பெத்தேல் சேவை—கூடுதலான வாலண்டியர்கள் தேவை
1 இந்தக் கடைசிநாட்களில் யெகோவா செய்துகொண்டிருக்கும் மிகப்பெரிய வேலையைக் காண்பதில் நாம் கிளர்ச்சியடைகிறோம். இந்தக் காலத்தின்போது, கடவுளுடைய ஜனங்களின் தனிச்சிறப்பான பண்பு, ராஜ்ய சேவையில் சுறுசுறுப்பான பங்கைக் கொண்டிருப்பதற்கு தங்களையே மனமுவந்து அளிப்பது என்று சங்கீதம் 110:3 குறிப்பிடுகிறது. ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு பூமிமுழுவதும் யெகோவாவின் ஜனங்கள் தங்களையே அளிக்கின்றனர். அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகம், பக்கம் 295-ல் இவ்வாறு குறிப்பிடுகிறது: “சிலர் உலகளாவிய பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர்களாக சேவிக்கின்றனர். இது பைபிள் பிரசுரங்களை தயாரிப்பது மற்றும் பிரசுரிப்பது, அவசியமான அலுவலக வேலையைக் கவனித்துக்கொள்வது, அவற்றை ஆதரிப்பதற்குத் தேவைப்படும் வேலைகளைச் செய்வது போன்றவற்றின் சம்பந்தமாக நியமிக்கப்பட்டிருக்கும் வேலைகளை செய்வதற்கு தங்களையே மனமுவந்து அளித்திருக்கும் முழு-நேர ஊழியர்கள் அடங்கிய அலுவலர் குழுவாகும். இது தனிப்பட்டவிதமாக முதன்மைநிலை அடைவதற்காகவோ அல்லது பொருளாதார உடைமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவோ செய்யப்படும் வேலை அல்ல. யெகோவாவை கனப்படுத்துவதே அவர்களுடைய விருப்பம்; உணவு, தங்குமிடம், தனிப்பட்ட செலவுகளுக்காகக் கொடுக்கப்படும் எளிய தொகை போன்ற ஏற்பாடுகளில் திருப்தியடைகின்றனர்.” நீங்கள் பெத்தேலை சென்று பார்த்திருந்தீர்கள் என்றால், அங்கு செய்யப்படும் வேலையைக் குறித்து ஏற்கெனவே ஓரளவு அறிந்திருப்பீர்கள். இருப்பினும், இந்த தனித்தன்மைவாய்ந்த ஊழிய சிலாக்கியத்துக்கான உங்களுடைய போற்றுதலை அதிகரிப்பதற்கும் சங்கத்தின் தேவைகளைக் குறித்து நீங்கள் அறிந்திருப்பதற்கும் நாங்கள் கூடுதலான தகவலை அளிக்க விரும்புகிறோம்.
2 பெத்தேல் சேவையின் முக்கியத்துவத்தையும் அதன் பெரும் மதிப்புவாய்ந்த ஆரம்பத்தையும் சரியான விதத்தில் நோக்குவதற்கு நாம் சரித்திரத்தை—யெகோவாவின் அமைப்பின் சில பண்டையகால மற்றும் சில நவீனநாளைய சரித்திரத்தை—சிறிது ஆராய்வோமாக. சுமார் 19 ஆண்டுகளாக உவாட்ச் டவர் சொஸைட்டி அதன் தலைமையகத்தை 56-60 ஆர்ச் தெரு, அலகெனி, பென்ஸில்வேனியா என்ற இடத்தில் ஒரு நான்கு-மாடி செங்கல் கட்டடத்தில் கொண்டிருந்தது. அது பைபிள் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது. என்றபோதிலும், 1908-க்குள்ளாக, பைபிள் ஹவுஸ் குடும்பத்தினர் அல்லது சங்கத்தின் தலைமையக அலுவலர்கள் 30-க்கும் மேற்பட்ட அங்கத்தினர்களாக அதிகரித்திருந்தனர். அது விரிவாக்குவதற்கான சமயமாய் இருந்தது. தெய்வீக வழிநடத்துதலை நாடின பின்பு, இந்த வேலைக்கு புருக்லின் மிகவும் தகுதியான ஒரு மையமாக இருக்கும் என்று சகோதரர்கள் தீர்மானித்தனர். ஆகையால் புருக்லினில் 13-17 ஹிக்ஸ் தெருவில் ஒரு கட்டடம் வாங்கப்பட்டது. அது சங்கத்தின் அலுவலகங்களையும் ஒரு அரங்கத்தையும் கொண்டிருந்தது. இந்த அலுவலகங்கள் ஜனவரி 31, 1909-ல் திறக்கப்பட்டன, ஆனால் இந்த ஹிக்ஸ் தெரு கட்டடத்தின் பாகமாக குடியிருப்பு வசதிகள் இல்லை. குடியிருப்பு வசதிகளை வாடகைக்கு எடுக்கலாம் என்று முதலில் நினைத்தனர். இருப்பினும், புருக்லின் ஹைட்ஸ் பிராந்தியத்தில் இருந்த எந்த வீடும் வாடகைக்காக கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் ஆச்சரியமும் சந்தோஷமும் அடையும்விதத்தில் காரியங்கள் நடந்தன, சகோதரர்கள் ஒரு நான்கு-மாடி ப்ரௌன்ஸ்ட்டோன் கட்டடத்தை 124 கொலம்பியா ஹைட்ஸ்-ல் “குறைந்த விலையில்” வாங்கினார்கள். அது ஹென்ரி வார்ட் பீச்சர் என்பவருடைய முன்னாள் வீடாக இருந்தது. அதோடுகூட, 126, கொலம்பியா ஹைட்ஸ் கட்டடமும் கிடைப்பதாய் இருந்தது. மார்ச் 1, 1909, ஆங்கில காவற்கோபுரம் சந்தோஷமாக அறிவித்தது: “பைபிள் ஹவுஸ்” என்ற பிட்ஸ்பர்க் பதத்துக்கு பதிலாக, “நாம் இப்புதிய வீட்டை பெத்தேல் என்று அழைப்போம்.” ஆகையால் ஏப்ரல் 1909-ல் பெத்தேல் அதன் வேலையை ஆரம்பித்தது, பெத்தேல் குடும்பம் அதன் புதிய வீட்டுக்குள் சென்றது. புருக்லின் பெத்தேல் இதே இடத்தில் 86 வருடங்களாக இருந்து வருகிறது.
3 சங்கத்தின் தலைமையகத்திற்கு பெத்தேல் ஒரு பொருத்தமான பெயராக இருந்ததா? அந்தப் பெயரின் பைபிள் மூலத்தையும் அதன் தொடர்புகளையும் சிந்தித்துப் பாருங்கள். 3,700 வருடங்களுக்கு முன்பாகச் சென்றால், ஆதியாகமம் 28-ஆம் அதிகாரம், விவாகமாகாத 77 வயதாயிருந்த யாக்கோபின் அனுபவத்தைக் கூறுகிறது. யாக்கோபு பரிசுத்த காரியங்களின் பேரில் போற்றுதல் காண்பித்தார், ஆனால் தன் இரட்டைச் சகோதரனாகிய ஏசாவால் வெறுக்கப்பட்டார். அவருடைய தகப்பனாகிய ஈசாக்கின் ஆலோசனையின்படி, யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு வடக்கே ஆபிரகாமின் உறவினர்களின் தேசத்துக்கு சென்று, அவர்கள் மத்தியில் ஒரு மனைவியைக் கண்டடைய நோக்கம் கொண்டிருந்தார். சுமார் 100 கிலோமீட்டர் பிரயாணம் செய்தபின்பு, யூதேயாவின் மலைகளிலிருந்த லூஸ் என்ற இடத்தில் யாக்கோபு இராத்தங்க விரும்பினார். யெகோவா எவ்வாறு யாக்கோபுக்கு தெய்வீக ஆதரவு கொடுப்பதாக முழு உறுதி அளித்தார் என்பதைப் பற்றிய மனதைக் கவரும் விவரங்களை நாம் ஆதியாகமம் 28:10-19-ல் வாசிக்கிறோம். யாக்கோபு ஒரு சொப்பனத்தில் ஒரு ஏணி பூமியிலிருந்து பரலோகம் வரை நீட்டப்பட்டிருப்பதைக் கண்டார். அந்த ஏணியிலே தேவதூதர்கள் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள், அதற்கு மேல் யெகோவா நின்றுகொண்டிருந்தார். பிறகு யெகோவா பேசினார், ஒரு வித்தைக் குறித்து ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி யாக்கோபுக்கு கடத்தப்பட்டது என்றும் யெகோவா அவரைக் கைவிட மாட்டார் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். இது ஆவிக்குரிய-மனமுள்ள யாக்கோபுக்கு என்னே ஒரு பயத்தை-தோற்றுவிக்கும் அனுபவமாக இருந்தது! இது அவருடைய கண்களில் அதிக விசேஷித்த இடமாக ஆனதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டுமா? அவருக்கு இந்த இடம் ‘கடவுளுடைய வீடாக’ இருந்தது, அல்லது, எபிரெய மொழியில், பெத்-எல், பெத் என்பதற்கு “வீடு” என்றும் எல் என்பதற்கு “கடவுள்” என்றும் அர்த்தம்.—ஆதியாகமம் 28:19, NW அடிக்குறிப்பு.
4 இவ்வாறு, பெத்தேல் என்ற பெயர் ஒரு சிறப்புமிக்க சரித்திரப் பின்னணியைக் கொண்டிருக்கிறது, ஆகவே யெகோவாவின் ஜனங்களுடைய உலக தலைமையகத்துக்கு அந்தப் பெயர் பொருத்தமானதாய் உள்ளது. இன்று கடவுளுடைய ஊழியர்கள் தெய்வீக ஏவுதலினால் சொப்பனங்களைக் காண்பதில்லை. தேவதூதர்கள் ஒரு ஏணியில் பெத்தேலிலிருந்து பரலோகத்துக்கு ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருப்பதைக் காண்பதில்லை. சகோதரர்கள் தரிசனங்களைக் காண்பதில்லை அல்லது கடவுளுடைய குரலை நேரடியாக கேட்பதில்லை. இருப்பினும், சகோதரர் ரஸல் காலத்திலிருந்து இன்று வரை, கடந்த 86 வருடங்களாக பெத்தேலில் நடந்திருக்கும் எல்லா காரியங்களையும் சிந்தித்துப் பார்க்கையில், பெத்தேலில், ஆபிரகாமின் ஆவிக்குரிய வித்தின் பாகமாயிருக்கும் அபிஷேகம்செய்யப்பட்ட ஊழியர்களின் பேரில் யெகோவாவின் வழிநடத்துதல் இருந்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆகையால் நவீன-நாளைய யெகோவாவின் சாட்சிகளின் சரித்திரத்தில் அநேக முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் புருக்லின் பெத்தேலோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கின்றன! சில சிறப்பு அம்சங்களை சிந்தித்துப் பாருங்கள்:
◼ அக்டோபர் 2, 1914-ல் சகோதரர் ரஸல் பெத்தேல் சாப்பாட்டு அறைக்குள் நுழைந்தபோது, திருத்தமாக அறிவித்தார்: “புறஜாதியாரின் காலங்கள் முடிவடைந்து விட்டன; அவர்களுடைய ராஜாக்களின் காலம் முடிவடைந்து விட்டது.”
◼ 1920-களின் ஆரம்பத்தில், காலை வணக்கத்தின்போது சங்கத்தின் கட்டுரை ஆசிரியர் ஒருவர் “கடவுளுடைய அமைப்பு” என்ற ஒரு சொற்றொடரை பயன்படுத்தினார். இது அவர்களுடைய சிந்தனையை அவ்வளவாகத் தூண்டியதால் 1925-க்குள்ளாக சகோதரர்கள் இரண்டு வித்தியாசமான, ஒன்றையொன்று எதிர்க்கும் அமைப்புகள் இருக்கின்றன, ஒன்று யெகோவாவின் அமைப்பு, மற்றொன்று சாத்தானின் அமைப்பு என்பதைக் காண ஆரம்பித்தனர்.—w-TL85 11/1, பக். 19.
◼ 1931-ம் வருடத்தில் ஒரு நாள் அதிகாலையில், கொலம்பஸ், ஒஹையோ, மாநாட்டுக்கு சற்றுமுன்பு, சங்கத்தின் தலைவரான சகோதரர் ரதர்ஃபர்ட், யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் உண்மையிலேயே கடவுளுடைய ஜனங்களையும் அவருடைய சாட்சிகளாக அவர்கள் ஏற்கெனவே செய்துகொண்டிருந்த வேலையையும் உண்மையிலேயே விவரித்தது என்றும் அவர்கள் அவருடைய சாட்சிகளாக அறியப்பட வேண்டும் என்றும் தெளிவாக உணர்ந்துகொண்டார்.—yb75 பக். 151.
◼ 1935-ம் ஆண்டின் ஆரம்பத்தில் “திரள் கூட்டம்” அல்லது “பெருந்திரளான மக்கள்” யார் என்பதைப் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. (வெளிப்படுத்துதல் 7:9 KJ) அவர்கள் ஒரு பூமிக்குரிய வகுப்பார் என்று அந்த சமயத்தில் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாகச் சொன்னவர்களில் சிலர் கூறினர். மே 31, 1935-ல் வாஷிங்டன், டி.சி.-யில் நடைபெற்ற மாநாட்டில், ஒரு திருப்திகரமான பதில் கொடுக்கப்பட்டது.—jv பக். 166.
5 பெத்தேலில் உள்ள தம்முடைய உண்மையுள்ள அபிஷேகம்செய்யப்பட்ட ஊழியர்களுக்கு யெகோவா எவ்வாறு தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் வழிநடத்துதலையும் ஆதரவையும் கொடுத்திருக்கிறார் என்பதை இந்த உதாரணங்களில் சில எடுத்துக் காண்பிக்கின்றன. தேவதூதர்களைப் பற்றியென்ன? நம்முடைய விரோதிகளிடமிருந்து வந்த எல்லா கடுமையான எதிர்ப்பையும் வள ஆதாரங்கள் குறைவாக இருந்த கடினமான வருடங்களையும் நீங்கள் சிந்தித்துப் பார்த்தால், தேவதூதர்களின் பாதுகாப்பும் உதவியுமின்றி பெத்தேல் இத்தனை ஆண்டுகள் சிறப்பானவிதத்தில் இயங்கியிருக்க முடியாது என்பதில் சந்தேகமில்லை.
6 ஐக்கிய மாகாணங்களில் உள்ள தலைமையக அலுவலர்களைத் தவிர, லோனாவ்லாவில் ஒன்று இருப்பதைப் போன்று உலகமுழுவதும் 100 கிளை அலுவலகங்களில் பெத்தேல் குடும்பங்கள் பரவியிருக்கின்றன. நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல், பக்கம் 116, குறிப்பிடுகிறது: “பெத்தேல் என்ற பெயர் . . . தேவாட்சி வேலைக்குரிய இந்த மையங்களுக்கு நிச்சயமாகவே பொருத்தமாயிருக்கிறது.” என்ன வகையான வேலைகளை பெத்தேல் வாலண்டியர்கள் செய்யும்படி நியமிக்கப்படுகின்றனர்?
7 பல்வகைப்பட்ட வேலைகள்: பெத்தேல் குடும்பத்திலுள்ள அங்கத்தினர்களுக்குக் கொடுக்கப்படும் வேலை நியமனங்கள் பல்வகைப்பட்டவையாய் உள்ளன. புருக்லினிலும் இந்தியா உட்பட மற்ற அநேக கிளை அலுவலகங்களிலும், சில சகோதரர்கள் புத்தகங்கள், (சில கிளை அலுவலகங்களில் பைபிள்கள்,) பத்திரிகைகள், சிற்றேடுகள், துண்டுப்பிரதிகள் ஆகியவற்றை அச்சடித்து உலகமுழுவதும் விநியோகிப்பதற்காக அச்சாலைகளில் வேலை செய்கின்றனர். மற்றவர்கள் பைபிள்களையும் புத்தகங்களையும் பைண்ட் செய்யும் வேலையில் பங்குகொள்கின்றனர், இன்னும் சிலருடைய வேலைகள் பூமிமுழுவதிலுமுள்ள சபைகளுக்கு இந்தப் பிரசுரங்களை அனுப்புவது உட்பட்டிருக்கிறது. அநேக பெத்தேல் அங்கத்தினர்கள் சாதனங்களையும் கட்டடங்களையும் பராமரிப்பதற்கு நியமிக்கப்படுகின்றனர். பெத்தேல் வீட்டில், குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதில் ஏராளமான வேலைகள் உட்பட்டிருக்கின்றன. உதாரணமாக, புருக்லின் பெத்தேலில் 20 நிமிடங்களுக்குள்ளாக காலை உணவு சுமார் 3,700 பேருக்கு 12 சாப்பாட்டு அறைகளில் பரிமாறப்படுகிறது. சலவைச்சாலையில் சகோதரர்களும் சகோதரிகளும் ஒவ்வொரு வாரமும் 13,000 ஷர்ட்டுகள் உட்பட 16,000 கிலோ துணிகளை சலவை செய்கின்றனர். கூடுதலாக, புருக்லினில் 21 குடியிருப்பு கட்டடங்களில், அதைப் பராமரிப்பதற்காக அமர்த்தப்பட்டிருப்பவர்கள் சுத்தம் செய்வதில் ஒரு உயர்வான தராதரத்தைக் கடைப்பிடிக்கின்றனர், மேலும் மற்ற அநேக முக்கியமான வேலைகளையும் கவனித்துக் கொள்கின்றனர். அதே வசதிகள் இந்தியாவில் உள்ள 230 பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களுக்கு செய்து தரப்படுகின்றன.
8 தகுதிகளும் தேவைகளும்: இந்த வேலையைச் செய்வதற்கு சரீர சக்தியும் பலமும் தேவைப்படுவதால், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் விவாகமாகாத இளம் ஆண்கள் தற்போது தேவைப்படுகின்றனர். பெத்தேல் சேவைக்கு விண்ணப்பிப்பதற்கு ஒரு இளம் ஆண் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டு ஒரு வருடமாவது ஆகியிருக்க வேண்டும். அவர் பக்தியுள்ள ஆவிக்குரிய நபராக இருக்க வேண்டும். மேலும், அவர் கடினமான வேலை செய்வதற்கு விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும். கடின உழைப்பு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்று இன்று உலகில் அநேகர் கருதுகின்றனர். ஆகையால் பெத்தேல் சேவைக்கு விண்ணப்பிக்கும் இளம் ஆண் கடினமாக உழைக்க வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக்கொள்ளும் அளவுக்கு புதிய ஆள்தன்மையைத் தரித்துக்கொள்ள வேண்டும், தன் கைகளினால் நலமான வேலை செய்து பிரயாசப்பட வேண்டும். (எபேசியர் 4:28-ஐ ஒப்பிடுக.) அப்படியென்றால், தனிப்பட்ட இன்பங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவற்றை நாடித்தேடுவதன் பேரில் தன் மனதை வைத்திருக்கும் ஒரு நபராக இருக்கக்கூடாது. பெத்தேல் சேவையைப் பற்றி சிந்தித்துப் பார்க்கையில், அவர் ஏற்கெனவே இளைஞருக்குரிய அப்படிப்பட்ட பண்புகளை விட்டிருக்க வேண்டும். 1 கொரிந்தியர் 13:11-ல் சொல்லப்பட்டிருக்கும் பவுலின் வார்த்தைகள் நன்றாகப் பொருந்துகின்றன: “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.”
9 நீங்கள் 19 மற்றும் 35 வயதுக்குட்பட்டவர்களாய் இருக்கிறீர்களா? நீங்கள் சரீரப்பிரகாரமாகவும் உணர்ச்சிப்பிரகாரமாகவும் நல்ல ஆரோக்கியத்தை உடையவர்களாய் இருக்கிறீர்களா? உங்களுக்கு கொஞ்சமாவது ஆங்கிலம் பேசத் தெரியுமா? நீங்கள் யெகோவாவின் பேரிலும் அவருடைய அமைப்பின் பேரிலும் ஆழ்ந்த அன்பையுடைய ஒரு ஆவிக்குரிய நபரா? பெத்தேலுக்கு அழைக்கப்பட்டால், கொடுக்கப்படும் எந்த வேலையையும் செய்து நீங்கள் அந்த சேவையில் உண்மைத்தன்மையோடு ஒரு வருடமாவது இருப்பீர்களா? நீங்கள் இந்தக் கேள்விகளுக்கு ஆம் என்று பதிலளித்தீர்கள் என்றால், பெத்தேல் சேவை என்ற இந்த தனிச்சிறப்பு வாய்ந்த சிலாக்கியத்தை சிந்தித்துப் பார்க்கலாம். ஆசீர்வாதங்கள் ஏராளம்.
10 பெத்தேல் சேவையின் ஆசீர்வாதங்கள்: காவற்கோபுரம் ஜூன் 15, 1994 இதழில், “‘கடவுளுடைய வீட்டை’ போற்றுதல் மனப்பான்மையோடு நோக்குதல்” என்ற கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “அசெம்பிளிக்குப் போயிருக்கையில் யெகோவாவைச் சேவிக்கும் சந்தோஷமான வணக்கத்தார்களால் சூழப்பட்டு இருப்பதால், ஒருவிதமான ஆழமான திருப்தியடைந்த உணர்வை நீங்கள் அடைகிறீர்களா? இப்போது கற்பனை செய்துபாருங்கள், ஒரு பெத்தேல் ஊழியர், சகோதரத் தொகுதியின் மத்தியில் யெகோவாவைச் சேவிக்கும் சிலாக்கியத்தை ஒவ்வொரு நாளும் பெறுகிறார்! (சங்கீதம் 26:12) ஆவிக்குரிய வளர்ச்சிக்கான என்னே சிறந்த எதிர்பார்ப்புகளை அது கொடுக்கிறது! ஒரு சகோதரர் தன் ஆளுமையை உருவமைப்பதற்கு பெத்தேலில் ஒரு வருடத்துக்குள் அதிகத்தை கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார், அதைச் செய்ய அவருக்கு வேறு இடத்தில் மூன்று வருடம் எடுத்தது. ஏன்? வேறு எங்கும் அவர் முதிர்ச்சியான அத்தனை கிறிஸ்தவ ஆளுமைகளின் விசுவாசத்தைக் கவனித்துப் பின்பற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை.” (நீதிமொழிகள் 13:20) இது உண்மையிலேயே பெத்தேல் சேவையின் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஆசீர்வாதங்களில் ஒன்றாக உள்ளது.
11 பெத்தேலில் சேவை செய்யும் வாலண்டியர்கள் கிளை அலுவலகக் குழு அங்கத்தினர்களோடும் மற்ற நெடுநாளைய உண்மைத்தன்மையுள்ள சகோதரர்களோடும் நெருக்கமான கூட்டுறவை அனுபவிக்கின்றனர். ஒருவருக்கு எந்த வேலை நியமிப்பு இருந்தாலும், அப்படிப்பட்ட விசுவாசமுள்ள உண்மைத்தன்மையுள்ள தோழர்களோடு ஒற்றுமையாக வேலை செய்வது ஒரு ஆசீர்வாதம். இந்த அருமையான சிலாக்கியத்தில் பங்கு கொள்பவர்களின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கிற புருக்லின் பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களுடைய சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன:
◼ பெத்தேல் சேவையில் 62 வருடங்கள் பல்வேறு நியமனங்களை பல வருடங்களாகச் செய்திருக்கும் ஒரு சகோதரர், பெத்தேலில் காணப்படும் மனப்பான்மையைப் பற்றி குறிப்பிட்டார்: “நாம் அனைவரும் ஒரே குடும்பத்தார்; நாம் எல்லாரும் சகோதரர்கள். நாம் ஒன்றாக சேர்ந்து வேலை செய்கிறோம். நம்மெல்லாருக்கும் நமக்குரிய வேலைகள் இருக்கின்றன. சகோதரர்கள் கடினமாக உழைப்பதைப் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது; அவர்கள் எடுக்கும் முயற்சியை நீங்கள் காணலாம். தரையைப் பெருக்கும் சகோதரர்கள் இருக்கிறார்கள். நீங்கள் இடத்தை சுத்தமாக வைத்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறீர்கள். நீங்கள் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்போது, குடும்பத்தார் நல்ல பலன்தரக்கூடிய வேலைகளை செய்கின்றனர். அது இன்றியமையாதது. அலுவலகத்தில் ஆட்களைக் கொண்டிருப்பது முக்கியமானது. நாம் எல்லாருமாக சேர்ந்து விளைவை ஏற்படுத்துகிறோம்—உலகமுழுவதும் ராஜ்ய சாட்சி பகருதல். யெகோவாவுக்கு சேவை செய்வதை ஒரு வாழ்க்கைத் தொழிலாக ஆக்கிக்கொள்வதற்கு இதுவே உலகில் மிகச்சிறந்த இடம். நீங்கள் முழு-நேர சேவையில் இருக்க விரும்பினால், நீங்கள் அதைச் சிறந்த முறையில் இங்கு செய்யலாம். உங்களுக்கு எல்லாம் கிடைக்கிறது. நாங்கள் இங்கு கூடுதலானவற்றை அனுபவிக்கிறோம். பூமியின் எல்லா முனைகளிலுமிருந்தும் நீங்கள் செய்தி பெற்றுக்கொள்வதால் நீங்கள் அமைப்பை நன்றாக காணமுடிகிறது.”
◼ புத்தகம் பைண்ட் செய்யும் இலாக்காவில் சுமார் 48 வருடங்களுக்கு முன்பு தனது முதல் வேலை நியமிப்பைப் பெற்ற 75 வயது நிரம்பிய அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர் ஒருவர் கூறினார்: “ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் ஊழியர்கள் மத்தியில் வாழ்வது ஒரு அருமையான அனுபவம். ஒரு இளம் மனிதன் பெத்தேலில் சேவை செய்ய வருவதைக் காணும்போது, யெகோவாவுக்கு நன்றிசெலுத்துவதால் என் இருதயம் பூரிப்படைகிறது, ஏனென்றால் இந்த மனிதன் இங்கு பெத்தேலில் மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொண்டிருக்கப் போகிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.” பெத்தேலைப் பற்றி அவர் மதித்துப் போற்றும் காரியங்கள் சிலவற்றை கூடுதலாக சொன்னார்: “நான் அதில் இருக்கும் நபர்களை நேசிக்கிறேன். அவர்கள் மனநிறைவு தருகின்றனர். அநேக வருடங்களாக பெத்தேலில் இருக்கும் சகோதரர்களைப் பற்றி ஏதோவொன்று உள்ளது, அதை நீங்கள் பூமியின் மீது வேறு எந்த இடத்திலும் காணமுடியாது. அங்கே அன்பு, புரிந்துகொள்ளுதல், ஒற்றுமை ஆகியவை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு உள்ளது.”
◼ பெத்தேல் சேவையில் 62 வருடங்களுக்கும் மேலாக இருந்திருக்கும் மற்றொரு சகோதரர், பெற்றுக்கொள்ளக்கூடிய கூடுதலான பயன்களைக் குறித்து சொல்கிறார்: “பிரசுரங்கள் வெளியிடுவதன் பேரில் விசேஷ பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்கு பெத்தேல் சேவை உதவி செய்கிறது. . . . எல்லாவற்றுக்கும் மேலாக, உலகத்தில் எங்கு அனுப்பப்பட்டாலும் யெகோவா தேவனின் ஒரு சரியான பிரதிநிதியாக உங்களைத் தகுதியாக்குவதற்குத் தேவையான பைபிள் கல்வியை அளிக்கிறது.”
◼ ஆளும் குழுவின் அங்கத்தினர் ஒருவர், அவருக்கு வயது இப்போது 92, அவர் 58 வருடங்களாக பெத்தேலில் சேவை செய்து வருகிறார். அவர் பெத்தேல் சேவையைக் குறித்து என்ன நினைக்கிறார்? “இங்கும் மற்றும் உலகெங்குமுள்ள பெத்தேல் குடும்பமும் தங்களையே அர்ப்பணிக்கும் ஆட்கள் அடங்கிய ஒரு மகத்தான ஏற்பாடு.”
◼ ஆளும் குழுவின் அங்கத்தினர் ஒருவர் தான் செய்த வேலையில் உண்மைத்தன்மையோடு இருந்து சில மாதங்களுக்கு முன்பு தனது 98-வது வயதில் மரித்தார், அவர் தன்னைக் குறித்து இவ்வாறு கூறினார்: “நான் பெத்தேலில் சேவை செய்வதை மிகவும் விரும்புகிறேன். சூரியனுக்குக் கீழே அதுதான் சிறந்த இடம்.”
◼ பெத்தேல் சேவையைக் குறித்து ஒரு இளம் மனிதனின் எண்ணம் என்ன? ஒரு இளம் சகோதரர் சமீபத்தில் எழுதினார்: இயேசு கிறிஸ்து சொன்னதுபோல், ‘கொடுப்பதில் அதிக சந்தோஷமுள்ளதால்’ பெத்தேல்தான் நான் இருந்த இடங்களிலேயே மிகவும் சந்தோஷமான இடம்.” அவர் பெத்தேல் சேவையின் முக்கிய தன்மையைப் புரிந்துகொண்டிருக்கிறார்—கொடுத்தல்.
◼ 51 வருடங்கள் முழு-நேர ஊழியம் செய்திருக்கும் ஒரு சகோதரர் விஷயங்களை நல்லவிதத்தில் இவ்வாறு சுருக்கி உரைத்தார்: “பெத்தேல் சேவை உண்மையிலேயே தனித்தன்மை வாய்ந்த சேவை. பூமியின் மீது யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றி முடிப்பதில் அது முக்கியமான பங்கை வகிக்கிறது. ஆகையால் பெத்தேலில் சேவை செய்யும் சிலாக்கியத்தைக் கொண்டிருக்கும் எவரும் அதை வெகு உயர்வாய் மதிக்க வேண்டும். உண்மையில், தேவபக்திக்குரிய வாழ்க்கையை முழுவதுமாக வெளிப்படுத்திக் காண்பிப்பதற்கு பெத்தேல் நமக்கு உதவி செய்கிறது.”
12 அன்றாடக வழக்கமுறை: பெத்தேல் குடும்ப அங்கத்தினர் ஒருவரின் அன்றாடக வழக்கமுறை, அவரை முழுவதுமாக ராஜ்ய வேலையில் மூழ்கியிருக்கும்படி செய்விக்கிறது. திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை காலை 7 மணிக்கு எங்களுடைய சாப்பாட்டு அறைகளில் காலை வணக்கம் ஆரம்பமாகும். தினவசனத்தின் பேரில் குடும்ப அங்கத்தினர்கள் குறிப்புகள் சொல்வர், அதற்குப் பிறகு கிளை அலுவலகக் குழு அங்கத்தினர் ஒருவர் அல்லது அநேக வருடங்கள் முழு-நேர ஊழியத்தில் இருக்கும் மற்றொரு சகோதரர் சுருக்கம் கொடுப்பார், அதைத் தொடர்ந்து காலை ஜெபம் இருக்கும். இந்த நிகழ்ச்சிநிரல், அந்நாளுக்குரிய வேலையைச் செய்வதற்கு குடும்பத்தை ஆவிக்குரியப்பிரகாரமாய் பலப்படுத்துகிறது. அது அந்நாளின் சிறப்பு அம்சம் என்று பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் உறுதியாகக் கூறுவர். நல்ல காலை உணவுக்குப் பிறகு, பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் பல்வேறு வேலைகளுக்கு ஆர்வத்தோடு செல்வர். திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை, வேலை செய்யும் நேரம் காலை 8 மணியிலிருந்து மாலை 5:10 வரை நீடித்திருக்கும், மதிய உணவுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கி வைக்கப்படும். சனிக்கிழமையிலும்கூட வேலை காலை 8 மணியிலிருந்து 11:55 வரை அட்டவணையிடப்படுகிறது. மாலை வேளைகளில், சனிக்கிழமை பிற்பகல்களில், ஞாயிற்றுக்கிழமைகளில், பெத்தேல் அங்கத்தினர்கள் தங்கள் சபைக் கூட்டங்களுக்குச் செல்வர், வீட்டுக்கு-வீடு அல்லது பைபிள் படிப்பு வேலை, அல்லது தனிப்பட்ட உத்தரவாதங்களை கவனித்துக்கொள்வர். அவர்கள் பெத்தேல் நூலக வசதிகளை தனிப்பட்ட படிப்புக்கு அல்லது கூட்டங்களுக்குத் தயார்செய்வது போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம். ஆம், தேவைப்படும் ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கும் நேரம் உள்ளது. (மாற்கு 6:31, 34), ஒவ்வொரு நாளும் பரிசுத்த சேவைக்கென்று அதிக மணிநேரங்களை அர்ப்பணிப்பதற்கு பெத்தேல் சேவை ஒரு நபரை அனுமதிக்கிறது, இந்தப் பழைய காரிய ஒழுங்குமுறையின் கவனச்சிதறல்களிலிருந்து விடுவிக்கிறது என்பதை இந்த சுருக்கமான விவரிப்பிலிருந்து நாம் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
13 சபை நடவடிக்கைகள்: புருக்லின் பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர்கள் நியூ யார்க் நகர பிராந்தியத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட சபைகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதுபோல, லோனாவ்லாவில் உள்ள பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் மூன்று சபைகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் ஆவிக்குரியத்தன்மையைக் காத்துக்கொள்வதற்கு உள்ளூர் சபையின் பங்கை மதிக்கின்றனர். அவர்கள் தங்கள் சபையோடு சுறுசுறுப்பாக கூட்டுறவு கொள்கின்றனர், ஐந்து கூட்டங்களுக்கு ஆஜராகி, ஒழுங்காக தங்கள் சகோதரர்களோடு வெளி ஊழியத்தில் பங்குகொள்கின்றனர். சபைக் கூட்டங்களோடுகூட, பெத்தேல் குடும்பம் அதன் சொந்த காவற்கோபுர படிப்பை திங்கட்கிழமை மாலையில் கொண்டிருக்கிறது; பெத்தேல் அங்கத்தினர்கள் எல்லாருடைய நன்மைக்கென்றும் குறிப்புகள் சொல்லும்படி சுற்றுமுறையில் நியமிக்கப்படுகின்றனர். பெத்தேல் அட்டவணை ஆவிக்குரிய காரியங்களை அழுத்திக் காண்பிப்பதால், அது யெகோவாவுக்கு சந்தோஷமான சேவை செய்வதில் விளைவடைகிறது.—1 கொரிந்தியர் 15:58.
14 பெத்தேல் சேவைக்காக தயாரித்தல்: பெத்தேல் சேவைக்காக தயாரிக்கையில் அவர்கள் என்ன செய்யலாம் என்று இளம் ஆண்கள் அடிக்கடி கேட்கின்றனர். அலுவலர் குழுவில் சேவிக்கும் ஆளும் குழுவின் அங்கத்தினர் ஒருவர் சொன்னார்: “நீங்கள் பெத்தேலுக்கு வருகையில் சேவை செய்ய வாருங்கள், சேவிக்கப்பட வராதீர்கள். நீங்கள் சேவை செய்வதற்கு அதிகமாகக் கற்றுக்கொள்ளும்போது, உங்களுடைய மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள், வாங்குவதற்கு அல்ல. பணிவோடும் மனத்தாழ்மையோடும் இருங்கள். ஆவியின் கனிகள்—உண்மையான கிறிஸ்தவம் அதில் தான் உள்ளது.” ஆம், உங்களுடைய ஆவிக்குரியத்தன்மையையும் யெகோவாவோடு நெருங்கிய உறவையும் வளர்த்துக்கொள்ளுங்கள், பெத்தேலில் வெற்றிபெற அவையே முக்கியமான காரணங்கள். அதன் காரணமாகத்தான் பெத்தேலுக்கு புதிய வாலண்டியர்களைத் தேர்ந்தெடுக்கையில் பயனியர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒரு நபர் ஒருசில காலமாக மாதத்துக்கு 90 மணிநேரங்கள் பிரசங்கிப்பதற்கும் மற்றவர்களுக்கு போதிப்பதற்கும் தன்னையே அளிப்பதற்கு சிட்சித்துக்கொண்டு, அதோடுகூட தன்னை ஆதரித்துக்கொள்வதற்கு தேவையான வேலையை செய்தால், அவர் பெத்தேல் சேவைக்கும் அதன் ஒழுங்கான வாழ்க்கை முறைக்கும் நல்ல ஆவிக்குரிய அஸ்திவாரத்தை வளர்த்திருக்கிறார். இருப்பினும், பயனியர் செய்பவர்களுக்கு மட்டுமே பெத்தேல் சேவை மட்டுப்படுத்தப்பட்டில்லை என்பதை தயவுசெய்து கவனியுங்கள். அடிப்படைத் தகுதிகளை பூர்த்திசெய்யும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
15 கூடுதலாக, இளம் ஆண்கள் தங்கள் கைகளால் எவ்வாறு வேலை செய்வது என்பதைக் கற்றுக்கொள்வது நல்லது. கைகளினால் கடினமாக உழைப்பதை இந்தப் பழைய காரிய ஒழுங்குமுறையில் உள்ள ஆட்கள் உயர்வாய் மதிப்பதில்லை. குறைவான முயற்சியைத் தேவைப்படுத்தும் வேலைகள் அல்லது வெளித்தோற்றத்துக்கு கௌரவமாகத் தோன்றும் வேலைகள் போன்றவற்றைச் செய்வதற்கு அநேக ஜனங்களுக்கு தங்கள் பேரில் உள்ள அன்பு உந்துவிக்கிறது. இருப்பினும், பல்வேறு கருவிகளையும் சாதனங்களையும் எவ்வாறு உபயோகிப்பது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் நடைமுறையானதும் பயனுள்ளதுமாய் இருக்கிறது. (நீதிமொழிகள் 22:29) பெரும்பாலும், இளம் ஆண்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து கைகளால் செய்யப்படும் வேலைகளைக் கற்றுக்கொள்ளலாம் அல்லது ராஜ்ய மன்றத்தைச் சுற்றி பல்வேறு வேலைகளைச் செய்யும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களுக்கு உதவலாம் அல்லது வயதானவர்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான பராமரிப்பு வேலைகளில் உதவி செய்யலாம்.
16 சில சமயங்களில் இளைஞர்கள் கேட்கின்றனர்: “பெத்தேல் சேவைக்குத் தகுதிபெற நான் கூடுதலான உலகப்பிரகாரமான பயிற்சி பெற வேண்டுமா?” உலகப்பிரகாரமான பயிற்சிதானே ஒரு நபரை பெத்தேல் சேவைக்குத் தகுதியாக்குவதில்லை. ஆவிக்குரிய குணங்கள் மிகவும் முக்கியமானவை, அழைக்கப்படும் அனைவரிடமிருந்தும் அவை எதிர்பார்க்கப்படுகின்றன. பெற்றோரும் பள்ளி வயதில் இருக்கும் அவர்களுடைய பிள்ளைகளும் உலகப்பிரகாரமான கல்வியைக் குறித்து காவற்கோபுரம் நவம்பர் 1, 1992, பக்கங்கள் 15-21-ல் கொடுக்கப்பட்டிருக்கும் சமநிலையான நோக்குநிலையை கவனமாக சிந்தித்துப் பார்க்கும்படி நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். உலகப்பிரகாரமான கல்வியின் பேரில் தீர்மானம் எடுப்பது ஒரு தனிப்பட்ட விஷயம். ஒரு நபர் எதைத் தீர்மானித்தாலும், யெகோவாவின் ஜனங்களின் முக்கிய வேலையாகிய சத்தியத்துக்கு சாட்சி பகரும் வேலையின் பேரில் தொடர்ந்து கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம், தன் ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் காத்துக்கொள்வதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
17 ஒருவர் எப்படிப்பட்ட உலகப்பிரகாரமான பயிற்சியைப் பெற்றாலும், எவ்வாறு சிந்திப்பது என்பதைக் கற்றுக்கொள்வது மிகவும் மதிப்புள்ளதாய் இருக்கும். சிந்திக்கும் திறமையையும் நடைமுறையான ஞானத்தையும் பைபிள் பாராட்டிப் பேசுகிறது. (நீதிமொழிகள் 1:4; 3:21) எவ்வாறு சிந்தித்து தகவலை ஞாபகத்தில் வைப்பது என்பதைக் கற்றுக்கொள்வது, அறிவையும் திறமைகளையும் பெற்றுக்கொள்ள உங்களுக்கு உதவுகிறது, அது உங்களுக்கும் யெகோவாவின் உலகளாவிய அமைப்புக்கும் பயனுள்ளதாய் இருக்கும். இறுதியில், ஒருவர் என்ன திறமைகளைப் பெற்றிருந்தாலும் மற்றவர்களோடு ஒத்திணங்கி வேலை செய்யக் கற்றுக்கொள்வது அதிமுக்கியமானது. பெத்தேல் வாலண்டியர்கள் வேலையைச் செய்துமுடிப்பதற்கு நெருக்கமாக ஒன்றுசேர்ந்து ஒரு குழுவாக வேலை செய்ய வேண்டும். தனிப்பட்ட அல்லது போட்டி மனப்பான்மை இருப்பதற்குப் பதிலாக ஒத்துழைக்கும் அன்பான மனநிலையும் தேவராஜ்ய வழிநடத்துதலுக்கு மனமுவந்து கீழ்ப்படிவதும் தேவைப்படுகிறது.—எபேசியர் 4:16-ஐ ஒப்பிடுக.
18 யெகோவாவின் அமைப்பில் இருக்கும் இளம் நபர்கள் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். பின்னர், பெத்தேலில் சேவை செய்யும்படி அழைக்கப்பட்டால், கூடுதலான உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு யெகோவாவின் அமைப்பால் பயிற்றுவிக்கப்படுவதற்கு அவர்கள் நல்ல நிலையில் இருப்பர். இந்த விஷயத்தை இளைஞர் மனதில் வைக்கும்படி, கிறிஸ்தவப் பெற்றோர்களே, மூப்பர்களே நாங்கள் உங்களை ஊக்கப்படுத்துகிறோம். பெத்தேலில் செய்யப்படும் காரியங்களைப் பற்றி தங்கள் பிள்ளைகள் அறிந்துகொள்ள அநேக பெற்றோர் பெத்தேலைப் பார்ப்பதற்கு அவர்களை ஒழுங்காக அழைத்து வருகின்றனர். இது அவர்கள் தங்கள் படிப்பை முடித்த பின்பு பெத்தேலுக்கு வரும்படி அநேகரை வழிநடத்தியிருக்கிறது.
19 அனுபவமுள்ளவர்கள்: ஒரு சகோதரருக்கோ அல்லது சகோதரிக்கோ 35 வயதுக்கு மேல் ஆகி, பெத்தேலுக்கு தேவைப்படும் பயிற்சியும் திறமைகளும் இருந்தால் எப்போதாவது அவர்கள் அழைக்கப்படுவர். தற்போது சங்கம் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான வேலை, அனுபவம் வாய்ந்தவர்களைத் தேவைப்படுத்துகிறது, பலமான தகுதிவாய்ந்த ஆண்களோடு சேர்ந்து சேவைசெய்து அவர்களைப் பயிற்றுவிப்பதற்காக, “ஆசானும் மாணாக்கனும்” தேவைப்படுகின்றனர்.—1 நாளாகமம் 25:8.
20 அதிகரித்துக்கொண்டே செல்லும் இன்றைய வேலையின் பெரும்பகுதி, எலக்ட்ரானிக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் புரோகிராமிங்-ல் அனுபவம் பெற்ற பின்னணியை உடையவர்களை தேவைப்படுத்துகிறது. ஃபோட்டோகாப்பி மெஷின்கள், லேசர் பிரின்ட்டர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் போன்றவை சங்கத்திடம் ஏராளமாக உள்ளன, அவையனைத்தையும் பராமரிக்க வேண்டிய தேவை உள்ளது. பொறியாளர்கள், குழாய்கள் செப்பனிடுபவர்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் ஏர்கண்டிஷனிங் போன்ற பல்வகைப்பட்ட கட்டுமானப் பணிகளில் திறமை பெற்றுள்ளவர்கள் உபயோகிக்கப்படலாம். கணக்கர் வேலை நன்றாகத் தெரிந்த அனுபவமுள்ள முதிர்ச்சிவாய்ந்த சகோதரர்கள், குறிப்பாக தகுதிச்சான்று பெற்ற கணக்கர்கள் உதவியாயிருக்கலாம். செலவுகளைக் குறைப்பதற்கு சங்கம் அதன் சொந்த வாகனங்களைக் கொண்டுள்ளது. அவை பிரயாணம் செய்வதற்கும் பிரசுரங்களை அனுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால், அனுபவம் பெற்றுள்ள டிரைவர்களும் மெக்கானிக்குகளும் தேவைப்படுகின்றனர்.
21 எங்களுடைய மிகப்பெரிய தேவை, முழுக்காட்டப்பட்ட விவாகமாகாத சகோதரர்களும் விசேஷ திறமைகளை உடையவர்களுமே, அவர்களில் சிலர் விவாகமானவர்களாக இருக்கலாம். நீங்கள் பெத்தேல் விண்ணப்பங்களை ஒரு மாவட்ட மாநாட்டில் பெத்தேல் சேவையில் விருப்பமுள்ளவர்களுக்காக நடத்தப்படும் விசேஷ கூட்டத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது நீங்கள் Watch Tower Society, Post Bag 10, Lonavla, MAH 410 401. என்ற முகவரிக்கு எழுதலாம். நீங்கள் விவாகமானவர்களாக இருந்தால், உங்களுடைய துணைவியும் ஆவிக்குரியப்பிரகாரமாயும், உணர்ச்சிப்பிரகாரமாயும், சரீரப்பிரகாரமாயும் பெத்தேல் சேவைக்கு தகுதியுள்ளவராய் இருக்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு வேலையில் பயிற்சியும் அனுபவமும் உங்களுக்கு இருந்தால், தயவுசெய்து அதை விவரமாக எழுதி உங்கள் பெத்தேல் விண்ணப்பத்தோடு சேர்த்து அனுப்புங்கள்.
22 ஓர் அவசரமான அழைப்புக்கு நீங்கள் பிரதிபலிப்பீர்களா? பெத்தேல் வாலண்டியர்களுக்கு ஓர் அவசரத் தேவை உள்ளது. பெத்தேல் சேவைக்கான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்தீர்கள் என்றால், இந்த அவசர அழைப்புக்கு பதிலளிப்பதற்கு நாங்கள் உங்களை மிகவும் துரிதப்படுத்துகிறோம். நீங்கள் உடனடியாக அழைக்கப்படவில்லையென்றால் உற்சாகம் இழந்துவிடாதீர்கள். நீங்கள் உங்கள் விண்ணப்பங்களை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்துக் கொள்ளலாம். இது உங்களைப் பற்றிய தற்போதைய தகவலை எங்களுக்கு அளிக்கிறது.
23 ஏசாயா தீர்க்கதரிசியை யெகோவா கேட்டார்: “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்?” தயக்கமின்றி ஏசாயா பிரதிபலித்தார்: “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்.” இவ்வாறு ஏசாயா கடவுளுடைய தீர்க்கதரிசியாக ஒரு சிறப்புவாய்ந்த வேலையில் ஈடுபட்டார். “இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று நீங்கள் சொல்லமுடியுமா? நீங்கள் ‘கடவுளுடைய வீட்டில்’ சேவை செய்வதற்கு அழைக்கப்பட்டால், அநேக ஆசீர்வாதங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.—ஏசாயா 6:8.