சமாதானம் அதை எப்படி அடையலாம்?
பிரச்சினைகள் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்வதால், சமாதானமாக இருக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. அப்படியே ஓரளவு சமாதானம் கிடைத்தால்கூட, அதைத் தக்கவைத்துக்கொள்ளப் போராட வேண்டியிருக்கிறது. உண்மையான சமாதானத்தை அடைய என்ன செய்யலாம்? மற்றவர்களுக்கும் அது கிடைக்க நாம் எப்படி உதவலாம்? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
உண்மையான சமாதானம் எப்படிக் கிடைக்கும்?
பாதுகாப்பு உணர்வும் மனஅமைதியும் இருந்தால்தான் உண்மையான சமாதானத்தை அனுபவிக்க முடியும். அதோடு, மற்றவர்களோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வதும் அவசியம். மிக முக்கியமாக, கடவுளோடு ஒரு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளும்போதுதான் நிலையான சமாதானம் கிடைக்கும். அதை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
யெகோவாவின் நீதியான கட்டளைகளுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படியும்போது, நாம் அவரை நம்புகிறோம் என்பதையும் அவரோடு சமாதானமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள விரும்புகிறோம் என்பதையும் காட்டுகிறோம். (எரே. 17:7, 8; யாக். 2:22, 23) அப்படிச் செய்யும்போது, அவர் நம்மிடம் நெருங்கி வருகிறார், மனசமாதானத்தைக் கொடுக்கிறார். “உண்மையான நீதியின் விளைவாக சமாதானம் உண்டாகும். உண்மையான நீதியின் பலனாக நிம்மதியும் பாதுகாப்பும் என்றென்றும் கிடைக்கும்” என்று ஏசாயா 32:17 சொல்கிறது. யெகோவாவுக்கு மனதார கீழ்ப்படியும்போது உண்மையான மனசமாதானம் கிடைக்கும்.—ஏசா. 48:18, 19.
நம்முடைய பரலோகத் தகப்பன் கொடுக்கும் தலைசிறந்த ஒரு அன்பளிப்பின் மூலம், நாம் நிலையான சமாதானத்தை அடையலாம். கடவுளுடைய சக்திதான் அந்த அன்பளிப்பு!—அப். 9:31.
கடவுளுடைய சக்தியின் உதவி
‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை’ அப்போஸ்தலன் பவுல் பட்டியலிட்டபோது, சமாதானத்தை மூன்றாவதாகக் குறிப்பிட்டார். (கலா. 5:22, 23) உண்மையான சமாதானம், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற ஒரு குணமாக இருப்பதால், அந்தச் சக்தி காட்டுகிற வழியில் நாம் நடக்க வேண்டும்; அப்போதுதான் உண்மையான சமாதானம் கிடைக்கும். சமாதானத்தைப் பெற, கடவுளுடைய சக்தி இரண்டு வழிகளில் உதவுகிறது.
முதல் வழி: கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளைத் தவறாமல் வாசிக்கும்போது சமாதானம் கிடைக்கும். (சங். 1:2, 3) பைபிளில் இருக்கும் விஷயங்களை ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது, பல்வேறு விஷயங்களில் யெகோவாவின் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள கடவுளுடைய சக்தி உதவும். உதாரணத்துக்கு, அவர் எப்படிச் சமாதானத்தை அனுபவிக்கிறார், சமாதானமாக இருப்பதை ஏன் ரொம்ப முக்கியமானதாக நினைக்கிறார் என்பதையெல்லாம் புரிந்துகொள்வோம். பைபிளிலிருந்து கற்றுக்கொள்கிற இதுபோன்ற விஷயங்களை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது, சமாதானம் பெருகும்.—நீதி. 3:1, 2.
இரண்டாவது வழி: கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்ய வேண்டும். (லூக். 11:13) நாம் அவரிடம் உதவி கேட்டால், “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் [நம்] இதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகப் பாதுகாக்கும்” என்று யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (பிலி. 4:6, 7) கடவுளுடைய சக்திக்காக நாம் தவறாமல் ஜெபம் செய்தால், நம்முடைய கடவுள் நம் மனதில் சமாதானம் பொங்கும்படி செய்வார். அவருடன் நெருங்கிய நட்பை வைத்திருப்பவர்களால் மட்டுமே அப்படிப்பட்ட சமாதானத்தைப் பெற முடியும்.—ரோ. 15:13.
பைபிள் தருகிற இந்த ஆலோசனையை சிலர் எப்படிக் கடைப்பிடித்தார்கள்? யெகோவாவோடும் தங்களோடும் மற்றவர்களோடும் நிலையான சமாதானத்தை அனுபவிக்க அவர்கள் என்ன செய்தார்கள்?
நிலையான சமாதானம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது?
நம் சபைகளில் இருக்கும் சிலர், ஒருகாலத்தில் ‘கோபக்காரர்களாக’ இருந்தார்கள். ஆனால் இப்போது, புரிந்து நடந்துகொள்கிறவர்களாகவும், கருணை காட்டுகிறவர்களாகவும், பொறுமைசாலிகளாகவும், சமாதானமாக நடந்துகொள்கிறவர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (நீதி. 29:22) இப்போது, இரண்டு பேருடைய அனுபவத்தைப் பார்க்கலாம். கோபத்தை விட்டொழிக்கவும், மற்றவர்களோடு சமாதானமாக இருக்கவும் அவர்களுக்கு எது உதவியது?
டேவிட் என்ற சகோதரருக்குத் தவறான மனப்பான்மை இருந்தது; அவர் பேசிய விதத்தை அது பாதித்தது. சத்தியத்துக்கு வருவதற்கு முன்பு, அவர் மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பார். அவருடைய குடும்பத்தாரிடமும் கெட்ட வார்த்தைகளைப் பேசுவார். ஆனால், தன் சுபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும், மற்றவர்களோடு சமாதானமாக இருக்க வேண்டும் என்பதையும் கொஞ்சக் காலத்தில் புரிந்துகொண்டார். சமாதானமாக இருக்க அவர் எப்படிக் கற்றுக்கொண்டார்? “பைபிள் நியமங்களின்படி நடக்க ஆரம்பிச்சேன். அதனால, குடும்பத்துல இருக்குறவங்க என்னை மதிக்க ஆரம்பிச்சாங்க; நானும் அவங்கள மதிக்க ஆரம்பிச்சேன்” என்று அவர் சொல்கிறார்.
ரேச்சல் என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் வளர்ந்த சூழல் அவருடைய மனப்பான்மையைப் பாதித்தது. “என் குடும்பத்துல, எல்லாரும் பயங்கர கோபக்காரங்க. அப்படியொரு சூழல்ல வளர்ந்ததால, கோபத்த கட்டுப்படுத்துறது இப்பகூட சிலசமயங்கள்ல கஷ்டமா இருக்கும்” என்று அவர் சொல்கிறார். எல்லாரோடும் சமாதானமாக இருக்க எது அவருக்கு உதவியது? “உதவிக்காக யெகோவாகிட்ட தொடர்ந்து ஜெபம் செஞ்சேன்” என்று அவர் சொல்கிறார்.
பைபிள் நியமங்களின்படி நடந்துகொள்ளும்போதும், அவருடைய சக்தியைச் சார்ந்திருக்கும்போதும் நமக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன என்பதற்கு, இவை வெறும் இரண்டு உதாரணங்கள்தான்! கோபத்தைக் கிளறுகிற உலகத்தில் வாழ்ந்தாலும், நம்மால் மனசமாதானத்தை அனுபவிக்க முடியும். அந்த மனசமாதானம் குடும்பத்திலும் சபையிலும் ஒற்றுமையை வளர்க்கிறது. “எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்” என்று யெகோவா அறிவுரை கொடுத்திருக்கிறார். (ரோ. 12:18) அப்படியென்றால், உண்மையிலேயே எல்லாரோடும் சமாதானமாக இருக்க முடியுமா? சமாதானமாக இருக்க நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு என்ன பலன்கள் கிடைக்கும்?
மற்றவர்களோடு சமாதானமாக இருக்கப் பாடுபடுங்கள்
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சமாதான செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம், அதிலிருந்து நன்மையடையும்படி நாம் மக்களை அழைக்கிறோம். (ஏசா. 9:6, 7; மத். 24:14) சந்தோஷமான ஒரு விஷயம் என்னவென்றால், அந்தச் செய்தியை நிறைய பேர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால், தங்களைச் சுற்றி நடப்பவற்றைப் பார்த்து அவர்கள் கோபத்தில் கொதிப்பதில்லை; ஒரேயடியாக சோர்ந்துபோவதுமில்லை. அதற்குப் பதிலாக, பிரகாசமான ஒரு எதிர்காலம் வருமென்று நம்புகிறார்கள், ‘சமாதானத்தைத் தேடுகிறார்கள், அதற்காகவே பாடுபடுகிறார்கள்.’—சங். 34:14.
இருந்தாலும், நம்முடைய செய்தியை எல்லாரும் ஏற்றுக்கொள்வதில்லை. சிலர், ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாமல் பிற்பாடு ஏற்றுக்கொள்ளலாம். (யோவா. 3:19) எப்படியிருந்தாலும் சரி, மரியாதையோடும் சாந்தத்தோடும் எல்லாரிடமும் பிரசங்கிக்க கடவுளுடைய சக்தி நமக்கு உதவுகிறது. இப்படி ஊழியம் செய்யும்போது, மத்தேயு 10:11-13-ல் இயேசு கொடுத்த ஆலோசனைக்குக் கீழ்ப்படிகிறோம். அந்த ஆலோசனை இதுதான்: “ஒரு வீட்டுக்குள் போகும்போது, அங்கிருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். அந்த வீட்டில் இருப்பவர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால், நீங்கள் வாழ்த்துச் சொன்னபடி அவர்களுக்குச் சமாதானம் கிடைக்கட்டும்; தகுதியில்லாதவர்களாக இருந்தால், அந்தச் சமாதானம் உங்களிடமே திரும்பட்டும்.” இதற்குக் கீழ்ப்படிந்தால், ஊழியம் செய்யும்போது சமாதானத்தை இழந்துவிட மாட்டோம். காதுகொடுத்துக் கேட்காதவர்கள்கூட இன்னொரு சமயம் கேட்பார்கள் என்று நம்பிக்கையோடு இருப்போம்.
நம் வேலையை எதிர்க்கும் அரசாங்க அதிகாரிகள் உட்பட, எல்லா அதிகாரிகளிடமும் மரியாதையோடு நடந்துகொள்கிறோம். இதனால், சமாதானமான சூழல் ஏற்படுகிறது. ஓர் உதாரணத்தை இப்போது பார்க்கலாம். ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு நாட்டின் அரசாங்கம், நம்மேல் இருந்த தப்பெண்ணத்தால் ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு தடைவிதித்தது. இதைச் சரிசெய்ய, முன்பு அந்த நாட்டில் மிஷனரியாக சேவை செய்திருந்த ஒரு சகோதரரை, லண்டனிலிருந்த அந்த ஆப்பிரிக்கா நாட்டின் உயர் ஆணையரைப் போய்ச் சந்திக்கும்படி அமைப்பு சொன்னது. தன்னுடைய நாட்டில் யெகோவாவின் சாட்சிகள் எப்படியெல்லாம் சமாதானமாக வேலை செய்கிறார்கள் என்பதை ஆணையருக்கு எடுத்துச் சொல்லும்படி அவரிடம் சொல்லப்பட்டது. இதனால் என்ன பலன் கிடைத்தது?
“வரவேற்பறைக்குள்ள நுழைஞ்சவுடனே, அங்கிருந்த பெண்ணோட உடைய பார்த்து அவங்க எந்த இனத்த சேர்ந்தவங்கனு புரிஞ்சிக்கிட்டேன். அவங்களோட மொழி எனக்கு தெரிஞ்சிருந்ததால, அந்த மொழியிலயே வணக்கம் சொன்னேன். அவங்களுக்கு ஒரே ஆச்சரியம்! ‘நீங்க எதுக்காக வந்திருக்கீங்க’னு கேட்டாங்க. நான் ரொம்ப மரியாதையா, ‘உயர் ஆணையர பார்க்க வந்திருக்கேன்’னு சொன்னேன். உடனே அதிகாரிகிட்ட அவங்க அனுமதி கேட்டாங்க. அவரும் என்னை வந்து பார்த்தாரு. அவரோட மொழியிலேயே எனக்கு வணக்கம் சொன்னார். யெகோவாவின் சாட்சிகள் செய்ற நல்ல வேலைகள பத்தி அவருகிட்ட விளக்கமா சொன்னேன். அவரும் கவனமா கேட்டாரு” என்று அந்தச் சகோதரர் சொன்னார்.
அந்தச் சகோதரர் மரியாதையோடு விஷயங்களை எடுத்துச் சொன்னதால், அந்த ஆணையரின் மனதிலிருந்த தப்பெண்ணம் நீங்கியது. கொஞ்ச நாட்கள் கழித்து, கட்டுமான வேலைகளுக்குப் போட்ட தடையை அந்த ஆப்பிரிக்க நாட்டின் அரசாங்கம் நீக்கியது. சகோதரர்கள் சந்தோஷத்தில் பூரித்துப் போனார்கள்! மற்றவர்களிடம் மரியாதையோடு நடந்துகொள்வதால் நிறைய பலன்கள் கிடைக்கின்றன; அதில் சமாதானமான சூழலும் ஒன்று!
முடிவில்லாத சமாதானத்தை அனுபவியுங்கள்!
இன்று யெகோவாவின் மக்கள் சமாதானம் நிறைந்த ஆன்மீகப் பூஞ்சோலையில் இருக்கிறார்கள். கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில் ஒன்றான சமாதானத்தை வளர்க்க நீங்கள் முயற்சி செய்யும்போது, அந்த ஆன்மீகப் பூஞ்சோலையில் நிலவும் சமாதானம் இன்னும் பெருகும். மிக முக்கியமாக, யெகோவாவின் அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும்; வரப்போகும் புதிய உலகத்தில் முடிவில்லாத சமாதானத்தையும் அனுபவிப்பீர்கள்.—2பே 3:13, 14.
a ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை’ விளக்கும் இந்தத் தொடர்கட்டுரையில், பிற்பாடு கருணையைப் பற்றியும் சிந்திப்போம்.