பாதுகாக்கப்பட்டது. பிறகு, இந்த நகல்கள் இன்னும் நிறைய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இயேசு பிறந்து சுமார் 400 வருஷங்களுக்குப் பிறகு அவருடைய போதனைகள் மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன என்று ஜான் க்ரைசோஸ்டம் சொன்னார். அதாவது சீரியர்கள், எகிப்தியர்கள், இந்தியர்கள், பெர்சியர்கள், எத்தியோப்பியர்கள் பேசிய மொழிகளிலும் இன்னும் நிறைய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது என்று சொன்னார்.
12. பைபிளை எப்படியெல்லாம் எதிர்த்தார்கள்?
12 பைபிளையும் அதை மொழிபெயர்த்தவர்களையும் அதை விநியோகித்தவர்களையும் அன்றிருந்த நிறையப் பேர் எதிர்த்தார்கள். இயேசு பிறந்து சுமார் 300 வருஷங்களுக்குப் பிறகு, ரோமப் பேரரசர் டையோகிளிஷன் எல்லா பைபிள்களையும் அழிக்க வேண்டுமென்று கட்டளை கொடுத்தார். சுமார் 1,200 வருஷங்களுக்குப் பிறகு, வில்லியம் டின்டேல் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். ‘கடவுள் என்னை நிறைய நாள் வாழ வைச்சா பண்ணையில் வேலைசெய்ற ஒரு பையன்கூட பாதிரியாரைவிட பைபிளை நல்லா தெரிஞ்சிக்க வைப்பேன்’ என்று அவர் சொன்னார். பைபிளை மொழிபெயர்த்ததால் டின்டேலை கொடுமைப்படுத்தினார்கள். அதனால், பைபிளை மொழிபெயர்க்கவும் அதை அச்சடிக்கவும் அவர் இங்கிலாந்தில் இருந்து ஐரோப்பாவுக்கு ஓடிப் போனார். மத குருமார்கள், கண்ணில்படும் எல்லா பைபிள்களையும் எரிக்க முயற்சி செய்தாலும் டின்டேலின் மொழிபெயர்ப்பு நிறைய மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. கடைசியில், டின்டேலின் கழுத்தை நெரித்து, அவரை கம்பத்தில் வைத்து எரித்துவிட்டார்கள். ஆனால், அவர் மொழிபெயர்த்த பைபிளை மத குருமார்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த பைபிளை வைத்துதான் கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளை மொழிபெயர்த்தார்கள்.—2 தீமோத்தேயு 2:9-ஐ வாசியுங்கள்.
13. பழங்காலத்து கையெழுத்துப் பிரதிகளை ஆராய்ச்சி செய்ததிலிருந்து என்ன தெரிகிறது?
13 பழங்காலத்து பைபிள் பிரதிகளில் சின்ன சின்ன பிழைகளும் வித்தியாசங்களும் இருக்கின்றன என்பது உண்மைதான். இருந்தாலும் ஆயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளை, கையெழுத்துப் பிரதிகளுடைய பாகங்களை, பழைய பைபிள் மொழிபெயர்ப்புகளை பைபிள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்த்த பிறகு, ஒருசில வசனங்கள் மட்டுமே வித்தியாசமாக இருக்கின்றன என்றும் பைபிளிலுள்ள செய்தி மாறவில்லை என்றும் தெரிந்துகொண்டார்கள். பைபிளை ஆர்வமாகப் படிப்பவர்கள் அது கடவுளுடைய புத்தகம் என்பதை நம்ப இதுபோன்ற ஆராய்ச்சிகள் உதவி செய்திருக்கின்றன.—ஏசா. 40:8.d (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
14. பைபிள் செய்தியைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எல்லாருக்கும் இருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்?
14 பைபிள் பல எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் அது 2,800-க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வேறு எந்தப் புத்தகமும் இத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்படவில்லை. நிறையப் பேருக்கு கடவுள்மீது நம்பிக்கை இல்லையென்றாலும் சரித்திரத்திலேயே அதிகமாக விநியோகிக்கப்பட்ட புத்தகம் பைபிள்தான்! சில பைபிள் மொழிபெயர்ப்புகள் திருத்தமாக இல்லை, வாசிப்பதற்கு அவ்வளவு சுலபமாகவும் இல்லை. இருந்தாலும், எல்லா பைபிள் மொழிபெயர்ப்புகளும் நம்பிக்கையான செய்தியைச் சொல்கிறது; முடிவில்லா வாழ்க்கையைப் பற்றியும் சொல்கிறது.
புதிய பைபிள் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டது
15. (அ) மொழி இன்று ஒரு தடையாக இல்லை என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) நம் புத்தகங்களும் பத்திரிகைகளும் ஏன் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றன?
15 பைபிள் மாணாக்கர்களில் ஒரு சிறு தொகுதியினர் 1919-ல் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் அந்தச் சமயத்தில், கடவுளுடைய மக்களுக்கு பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் எல்லாவற்றையும் சொன்னார்கள். (மத். 24:45) இன்று உண்மையுள்ள அடிமை பைபிளில் இருக்கும் விஷயங்களை நிறைய மொழிகளில் கொடுக்கிறார்கள்; பைபிள் புத்தகங்களும் பத்திரிகைகளும் 700-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றன. முதல் நூற்றாண்டில், கிரேக்க மொழி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது போல இன்று ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. அன்று வியாபாரம் மற்றும் கல்வித் துறையில் கிரேக்க மொழி பயன்படுத்தப்பட்டது போல இன்று ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. அதனால், நம் புத்தகங்களும் பத்திரிகைகளும் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றன. பிறகு, மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன.
16, 17. (அ) கடவுளுடைய மக்களுக்கு என்ன தேவைப்பட்டது? (ஆ) அதற்காக என்ன செய்யப்பட்டது? (இ) சகோதரர் நேதன் நாருக்கு என்ன நம்பிக்கை இருந்தது?
16 நம் புத்தகங்கள், பத்திரிகைகளில் இருக்கும் எல்லா விஷயங்களும் பைபிளின் அடிப்படையில் இருக்கின்றன. 1611-ல் வந்த கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளைத்தான் கடவுளுடைய மக்கள் முதலில் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் அதில் பயன்படுத்தப்பட்டிருந்த மொழி ரொம்ப பழமையாகவும் புரிந்துகொள்ள ரொம்ப கஷ்டமாகவும் இருந்தது. பழங்காலத்து கையெழுத்துப் பிரதிகளில் கடவுளுடைய பெயர் ஆயிரக்கணக்கான இடங்களில் இருந்தன. ஆனால், கிங் ஜேம்ஸ் வர்ஷனில் ஒருசில இடங்களில்தான் இருந்தன. அதோடு, அதில் மொழிபெயர்ப்பு பிழைகளும் இருந்தன. பழங்காலத்து கையெழுத்துப் பிரதிகளில் இல்லாத வசனங்களும் அதில் சேர்க்கப்பட்டு இருந்தன. மற்ற ஆங்கில மொழிபெயர்ப்பு பைபிள்களிலும் இதுபோன்ற பிழைகள் இருந்தன.
17 சுலபமாகப் புரிந்துகொள்ள முடிந்த... திருத்தமான... ஒரு பைபிள் கடவுளுடைய மக்களுக்குத் தேவைப்பட்டது. அதனால், புதிய உலக பைபிளின் மொழிபெயர்ப்புக் குழு ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் குழுவில் இருந்த சகோதரர்கள், 1950-லிருந்து 1960-க்குள் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை 6 பகுதிகளாக வெளியிட்டார்கள். அதில் முதல் பகுதி, 1950, ஆகஸ்ட் 2-ல் நடந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது. அந்த மாநாட்டில் சகோதரர் நேதன் நார் இப்படிச் சொன்னார்: ‘சுலபமா புரிஞ்சிக்க முடிஞ்ச ஒரு திருத்தமான மொழிபெயர்ப்பு கடவுளோட மக்களுக்கு தேவை. அதோட அந்த மொழிபெயர்ப்பு, பைபிள் உண்மைகளை தெளிவா கத்துக்க கடவுளோட மக்களுக்கு உதவி செய்யணும். இந்த காலத்துக்கு ஏத்த மாதிரியான மொழியிலயும் இருக்கணும். இயேசுவோட சீடர்கள் முதல் முதல்ல எழுதுனதை சுலபமா வாசிக்கவும் புரிஞ்சிக்கவும் முடிஞ்சது. அதே மாதிரியான ஒரு மொழிபெயர்ப்பு கடவுளோட மக்களுக்கு தேவைப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் யெகோவாவை பத்தி தெரிஞ்சிக்க இந்த பைபிள் உதவியா இருக்கும்னு நம்புறேன்.’
18. பைபிள் மொழிபெயர்ப்பு சம்பந்தமாக என்ன தீர்மானங்களை எடுத்தார்கள்?
18 சகோதரர் நேதன் நாரின் நம்பிக்கை வீண் போகவில்லை. 1963-ல், புதிய உலக மொழிபெயர்ப்பின் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் இத்தாலியன், டச், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், ஜெர்மன், ஸ்பானிஷ் மொழிகளில் வெளிவந்தது. பைபிள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவி செய்வதற்காக ஆளும் குழு 1989-ல் தலைமை அலுவலகத்தில் ஒரு தனி டிபார்ட்மென்ட்-ஐ ஆரம்பித்தார்கள். பிறகு, காவற்கோபுரம் எந்த மொழிகளில் எல்லாம் வெளிவந்ததோ அந்த மொழிகளில் எல்லாம் பைபிளை மொழிபெயர்க்க 2005-ல் அனுமதி கொடுத்தார்கள். அதனால்தான், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் இன்று 130-க்கும் அதிகமான மொழிகளில் முழுமையாகவோ பகுதியாகவோ கிடைக்கிறது.
19. அக்டோபர் 2013-ல் என்ன முக்கியமான நிகழ்ச்சி நடந்தது, அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?
19 புதிய உலக மொழிபெயர்ப்பின் முதல் பதிப்பு வெளியான சமயத்திலிருந்து ஆங்கிலம் இன்று ரொம்பவே மாறியிருக்கிறது. அதனால், அந்த மொழிபெயர்ப்பில் உள்ள வார்த்தைகளை மாற்ற வேண்டியிருந்தது. 2013, அக்டோபர் 5-ல் உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் 129-வது வருடாந்தரக் கூட்டம் நடந்தது. அதில் மொத்தம் 14,13,676 பேர் 31 நாடுகளிலிருந்து கலந்துகொண்டார்கள். சிலர் அந்தக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டார்கள்; இன்னும் சிலர் அந்தக் கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்தார்கள். சுலபமாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஆளும் குழுவிலுள்ள ஒருவர் வெளியிட்டார். அதைக் கேட்டு அங்கிருந்த எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். நிறையப் பேர் புது பைபிளை கையில் வாங்கியவுடன் ஆனந்த கண்ணீர்விட்டார்கள். அந்த பைபிளிலிருந்து வசனங்கள் வாசிக்கப்பட்டபோது, அது வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் சுலபமாக இருக்கிறது என்பதை அங்கிருந்தவர்கள் தெரிந்துகொண்டார்கள். இந்த பைபிளில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது, அது எப்படி மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
a இந்த எல்லா வசனங்களும் முதன்முதலில் அரமேயிக் மொழியில் எழுதப்பட்டன.
b செப்டுவஜின்ட் என்றால் “எழுபது” என்று அர்த்தம். இயேசு பிறப்பதற்கு 300 வருஷங்களுக்கு முன்பு இந்த மொழிபெயர்ப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம். இதை எழுதி முடிக்க 150 வருஷங்கள் எடுத்திருக்கலாம். இன்றும் இந்த மொழிபெயர்ப்பு முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால், கஷ்டமான எபிரெய வார்த்தைகளையோ முழு வசனங்களையோ புரிந்துகொள்ள இது ஆராய்ச்சியாளர்களுக்கு உதவி செய்கிறது.
c மத்தேயு புத்தகத்தை எபிரெய மொழியில் மத்தேயு எழுதினார் என்றும் பிறகு அவரே அதை கிரேக்கில் மொழிபெயர்த்தார் என்றும் சிலர் நினைக்கிறார்கள்.
d புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலுள்ள (ஆங்கிலம்) பிற்சேர்க்கை A3-ஐயும் எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டில் பக். 7-9-ல் இருக்கிற “அந்தப் புத்தகம் எப்படி இன்றுவரை நீடித்திருக்கிறது?” என்ற தலைப்பையும் பாருங்கள்.