‘உங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்து’ யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்
“உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் . . . உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்.”—மத். 5:16.
1. நம்முடைய சந்தோஷத்துக்கு விசேஷமான ஒரு காரணம் என்ன?
கடவுளுடைய மக்கள் தங்களுடைய ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதைக் கேள்விப்படும்போது, ரொம்ப உற்சாகமாக இருக்கிறது! போன வருஷம், ஒரு கோடிக்கும் அதிகமான பைபிள் படிப்புகளை யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் நடத்தியிருக்கிறோம். ஆர்வம் காட்டிய லட்சக்கணக்கான பேர், நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்; யெகோவா கொடுத்த அருமையான பரிசாகிய மீட்புப் பலியைப் பற்றிக் கற்றுக்கொண்டார்கள்.—1 யோ. 4:9.
2, 3. (அ) ‘விளக்குகளாக ஒளிவீசுவதற்கு’ எது நமக்குத் தடையாக இருப்பதில்லை? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
2 உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். ஆனால், ஒன்றுசேர்ந்து ஒரே குடும்பமாக யெகோவாவைப் புகழ, இந்த மொழி வேறுபாடு நமக்கு ஒரு தடையாக இருப்பதில்லை. (வெளி. 7:9) நாம் எந்த மொழி பேசினாலும் சரி, எங்கே வாழ்ந்தாலும் சரி, நம்மால் “இந்த உலகத்தில் விளக்குகளாக” ஒளிவீச முடியும்.—பிலி. 2:15.
3 நாம் செய்யும் ஊழியம்... நம் கிறிஸ்தவ ஒற்றுமை... நம்முடைய அவசர உணர்வு... என இவையெல்லாமே யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது. இந்த மூன்று அம்சங்களிலும் எப்படி நம்முடைய ஒளியைப் பிரகாசிக்கச் செய்யலாம்?—மத்தேயு 5:14-16-ஐ வாசியுங்கள்.
யெகோவாவை வணங்க மற்றவர்களுக்கு உதவுங்கள்
4, 5. (அ) ஊழியம் செய்வதோடு மட்டுமல்லாமல், வேறு எப்படியும் நம்முடைய ஒளியை நாம் பிரகாசிக்கச் செய்யலாம்? (ஆ) நாம் அன்போடு நடந்துகொள்ளும்போது என்ன பலன்கள் கிடைக்கும்? (ஆரம்பப் படம்)
4 பிரசங்கிப்பதும் சீஷராக்குவதும், நம்முடைய ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதற்கான ஒரு முக்கிய வழி! (மத். 28:19, 20) ஜூன் 1, 1925, காவற்கோபுரத்தில் வெளிவந்த “இருளில் ஒளி” என்ற கட்டுரை, “ஒரு நபர் தன்னுடைய ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால்,” இந்தக் கடைசி நாட்களில், அவரால் எஜமானுக்கு உண்மையாக இருக்க முடியாது என்று சொன்னது. பிறகு, “இந்தப் பூமியில் இருக்கிற மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்வதன் மூலம், ஒரு நபர் தன்னுடைய ஒளியைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். அதோடு, அவரும் ஒளியின் பாதையில் நடக்க வேண்டும்” என்று சொன்னது. நம்முடைய ஊழியம் மட்டுமல்ல, நம் நடத்தையும் யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது. நாம் ஊழியம் செய்யும்போது, நிறைய பேர் நம்மைக் கவனிக்கிறார்கள். நாம் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்வதால்... அன்போடு வணக்கம் சொல்வதால்... நம்மைப் பற்றியும் நாம் வணங்கும் கடவுளைப் பற்றியும் அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படுகிறது.
5 “ஒரு வீட்டுக்குள் போகும்போது, அங்கிருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்” என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். (மத். 10:12) இயேசு பிரசங்கித்த பகுதியில், புதியவர்களைத் தங்களுடைய வீட்டுக்குள் வரவேற்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று, நிறைய பகுதிகளில் அந்த வழக்கம் காணாமல் போய்விட்டது. முன்பின் தெரியாத யாரோ ஒருவர் தங்களுடைய வீட்டுக்கு முன்னால் வந்து நிற்பதைப் பார்க்கும்போது, மக்களுக்கு பதற்றம் ஏற்படுகிறது; அல்லது அவர்களுக்கு எரிச்சல் வருகிறது. ஆனால், நாம் நட்பாகவும் அன்பாகவும் நடந்துகொள்ளும்போது அவர்களுடைய பதற்றம் போய்விடும். வீல் ஸ்டேண்ட் ஊழியம் செய்யும் சமயங்களில், நீங்கள் புன்னகையோடு மக்களுக்கு வணக்கம் சொல்லும்போது, அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் வீல் ஸ்டேண்டுக்குப் பக்கத்தில் வந்து, அதிலிருக்கும் பிரசுரங்களை எடுப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவர்களில் சிலர் உங்களோடு பேசக்கூட விரும்பலாம்!
6. சுறுசுறுப்பாக ஊழியம் செய்வதற்கு ஒரு வயதான தம்பதி என்ன முயற்சி எடுக்கிறார்கள்?
6 இங்கிலாந்தில் இருக்கும் ஒரு வயதான தம்பதியால், உடல்நலப் பிரச்சினை காரணமாக முன்புபோல வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய முடிவதில்லை. அதனால், தங்களுடைய வீட்டுக்கு முன்னால் ஒரு மேஜையைப் போட்டு, அதில் பிரசுரங்களை வைக்கிறார்கள். அவர்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பள்ளி இருப்பதால், பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போவதற்காக வரும் பெற்றோர்களுக்கு உதவுகிற பிரசுரங்களை அதில் வைக்கிறார்கள். சில பெற்றோர்கள், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், தொகுதி 1, தொகுதி 2 (ஆங்கிலம்) ஆகிய புத்தகங்களையும் மற்ற பிரசுரங்களையும் எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு பயனியர் சகோதரி, அடிக்கடி அந்தத் தம்பதியோடு சேர்ந்து ஊழியம் செய்கிறார். அந்தச் சகோதரி நட்போடு பழகுவதையும், அந்தத் தம்பதி மற்றவர்களுக்கு உதவ உண்மையிலேயே ஆசைப்படுவதையும் பெற்றோர்கள் கவனிக்கிறார்கள். அந்தப் பெற்றோர்களில் ஒருவர் பைபிள் படிப்புகூட படிக்கிறார்!
7. உங்கள் பகுதியில் இருக்கிற அகதிகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
7 சமீபத்தில், தங்களுடைய தாய்நாட்டை விட்டுவிட்டு நிறைய பேர் வேறு நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். உங்கள் பகுதிகளில் இருக்கிற அகதிகளுக்கு யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுக்க நீங்கள் என்ன செய்யலாம்? முதலில், அவர்களுடைய மொழியில் வணக்கம் சொல்ல கற்றுக்கொள்ளலாம். அதோடு, JW லாங்குவேஜ் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி அவர்களுடைய சொந்த மொழியில் சில வாக்கியங்களைக் கற்றுக்கொள்ளலாம். அப்போது, உங்களோடு பேச அவர்கள் ஆசைப்படலாம். பிறகு, jw.org வெப்சைட்டில் அவர்களுடைய மொழியில் இருக்கிற வீடியோக்களையும் பிரசுரங்களையும் அவர்களுக்குக் காட்டலாம்.—உபா. 10:19.
8, 9. (அ) வாரத்தின் மத்தியில் நடக்கும் கூட்டம் நமக்கு எப்படி உதவுகிறது? (ஆ) பதில் சொல்வதில் இன்னும் முன்னேற பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
8 ஊழியத்தைத் திறமையாகச் செய்ய நமக்கு என்னவெல்லாம் தேவையோ, அவற்றையெல்லாம் யெகோவா கொடுக்கிறார். உதாரணத்துக்கு, வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தில் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், தைரியமாக மறு சந்திப்புகளைச் செய்யவும் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கவும் நமக்கு ரொம்ப உதவியாக இருக்கின்றன.
9 கூட்டங்களில் நம்முடைய பிள்ளைகள் சொல்லும் பதில்கள், புதிதாக வருபவர்களைக் கவருகின்றன. சொந்த வார்த்தைகளில் பதில் சொல்வதன் மூலம் தங்களுடைய ஒளியைப் பிரகாசிக்கச் செய்ய, உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்கலாம். எளிமையாகவும் தங்களுடைய இதயத்திலிருந்தும் பிள்ளைகள் பதில் சொல்வதைப் பார்த்து, சிலர் சத்தியத்துக்கு வந்திருக்கிறார்கள்.—1 கொ. 14:25.
ஒற்றுமையைப் பலப்படுத்துங்கள்
10. குடும்பங்கள் இன்னும் ஒற்றுமையாக இருக்க குடும்ப வழிபாடு எப்படி உதவும்?
10 உங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதற்கு இன்னொரு வழி, குடும்பத்திலும் சபையிலும் ஒற்றுமையை வளர்க்கப் பாடுபடுவதுதான்! பெற்றோர்கள் இதை எப்படிச் செய்யலாம்? தவறாமல் குடும்ப வழிபாடு நடத்துவதன் மூலம், தங்கள் குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்க அவர்கள் பாடுபடலாம். நிறைய பேர், தங்களுடைய குடும்ப வழிபாட்டில் JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள்; பிறகு, அதில் கற்றுக்கொண்டதன்படி எப்படி நடக்கலாம் என்று கலந்துபேசுகிறார்கள். சின்னப் பிள்ளைகளுக்குத் தேவையான வழிநடத்துதல்களும் டீனேஜ் பிள்ளைகளுக்குத் தேவையான வழிநடத்துதல்களும் வித்தியாசப்படுகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உங்கள் குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே குடும்ப வழிபாட்டிலிருந்து பிரயோஜனமடைய, உங்களால் முடிந்த எல்லாவற்றையும் நீங்கள் செய்கிறீர்களா?—சங். 148:12, 13.
11-13. சபையின் ஒற்றுமைக்கு வலுசேர்க்க நாம் என்ன செய்யலாம்?
11 இளம் பிள்ளைகளே! சபையில் ஒற்றுமையை வளர்க்கவும், மற்றவர்கள் தங்களுடைய ஒளியைப் பிரகாசிக்கவும் நீங்கள் எப்படி அவர்களுக்கு உதவலாம்? அதற்கு ஒரு வழி, வயதான சகோதர சகோதரிகளோடு நட்பு வைத்துக்கொள்வதுதான்! இத்தனை வருஷங்களாகத் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய எது அவர்களுக்கு உதவியது என்று அவர்களிடம் கேட்கலாம். அப்போது, அருமையான பாடங்களை அவர்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் அது உற்சாகத்தைத் தரும். நாம் வயதானவர்களாக இருந்தாலும் சரி, இளம் பிள்ளைகளாக இருந்தாலும் சரி, சபைக்குப் புதிதாக வந்திருப்பவர்களை அன்போடு வரவேற்கலாம். இதை எப்படிச் செய்யலாம்? அவர்களுக்கு வணக்கம் சொல்லுங்கள், அன்போடு புன்னகை செய்யுங்கள், உட்கார ஒரு இருக்கையைக் காட்டுங்கள், அவர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அதோடு, அவர்களைச் சௌகரியமாக உணரவையுங்கள்.
12 வெளி ஊழியக் கூட்டத்தை நடத்தும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படும்போது, தங்களுடைய ஒளியைத் தொடர்ந்து பிரகாசிக்க வயதானவர்களுக்கு உதவுங்கள். அவர்களுக்குத் தகுந்த பிராந்தியம் இருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். இளம் பிள்ளைகள் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள். உடல்நலப் பிரச்சினை இருப்பவர்கள், முன்பு போல் ஊழியம் செய்ய முடியாததால் அடிக்கடி சோர்ந்துபோகலாம். ஆனால், அவர்கள்மீது உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதையும், அவர்களுடைய சூழ்நிலையை நீங்கள் புரிந்துவைத்திருக்கிறீர்கள் என்பதையும் தெரிந்துகொள்ளும்போது, அவர்கள் நிம்மதியாக உணர்வார்கள். அவர்களுக்கு எவ்வளவு வயதாகியிருந்தாலும் சரி, அவர்கள் எத்தனை வருஷங்கள் சத்தியத்தில் இருந்தாலும் சரி, நீங்கள் காட்டும் அன்பு, தொடர்ந்து ஆர்வத்தோடு பிரசங்கிக்க அவர்களுக்கு உதவியாக இருக்கும்.—லேவி. 19:32.
13 இஸ்ரவேலர்கள், ஒன்றுசேர்ந்து யெகோவாவை சந்தோஷமாக வணங்கினார்கள். “சகோதரர்கள் ஒன்றாகக் கூடி வாழ்வது எவ்வளவு அருமையாக இருக்கிறது! எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!” என்று சங்கீதக்காரர் எழுதினார். (சங்கீதம் 133:1, 2-ஐ வாசியுங்கள்.) புத்துணர்ச்சி அளிக்கிற, நறுமணம் வீசுகிற அபிஷேகத் தைலத்துக்கு இந்த ஒற்றுமையை அவர் ஒப்பிட்டார். அன்பாகவும் நட்பாகவும் நடந்துகொள்வதன் மூலம், நாமும் அந்தத் தைலத்தைப் போல, சகோதர சகோதரிகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கலாம். இப்படிச் செய்யும்போது, சபையின் ஒற்றுமைக்கு நம்மால் வலுசேர்க்க முடியும். உங்கள் சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளைப் பற்றி நீங்கள் இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியுமா?—2 கொ. 6:11-13.
14. நீங்கள் வாழும் பகுதியில் உங்கள் ஒளியை எப்படிப் பிரகாசிக்கச் செய்யலாம்?
14 நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், உங்களால் ஒளியைப் பிரகாசிக்கச் செய்ய முடியும். நீங்கள் அன்பாக நடந்துகொள்ளும்போது, உங்கள் அக்கம்பக்கத்தார் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அக்கம்பக்கத்துல இருக்குறவங்க என்னை பத்தி என்ன நினக்கிறாங்க? அவங்களுக்கு நான் ஒத்தாசையா இருக்கேனா? என் வீடு ரொம்ப சுத்தமாவும் நேர்த்தியாவும் இருக்கா, இல்ல முகம் சுளிக்கிற மாதிரி இருக்கா?’ மற்ற சகோதர சகோதரிகளிடம் பேசும்போது, அவர்களுடைய அன்பான நடத்தையும், நல்ல முன்மாதிரியும் எப்படி அக்கம்பக்கத்தாரிடமும், சொந்தக்காரர்களிடமும், கூடவேலை செய்கிறவர்கள் அல்லது கூடப்படிப்பவர்களிடமும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கேளுங்கள்.—எபே. 5:9.
விழிப்புடன் இருங்கள்
15. நாம் ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்?
15 நம்முடைய ஒளி நன்றாகப் பிரகாசிக்க வேண்டுமென்றால், நாம் எப்பேர்ப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் வாழ்கிறோம் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “விழிப்புடன் இருங்கள்” என்று நிறைய தடவை சொன்னார். (மத். 24:42; 25:13; 26:41) ஒருவேளை, “மிகுந்த உபத்திரவம்” வருவதற்கு இன்னும் ரொம்பக் காலம் ஆகும் என்ற எண்ணம் நமக்கு இருந்தால் என்ன ஆகும்? யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதற்குக் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளும் விஷயத்தில் நாம் மந்தமாகிவிடுவோம். (மத். 24:21) நம்முடைய ஒளி நன்றாகப் பிரகாசிப்பதற்குப் பதிலாக, கொஞ்சம் கொஞ்சமாக மங்கிவிடும், ஏன், முழுவதுமாக அணைந்துவிடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
16, 17. தொடர்ந்து அவசரத்தன்மையோடு இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?
16 விழிப்புடன் இருப்பது, முன்பு எப்போதையும்விட இப்போது ரொம்பவே முக்கியம். உலக நிலைமைகள் மோசமாகிக்கொண்டே போகின்றன. ஆனால், யெகோவா குறித்திருக்கிற அந்த நேரத்தில் முடிவு வரும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். (மத். 24:42-44) அதேசமயத்தில், நாம் பொறுமையாக இருப்பதும் எதிர்காலத்தின் மீது கவனம் செலுத்துவதும் முக்கியம். பைபிளைத் தினமும் படியுங்கள், ஜெபம் செய்வதை நிறுத்திவிடாதீர்கள். (1 பே. 4:7) நிறைய வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்த சகோதர சகோதரிகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, ஏப்ரல் 15, 2012 காவற்கோபுரம், பக்கங்கள் 18-21-ல், “எழுபது வருடங்களாக ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்திருக்கிறேன்” என்ற தலைப்பில் ஒரு வாழ்க்கை சரிதை இருக்கிறது. இதுபோன்ற வாழ்க்கை சரிதைகளை வாசித்துப் பாருங்கள்.
17 யெகோவாவின் சேவையை மிகவும் சுறுசுறுப்பாகச் செய்யுங்கள். மற்றவர்களுக்கு அன்போடும் பாசத்தோடும் உதவி செய்யுங்கள். அதோடு, நம்முடைய சகோதர சகோதரிகளோடு தாராளமாக நேரம் செலவு செய்யுங்கள். இதையெல்லாம் செய்தால், உங்களுக்குச் சந்தோஷம் கிடைக்கும்; காலங்கள் கடந்துபோவதே உங்களுக்குத் தெரியாது. (எபே. 5:16) கடந்த 100 வருஷங்களில், யெகோவாவின் மக்களாகிய நாம் நிறைய சாதித்திருக்கிறோம்! இன்று, எப்போதையும்விட ரொம்பவே சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறோம். நாம் கற்பனைகூட செய்து பார்க்காத அளவுக்கு யெகோவாவின் வேலைகள் பெரிய அளவில் முன்னேறியிருக்கின்றன. நம்முடைய ஒளி நன்றாகப் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது!
18, 19. யெகோவாவுக்கு ஆர்வமாகச் சேவை செய்ய மூப்பர்கள் எப்படி நமக்கு உதவுவார்கள்? ஓர் உதாரணம் கொடுங்கள்.
18 நாம் நிறைய தவறுகள் செய்தாலும், தொடர்ந்து தன்னுடைய சேவையைச் செய்ய யெகோவா நம்மை அனுமதிக்கிறார். நமக்கு உதவுவதற்காக, “மனிதர்களைப் பரிசுகளாக” கொடுத்திருக்கிறார். அதாவது, மூப்பர்களைக் கொடுத்திருக்கிறார். (எபேசியர் 4:8, 11, 12-ஐ வாசியுங்கள்.) அதனால், மூப்பர்கள் உங்களைச் சந்திக்க வரும் சந்தர்ப்பங்களை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அவர்களுடைய ஞானத்திலிருந்தும், அவர்கள் தரும் அறிவுரையிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
19 உதாரணத்துக்கு, இங்கிலாந்தில் இருக்கிற ஒரு தம்பதிக்கு, தங்களுடைய கல்யாண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வந்ததால் இரண்டு மூப்பர்களிடம் உதவி கேட்டார்கள். தன்னுடைய கணவர் ஆன்மீக ரீதியில் முன்நின்று வழிநடத்துவதில்லை என்பதாக அந்த மனைவி உணர்ந்தார். தனக்கு நன்றாகக் கற்றுக்கொடுக்கும் திறன் கிடையாது என்றும், தவறாமல் குடும்ப வழிபாடு நடத்தாததற்கு தான்தான் காரணம் என்றும் அந்தக் கணவர் ஒத்துக்கொண்டார். இயேசுவின் உதாரணத்தை யோசித்துப்பார்க்கும்படி மூப்பர்கள் அந்தத் தம்பதியைக் கேட்டுக்கொண்டார்கள். இயேசு எப்படித் தன்னுடைய சீஷர்களைக் கவனித்துக்கொண்டாரோ, அதே போல் செய்யும்படி அந்தக் கணவரை உற்சாகப்படுத்தினார்கள். தன்னுடைய கணவரிடம் பொறுமையோடு நடந்துகொள்ளும்படி அந்த மனைவியை உற்சாகப்படுத்தினார்கள். தங்களுடைய இரண்டு பிள்ளைகளோடு சேர்ந்து எப்படி குடும்ப வழிபாடு நடத்தலாம் என்பதற்கான சில ஆலோசனைகளையும் மூப்பர்கள் அந்தத் தம்பதியிடம் சொன்னார்கள். (எபே. 5:21-29) நல்ல குடும்பத் தலைவராக இருப்பதற்கு அந்தக் கணவர் கடுமையான முயற்சி எடுத்தார். சோர்ந்துபோகாமல் இருக்கும்படியும், யெகோவாவின் சக்தியை நம்பியிருக்கும்படியும் மூப்பர்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். அன்பாகவும் தயவாகவும் மூப்பர்கள் நடந்துகொண்டதால், அந்தக் குடும்பத்தார் ரொம்பவே பிரயோஜனமடைந்தார்கள்.
20. உங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்யும்போது, என்ன பலன் கிடைக்கும்?
20 “யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற எல்லாரும் சந்தோஷமானவர்கள். அவருடைய வழிகளில் நடக்கிற எல்லாரும் சந்தோஷமானவர்கள்.” (சங். 128:1) உங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்யும்போது, நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். அதனால், கடவுளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள். உங்கள் குடும்பமும் சபையும் ஒற்றுமையாக இருக்க, உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். தொடர்ந்து விழிப்புடன் இருங்கள். அப்போது, உங்களுடைய முன்மாதிரியை மற்றவர்கள் பார்ப்பார்கள்; நம் அப்பாவாகிய யெகோவாவை மகிமைப்படுத்த ஆசைப்படுவார்கள்.—மத். 5:16.