மதிப்புக் கொடுக்க வேண்டியவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்
“சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் புகழும் மாண்பும் [மதிப்பு] மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாவதாக.”—வெளி. 5:13.
1. நாம் ஏன் சிலருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும், இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
நாம் மற்றவர்களுக்கு எப்படி மதிப்புக் கொடுக்கிறோம்? அவர்களுக்கு விசேஷ கவனம் கொடுப்பதன் மூலமும், அவர்களுக்கு மரியாதை காட்டுவதன் மூலமும் நாம் மதிப்புக் கொடுக்கிறோம். நம்முடைய மதிப்பைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் யாராவது ஏதோவொன்றை செய்தாலோ அல்லது முக்கியமான பொறுப்பிலோ ஸ்தானத்திலோ இருந்தாலோ, நாம் அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கிறோம். நாம் யாருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும், ஏன் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
2, 3. (அ) நம்முடைய மதிப்பைப் பெறுவதற்கான விசேஷ தகுதி ஏன் யெகோவாவுக்கு இருக்கிறது? (ஆரம்பப் படம்) (ஆ) வெளிப்படுத்துதல் 5:13-ல் சொல்லப்பட்டிருக்கிற ஆட்டுக்குட்டியானவர் யார், அவர் ஏன் நம்முடைய மதிப்பைப் பெறுவதற்குத் தகுதியானவர்?
2 ‘சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவரும் ஆட்டுக்குட்டியானவரும்’ நம் மதிப்பைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று வெளிப்படுத்துதல் 5:13 சொல்கிறது. ‘சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவர்’ யார்? யெகோவாதான் அவர்! ‘என்றென்றும் வாழ்கிறவராகிய’ யெகோவாவுக்கு நாம் ஏன் மதிப்புக் கொடுக்க வேண்டும்? அதற்கான ஒரு காரணத்தை வெளிப்படுத்துதல் 4-ஆம் அதிகாரத்தில், பரலோகத்தில் இருக்கிற ஜீவன்கள் இப்படிச் சொல்கின்றன: “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள், உங்களுடைய விருப்பத்தின்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன.”—வெளி. 4:9-11.
3 வெளிப்படுத்துதல் 5:13-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘ஆட்டுக்குட்டியானவர்’ யார்? இயேசு கிறிஸ்துதான் அவர்! இது நமக்கு எப்படித் தெரியும்? அவர் பூமியில் இருந்தபோது, “உலகத்தின் பாவத்தைப் போக்குவதற்குக் கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!” என்று அழைக்கப்பட்டார். (யோவா. 1:29) இப்போது பூமியில் இருக்கிற ராஜாக்களைவிடவும், இதுவரை இருந்த ராஜாக்களைவிடவும் இயேசுதான் மிக உயர்ந்தவர் என்று பைபிள் சொல்கிறது. இயேசு “ராஜாக்களுக்கெல்லாம் ராஜா, எஜமான்களுக்கெல்லாம் எஜமான்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீ. 6:14-16) எந்த ராஜாவாவது குடிமக்களுக்காகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுத்திருக்கிறாரா? ஆட்டுக்குட்டியானவருக்கு மதிப்புக் கொடுப்பதற்கு இது உண்மையிலேயே ஒரு நல்ல காரணம், இல்லையா? பரலோகத்தில் இருக்கிற ஜீவன்கள் இயேசுவைப் பற்றி இப்படிப் பாடுகின்றன: “வெட்டிக் கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் அதிகாரத்தையும் செல்வத்தையும் ஞானத்தையும் பலத்தையும் மாண்பையும் மகிமையையும் புகழையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவர்.” நீங்களும் அவர்களைப் போலவே உணருகிறீர்களா?—வெளி. 5:12.
4. யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நாம் ஏன் மதிப்புக் கொடுக்க வேண்டும்?
4 ‘இஷ்டம் இருந்தால் யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் மதிப்புக் கொடுக்கலாம், இல்லையென்றால், விட்டுவிடலாம்’ என்று நாம் நினைக்க முடியாது. நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டுமென்றால், நாம் அவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். இதைப் புரிந்துகொள்ள யோவான் 5:22, 23 நமக்கு உதவுகிறது. அந்த வசனம் இப்படிச் சொல்கிறது: “தகப்பன் ஒருவரையும் நியாயந்தீர்ப்பதில்லை, நியாயந்தீர்க்கிற அதிகாரம் முழுவதையும் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார். எல்லாரும் தகப்பனுக்கு மதிப்புக் கொடுப்பது போலவே மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார். மகனுக்கு மதிப்புக் கொடுக்காதவன் அவரை அனுப்பிய தகப்பனுக்கும் மதிப்புக் கொடுப்பதில்லை.”—சங்கீதம் 2:11, 12-ஐ வாசியுங்கள்.
5. எல்லா மனிதர்களும் மதிப்பு மரியாதையைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியானவர்கள் என்று ஏன் சொல்லலாம்?
5 மனிதர்கள் கடவுளுடைய “சாயலில்” படைக்கப்பட்டிருக்கிறார்கள். (ஆதி. 1:27) அதனால், கடவுளுக்கு இருக்கிற அதே குணங்களை பெரும்பாலான மனிதர்களால் ஓரளவு வெளிக்காட்ட முடிகிறது. உதாரணத்துக்கு, அன்பு, கருணை, கரிசனை போன்ற குணங்களை மனிதர்களால் வெளிக்காட்ட முடிகிறது. அதோடு, எது சரி, எது தவறு, எது நேர்மையானது, எது நேர்மையில்லாதது, எது பொருத்தமானது, எது பொருத்தமில்லாதது என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவோடுதான், அதாவது மனசாட்சியோடுதான், மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். (ரோ. 2:14, 15) சுத்தமாக, அழகாக இருக்கிற விஷயங்களை பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள், எல்லாரோடும் சமாதானமாக இருக்கவும் ஆசைப்படுகிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை! ஏனென்றால், யெகோவா சமாதானத்தின் கடவுளாக இருக்கிறார். மக்கள் உணருகிறார்களோ இல்லையோ, அவர்கள் எல்லாரும் ஏதோவொரு விதத்தில் கடவுளைப் போலவே நடந்துகொள்கிறார்கள். அதனால், எல்லா மனிதர்களும் மதிப்பு மரியாதையைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியானவர்கள்.—சங். 8:5.
தகுந்த விதத்தில் மதிப்புக் கொடுப்பது எப்படி?
6, 7. மதிப்புக் கொடுக்கிற விஷயத்தில் மற்றவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
6 மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று நமக்குத் தெரியும். ஆனால், எப்படி மதிப்புக் கொடுக்க வேண்டும், எந்தளவு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், சாத்தானுடைய உலகத்தின் மனப்பான்மை இன்று பெரும்பாலான மக்களை ஆட்டிப்படைக்கிறது. நிறைய பேர், சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் தகுந்த மதிப்பு மரியாதை கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களைக் கடவுளாகவே ஆக்கிவிடுகிறார்கள். அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், மற்ற பிரபலங்கள் ஆகியவர்களை தலையில் தூக்கி வைத்துக்கொள்கிறார்கள். பெரியவர்களும் சரி, இளைஞர்களும் சரி, அவர்களைப் போலவே உடை உடுத்துகிறார்கள், அவர்களைப் போலவே பாவனை செய்கிறார்கள், அவர்களைப் போலவே நடந்துகொள்கிறார்கள்.
7 ஆனால், மற்றவர்களுக்கு அந்தளவு மதிப்புக் கொடுப்பது சரி இல்லை என்பது உண்மை கிறிஸ்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த உலகத்தில் வாழ்ந்தவர்களிலேயே இயேசு கிறிஸ்துதான் நாம் பின்பற்றுவதற்கு மிகச் சிறந்த முன்மாதிரி! (1 பே. 2:21) மனிதர்களுக்கு அளவுக்கு மீறி மதிப்புக் கொடுத்தால், யெகோவாவுக்குப் பிடிக்காது. “எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைக் காட்டத் தவறியிருக்கிறார்கள்” என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. (ரோ. 3:23) வணக்கத்தைப் பெறுவதற்கு எந்த மனிதருக்கும் தகுதி கிடையாது.
8, 9. (அ) அரசாங்க அதிகாரிகளை யெகோவாவின் சாட்சிகள் எப்படிக் கருதுகிறார்கள்? (ஆ) எந்தளவு அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்?
8 சிலர் முக்கியமான ஸ்தானங்களில் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, அரசாங்க அதிகாரிகள் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கிறார்கள், குடிமக்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார்கள். அவர்களுடைய சேவையால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட அதிகாரிகளை நாம் ‘உயர் அதிகாரத்தில்’ இருப்பவர்களாக நினைக்க வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (ரோ. 13:1, அடிக்குறிப்பு) அதோடு, அவர்கள் போடும் சட்டங்களையும் நாம் பின்பற்ற வேண்டும் என்று சொன்னார். “அவர்கள் எல்லாருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டியவற்றைக் கொடுங்கள்: யாருக்கு வரி கொடுக்க வேண்டுமோ அவருக்கு வரி கொடுங்கள்” என்றும், “யாருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமோ அவருக்கு மதிப்புக் கொடுங்கள்” என்றும் சொன்னார்.—ரோ. 13:7.
9 யெகோவாவின் சாட்சிகளாகிய நாம், அரசாங்க அதிகாரிகளுக்கு முழு மனதோடு மரியாதை காட்டுகிறோம். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் இருப்பதால், அந்தந்த நாட்டு கலாச்சாரத்தின்படி அங்கிருக்கிற அதிகாரிகளுக்கு நாம் மரியாதை காட்டுகிறோம். அவர்கள் தங்களுடைய கடமையைச் செய்ய, நாம் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். ஆனால், யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதபடி அவர்கள் நம்மை ஏதாவது செய்யச் சொன்னால், நாம் அதைச் செய்வதில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட யெகோவாவுக்கே நாம் கீழ்ப்படிகிறோம், அவருக்கு மட்டுமே மதிப்புக் கொடுக்கிறோம்.—1 பேதுரு 2:13-17-ஐ வாசியுங்கள்.
10. அன்றிருந்த யெகோவாவின் ஊழியர்கள் எப்படி நமக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்?
10 அரசாங்கங்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் அன்றிருந்த யெகோவாவின் ஊழியர்கள் மரியாதை காட்டியதிலிருந்து நாம் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, யோசேப்பையும், மரியாளையும் பற்றி கவனியுங்கள். மக்கள் எல்லாரும் பெயர்ப்பதிவு செய்ய வேண்டும் என்று ரோம அரசாங்கம் சொன்னபோது, மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இருந்தாலும், தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்வதற்கு யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்குப் போனார்கள். (லூக். 2:1-5) அரசாங்க அதிகாரிகளுக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில், அப்போஸ்தலன் பவுலும் நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். தவறு செய்ததாகச் சொல்லி அவர் குற்றம்சாட்டப்பட்டபோது, ஏரோது அகிரிப்பா ராஜா முன்பாகவும் ரோம மாகாணத்தைச் சேர்ந்த யூதேயாவின் ஆளுநர் பெஸ்துவுக்கு முன்பாகவும், அவர் மரியாதைக்குரிய விதத்தில் வாதாடினார்.—அப். 25:1-12; 26:1-3.
11, 12. (அ) மதத் தலைவர்களுக்கு நாம் ஏன் விசேஷ மதிப்புக் கொடுப்பதில்லை? (ஆ) ஒரு அரசியல்வாதிக்கு யெகோவாவின் சாட்சி ஒருவர் மதிப்புக் கொடுத்ததால் என்ன பலன் கிடைத்தது?
11 மதத் தலைவர்களுக்கு விசேஷ மதிப்புக் கொடுக்க வேண்டுமா? மற்ற ஆட்களுக்கு மதிப்புக் கொடுப்பது போலவே இவர்களுக்கும் மதிப்புக் கொடுக்கிறோம். ஆனால், விசேஷ மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் நம்மிடம் எதிர்பார்த்தால், நாம் அப்படிச் செய்வதில்லை. ஏனென்றால், கடவுளைப் பற்றிய உண்மைகளையும், கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய உண்மைகளையும் பொய்மதம் சொல்லிக்கொடுப்பதில்லை. பொய்மதத் தலைவர்களை, வெளிவேஷக்காரர்கள் என்றும், குருட்டு வழிகாட்டிகள் என்றும் இயேசு வெளிப்படையாகச் சொன்னார். (மத். 23:23, 24) ஆனால், அரசாங்க அதிகாரிகளுக்கு விசேஷ மரியாதையையும் மதிப்பையும் காட்டும்போது, எதிர்பாராத நல்ல பலன்கள் நமக்குக் கிடைக்கலாம்.
12 உதாரணத்துக்கு, லியோபோல்ட் எங்லெட்னர் என்ற வைராக்கியமுள்ள யெகோவாவின் சாட்சியின் அனுபவத்தைக் கவனியுங்கள். இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். இரண்டாம் உலகப் போர் சமயத்தில், இவர் நாசிக்களால் கைது செய்யப்பட்டு ஒரு ரயிலில் பூக்கன்வால்ட் சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டார். அதே ரயிலில், நாசிக்களால் கைது செய்யப்பட்டிருந்த ஆஸ்திரியாவின் முன்னாள் அரசியல்வாதியான ஹீன்ரிக் க்ளிஸ்னர் என்பவரும் இருந்தார். அப்போது எங்லெட்னர், தன்னுடைய மத நம்பிக்கைகளைப் பற்றி க்ளிஸ்னரிடம் மரியாதைக்குரிய விதத்தில் பேசினார், அவரும் அதைக் கவனமாகக் கேட்டார். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, க்ளிஸ்னர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆஸ்திரியாவிலிருந்த சாட்சிகளுக்குத் தொடர்ந்து உதவி செய்து வந்தார். அரசாங்க அதிகாரிகளுக்கு மதிப்புக் கொடுத்ததால் கிடைத்த பலன்களைப் பற்றி நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்.
வேறு யாருக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்?
13. நம்முடைய மதிப்பு மரியாதையைப் பெற்றுக்கொள்ளும் தகுதி விசேஷமாக யாருக்கு இருக்கிறது, ஏன்?
13 நம்முடைய சகோதர சகோதரிகளும் மதிப்பு மரியாதையைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள். விசேஷமாக, நம்மை வழிநடத்துகிற மூப்பர்கள், வட்டாரக் கண்காணிகள், கிளை அலுவலக அங்கத்தினர்கள், ஆளும் குழு அங்கத்தினர்கள் ஆகியவர்கள் மதிப்பு மரியாதையைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள். (1 தீமோத்தேயு 5:17-ஐ வாசியுங்கள்.) இவர்கள் எல்லாரும் கடவுளுடைய மக்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார்கள்; பைபிள் இவர்களை ‘பரிசுகள்’ என்று சொல்கிறது. (எபே. 4:8) இவர்களுடைய நாடு, படிப்பு, வசதி, சமுதாய அந்தஸ்து ஆகியவை எதுவாக இருந்தாலும் நாம் இவர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கிறோம். இந்த விஷயத்தில் ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் நமக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். தங்களை வழிநடத்திய சகோதரர்களுக்கு அவர்கள் மதிப்புக் கொடுத்தார்கள்; இன்று, நாமும் அதைத்தான் செய்கிறோம். அதற்காக, நம்மை வழிநடத்துகிற சகோதரர்கள் நம் மத்தியில் இருக்கும்போது, ஏதோ தேவதூதர்கள் நம் பக்கத்தில் இருப்பதுபோல நாம் நடந்துகொள்வது கிடையாது. அவர்களுடைய கடின உழைப்புக்காகவும், அவர்கள் காட்டுகிற மனத்தாழ்மைக்காகவும் நாம் அவர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கிறோம்.—2 கொரிந்தியர் 1:24-ஐயும், வெளிப்படுத்துதல் 19:10-ஐயும் வாசியுங்கள்.
14, 15. மதத் தலைவர்களுக்கும் கிறிஸ்தவ மூப்பர்களுக்கும் இருக்கிற வித்தியாசம் என்ன?
14 மூப்பர்கள் மனத்தாழ்மையான மேய்ப்பர்களைப் போல் இருக்கிறார்கள். பிரபலமானவர்களைப் போல் மற்றவர்கள் தங்களை நடத்த வேண்டும் என்று இவர்கள் ஆசைப்படுவதில்லை. அதனால், இன்று இருக்கும் மதத் தலைவர்களிலிருந்தும் இயேசுவின் காலத்தில் இருந்த மதத் தலைவர்களிலிருந்தும் இவர்கள் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறார்கள். அன்றிருந்த மதத் தலைவர்களைப் பற்றி இயேசு கிறிஸ்து இப்படிச் சொன்னார்: “விருந்துகளில் மிக முக்கியமான இடங்களிலும் ஜெபக்கூடங்களில் முன்வரிசை இருக்கைகளிலும் உட்கார விரும்புகிறார்கள். அதோடு, சந்தைகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும் . . . விரும்புகிறார்கள்.”—மத். 23:6, 7.
15 “நீங்கள் ரபீ என்று அழைக்கப்படாதீர்கள்; ஒரே ஒருவர்தான் உங்கள் போதகர்; நீங்கள் எல்லாரும் சகோதரர்கள். அதுமட்டுமல்ல, பூமியில் இருக்கிற யாரையும் தந்தை என்று அழைக்காதீர்கள், பரலோகத்தில் இருக்கிற ஒருவர்தான் உங்கள் தந்தை. தலைவர் என்றும் அழைக்கப்படாதீர்கள், கிறிஸ்து ஒருவர்தான் உங்கள் தலைவர். உங்களில் யார் மிகவும் உயர்ந்தவராக இருக்கிறாரோ அவர் உங்களுக்குச் சேவை செய்கிறவராக இருக்க வேண்டும். தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்று இயேசு சொன்னார். (மத். 23:8-12) இயேசுவின் இந்த வார்த்தைகளுக்கு மூப்பர்கள் கீழ்ப்படிகிறார்கள். சகோதர சகோதரிகளின் அன்பையும், மதிப்பு மரியாதையையும் உலகம் முழுவதும் இருக்கிற மூப்பர்களால் ஏன் சம்பாதித்துக்கொள்ள முடிகிறது என்பதை இப்போது உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
16. மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் நாம் ஏன் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும்?
16 யாருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும், எந்தளவு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள கொஞ்சக் காலம் எடுக்கும். ஆரம்பக் கால கிறிஸ்தவர்களின் விஷயத்திலும் இதுதான் உண்மையாக இருந்தது. (அப். 10:22-26; 3 யோ. 9, 10) பைபிள் சொல்கிற விதத்தில் நாம் மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுக்கும்போது நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கும்; நாம் எடுக்கிற முயற்சிகள் நிச்சயம் வீண் போகாது.
மதிப்புக் கொடுப்பதால் வரும் நன்மைகள்
17. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதால் வரும் நன்மைகள் என்ன?
17 நம்முடைய சமுதாயத்தில் சிலர் அதிகாரத்தில் இருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கும்போது, பிரசங்கிப்பதற்கான நம்முடைய உரிமையை அவர்கள் ஆதரிக்கலாம். அதோடு, நம்முடைய பிரசங்க வேலையின் மீது அவர்களுக்கு நல்ல மதிப்பும் ஏற்படலாம். பல வருஷங்களுக்கு முன்பு, ஜெர்மனியில் இருந்த பிர்ஜிட் என்ற பயனியர் சகோதரி தன்னுடைய மகள் படிக்கும் பள்ளியில் நடந்த பட்டம் அளிப்பு விழாவுக்குப் போனார். அப்போது, யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் தங்கள் பள்ளியில் பல வருஷங்களாகப் படிப்பது அதிக சந்தோஷத்தைத் தருவதாக ஆசிரியர்கள் பிர்ஜிட்டிடம் சொன்னார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் தங்கள் பள்ளியில் படிக்கவில்லை என்றால் அது பள்ளிக்கே அவமானம் என்றும் சொன்னார்கள். அதற்கு பிர்ஜிட் இப்படிச் சொன்னார்: “கடவுளோட தராதரங்களின்படி நடக்குறதுக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுக்குறதுக்கும் எங்க பிள்ளைங்களுக்கு நாங்க சொல்லித் தர்றோம்.” இன்னொரு ஆசிரியர் இப்படிச் சொன்னார்: ‘யெகோவாவின் சாட்சிகளோட பிள்ளைங்க மாதிரியே எல்லா பிள்ளைகளும் இருந்துட்டா பிள்ளைங்களுக்கு சொல்லித் தர்றது எங்களுக்கு ரொம்ப சுலபமாக இருக்கும்.’ யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள்மீது அந்த ஆசிரியர்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது. அதனால், பல வாரங்களுக்குப் பிறகு, அந்த ஆசிரியர்களில் ஒருவர் நம்முடைய மாநாட்டில் கலந்துகொண்டார்.
18, 19. மூப்பர்களுக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் நாம் எதை மறந்துவிடக் கூடாது?
18 சபை மூப்பர்களுக்கு நாம் எந்தளவு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள பைபிளில் இருக்கிற நியமங்கள் நமக்கு உதவும். (எபிரெயர் 13:7, 17-ஐ வாசியுங்கள்.) அவர்களுடைய கடின உழைப்புக்காக நாம் அவர்களைப் பாராட்டலாம், அப்படிப் பாராட்டவும் வேண்டும்! அவர்களுடைய வழிநடத்துதல்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்கும்போது, தங்களுடைய பொறுப்புகளை அவர்களால் சந்தோஷமாகச் செய்ய முடியும். அதோடு, மூப்பர்களுடைய விசுவாசத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. அதற்காக, ‘‘பிரபலமான’’ மூப்பர்கள் உடை உடுத்துகிற விதத்தையும், பேச்சுகள் கொடுக்கிற விதத்தையும், அவர்கள் மற்றவர்களிடம் பேசுகிற விதத்தையும் நாம் காப்பியடிக்கக் கூடாது. அப்படிச் செய்தால், நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குப் பதிலாக மனிதர்களைப் பின்பற்றுகிறவர்களாக ஆகிவிடுவோம். மூப்பர்களும் நம்மைப் போலவே அபூரணர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
19 மூப்பர்களுக்குத் தகுந்த மதிப்பு மரியாதை கொடுப்பதன் மூலமும், பிரபலங்கள் போல் நடத்தாமல் இருப்பதன் மூலமும் நாம் அவர்களுக்கு உதவுகிறோம். நாம் இப்படிச் செய்யும்போது, மனத்தாழ்மையாக இருப்பது அவர்களுக்குச் சுலபமாக இருக்கும். அதோடு, மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்றோ தாங்கள் செய்வது எப்போதுமே சரியாகத்தான் இருக்கும் என்றோ நினைக்காமல் இருப்பதும் அவர்களுக்குச் சுலபமாக இருக்கும்.
20. மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?
20 மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுக்கும்போது, நாம் சுயநலவாதிகளாக இருக்க மாட்டோம். அதோடு, மற்றவர்கள் நமக்கு விசேஷ கவனம் கொடுக்கும்போது, நாம் மனத்தாழ்மையாக இருப்போம். அதுமட்டுமல்லாமல், நாம் மதிக்கிற ஒருவர் நமக்கு ஏமாற்றத்தைத் தரும்போது, நாம் இடறல் அடைய மாட்டோம். மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுப்பது, யெகோவாவுடைய அமைப்போடு சேர்ந்து ஒற்றுமையாகச் செயல்படவும் நமக்கு உதவும். யெகோவாவை வணங்குகிறவர்களாக இருந்தாலும் சரி, வணங்காதவர்களாக இருந்தாலும் சரி, யெகோவாவுடைய அமைப்பு யாருக்குமே அளவுக்கு மீறி மதிப்புக் கொடுப்பதில்லை.
21. மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதால் கிடைக்கும் மிக முக்கியமான நன்மை என்ன?
21 மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுக்கும்போது, நாம் யெகோவாவைச் சந்தோஷப்படுத்துகிறோம். இதுதான் நமக்குக் கிடைக்கும் மிக முக்கியமான நன்மை! நாம் மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுக்கும்போது, யெகோவா எதிர்பார்ப்பதை நாம் செய்கிறோம்; தொடர்ந்து அவருக்கு உண்மையாக இருக்கிறோம். அப்படி உண்மையாக இருக்கும்போது, யாருமே உண்மையாக இருக்க மாட்டார்கள் என்று சொன்ன சாத்தானுக்கு யெகோவாவால் பதிலடி கொடுக்க முடியும். (நீதி. 27:11) மற்றவர்களுக்கு எப்படி மதிப்புக் கொடுக்க வேண்டும், எந்தளவு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பது இந்த உலகத்தில் இருக்கிற நிறைய பேருக்குப் புரிவதில்லை. ஆனால், யெகோவா விரும்புகிற விதத்தில் மற்றவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும். இதற்காக நாம் உண்மையிலேயே நன்றியோடு இருக்கிறோம்!