முழுநேர ஊழியம் தரும் சந்தோஷங்கள்
1 ஓர் இளைஞராக உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் நிச்சயம் யோசித்திருப்பீர்கள். “ஊக்கமுள்ளவனுடைய திட்டங்கள் நிச்சயம் நன்மை செய்யும்” என நீதிமொழிகள் 21:5 (NW) நமக்குச் சொல்கிறது. வாழ்க்கையில் உங்கள் இலக்குகளைப் பற்றி கவனமாய் சிந்திப்பது உங்களுக்கே நன்மையாய் முடியும். எதிர்கால திட்டங்கள் போடுகையில் முழுநேர ஊழியம் செய்வதைப் பற்றி யோசியுங்கள். ஏன்?
2 இளமை காலத்தில் பயனியர்களாக இருந்த சில முதியவர்களின் கருத்தை அறிய அவர்களுடன் பேசிப் பார்த்தால், “அது என் வாழ்க்கையிலேயே நான் அனுபவித்த அருமையான ஆண்டுகள்!” என அவர்கள் ஏககுரலில் சொல்வார்கள். இளமையிலிருந்தே முழுநேர ஊழியத்தின் சந்தோஷங்களை அனுபவிக்கும் ஒரு சகோதரர் பிறகு கூறியதாவது: “பெரும் திருப்தி தரும் அந்த வாலிப காலத்தை எண்ணிப் பார்க்கையில், ‘உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை’ என்ற ஞானமான புத்திமதிக்குக் கீழ்ப்படிந்ததாக என்னால் சொல்ல முடியும்.” (பிர. 12:1) உங்களுடைய வாலிபப்பிராயத்தில் இவ்வித சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு இப்போதே நீங்களும் உங்கள் பெற்றோரும் சேர்ந்து கவனமாக திட்டமிட வேண்டும்.
3 பெற்றோர்களே, முழுநேர ஊழியம் செய்ய உற்சாகப்படுத்துங்கள்: அக்கறையுள்ள தகப்பனாக யெகோவா, நீங்கள் எந்த வழியில் நடக்க வேண்டும் என வழிகாட்டுகிறார். (ஏசா. 30:21) அத்தகைய அன்பான வழிநடத்துதலைக் கொடுப்பதனால் கிறிஸ்தவ பெற்றோர்களாக உங்களுக்கு சிறந்த முன்மாதிரி வைக்கிறார். எனவே மிகச் சிறந்த வழியை பிள்ளைகளே தேர்ந்தெடுக்கும்படி விட்டுவிடாமல், எந்த வழியில் சென்றால் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற முடியுமோ, அந்த வழியில் அவர்களை ஞானமாக பயிற்றுவியுங்கள். அப்போது, அவர்கள் பெரியவர்களாகையில் “நன்மை தீமையின்னதென்று . . . பகுத்தறிய” உங்கள் பயிற்றுவிப்பு அவர்களுக்கு உதவும். (எபி. 5:14) தாங்கள் சொல்வது எப்போதுமே நூற்றுக்கு நூறு சரியாக இருப்பதில்லை என்பது பெரியவர்கள் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை. அவர்கள் தங்கள் பாதைகளை செவ்வைப்படுத்த யெகோவா மீதே சார்ந்திருக்க வேண்டும். (நீதி. 3:5, 6) பெரியவர்களுக்கே அப்படியென்றால் அந்தளவுக்கு அனுபவம் பெறாத இளைஞர்கள் எந்தளவுக்கு கவனமாக இருக்க வேண்டும்.
4 பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் பருவ வயதை எட்டுகையில் அல்லது அதற்கும் முன்னதாகவே அவர்களுடைய எதிர்கால இலக்குகளைக் குறித்து எதார்த்தமாக பேசுங்கள். உலகப்பிரகாரமான, பொருள் சம்பந்தமான இலக்குகளுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ள பள்ளி ஆலோசகர்களும், ஆசிரியர்களும், சகமாணவர்களும் வற்புறுத்தலாம். நடைமுறை பயிற்சி அளித்து, ராஜ்ய அக்கறைகளைப் புறக்கணிக்காமல் தங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்கு வழிசெய்யும் பள்ளி பாடங்களை தேர்ந்தெடுத்துப் படிப்பதற்கு உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். (1 தீ. 6:6-11) ஒருவர் தன்னுடைய அத்தியாவசிய தேவைகளைக் கவனித்துக் கொண்டு ஒழுங்கான பயனியராக ஊழியத்தில் கால் பதிக்க, உயர்நிலைப் பள்ளி படிப்புடன் நடைமுறை பயிற்சி அல்லது தொழிற்கல்வி பெறுவது மட்டுமே அநேக சந்தர்ப்பங்களில் போதுமானது.
5 மணம் முடிக்காமல் இருக்கும் வரத்தை நாடும்படி இளைஞர்களை உற்சாகப்படுத்துங்கள். பின்னர் அவர்கள் மணம் முடிக்க தீர்மானித்தாலும் மண வாழ்க்கையின் முக்கிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கு சிறந்த நிலையிலும் இருப்பார்கள். பயனியர் ஊழியம், தேவை அதிகம் இருக்கும் இடத்தில் ஊழியம் செய்வது, பெத்தேல் சேவை ஆகியவற்றைப் பற்றி உற்சாகமூட்டும் விதத்தில் பேசுவது, தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்குப் பிரியமான வழியிலும் மற்றவர்களுக்கு பயன்களையும், தங்களுக்கு சந்தோஷத்தையும் தரும் விதத்திலும் பயன்படுத்தும் எண்ணத்தை இளைஞர்களின், ஏன் சிறு குழந்தைகளின் மனதிலும் பதிய வைக்கும்.
6 இளைஞர்களே, முழுநேர ஊழியத்திற்கு முதலிடம் கொடுங்கள்: இளைஞர்களே, பயனியர் ஊழியம் எப்படி இருக்குமோ என கவலைப்பட அவசியமில்லை. பள்ளி செல்லும் போதும் விடுமுறையின் போதும் முடிந்தபோதெல்லாம் பகுதி நேரம் துணைப் பயனியர் ஊழியத்திற்காக செலவிட்டு பார்க்கலாமே. அப்போது உண்மையில் பயனியர் ஊழியம் தரும் திருப்தியை நீங்களே ருசிக்கலாம்! இப்போதிருந்து பள்ளி விடுமுறை முடிவதற்குள் துணைப் பயனியர் செய்ய உங்களால் திட்டமிட முடியுமா?
7 கடவுளுடைய அமைப்பில் நீங்கள் ஓர் இளம் சகோதரரா? அப்படியென்றால் உதவி ஊழியராக தகுதி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமெனவும் கவனமாய் யோசியுங்கள். (1 தீ. 3:8-10, 12) மேலும், பெத்தேல் சேவை செய்வதற்கு அல்லது ஊழியப் பயிற்சி பள்ளியில் கலந்துகொள்வதற்கு தேவைப்படும் உரிய வயதை அடைந்ததும் அவற்றிற்கு விண்ணப்பிக்க விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதையும் தீர்மானியுங்கள். பயனியராக நீங்கள் பெறும் அனுபவம், அட்டவணைக்கு இசைய வாழ்வது எப்படி, தனிப்பட்ட விதத்தில் காரியங்களை ஒழுங்கமைப்பது எப்படி, மற்றவர்களோடு ஒத்துப் போவது எப்படி, பொறுப்புடன் நடந்துகொள்வது எப்படி என உங்களுக்கு மதிப்புமிக்க பாடங்களைப் புகட்டும். இவையனைத்தும் பின்னர் பெரும் ஊழிய பொறுப்புகளைப் பெற உங்களைத் தயார்படுத்தும்.
8 முழுநேர ஊழியத்தில் வெற்றி காண உதவும் முக்கிய அம்சம்: கடவுளுடைய ஊழியத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவதே. இதனால் விளையும் பலன்களைக் குறிப்பிடுகையில் அப்போஸ்தலனாகிய பவுல் இத்தகைய மனப்பான்மையை உற்சாகப்படுத்தினார்: “நீங்கள் . . . சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே [யெகோவாவாலே] பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், . . . கர்த்தருக்கென்றே [யெகோவாவுக்கென்றே] மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.” (கொலோ. 3:23, 24) முழுநேர ஊழியத்தின் அநேக சந்தோஷங்களால் யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக!