இளைஞரே—யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துங்கள்
1 வாலிபத்தின் பலத்தையும் வலிமையையும் சரியான வழியில் ஒருவர் பயன்படுத்தும்போது, வாழ்க்கை உண்மையில் இன்பகரமாய் இருக்கும். ஞானியாகிய சாலொமோன் ராஜா இவ்விதமாக எழுதினார்: “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்.” (பிர. 11:9) இளைஞராகிய நீங்கள் உங்களுடைய செயல்களுக்காக கடவுளுக்கு உத்தரவாதமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்.
2 நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை எவ்விதமாய் நடத்துகிறீர்கள் என்பது உங்களுக்கு மாத்திரமல்ல, உங்களுடைய பெற்றோருக்கும்கூட வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. நீதிமொழிகள் 10:1 இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஞானமுள்ள மகன் தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.” ஆனால் இதைவிட முக்கியமாக, நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை எவ்விதமாய் நடத்துகிறீர்கள் என்பது உங்களுடைய சிருஷ்டிகராகிய யெகோவா தேவனைப் பாதிக்கிறது. அதன் காரணமாகவே நீதிமொழிகள் 27:11-ல், யெகோவாவும் இளைஞரை இவ்வாறு உற்சாகப்படுத்துகிறார்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” இளைஞராகிய நீங்கள் எவ்வாறு யெகோவாவின் இருதயத்தை இன்று சந்தோஷப்படுத்த முடியும்? இதை அநேக வழிகளில் சாதிக்கலாம்.
3 சரியான முன்மாதிரியின்மூலம்: இளைஞராகிய நீங்கள் கடவுளுடைய வார்த்தையில் முன்னறிவிக்கப்பட்ட ‘கையாளுவதற்கு கடினமான காலங்களை’ அனுபவிக்கிறீர்கள். (2 தீ. 3:1, NW) விசுவாசமற்ற பள்ளித் தோழர்கள், மேலும் உங்களுடைய பைபிள் அடிப்படையிலான நோக்குநிலைகளை இகழ்ந்துபேசுகிற ஆசிரியர்களிடமிருந்தும்கூட வரக்கூடிய அழுத்தங்களுக்கும் நீங்கள் ஆளாகக்கூடும். உதாரணமாக, ஓர் ஆசிரியர் பரிணாமக் கோட்பாடு உண்மையெனவும் பைபிளைக் கட்டுக்கதையெனவும் சொன்னார். என்றபோதிலும், அந்த வகுப்பிலுள்ள ஓர் இளம் பிரஸ்தாபி பைபிளை உண்மைப்பற்றுறுதியுடன் ஆதரித்துப் பேசினார். அதன் விளைவாக, அநேக பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அக்கறையுள்ளவர்கள் சிலர் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தனர். இளைய சகோதர சகோதரிகளாகிய உங்களுடைய விசுவாசம் இந்தத் தேவ பக்தியற்ற உலகத்தைக் கண்டனம்செய்து, நேர்மையான இருதயமுள்ளோரை சத்தியத்தினிடமாக கவருகிறது.—எபி. 11:7-ஐ ஒப்பிடுங்கள்.
4 சபையிலுள்ள உங்களுடைய சகாக்கள் தீமைக்கு இணங்கிவிடாதபடிக்கு, நீங்கள் அவர்களை உற்சாகப்படுத்த முடியுமா? பள்ளியில், வீட்டில், மற்றும் சபையில் ஒரு நல்ல முன்மாதிரியை வைப்பதன்மூலம், மற்ற இளைய பிரஸ்தாபிகளின் விசுவாசத்தை நீங்கள் பலப்படுத்த முடியும். (ரோ. 1:12) மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியை வைப்பதன்மூலம் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துங்கள்.
5 உடை மற்றும் சிகையலங்காரத்தின்மூலம்: ஓர் இளைய சகோதரியினுடைய அடக்கமான உடையின் காரணமாக அவள் கேலிசெய்யப்பட்டு பரிகசிக்கப்பட்டாள், “பத்தினிப்பெண்” என்று முத்திரைகுத்தப்பட்டாள். இந்த உலகத்தின் தேவ பக்தியற்ற தராதரங்களுக்கு இணங்கிச்செல்லும்படி இது அவளை பயமடையச்செய்யவில்லை. பதிலாக, தான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியெனவும் தான் கடைப்பிடித்தது சாட்சிகளின் உயர்ந்த தராதரங்களெனவும் அவள் விளக்கிக்காட்டினாள். நீங்கள் இப்படிப்பட்ட மனதிடத்தைக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது சாத்தானுடைய உலகம் அதன் சிந்தனை மற்றும் நடத்தை முறைக்குள் உங்களை உருப்படுத்தும்படி அனுமதிக்கிறீர்களா? இளைஞராகிய உங்களில் அநேகர் யெகோவாவின் போதனைகளுக்குச் செவிசாய்த்து ஒழுங்கற்ற பாணிகள், வெறிப்பற்றுகள், விக்கிரகங்கள், மற்றும் இந்த உலகத்தின் போதனைகளை விட்டொழித்திருப்பதைக் காண்பது என்னே ஒரு மகிழ்ச்சி. உண்மையில் யெகோவாவின் அமைப்பு நமக்குச் சொல்லியிருக்கிறபடி, இந்த உலகத்தினால் உண்டாகும் காரியங்கள் பேய்களினால் செல்வாக்குச் செலுத்தப்படுகிறது என்பதை நாம் கண்டுணர வேண்டும்!—1 தீ. 4:1.
6 மகிழ்ந்தனுபவிப்பதையும் பொழுதுபோக்கையும் தெரிவுசெய்வதன்மூலம்: சரியான வகை மகிழ்ந்தனுபவித்தல் மற்றும் பொழுதுபோக்கை ஞானமாகத் தெரிவுசெய்ய பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு உதவிசெய்வதன் அவசியத்தை மனதிற்கொள்ளவேண்டும். ஒரு சகோதரர் தன்னை அதிகமாக நேசித்து வளர்த்துவந்த ஒரு நல்ல குடும்பத்தைப் பற்றி உயர்வாகப் பேசினார். ஆவிக்குரிய சிந்தையுள்ளவராக இருந்ததால், குடும்பப் பொழுதுபோக்கிலும் பொருத்திப் பிரயோகிக்கக்கூடிய வழிநடத்துதலை அந்தப் பெற்றோர் அளிக்கின்றனர். அந்தச் சகோதரர் குறிப்பிட்டார்: “அவர்கள் காரியங்களை ஒன்றாகச் சேர்ந்து செய்வதை நான் மெச்சுகிறேன். ஊழியத்துக்காக பிள்ளைகள் தயார்செய்ய பெற்றோர் உதவிசெய்வது மட்டுமல்லாமல், பொழுதுபோக்குக்கான நேரமாக அது இருக்கும்போது, உல்லாசமாக செல்கையில் விளையாடுகிறார்கள், அருங்காட்சியகங்களுக்குச் சென்று பார்வையிடுகிறார்கள், அல்லது வெறுமனே வீட்டில் இருந்துகொண்டு விளையாடுகிறார்கள் மற்றும் குடும்பத் திட்டங்களின்பேரில் வேலைசெய்கிறார்கள். ஒருவருக்கொருவரிடையேயும் மற்றவர்களுக்கிடையேயும் உள்ள அவர்களுடைய அன்பு, என்ன நடந்தாலும் சரி, எதிர்காலத்தில் அவர்கள் சத்தியத்தில் நடப்பார்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் உணரும்படிச் செய்கிறது.”
7 முழுக் குடும்பமும் பொழுதுபோக்கிலும் மகிழ்ந்தனுபவிப்பதிலும் ஈடுபடுவதற்கு முடியாத சமயங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். இளைஞராகிய நீங்கள் இதைக்குறித்தும் உங்களுடைய ஓய்வுநேரம் சிலவற்றை நீங்கள் எவ்வாறு செலவழிப்பீர்கள் என்பதைத் தெரிந்தெடுப்பதன் முக்கியத்துவத்தைக்குறித்தும் அறிந்திருக்க வேண்டும். சாத்தான் முடிந்தளவுக்கு அநேகரை மோசம்போக்க உறுதிபூண்டவனாய் இருக்கிறான். விசேஷமாக இளைஞரும் அனுபவமில்லாதவர்களும் அவனுடைய தந்திரமான செயல்களுக்கும் வஞ்சனையான தூண்டுதலுக்கும் எளிதில் ஆட்படக்கூடியவர்களாய் இருக்கிறார்கள். (2 கொ. 11:3; எபே. 6:11) ஆகவே, நீங்கள் வழிமாறிப்போகவும் சுயநலமான இன்ப நாட்டம் மற்றும் அநீதியான வாழ்க்கையைப் பின்தொடரவும் இன்று சாத்தான் உங்களைத் தூண்டுவதற்கு பல்வகை ஏதுக்களைப் பயன்படுத்துகிறான்.
8 தொலைக்காட்சியானது பொருள் சம்பந்தமான மற்றும் ஒழுக்கயீனமான வாழ்க்கைப் பாணியை முன்னேற்றுவிப்பதில் கைதேர்ந்த முறையில் தீநெறிக்குட்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. திரைப்படங்களும் வீடியோக்களும் தவறாமல் வன்முறையையும் வெளிப்படையான பாலுறவையும் முக்கியப்படுத்திக் காட்டுகின்றன. பிரபல்ய இசை அதிகதிகமாக இழிவானதாகவும் அருவருப்பாகவும் மாறிவிட்டது. சாத்தானின் கவர்ச்சிகள் தீங்கற்றவையாகத் தோன்றலாம், என்றாலும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ இளைஞரை தவறான சிந்தனை மற்றும் நடத்தைக்குள் அவை சிக்கவைத்திருக்கின்றன. இப்படிப்பட்ட அழுத்தங்களை எதிர்த்து நிற்பதற்கு, நீங்கள் சுறுசுறுப்பாக நீதியை நாடிப் பின்தொடரவேண்டும். (2 தீ. 2:22) மகிழ்ந்தனுபவித்தல் மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தமாக உங்களுடைய சிந்தனையில் அல்லது நடத்தையில் சரிப்படுத்துதல்கள் தேவைப்படுமானால், இவற்றை எவ்வாறு செய்யலாம்? சங்கீதக்காரன் அந்தப் பதிலை அளிக்கிறார்: “என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.”—சங். 119:10.
9 போட்டி விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்கு நட்சத்திரங்களைப் பெரிதும் போற்றி வழிபடுவது சர்வசாதாரணமாய் இருக்கிறது. யெகோவாவுக்கான பயம் அபூரண மானிடர்களைப் பெரிதும் போற்றி வழிபடுவதிலிருந்து காத்துக்கொள்ள உதவும். பாலுறவு ஒழுக்கக்கேடும்கூட இன்று அநேகரால் பெரிதும் போற்றி வழிபடப்படுகிறது. இழிவானதாகவும் ஒழுக்கங்கெடச் செய்வதுமாக இருக்கிற இசையைத் தவிர்ப்பதன்மூலம் இந்த மனப்போக்குக்கெதிராக உங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம். இசை சம்பந்தமாக, சபை புத்தகப் படிப்புகளுக்கான காவற்கோபுர கட்டுரைகள் இவ்வாறு கூறின: “இசை ஒரு தெய்வீகப் பரிசு. ஆனாலும் அநேகருக்கு அது அவர்களுடைய முழு கவனத்தையும் ஈர்க்கும் ஆரோக்கியமற்றக் காரியமாக இருக்கிறது. . . . இசையை அதற்குரிய இடத்தில் வைப்பதை இலக்காகக் கொள்ளுங்கள்; யெகோவாவின் செயல்நடவடிக்கையே உங்கள் முக்கிய அக்கறையாக இருக்கட்டும். நீங்கள் கேட்க விரும்பும் இசையைக்குறித்து, தேர்ந்தெடுப்பவர்களாயும் கவனமாயும் இருங்கள். இவ்வாறாக உங்களால் இந்தத் தெய்வீகப் பரிசை—துர்ப்பிரயோகம் செய்ய அல்ல—ஆனால் பயன்படுத்த முடியும்.”
10 தீமையை அறவே வெறுப்பதை வளர்த்துக்கொள்ளுங்கள். (சங். 97:10) தீமைசெய்ய தூண்டப்படும்போது, யெகோவா காரியத்தை எவ்வாறு நோக்குகிறார் என்று யோசியுங்கள், மேலும் அதன் பின்விளைவுகளாகிய வேண்டாத கருத்தரிப்புகள், பாலுறவால் கடத்தப்படுகிற வியாதிகள், உணர்ச்சிசம்பந்தமான அலைக்கழிப்பு, சுய மரியாதையை இழத்தல், சபையில் சிலாக்கியங்களை இழத்தல் ஆகியவற்றை சிந்தித்துப் பாருங்கள். டிவி காட்சிகள், திரைப்படங்கள், வீடியோக்கள், பாடல்கள், அல்லது பொல்லாங்கைத் தூண்டுகிற சம்பாஷணைகள் ஆகியவற்றிற்கு நீங்கள் உட்படுவதைத் தவிருங்கள். “மூடர்” என்று பைபிள் வகைப்படுத்துகிறவர்களோடு கூட்டுறவுகொள்வதைத் தவிருங்கள். (நீதி. 13:19) தேர்ந்தெடுப்பவராக இருங்கள்; யெகோவாவையும் அவருடைய நீதியான தராதரங்களையும் நேசிக்கிற சபையிலுள்ளவர்களின் நெருங்கிய கூட்டுறவைத் தெரிந்தெடுங்கள்.
11 ஆம், உண்மையில் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்த விரும்புகிற இளைஞர் எபேசியர் 5:15, 16-லுள்ள பின்வரும் நல்ல அறிவுரையை கவனித்துக்கேட்பார்கள்: “நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” இந்தக் கடைசி நாட்களில் உங்களுடைய முன்னேற்றத்தின்பேரில் ‘கவனமாக நடக்க’ எது உங்களுக்கு உதவிசெய்யும்?
12 ஆவிக்குரியத் தேவைகளைக் கவனித்தல்: மத்தேயு 5:3-ல் (NW), இயேசு சொன்னார்: “தங்களுடைய ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுடையவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.” உங்களுடைய ஆவிக்குரியத் தேவைகளைக் குறித்து உணர்வுடையவர்களாய் இருப்பதன்மூலம் நீங்களும்கூட சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கமுடியும். அந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்வது என்பது நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் ஒரு வைராக்கியமான பங்கைக் கொண்டிருப்பதை உட்படுத்துகிறது, ஏனென்றால் நாம் கற்றுக்கொண்டுவருகிற காரியங்களில் நம்முடைய விசுவாசத்தை இது கட்டியெழுப்புகிறது.—ரோ. 10:17.
13 ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்வது எப்பொழுதும் எளிதல்ல என்பதைத் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதில் பெரும்பாலானவை நம்பிக்கைக்குறைவின் காரணமாக இருக்கலாம். ஆகவே, உங்களுடைய பங்கில் உறுதியானத் தீர்மானம் அவசியம். ஒழுங்கான அடிப்படையில் ஊழியத்தில் கலந்துகொள்வதன்மூலம் நீங்கள் உங்களுடைய சாட்சிகொடுக்கும் திறமைகளை அதிகரிக்கப்பண்ணுவீர்கள், மேலும் பிரசங்கிப்பதற்கான உங்களுடைய திறமையில் நம்பிக்கையை வளர்ப்பீர்கள்.
14 ஒழுங்கான பயனியர்கள், மூப்பர்கள் போன்ற சபையிலுள்ள அதிக அனுபவமுடைய பிரஸ்தாபிகளோடு வேலைசெய்ய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அவர்களுடைய பிரசங்கங்களையும் வீட்டில் ஆட்சேபணைகளை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதையும் ஊக்கமாகச் செவிகொடுத்துக்கேளுங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தையும், நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளையும் நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களிடமுள்ள எல்லாவற்றையும் நீங்கள் யெகோவாவுக்குக் கொடுப்பதன் காரணமாக சீக்கிரத்திலேயே நீங்கள் ஊழியத்திலிருந்து பேரளவான உற்சாகத்தைப் பெறுவீர்கள்.—அப். 20:35.
15 சிலர் பள்ளியில் சாட்சிகொடுப்பதற்கான வாய்ப்பை அனுகூலப்படுத்திக்கொள்பவர்களாய் இருப்பதால், சீஷர்களை உண்டுபண்ணுவதில் முழு வெற்றியடைந்திருக்கிறார்கள். (மத். 28:19, 20) கிறிஸ்தவ இளைஞன் ஒருவன் சொல்கிறான்: “ஓய்வாக இருக்கும் வகுப்பு நேரங்களில், விசேஷமாக விடுமுறை சமயத்தில், நான் சாட்சிகொடுப்பதற்கு அநேக வாய்ப்புகளைப் பெற்றேன். மற்றவர்கள் பார்க்கும் விதத்தில் பைபிள் பிரசுரங்களை என்னுடைய மேஜையின்மீது நான் விட்டுவைத்தபோது, அக்கறையுள்ள அநேக மாணவர்கள் என்னை அணுகினார்கள்.” இதன் விளைவாக அநேக மாணவர்கள், அந்த ஆசிரியையும்கூட, கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராகத் தொடங்கினார்கள். உண்மையில், அந்த ஆசிரியை ஒப்புக்கொடுக்கப்பட்ட சாட்சியாக ஆகுமளவுக்கு முன்னேறியிருக்கிறார். உங்களைப் போன்ற இளம் வணக்கத்தார் யெகோவாவுடைய பெயருக்குத் துதியைக் கொண்டுவரும்போது அவர் சந்தோஷப்படுகிறார்.
16 உங்களுடைய ஆவிக்குரிய தேவையைத் திருப்திசெய்வதற்கு மற்றொரு வழி தனிப்பட்ட படிப்பாகும். யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்த, நாம் அவரையும் அவருடைய நோக்கங்களையும், நம்மிடமான அவருடைய தேவைகளையும் பற்றிய அறிவைப் பெறவேண்டும். நீங்கள் தனிப்பட்ட படிப்புக்காக நேரத்தை ஒதுக்கிவைக்கிறீர்களா? நீங்கள் ஒழுங்காக சாப்பிடுவதற்கு நேரமெடுத்துக்கொள்வது போலவே, ஒழுங்காக நீங்கள் படிக்கிறீர்களா? (யோவா. 17:3) தேவராஜ்ய ஊழியப்பள்ளிக்கான பைபிள் வாசிப்பு திட்டத்தைப் பின்பற்ற முயற்சிசெய்வதோடுகூட, பைபிளை வாசிப்பதற்கு நீங்கள் தனிப்பட்ட அட்டவணை வைத்திருக்கிறீர்களா? எல்லா கூட்டங்களுக்கும் நீங்கள் நன்கு தயார்செய்கிறீர்களா? காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை நீங்கள் ஒழுங்காக வாசிக்கிறீர்களா? குறிப்பாக, “இளைஞர் கேட்கின்றனர் . . .” தொடர்கட்டுரையிலுள்ள ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்து ஒவ்வொரு வசனத்தையும் கவனமாக எடுத்துப் பார்ப்பதற்கு நீங்கள் நேரமெடுத்துக்கொள்கிறீர்களா? மேலும் உங்களுடைய ஆவிக்குரிய தேவைகளுக்காக விசேஷமாக சங்கம் தயார்செய்திருக்கிற இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தை மறந்துவிடாதீர்கள். உலகம் முழுவதிலுமுள்ள கிறிஸ்தவ இளைஞரும் அவர்களுடைய பெற்றோரும் யெகோவாவிடம் நெருங்கிவருவதற்கு இந்தப் புத்தகம் அவர்களுக்கு எவ்வாறு உதவியிருக்கிறது என்பதை எழுதியிருக்கிறார்கள்.
17 நீங்கள் பைபிளையும் தேவராஜ்ய பைபிள் படிப்பு ஏதுக்களையும் வாசிக்கும்போது, அவை உங்களுக்கு யெகோவாவையும் அவருடைய சிந்தனையையும் அவருடைய நோக்கங்களையும்பற்றி சொல்லுகின்றன. இந்தத் தகவல் உங்களுக்கு எவ்வாறு உதவியாய் இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பதையும் நீங்கள் முன்பு வாசித்திருப்பதையும் தொடர்புபடுத்திப் பாருங்கள். இது தியானம்செய்வதை உட்படுத்துகிறது. தியானம்செய்வது தகவல் இருதயத்திற்குச் சென்று உங்களைத் தூண்டுவிக்க அனுமதிக்கிறது.—சங். 77:12.
18 தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுடையவர்களாயிருக்கிற இளைஞர், சபை கூட்டங்களுக்கு ஆஜராவதைக் காண்பதில் நாம் சந்தோஷப்படுகிறோம். கிறிஸ்தவ இளைஞராகிய நீங்கள் கூட்டங்களின்போது அர்த்தமுள்ள குறிப்புகளைத் தவறாமல் கொடுப்பதன்மூலம் மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம். ஒவ்வொரு கூட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு குறிப்பையாவது சொல்வதை இலக்காக வையுங்கள். கூட்டங்களுக்கு முன்பும் பிறகும் கட்டியெழுப்புகிற கூட்டுறவில் பங்குகொள்வதன்மூலம் சபையிலுள்ள எல்லா வயதுடைய தொகுதியினரோடும் கனிவான உறவை வளர்த்துக்கொள்ளுங்கள். (எபி. 10:24, 25) ஒவ்வொரு கூட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு முதிர்ந்த சகோதர அல்லது சகோதரியிடத்திலாவது சம்பாஷிக்கும்படியாக தன்னுடைய பெற்றோர் உற்சாகப்படுத்தினார்கள் என்று ஓர் இளம் சகோதரர் சொன்னார். சபையிலுள்ள முதிர்ந்த அங்கத்தினர்களோடு கூட்டுறவுகொள்வதன்மூலம் தான் பெற்ற அனுபவத்தை இன்று அவர் மதிப்பாகக் கருதுகிறார்.
19 ஆவிக்குரிய இலக்குகளைப் பின்தொடருங்கள்: அநேக இளைஞருடைய வாழ்க்கையில் நோக்கமும் வழிநடத்துதலும் இல்லை என்பது வருந்தத்தக்கது. என்றபோதிலும், தேவராஜ்ய இலக்குகளை வைத்து அவற்றை வெற்றிகரமாக அடைவதிலிருந்து வருகிற உணர்ச்சியை அனுபவித்துக்களிப்பது நல்லது அல்லவா? தெய்வீகக் கல்வியின் அறிவொளியூட்டுதலோடு பின்தொடரப்பட்ட இந்த இலக்குகள், தனிப்பட்டவிதமாக இப்பொழுது திருப்தியளிப்பவையாயும் முடிவில் நித்திய இரட்சிப்புக்கு வழிநடத்துபவையாயும் இருக்கும்.—பிர. 12:1, 13.
20 இலக்குகளை வைக்கையில், அதை ஜெபத்தின் காரியமாக ஆக்குங்கள். உங்களுடைய பெற்றோருடனும் மூப்பர்களுடனும் பேசுங்கள். வேறு எவரையாவது ஒப்பிட்டுப் பார்த்தல்ல, உங்களையும் உங்களுடைய திறமைகளையும் ஆராய்ந்துபார்த்து உங்களால் என்ன சாதிக்கமுடியும் என்பதற்கேற்றவாறு நடைமுறையான இலக்குகளை வையுங்கள். ஒவ்வொருவரும்—சரீரப்பிரகாரமாக, மனதின்பிரகாரமாக, உணர்ச்சிப்பிரகாரமாக மற்றும் ஆவிக்குரிய பிரகாரமாக—அமைப்பில் வித்தியாசமாக இருக்கின்றனர். ஆகவே, வேறொருவர் செய்கிற எல்லாவற்றையும் சாதிப்பதற்கு எதிர்பாராதேயுங்கள்.
21 நீங்கள் அடையக்கூடிய இலக்குகள் சில யாவை? நீங்கள் இன்னும் ஒரு பிரஸ்தாபியாக இல்லாமல் அல்லது இன்னும் முழுக்காட்டப்படாமல் இருந்தால், ஏன் அதை உங்களுடைய இலக்காக வைக்கக்கூடாது? நீங்கள் ஒரு பிரஸ்தாபியாக இருந்தால், ஒவ்வொரு வாரமும் ஊழியம்செய்ய ஒரு குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கிவைப்பதை நீங்கள் ஓர் இலக்காக வைக்கலாம். மறு சந்திப்புகளில் ஒரு திறமையான போதகராக ஆவதற்கு உழையுங்கள், ஒரு பைபிள் படிப்பு நடத்துவதை உங்களுடைய இலக்காக வையுங்கள். நீங்கள் பள்ளிக்குச் செல்லும் ஒரு முழுக்காட்டப்பட்ட இளைஞராக இருந்தால், கோடைகால மாதங்களில் துணைப் பயனியர் ஊழியம்செய்வதை நீங்கள் ஏன் ஓர் இலக்காக வைத்துக்கொள்ளக்கூடாது? “கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு அதிகம்” இருக்கிறது.—1 கொ. 15:58, NW.
22 பெற்றோரிடமிருந்து வரும் உதவி இன்றியமையாதது: சபையிலுள்ள இளைஞர், ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கான தங்களுடைய முயற்சிகளில் தாங்கள் தனிமையாய் இருப்பதாக ஒருபோதும் உணரக்கூடாது. யெகோவா தம்முடைய அமைப்பின் மூலமாக, அன்றாடக தீர்மானங்கள் செய்வதிலும் வாழ்க்கையிலுள்ள தடைகளை சமாளிப்பதிலும் இந்த இளைஞருக்கு உதவ ஆலோசனை கொடுத்திருக்கிறார். நிச்சயமாகவே, ஒப்புக்கொடுக்கப்பட்ட பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் சரியான தீர்மானங்களை செய்வதற்கு உதவிசெய்யும் முக்கியமான பொறுப்புடையவர்களாய் இருக்கிறார்கள். 1 கொரிந்தியர் 11:3-ல், பைபிள் கணவனை வீட்டின் தலையாக நியமிக்கிறது. ஆகவே கிறிஸ்தவ குடும்பத்தில், தன்னோடு நெருங்கிய விதமாக வேலைசெய்கிற மனைவியுடன், கடவுளுடைய கற்பனைகளைப் பிள்ளைகளுக்குப் போதிப்பதில் தகப்பன் முன்நின்று வழிநடத்துகிறார். (எபே. 6:4) இது சிசுப்பருவத்தில் ஆரம்பிக்கிற மனச்சாட்சிப்பூர்வமான பயிற்றுவிப்பின்மூலம் செய்யப்படுகிறது. முதல்வருட வாழ்க்கையின்போது குழந்தையினுடைய மூளையின் அளவு மூன்றுமடங்காக இருப்பதால், பெற்றோர் தங்களுடைய சிசுவின் கற்றுக்கொள்ளும் திறமையை ஒருபோதும் குறைவாக மதிப்பிடக்கூடாது. (2 தீ. 3:15, NW) பிள்ளைகள் வளர்ந்துவருகையில், யெகோவாவை நேசிப்பதற்கும் அவரோடு ஒரு நல்ல உறவை வளர்த்துக்கொள்வதற்கும் பெற்றோர் அவர்களுக்குப் படிப்படியாக போதிப்பது அவசியம்.
23 தங்களுடைய பிள்ளைகளுக்கு உதவிசெய்யக்கூடிய நடைமுறையான வழிகள் பெற்றோருக்கு அடிக்கடி காட்டப்பட்டிருக்கின்றன. பெற்றோருடைய ஒரு நல்ல முன்மாதிரி தொடங்குவதற்கான மிகச் சிறந்த இடமாகும். பிள்ளைகள் எதைச் செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பதைக் குறித்து அதிகநேரம் செலவழித்துப் பேசுவதைக் காட்டிலும், அவர்களுக்கு ஆவிக்குரிய விதமாக உதவிசெய்வதில் இது அதிகத்தைச் செய்யும். பெற்றோருடைய சிறந்த முன்மாதிரியை வைப்பதென்பது, வீட்டிலும் உங்களுடைய துணையிடமும் உங்களுடைய பிள்ளைகளிடமும் ஆவியின் கனிகளை வெளிப்படுத்திக் காட்டுவதை உட்படுத்தும். (கலா. 5:22, 23) பரிசுத்த ஆவி நல்லது செய்வதற்கு ஒரு பலமான செல்வாக்குச் செலுத்துவதாயிருக்கிறது என்று அநேகர் தங்களுடைய அனுபவங்களிலிருந்து கண்டிருக்கிறார்கள். அது உங்களுடைய பிள்ளைகளின் மனங்களையும் இருதயங்களையும் உருப்படுத்துவதற்கு உதவிசெய்யும்.
24 பெற்றோர் தங்களுடைய தனிப்பட்ட படிப்புப் பழக்கங்கள், கூட்டத்திற்கு ஆஜராதல், வெளி ஊழியத்தில் ஒழுங்காகப் பங்குகொள்ளுதல் போன்றவற்றிற்கும்கூட நல்ல முன்மாதிரியை வைக்கவேண்டும். வீட்டில் சத்தியத்தைக்குறித்து ஆர்வத்தோடு பேசுவதிலும், ஊழியத்தில் வைராக்கியமாக முன்நின்று வழிநடத்துவதிலும், தனிப்பட்ட படிப்பைக்குறித்து நம்பிக்கையாகவும் இருப்பீர்களானால், உங்களுடைய பிள்ளைகள் ஆவிக்குரிய காரியங்களில் உண்மையான அக்கறையெடுக்க உற்சாகப்படுத்தப்படுவார்கள்.
25 யோசனையுடன் தயார்செய்த, ஓர் ஒழுங்கான, அர்த்தமுள்ள குடும்பப் படிப்பு அக்கறையூட்டுவதாயும் அனுபவித்துக்களிக்கத்தக்கதாயும் இருக்கும். உங்களுடைய பிள்ளைகளின் இருதயத்தைச் சென்றெட்ட நேரமெடுத்துக்கொள்ளுங்கள். (நீதி. 23:15) அநேக குடும்பங்கள் இந்தச் சமயத்தை வாராந்தர காவற்கோபுர படிப்பைத் தயார்செய்வதற்குப் பயன்படுத்துகையில், அவ்வப்பொழுது குடும்பத்தின் குறிப்பிட்ட தேவையைக் குறித்து கலந்தாலோசிப்பது உற்சாகமூட்டுவதாய் இருக்கலாம். நோக்குநிலைக் கேள்விகளைக் கேட்டு, ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரின் குறிப்புகளுக்கும் செவிகொடுப்பது அறிவொளியூட்டுவதாயும் புத்துணர்ச்சியளிப்பதாயும் இருக்கும். அந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் பயன்பெறக்கூடிய வகையில் படிப்பை நடத்துவது குடும்பத் தலைவருக்கு உண்மையில் ஒரு சவாலாக இருக்கிறது. ஆனால் அனைவரும் ஆவிக்குரிய விதமாக வளரும்போது எவ்வளவு பலனளிப்பதாயிருக்கும்! அனைவரையும் உட்படச் செய்வதன்மூலம், ஒரு மகிழ்ச்சியான ஆவி நிலவும்.
26 இப்பொழுது உங்களுடைய அன்பான, தனித்தன்மை வாய்ந்தப் பயிற்சி, உங்களுடைய பிள்ளைகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு இன்றியமையாததாகும். (நீதி. 22:6) இதை மனதிற்கொண்டு, நீங்கள் எக்காலத்திலும் செய்யப்போகிறவற்றைவிட மிகவும் முக்கியமான போதனையாக இது இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வது சுலபம். விசேஷித்ததும் முக்கியமானதுமான இந்த வேலையில் நீங்கள் தன்னந்தனியாக இருக்கிறீர்கள் என்று ஒருபோதும் நினைக்கவேண்டாம். உங்களுடைய குடும்ப உத்தரவாதங்களைக் கவனிப்பதற்கு வழிநடத்துதலுக்காக பலமாக யெகோவாவின்மீது சார்ந்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எல்லாம் அது மாத்திரமே அல்ல. அதிக உதவியளிப்பவர்களாயிருக்கிற மற்றவர்களும்கூட இருக்கிறார்கள்.
27 உதவிசெய்ய மற்றவர்கள் என்ன செய்யலாம்: மூப்பர்களே, ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வதில் அவர்களுடைய பெற்றோரோடுகூட, இளைஞரையும் சேர்த்துக்கொள்ள விழிப்புடனிருங்கள். சபைக் கூட்டங்களில் பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள். ஊழியக் கூட்டத்தின் பாகங்களுக்கு நியமிக்கப்பட்ட மூப்பர்களும் உதவி ஊழியர்களும் சபையார் பங்கெடுப்பிற்கான பாகங்கள் இருக்கும்பொழுது உயர்த்தப்படுகிற பிள்ளைகளின் கைகளைக் கவனிக்கவேண்டும். முன்மாதிரியாயுள்ள இளைஞரைத் தங்களுடைய பெற்றோருடன் நடிப்புகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பாருங்கள். சிலரைப் பேட்டிகண்டு, சுருக்கமான குறிப்புகள் சொல்லும்படி செய்யலாம்.
28 அவர்களுடைய முயற்சிகளை ஏனோதானோ என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். இளைஞர் சபைக்கு ஓர் உண்மையான சொத்தாக நிரூபித்திருக்கிறார்கள். அவர்களுடைய சிறந்த நடத்தையின்மூலம், அநேகர் ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய போதனையை அலங்கரித்திருக்கிறார்கள்.’ (தீத். 2:6-10) குறைந்தளவிலும்கூட பங்குகொள்கிற இளைஞரைப் போற்றுவதன் அவசியத்தைக்குறித்து உணர்வுடனிருங்கள். இது, அவர்கள் தயார்செய்யவும் எதிர்காலத்தில் அதை மீண்டும் செய்வதற்கு ஆசைகொள்ளவும் உற்சாகப்படுத்துகிறது. முதிர்ந்தவர்களின் இப்படிப்பட்ட அக்கறை மதிப்பிடமுடியாதது; அது விலையேறப்பெற்றது. ஒரு மூப்பர் அல்லது ஓர் உதவி ஊழியரையராக, கூட்டத்தில் சபையின் இளைஞர் கொடுக்கும் பேச்சு அல்லது ஒரு பிரசங்கத்துக்காக அவர்களைப் போற்றுவதற்கு நீங்கள் எவ்வளவு அடிக்கடி அணுகியிருக்கிறீர்கள்?
29 பயனியர்களே, உதவிசெய்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? பிற்பகல் நேரங்கள் மற்றும் வார இறுதி நாட்களுக்கான உங்களுடைய ஏற்பாடுகளில் பள்ளிப் பிள்ளைகளை எவ்வாறு உட்படுத்தலாம் என்பதைப் பார்ப்பதற்கு ஏன் உங்களுடைய அட்டவணையை மறுபார்வைசெய்யக்கூடாது? உங்களுடைய முழு-நேர சேவையின் தெரிவைப்பற்றி நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசுகிறீர்களா? உங்களுடைய ஊழியத்தில் நீங்கள் உற்சாகத்தைக் காண்கிறீர்கள் என்பதை உங்களுடைய முகபாவத்தில் காட்டுகிறீர்களா? விசேஷமாக இளைஞருக்கு நீங்கள் அதை உடனடியாக சிபாரிசு செய்கிறீர்களா? வீட்டுக்கு வீடு வேலைசெய்கையில், உங்களுடைய பேச்சு கட்டியெழுப்புவதாயும் நம்பிக்கையூட்டுவதாயும் இருக்கிறதா? அப்படியானால், பயனியராக நீங்களும்கூட இந்த அனைத்து முக்கியத்துவமுடைய பயிற்சி நடவடிக்கையில் பங்குகொண்டுவருகிறீர்கள்.
30 சபையிலுள்ள அனைவரும் இளைஞரைப் பயிற்றுவிப்பதன் இந்த முக்கியமான வேலையை நன்கு அறிந்திருக்கவேண்டும். அவர்களோடு வெளி ஊழியத்தில் வேலைசெய்வதற்கு நீங்கள் நிச்சயமான ஏற்பாடுகளைச் செய்யமுடியுமா? வீட்டுக்கு வீடு வேலைக்காக தயார்செய்வதில் நீங்கள் அவர்களுடன் பிரசங்கத்தைப் பழக்கிப்பார்க்க முடியுமா? ஊழியத்தில் ஒன்றாகச்சேர்ந்து வேலைசெய்யும்போது எதிர்கால ஆவிக்குரிய நடவடிக்கைகளுக்காக உற்சாகப்படுத்துவதற்கான வாய்ப்புகளுக்கு நீங்கள் விழிப்புடனிருக்கிறீர்களா? ஒரு சிறிய குறிப்பும் நீடித்த கால ஆவிக்குரிய இலக்குகளிடமாக, இளைஞருடைய என்றென்றுமான நன்மைக்கு, நம்பிக்கையான எண்ணங்களைப் பிறப்பிக்கும் என்பதை ஒவ்வொரு பிரஸ்தாபியும் அறிந்திருக்கவேண்டும்.
31 இளைஞரே தங்களுக்கு உதவியளிக்கலாம்: இளைஞரே, யெகோவாவின் போதனைகளுக்குத் தொடர்ந்து செவிசாய்த்து இந்த உலகம் அளிப்பதைத் தள்ளிவிடுவதற்கு உங்கள் ஒவ்வொருவரையும் நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். உங்களுடைய நடத்தையையும் உள்ளுணர்ச்சிகளையும் சோதித்துப் பார்ப்பதன்மூலம் தொடர்ந்து உங்களையே பரிசோதித்துக் கொள்ளுங்கள். யெகோவாவினிடமாகவும் ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் அவர் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதினிடமாகவும் உங்களுடைய மனநிலை என்ன? சாத்தானுடைய எண்ணங்களின் செல்வாக்குக்கு எதிராக கடினமானப் போராட்டத்தை நீங்கள் செய்துவருகிறீர்களா? (1 தீ. 6:12) மனிதர், விசேஷமாக இளைஞர், இயல்பாகவே தங்களுடைய சகாக்களின் அங்கீகாரத்தைப் பெற விரும்புவதால், தீமையானதைச் செய்வதில் பெரும்பான்மையானோரைப் பின்பற்றத் தூண்டப்படுவதாக உங்களை நீங்கள் காண்கிறீர்களா? (யாத். 23:2) உலக வழிகளுக்கு இணங்கிச்செல்வதற்கான பெரிய அழுத்தம் இருக்கிறது என்பதை அப்போஸ்தலன் பவுல் புரிந்திருந்தார்.—ரோ. 7:21-23.
32 உலகின் செல்வாக்கை எதிர்த்து நிற்பதற்கும், உலகப்பிரகாரமான சகாக்களிலிருந்து வித்தியாசமானப் போக்கைப் பின்பற்றுவதற்கும், கடவுளுடைய போதனைகளுக்குச் செவிசாய்ப்பதற்கும் தைரியம் தேவைப்படுகிறது. பூர்வகால மனிதர் பேரளவான வெற்றியுடன் அவ்விதமாகச் செய்தார்கள். நோவாவின் தைரியத்தைச் சிந்தித்துப் பாருங்கள். அவர் தன்னுடைய விசுவாசத்தின் மூலமும் அவருடைய நாளிலிருந்த தீமைசெய்பவர்களிலிருந்து பிரிந்திருப்பதன் மூலமும் முழு உலகையும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். (எபி. 11:7) கடினமான போராட்டத்தைப் போராடுங்கள், ஏனென்றால் முயற்சிசெய்வது பயனுள்ளது. சாத்தானுடைய கூட்டத்தினரைப் பின்பற்றுகிற பலவீனமான, உறுதியற்ற, பயப்படுகிறவர்களின் முன்மாதிரியை பின்பற்றாதேயுங்கள். மாறாக, யெகோவாவின் கண்களில் தயவைக் கண்டடைகிறவர்களின் கூட்டுறவை நாடித்தொடருங்கள். (பிலி. 3:17) கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகிற்குள் செல்ல உங்களுக்கு அருகருகே நின்று ஓடவிருக்கிற கூட்டாளிகளோடு உங்களை வைத்துக்கொள்ளுங்கள். (பிலி. 1:27) நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற பாதை ஒன்றே என்பதை மனதிற்கொள்ளுங்கள்.—மத். 7:13, 14.
33 நம்முடைய கடவுளுக்குத் துதியையும் கனத்தையும் கொண்டுவருகிற இளைஞரைக் காண்பதில் நாம் சந்தோஷத்தைக் கண்டடைவோமாகில், அவருக்கு இது எவ்வளவு சந்தோஷத்தைக் கொண்டுவரவேண்டும்! அவருடைய மகத்தான நோக்கங்களை அறிவிப்பதில் முழுமையாக பங்குகொள்கிற இளைஞரைக் காண்பதில் யெகோவா மகிழ்ச்சியடைகிறார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. அவர்கள் அவரிடமிருந்து வரும் ‘சுதந்தரமாக’ இருக்கிறார்கள், மேலும் அவர்களுக்கான மிகச் சிறந்ததையே அவர் விரும்புகிறார். (சங். 127:3-5; 128:3-6) அவருடைய தகப்பனின் அக்கறையைப் பிரதிபலித்து, இளம் பிள்ளைகளோடு கூட்டுறவுகொள்வதில் கிறிஸ்து இயேசு அதிக சந்தோஷத்தைக் கண்டடைந்தார். யெகோவாவுக்கான அவர்களுடைய வணக்கத்தில் அவர்களை உற்சாகப்படுத்த அவர் நேரமெடுத்துக்கொண்டார். அவர்களுக்காக கனிவான பாசத்தை அவர் வெளிக்காட்டினார். (மாற். 9:36, 37; 10:13-16) நம்முடைய இளைஞரை யெகோவாவும் கிறிஸ்து இயேசுவும் நோக்குகிற அதே விதமாக நாம் நோக்குகிறோமா? யெகோவாவும் தேவ தூதர்களும் இளைஞருடைய உண்மைப் பற்றுறுதியையும் நல்ல முன்மாதிரியையும் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதை நம்முடைய இளைஞர் அறிந்திருக்கிறார்களா? ஆவிக்குரிய இலக்குகளை அடைவதன்மூலம் யெகோவாவை மகிழ்விப்பதற்கு அவர்கள் போற்றப்படவும் உற்சாகப்படுத்தப்படவும் வேண்டும். இளைஞரே, இப்பொழுதும் எதிர்காலத்திலும் உங்களுக்கு ஆசீர்வாதங்களில் விளைவடையும் இலக்குகளைப் பின்தொடருங்கள்.