படிப்புக் கட்டுரை 31
“நாம் சோர்ந்துபோவதில்லை”!
“அதனால், நாம் சோர்ந்துபோவதில்லை.”—2 கொ. 4:16.
பாட்டு 135 முடிவுவரை சகித்திருப்பாயே!
இந்தக் கட்டுரையில்...a
1. வெற்றிக் கோட்டைத் தொடுவதற்கு கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?
வாழ்வுக்கான ஓட்டத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் ஓட ஆரம்பித்து கொஞ்சக் காலம் ஆகியிருந்தாலும் சரி, ரொம்பக் காலம் ஆகியிருந்தாலும் சரி, வெற்றிக் கோட்டைத் தொடும்வரை தொடர்ந்து ஓட வேண்டும். இது சம்பந்தமாக, பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த ஆலோசனை நமக்கு உதவும். பவுலுடைய கடிதத்தைப் பெற்றுக்கொண்ட முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சிலர், ரொம்பக் காலமாக யெகோவாவுக்குச் சேவை செய்துவந்திருந்தார்கள். வாழ்வுக்கான ஓட்டத்தில் அவர்கள் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள். இருந்தாலும், சகிப்புத்தன்மையோடு தொடர்ந்து ஓடுவது அவசியம் என்பதை பவுல் அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். அவர் ‘லட்சியத்தோடு ஓடியது’ போலவே பிலிப்பி கிறிஸ்தவர்களும் ஓட வேண்டும் என்று விரும்பினார்.—பிலி. 3:14.
2. சரியான நேரத்தில்தான் பவுல் பிலிப்பியர்களுக்கு ஆலோசனை கொடுத்தார் என்று எப்படிச் சொல்லலாம்?
2 சரியான நேரத்தில்தான் பவுல் அந்த ஆலோசனையைக் கொடுத்தார். ஆரம்பத்திலிருந்தே பிலிப்பி சபை பயங்கர எதிர்ப்பைச் சந்தித்துவந்தது. “மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்ற அழைப்பை ஏற்றுக்கொண்டு, சுமார் கி.பி. 50-ல் பவுலும் சீலாவும் பிலிப்பி நகரத்துக்குப் போனார்கள். (அப். 16:9) அங்கே லீதியாள் என்ற பெண்ணைச் சந்தித்தார்கள். அவர்கள் பேசுவதை அவள், “கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.” நல்ல செய்தியை “ஏற்றுக்கொள்ளும்படி யெகோவா அவளுடைய இதயத்தை முழுமையாகத் திறந்தார்.” (அப். 16:14) பிறகு என்ன நடந்தது? அவளும் அவளுடைய வீட்டில் இருந்த எல்லாரும் சீக்கிரத்தில் ஞானஸ்நானம் எடுத்தார்கள். இதெல்லாம் சாத்தானுக்குப் பொறுக்கவில்லை! அந்த நகரத்தில் இருந்த ஆண்கள், பவுலையும் சீலாவையும் நடுவர்களிடம் இழுத்துக்கொண்டு போனார்கள். நகரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக அவர்கள்மீது பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தினார்கள். பவுலையும் சீலாவையும் அடித்து சிறையில் தள்ளினார்கள். பிறகு, அந்த நகரத்தை விட்டுப் போகும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்கள். (அப். 16:16-40) அப்போது அவர்கள் சோர்ந்துவிட்டார்களா? இல்லவே இல்லை! புதிதாக உருவான பிலிப்பி சபையில் இருந்த சகோதர சகோதரிகளைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்களும் சகித்திருந்தார்கள்! பவுல் மற்றும் சீலாவின் அருமையான முன்மாதிரி அவர்களைத் தூக்கி நிறுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
3. பவுல் எதைத் தெரிந்துவைத்திருந்தார், எந்தெந்த கேள்விகளுக்கான பதில்களை நாம் பார்ப்போம்?
3 சோர்ந்துவிடக் கூடாது என்பதில் பவுல் உறுதியாக இருந்தார். (2 கொ. 4:16) வெற்றிக் கோட்டைத் தொடுவதற்குப் பரிசின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? பிரச்சினைகள் வந்தாலும் சகித்திருக்க முடியும் என்பதை நம்முடைய காலத்திலும் சிலர் எப்படிக் காட்டியிருக்கிறார்கள்? சோர்ந்துவிடாமல் இருக்க எதிர்கால நம்பிக்கை நமக்கு எப்படி உதவும்?
பவுலிடமிருந்து ஒரு பாடம்
4. கஷ்டமான சூழ்நிலையிலும் பவுல் எப்படி யெகோவாவின் வேலையை மும்முரமாகச் செய்தார்?
4 எவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் பிலிப்பியர்களுக்கு பவுல் கடிதம் எழுதியிருப்பார் என்பதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அந்தச் சமயத்தில், அவர் ரோமில் வீட்டுக்காவலில் இருந்தார். வெளியே போய் சுதந்திரமாக அவரால் ஊழியம் செய்ய முடியவில்லை. இருந்தாலும், தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் நல்ல செய்தியைச் சொல்வதிலும், தூரத்தில் இருந்த சபைகளுக்குக் கடிதங்கள் எழுதுவதிலும் சுறுசுறுப்பாக இருந்தார். இன்றும் சிலர், வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். தங்களைப் பார்க்க வருகிறவர்களிடம் அவர்கள் நல்ல செய்தியைச் சொல்கிறார்கள். நேரில் பார்க்க முடியாதவர்களுக்கு உற்சாகமூட்டும் கடிதங்களை எழுதுகிறார்கள்.
5. பிலிப்பியர் 3:12-14-ன்படி, பரிசின் மீது கவனமாக இருக்க பவுலுக்கு எது உதவியது?
5 முன்பு சாதித்த விஷயங்கள் அல்லது முன்பு செய்த தவறுகள் தன் கவனத்தைச் திசைதிருப்பிவிடாதபடி பவுல் பார்த்துக்கொண்டார். சொல்லப்போனால், “முன்னால் இருப்பவற்றை எட்டிப்பிடிப்பதற்காக,” அதாவது வெற்றிக் கோட்டைத் தொடுவதற்காக, ‘பின்னால் இருப்பவற்றை மறப்பது’ முக்கியம் என்று சொன்னார். (பிலிப்பியர் 3:12-14-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய கவனம் திசைதிரும்பாமல் இருப்பதற்கு பவுல் என்ன செய்தார்? ஒன்று: கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு யூதர்கள் மத்தியில் அவர் கொடிகட்டிப் பறந்திருந்தாலும், தான் சாதித்ததையெல்லாம் “வெறும் குப்பையாக” நினைத்தார். (பிலி. 3:3-8) இரண்டு: கிறிஸ்தவர்களை அவர் ரொம்பவே துன்புறுத்தியிருந்தாலும், குற்ற உணர்வால் அவர் முடங்கிவிடவில்லை. மூன்று: ஏற்கெனவே யெகோவாவுக்கு நிறைய செய்துவிட்டதாக நினைத்து அவர் திருப்தியடைந்துவிடவில்லை. அவர் சிறையில் அடைக்கப்பட்டார், ஏராளமாக அடி வாங்கினார், கல்லெறியப்பட்டார், கப்பல் விபத்தில் மாட்டிக்கொண்டார், பட்டினி கிடந்தார், உடையில்லாமல் தவித்தார். ஆனாலும், ஊழியத்தை வெற்றிகரமாகச் செய்தார்! (2 கொ. 11:23-27) ஊழியத்தில் நிறைய சாதித்திருந்தாலும், இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், தொடர்ந்து ஓட வேண்டும் என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தது. அவரைப் போலவே நாமும் தொடர்ந்து ஓட வேண்டும்.
6. ‘பின்னால் இருக்கும்’ எந்தெந்த விஷயங்களை நாம் மறக்க வேண்டியிருக்கலாம்?
6 நாம் எப்படி பவுலைப் போலவே ‘பின்னால் இருப்பவற்றை மறக்கலாம்’? கடந்த காலத்தில் செய்த தவறை நினைத்து நம்மில் சிலர் புழுங்கிக்கொண்டிருக்கலாம்; குற்ற உணர்வு நம்மை வாட்டியெடுக்கலாம். இதையெல்லாம் சமாளிப்பதற்கு என்ன செய்யலாம்? கிறிஸ்துவின் மீட்புப் பலியைப் பற்றி ஆழமாக ஆராய்ச்சி செய்து பார்க்கலாம். நம்மைப் பலப்படுத்துகிற இந்த விஷயத்தைப் படிக்கும்போதும், ஆழமாக யோசித்துப்பார்க்கும்போதும், இதைப் பற்றி ஜெபம் செய்யும்போதும், தேவையில்லாத குற்ற உணர்விலிருந்து வெளியே வருவோம். அதோடு, எந்தப் பாவங்களை யெகோவா ஏற்கெனவே மன்னித்துவிட்டாரோ, அவற்றையே நினைத்து நம்மை நாமே வருத்திக்கொள்ளாமல் இருப்போம். பவுலிடமிருந்து இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளலாம். யெகோவாவின் சேவையை அதிகமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக கை நிறைய சம்பளம் தரும் வேலையை சிலர் விட்டிருக்கலாம். அப்படியென்றால், நாம் விட்டுவந்ததை ஏக்கத்தோடு நினைத்துப்பார்க்காமல் இருப்பதன் மூலம் பின்னால் இருப்பவற்றை மறக்கலாம், இல்லையா? (எண். 11:4-6; பிர. 7:10) “பின்னால் இருப்பவற்றை” மறப்பதில் வேறு என்னவெல்லாம் அடங்குகின்றன? யெகோவாவின் சேவையில் நாம் செய்த விஷயங்கள் அல்லது முன்பு நாம் அனுபவித்த கஷ்டங்கள் அடங்குகின்றன! யெகோவா நம்மை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதையும், பல வருஷங்களாக அவர் நம்மை எப்படித் தூக்கிச் சுமந்திருக்கிறார் என்பதையும் நினைத்துப்பார்க்கும்போது, அவரிடம் நாம் நெருங்கிப்போவோம் என்பது உண்மைதான். ஆனால், இதுவரை செய்ததே போதும் என்று நினைத்து நாம் ஒருபோதும் திருப்தியடைந்துவிடக் கூடாது.—1 கொ. 15:58.
7. ஒன்று கொரிந்தியர் 9:24-27-ன்படி, பரிசைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? விளக்குங்கள்.
7 “தீவிரமாக முயற்சி செய்யுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளை பவுல் நன்றாகப் புரிந்துவைத்திருந்தார். (லூக். 13:23, 24) கிறிஸ்துவைப் போலவே தானும் கடைசிவரை தீவிரமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான், கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையை ஓட்டப் பந்தயத்துக்கு அவர் ஒப்பிட்டார். (1 கொரிந்தியர் 9:24-27-ஐ வாசியுங்கள்.) வெற்றிக் கோட்டின் மீதுதான் ஓர் ஓட்டப் பந்தய வீரர் கவனமாக இருப்பார்; தன்னுடைய கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்வார். இந்த உதாரணத்தை யோசித்துப்பாருங்கள். நகர்ப்புறம் வழியாக ஓர் ஓட்டப் பந்தய வீரர் ஓடுகிறார். அவர் போகும் பாதையில் நிறைய கடைகளும், கவனத்தைச் சிதறடிக்கும் விஷயங்களும் இருக்கின்றன. இப்போது அவர் என்ன செய்வார்? கடைகளில் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருள்களைப் பார்ப்பதற்காக தன் ஓட்டத்தை நிறுத்திவிடுவாரா? ஜெயிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடுகிற ஒரு வீரர் கண்டிப்பாக அப்படிச் செய்ய மாட்டார். அப்படியென்றால், வாழ்வுக்கான ஓட்டத்தில், நம்முடைய கவனமும் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிக் கோட்டின் மீதே கவனமாக இருந்தால்... பவுலைப் போல தீவிரமாக முயற்சி செய்தால்... கடைசியில் பரிசைப் பெறுவோம்!
பிரச்சினைகளுக்கு மத்தியிலும் யெகோவாவின் சேவை
8. எந்த மூன்று விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்?
8 மூன்று விஷயங்கள் நம்முடைய வேகத்தைக் குறைத்துவிடலாம். அவை: (1) எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்குத் தாமதமாவது. (2) உடல் பலம் குறைவது. (3) அடுத்தடுத்து சோதனைகள் வருவது. இவற்றையெல்லாம் மற்றவர்கள் எப்படிச் சமாளித்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது நமக்குப் பிரயோஜனமாக இருக்கும்.—பிலி. 3:17.
9. எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்குத் தாமதமாகும்போது என்ன நடக்கலாம்?
9 எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்குத் தாமதமாவது. யெகோவா கொடுத்திருக்கும் அருமையான வாக்குறுதிகள் நிறைவேறுவதைப் பார்ப்பதற்காக நாம் ஏங்குகிறோம். அப்படி ஏங்குவது இயல்புதான்! ஆபகூக் தீர்க்கதரிசியும் அப்படித்தான் ஏங்கினார். யூதாவில் நடந்த அக்கிரமங்களுக்கு யெகோவா முடிவு கட்ட வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அதைப் பற்றி யெகோவாவிடம் கேட்டபோது, “அதற்காகக் காத்திரு” என்று அவரிடமிருந்து பதில் வந்தது. (ஆப. 2:3) ஒருவேளை, நம்முடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்குத் தாமதமாவதுபோல் உணர்ந்தால் என்ன நடக்கலாம்? நம்முடைய வேகம் குறைந்துவிடலாம், நாம் சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடலாம். (நீதி. 13:12) இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த சிலருடைய விஷயத்தில் அதுதான் நடந்தது. அந்தச் சமயத்தில், பரலோக நம்பிக்கையுள்ள நிறைய பேர், 1914-ல் பரலோகத்துக்குப் போகும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், தங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்குத் தாமதமானபோது அவர்கள் என்ன செய்தார்கள்?
10. எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்குத் தாமதமானபோது ஒரு தம்பதி என்ன செய்தார்கள்?
10 இரண்டு பேருடைய உதாரணத்தை இப்போது பார்க்கலாம். ராயல் ஸ்பாட்ஸ் என்ற சகோதரர் 1908-ல் ஞானஸ்நானம் எடுத்தார். அப்போது அவருக்கு 20 வயது. சீக்கிரத்தில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் நம்பிக்கை அவருக்கு இருந்தது. 1911-ல், தன்னுடைய எதிர்கால மனைவி பெர்லிடம், “1914-ல என்ன நடக்கப்போகுதுனு உனக்கு நல்லாவே தெரியும். கல்யாணம் பண்றதா இருந்தா சீக்கிரமாவே பண்ணிக்கலாம்” என்று சொன்னாராம். 1914-ல் தங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனபோது இந்தத் தம்பதி என்ன செய்தார்கள்? தங்கள் ஓட்டத்தை நிறுத்திவிட்டார்களா? இல்லை! ஏனென்றால், பரிசைப் பெற்றுக்கொள்வதில் அல்ல, கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதில்தான் அவர்களுடைய முழு கவனமும் இருந்தது. சகிப்புத்தன்மையோடு தொடர்ந்து ஓட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். சொல்லப்போனால், பல வருஷங்களுக்கு, அதாவது தங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கும்வரையிலும், சுறுசுறுப்பாகவும் உண்மையாகவும் சேவை செய்தார்கள். நீங்களும் சில விஷயங்களுக்காகக் காத்திருக்கிறீர்கள், இல்லையா? தன்னுடைய பெயருக்கு ஏற்பட்டிருக்கிற களங்கத்தை யெகோவா நீக்கப்போகும் சமயத்துக்காகவும், தான் ஆட்சி செய்யும் விதம்தான் சரி என்று அவர் நிரூபிக்கப்போகும் சமயத்துக்காகவும், தன்னுடைய எல்லா வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றப்போகிற சமயத்துக்காகவும் நீங்கள் ஆசையாகக் காத்திருக்கிறீர்கள். யெகோவா குறித்திருக்கிற நேரத்தில் இவையெல்லாம் நிச்சயம் நடக்கும் என்பதில் உறுதியாக இருங்கள். அதுவரை, கடவுளுடைய சேவையைச் சுறுசுறுப்பாகச் செய்யுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்குத் தாமதமாவதுபோல் உணர்ந்தால், சோர்ந்துவிடாதீர்கள்! உங்கள் வேகத்தை குறைத்துவிடாதீர்கள்!
11-12. முன்புபோல் நமக்கு உடல் பலம் இல்லையென்றாலும் நம்மால் யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியுமா? ஓர் உதாரணம் கொடுங்கள்.
11 உடல் பலம் குறைவது. வாழ்வுக்கான ஓட்டத்தில் தொடர்ந்து ஓடுவதற்கு, ஓர் ஓட்டப் பந்தய வீரனைப் போல் உங்கள் உடலும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனென்றால், உடல் பலம் குறைந்த எத்தனையோ பேர் தங்களால் முடிந்த சிறந்ததை யெகோவாவுக்குச் செய்துவருகிறார்கள். (2 கொ. 4:16) உதாரணத்துக்கு, 55 வருஷங்கள் பெத்தேலில் சேவை செய்த சகோதரர் ஆர்த்தர் சீகார்டின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவருக்கு 88 வயது ஆனபோது, அவருடைய உடல்நிலை மோசமாக ஆனது. ஒருநாள், அவரைக் கவனித்துக்கொண்டிருந்த நர்ஸ் அவருடைய படுக்கைக்குப் பக்கத்தில் வந்து, “சகோதரர் சீகார்ட், யெகோவாவுக்கு நீங்க நிறைய சேவை செஞ்சிருக்குறீங்க” என்று சொன்னார். ஆனால், கடந்த காலத்தில் செய்த சேவையைப் பற்றியே சகோதரர் யோசித்துக்கொண்டிருக்கவில்லை. அவர் அந்த நர்ஸை பார்த்து புன்னகையோடு, “உண்மைதான்! ஆனா இவ்வளவு நாள் நாம என்ன செஞ்சோங்குறதவிட, இனிமேல் என்ன செய்ய போறோங்குறதுதான் முக்கியம்” என்று சொன்னார்.
12 ஒருவேளை நீங்கள் யெகோவாவுக்குப் பல வருஷங்களாக சேவை செய்திருக்கலாம். ஆனால், உங்கள் உடல் பலம் குறைந்துகொண்டே வருவதால், முன்பு செய்ததைப் போல் இப்போது செய்ய முடியாமல் போகலாம். அப்படி இருந்தால், சோர்ந்துவிடாதீர்கள்! முன்பு நீங்கள் செய்த சேவையை யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதில் உறுதியாக இருங்கள். (எபி. 6:10) நாம் யெகோவாவுக்கு எவ்வளவு செய்கிறோம் என்பதை வைத்து அவர்மீது நமக்கு இருக்கும் அன்பை அளவிட முடியாது. சந்தோஷத்தோடும் முழு மூச்சோடும் அவருக்குச் சேவை செய்யும்போது, நாம் அவர்மீது அன்பையும் பக்தியையும் காட்டுகிறோம் என்று அர்த்தம். (கொலோ. 3:23) நம்முடைய வரம்புகளைப் பற்றி யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். நம்மால் முடியாததை அவர் எதிர்பார்க்க மாட்டார்.—மாற். 12:43, 44.
13. சோதனைகள் மத்தியிலும் தொடர்ந்து முன்னேற, சகோதரர் மெல்நிக் மற்றும் சகோதரி லிடியாவின் அனுபவம் நமக்கு எப்படி உதவுகிறது?
13 அடுத்தடுத்து சோதனைகள் வருவது. யெகோவாவின் ஊழியர்களில் சிலர், நிறைய வருஷங்களாக சோதனைகளையும் துன்புறுத்தல்களையும் சமாளித்து வருகிறார்கள். அநடால்யய் மெல்நிக்b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) என்ற சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவருக்கு 12 வயது இருந்தபோது, அவருடைய அப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மால்டோவாவில் இருந்த அவருடைய குடும்பத்தைவிட்டு 7,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருந்த சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். ஒரு வருஷம் கழித்து, மெல்நிக்கும் அவருடைய அம்மாவும் அவருடைய தாத்தா பாட்டியும் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். காலப்போக்கில், ஒரு கிராமத்தில் நடந்த சபைக் கூட்டங்களுக்கு அவர்களால் போக முடிந்தது. ஆனால், 30 கி.மீ. தூரம் உறைபனியில் நடந்து போக வேண்டியிருந்தது. கடும் குளிரைச் சமாளிக்க வேண்டியிருந்தது. பிறகு, தன்னுடைய மனைவி லிடியாவையும் தன்னுடைய ஒரு வயது மகளையும் விட்டுப் பிரிந்து சகோதரர் மெல்நிக் மூன்று வருஷங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். நிறைய வருஷங்கள் கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், அவரும் அவருடைய குடும்பத்தாரும் தங்கள் ஓட்டத்தை குறைத்துக்கொள்ளவே இல்லை. இப்போது அவருக்கு 82 வயது. மத்திய ஆசிய கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்கிறார். சகோதரர் மெல்நிக் மற்றும் சகோதரி லிடியாவைப் போல், யெகோவாவின் சேவையில் நம்மால் முடிந்ததையெல்லாம் செய்யலாம். முன்பு சகித்திருந்ததைப் போலவே தொடர்ந்து சகித்திருக்கலாம்.—கலா. 6:9.
கவனமெல்லாம் எதிர்கால நம்பிக்கையின் மீது இருக்கட்டும்
14. பரிசைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பவுலுக்குத் தெரிந்திருந்தது?
14 ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்து, பரிசைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பவுல் உறுதியாக நம்பினார். பரலோக நம்பிக்கையுள்ள அவர், “கடவுள் கொடுக்கிற பரலோக அழைப்பு என்ற பரிசை” பெற்றுக்கொள்வதற்கு ஆசையாக இருந்தார். ஆனாலும், அதைப் பெற்றுக்கொள்வதற்குத் தொடர்ந்து ‘ஓட’ வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. (பிலி. 3:14) பரிசின் மீது கவனமாக இருக்க உதவும் ஓர் அழகான உதாரணத்தை பிலிப்பியர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டார்.
15. குடியுரிமையைப் பற்றிய உதாரணத்தைச் சொல்லி, பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களை பவுல் எப்படி உற்சாகப்படுத்தினார்?
15 பிலிப்பியர்களுக்குப் பரலோகத்தில் இருந்த குடியுரிமையைப் பற்றி பவுல் ஞாபகப்படுத்தினார். (பிலி. 3:20) ஏன் அதை ஞாபகப்படுத்தினார்? அந்தக் காலத்தில், ரோமக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள மக்கள் ரொம்பவே ஆசைப்பட்டார்கள். ஏனென்றால், அந்தக் குடியுரிமையால் நிறைய பலன்கள் கிடைத்தன.c (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஆனால், பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதைவிட அதிக மதிப்புள்ள ஒரு குடியுரிமை இருந்தது. அந்தக் குடியுரிமைக்கு முன்னால் ரோமக் குடியுரிமை ஒன்றுமே இல்லை! அதனால்தான், “நீங்கள் கிறிஸ்துவின் நல்ல செய்திக்குத் தகுதியான குடிமக்களாக நடந்துகொள்ளுங்கள்” என்று பிலிப்பியர்களை பவுல் கேட்டுக்கொண்டார். (பிலி. 1:27, அடிக்குறிப்பு.) இன்றும், தங்களுக்குக் கிடைக்கப்போகும் முடிவில்லாத வாழ்வைப் பெற்றுக்கொள்ள பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஓடுகிறார்கள். இப்படி, நமக்கு அருமையான முன்மாதிரி வைக்கிறார்கள்.
16. நமக்கு எந்த நம்பிக்கை இருந்தாலும் சரி, பிலிப்பியர் 4:6, 7 சொல்கிறபடி நாம் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்?
16 பரலோகத்தில் என்றென்றும் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பரிசைப் பெற்றுக்கொள்ளும் குறிக்கோளோடு நாம் ஓட வேண்டும். நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், பின்னால் இருப்பவற்றைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கக் கூடாது. நம்முடைய முன்னேற்றத்தைத் தடுக்க எதற்கும் இடம்கொடுக்கக் கூடாது. (பிலி. 3:16) ஒருவேளை, நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்குத் தாமதமாவதுபோல் தோன்றலாம். அல்லது, நம் உடல் பலம் குறையலாம். நிறைய வருஷங்களாக, அடுத்தடுத்து சோதனைகளையும் கஷ்டங்களையும் சந்தித்துவரலாம். உங்களுடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சரி, “எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்.” உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் மன்றாட்டுகளையும் கடவுளிடம் சொல்லுங்கள். அப்போது, நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கடவுள் உங்களுக்குச் சமாதானத்தைத் தருவார்.—பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.
17. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
17 தொட்டுவிடும் தூரத்தில் வெற்றிக் கோடு தெரியும்போது, ஓர் ஓட்டப் பந்தய வீரர் என்ன செய்வார்? கவனத்தைச் சிதற விடுவாரா? இல்லை! தன்னுடைய எல்லா சக்தியையும் ஒன்றுதிரட்டி அதை எப்படியாவது தொட்டுவிடுவதற்கு முயற்சி செய்வார். அதேபோல், தொட்டுவிடும் தூரத்தில் எதிர்கால ஆசீர்வாதங்கள் தெரிகிற இந்தச் சமயத்தில், நம்முடைய கவனம் சிதறிவிடாதபடி பார்த்துக்கொள்வது ரொம்ப முக்கியம். அதனால், சூழ்நிலைக்கு ஏற்றபடி நம்முடைய எல்லா சக்தியையும் ஒன்றுதிரட்டி, வாழ்வுக்கான ஓட்டத்தை நாம் முடிக்க வேண்டும். சரியான திசையிலும் சரியான வேகத்திலும் தொடர்ந்து ஓடுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதைப் பற்றித் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ‘மிக முக்கியமான காரியங்கள் எவை என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள’ வேண்டும். இவற்றை எப்படிச் செய்யலாம் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.—பிலி. 1:9, 10.
பாட்டு 139 உறுதியாய் நிற்க உதவும்!
a நாம் எவ்வளவு காலமாக யெகோவாவுக்குச் சேவை செய்துவந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக, நாம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கத்தான் ஆசைப்படுகிறோம். சோர்ந்துவிடாமல் இருக்கும்படி அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய சக ஊழியர்களை உற்சாகப்படுத்தினார். பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தை வாசிக்கும்போது, வாழ்வுக்கான ஓட்டத்தில் தொடர்ந்து சகிப்புத்தன்மையோடு ஓடுவதற்குத் தேவையான உற்சாகம் நமக்குக் கிடைக்கும். அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளபடி நாம் எப்படி நடந்துகொள்ளலாம் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
b “குழந்தைப் பருவத்திலேயே கடவுளை நேசிக்க கற்பிக்கப்பட்டேன்” என்ற தலைப்பில் வந்த சகோதரர் மெல்நிக்கின் வாழ்க்கை சரிதையை நவம்பர் 8, 2004 விழித்தெழு! பத்திரிகையில் பாருங்கள்.
c பிலிப்பி நகரம் ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ரோமர்களுக்கு இருந்த சில உரிமைகள் பிலிப்பியில் வாழ்ந்தவர்களுக்கும் இருந்தன. அதனால், பவுல் சொன்ன உதாரணம் அவர்களுக்குப் புரிந்திருக்கும்.