கடவுள் என்ன செய்யப்போகிறார்?
கஷ்டத்தில் உதவுகிறவன்தான் உண்மையான நண்பன் என்று எல்லாரும் நினைக்கிறார்கள். அதனால் கடவுளைப் பற்றிச் சொல்லும்போது, ‘அவரு எனக்கு உதவி செய்றதே இல்ல, அதனால அவர என் நண்பரா நினைக்க முடியல’ என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா? கடவுள் நமக்காக எத்தனையோ விஷயங்களை ஏற்கெனவே செய்திருக்கிறார், இனிமேலும் செய்யப்போகிறார். நம்முடைய பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் அவர் அடியோடு நீக்கப்போகிறார். எப்படி?
அக்கிரமத்தை ஒழிக்கப்போகிறார்
அக்கிரமத்தின் ஆணிவேரையே கடவுள் அழிக்கப்போகிறார். அந்த ஆணிவேரைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.” (1 யோவான் 5:19) பிசாசாகிய சாத்தான்தான் இங்கே ‘பொல்லாதவன்’ என்று சொல்லப்பட்டிருக்கிறான். அவன்தான் “இந்த உலகத்தை ஆளுகிறவன்” என்று இயேசு சொன்னார். (யோவான் 12:31) இந்த உலகத்திலுள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமே சாத்தான்தான். அதனால், கடவுள் என்ன செய்யப்போகிறார்?
யெகோவா தன்னுடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் ‘பிசாசை அழிக்கப்போகிறார்.’ (எபிரெயர் 2:14; 1 யோவான் 3:8) சொல்லப்போனால், “தனக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது” என்பது பிசாசுக்குக்கூடத் தெரியும். (வெளிப்படுத்துதல் 12:12) அக்கிரமம் செய்கிற எல்லாரையும் அவனோடு சேர்த்துக் கடவுள் அழிக்கப்போகிறார்.—சங்கீதம் 37:9; நீதிமொழிகள் 2:22.
பூமியைப் பூஞ்சோலையாக மாற்றப்போகிறார்
எல்லா அக்கிரமத்தையும் இந்தப் பூமியிலிருந்து ஒழித்துக்கட்டிய பிறகு, கடவுள் தான் நினைத்தபடியே மனிதர்களை என்றென்றும் வாழவைக்கப்போகிறார். அப்போது, வாழ்க்கை எப்படி இருக்கும்?
நிரந்தரமான சமாதானமும் பாதுகாப்பும். “தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
ஏராளமான உணவு. “பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும்.”—சங்கீதம் 72:16.
வசதியான வீடும் திருப்தியான வேலையும். “ஜனங்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள். திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள். . . . நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள்.”—ஏசாயா 65:21, 22.
இப்படியெல்லாம் வாழ உங்களுக்கு ஆசையாக இருக்கிறதா? சீக்கிரத்தில், இவையெல்லாம் நிஜமாகப்போகின்றன!
வியாதியையும் மரணத்தையும் ஒழிக்கப்போகிறார்
இன்று நம் எல்லாருக்குமே வியாதியும் மரணமும் வருகிறது. ஆனால், சீக்கிரத்தில் நிலைமை மாறிவிடும். இயேசு செய்த உயிர்த்தியாகத்தின் அடிப்படையில் கடவுள் நமக்கு ஆசீர்வாதங்களைத் தரப்போகிறார். இயேசுமேல் “விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும்” என்பதற்காக அப்படிச் செய்யப்போகிறார். (யோவான் 3:16) அப்படியென்றால், நமக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
நோய்நொடியே இருக்காது. “‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள். தேசத்து ஜனங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும்.”—ஏசாயா 33:24.
மரணத்தின் வலியே இருக்காது. “மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார். உன்னதப் பேரரசராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.”—ஏசாயா 25:8.
நாம் என்றென்றும் வாழ்வோம். ‘நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் தரும் அன்பளிப்பு முடிவில்லாத வாழ்வு.’—ரோமர் 6:23.
இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள். “நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.” (அப்போஸ்தலர் 24:15) கடவுள் தன்னுடைய மகனையே கொடுத்ததால்தான் இறந்தவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறது.
இதையெல்லாம் கடவுள் எப்படிச் செய்வார்?
அருமையான அரசாங்கத்தைப் பயன்படுத்தப்போகிறார்
கடவுள் பரலோகத்தில் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த அரசாங்கத்தின் மூலம் அவர் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றப்போகிறார். அதன் ராஜாவாக இயேசு கிறிஸ்துவை அவர் நியமித்திருக்கிறார். (சங்கீதம் 110:1, 2) இயேசு அந்த அரசாங்கத்தை மனதில் வைத்துத்தான், “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, . . . உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என்று ஜெபம் செய்யும்படி தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 6:9, 10.
கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை ஆட்சி செய்யும். இங்கு இருக்கிற எல்லா கஷ்டங்களுக்கும் வேதனைகளுக்கும் அது முடிவுகட்டும். அதுபோன்ற அருமையான ஆட்சி வேறு எதுவுமே இருக்க முடியாது! அதனால்தான், இயேசு இந்தப் பூமியில் ஊழியம் செய்தபோது, ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்க’ அதிக நேரம் செலவழித்தார். அதைப் பற்றிப் பிரசங்கிக்கும்படி தன் சீஷர்களுக்கும் சொன்னார்.—மத்தேயு 4:23; 24:14.
யெகோவா மனிதர்கள்மேல் கொள்ளைப்பிரியம் வைத்திருக்கிறார். அதனால்தான், இந்த எல்லா ஆசீர்வாதங்களையும் பொழியப்போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவரிடம் நெருங்கிவரவும் உங்கள் மனம் ஏங்கவில்லையா? கடவுளிடம் நெருங்கிவருவதால் உங்களுக்கு வேறு என்ன நன்மைகள் கிடைக்கும்? அடுத்த பக்கத்தில் பாருங்கள்.
கடவுள் என்ன செய்யப்போகிறார்? கடவுள் வியாதியையும் மரணத்தையும் ஒழித்துவிடுவார், தன்னுடைய அரசாங்கத்தின்கீழ் எல்லாரையும் சமாதானமாக வாழவைப்பார், இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றுவார்