பயனியர் ஊழியத்தின் ஆசீர்வாதங்கள்
1 ‘மற்றவர்களுக்கு சத்தியத்தை சொல்வதில் கிடைத்திருக்கிற மனதிருப்தியை வேறு எந்த வேலையும் எனக்கு தந்திருக்காது’ என்றார் ஒரு பயனியர். மற்றொரு பயனியர் சொன்னதாவது: ‘ஒவ்வொரு இரவும் என்னால் நிம்மதியாக தூங்க முடிகிறது, என் மனதில் மகிழ்ச்சி நிறைந்துள்ளது.’ பயனியர் ஊழியத்தின் ஆசீர்வாதங்களை ருசித்துள்ள எல்லா சகோதர சகோதரிகளின் கருத்துக்களையே இந்தப் பயனியர்கள் தெரிவிக்கிறார்கள்.—நீதி. 10:22.
2 கடவுளின் வார்த்தையிலுள்ள உயிர் காக்கும் அறிவைப் பெற மற்றவர்களுக்கு உதவுவது மெய்யான திருப்தியை தருகிறது. (அப். 20:35; 1 தெ. 2:19, 20) ‘தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யும்படி ஆட்களைத் தூண்டுவிப்பதில் கடவுளுடைய வார்த்தை எவ்வளவு வல்லமை வாய்ந்ததாக இருக்கிறது என்பதைக் காண்பது கிளர்ச்சியூட்டுவதாயும் விசுவாசத்தைப் பலப்படுத்துவதாயும் இருக்கிறது’ என நீண்ட கால பயனியர் ஒருவர் எழுதினார். ஆம், மக்களுக்கு உதவவும் பைபிள் படிப்புகளை நடத்தவும் தயாராக இருப்பதன் மூலம் இதுபோன்ற ஆசீர்வாதங்களை பயனியர்கள் பெறுகிறார்கள்.
3 யெகோவாவை சார்ந்திருத்தல்: பயனியர்கள் தங்கள் ஊழியத்தில் அன்றாடம் கடவுளுடைய ஆவியை சார்ந்திருப்பது, ‘ஆவியின் கனியை’ வளர்க்க உதவுவதுடன் அவர்களுக்கு பாதுகாப்பையும் தருகிறது. (கலா. 5:16, 22, 23) அத்துடன், பயனியர்கள் கடவுளுடைய வார்த்தையையே எப்போதும் பயன்படுத்துவதால் சத்தியத்தை ஆதரிக்கவும் மற்றவர்களை பலப்படுத்தவும் வேதவசனங்களை கையாளுவதில் பெரும்பாலும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். (2 தீ. 2:15) பல பத்தாண்டுகளாக பயனியர் ஊழியம் செய்திருக்கும் ஒரு சகோதரர் கருத்து தெரிவித்ததாவது: ‘பைபிளின் ஆழமான அறிவைப் பெறுவதற்கு பயனியர் ஊழியம் எனக்கு உதவி செய்திருக்கிறது. யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி பலபேர் அறிந்துகொள்ள இந்த அறிவைப் பயன்படுத்தியிருக்கிறேன்.’ இது எவ்வளவு திருப்தியளிக்கிறது!
4 ஒழுங்கான பயனியர்கள் வேறு வழிகளிலும் யெகோவாவை சார்ந்திருக்க வேண்டும். தங்களுடைய பொருளாதார தேவைகளுக்காக கடினமாய் உழைக்கும்போது அவர் ஆசீர்வதிப்பதைக் காண்கையில் அவர்களது விசுவாசம் பலப்படுகிறது. 55 வருடங்களாக ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்திருக்கும் 72 வயது சகோதரர் சொன்னதாவது: ‘யெகோவா என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை.’ மேலும், பயனியர்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாக வைப்பதன் மூலம் வாழ்க்கையின் பல்வேறு கவலைகளில் சிக்கிக்கொள்ளாமல் தங்களை காத்துக்கொள்கிறார்கள். இந்த விஷயம் உங்களை கவர்ந்திழுக்கிறதா?—மத். 6:22; எபி. 13:5, 6.
5 கடவுளிடம் நெருங்கி வருதல்: யெகோவாவுடன் நமக்கிருக்கும் உறவு அதிக விலைமதிப்புள்ள ஓர் உடைமை ஆகும். (சங். 63:3) யெகோவாவின் மீதுள்ள அன்பினால் ஊழியத்தில் முழுமையாக நாம் ஈடுபடுகையில், அந்த உறவு இன்னும் நெருக்கமாகிறது. (யாக். 4:8) 18 வருடங்களுக்கும் மேலாக பயனியர் ஊழியம் செய்த ஒரு சகோதரர் சொன்னார்: ‘பயனியர் சேவை, நம்முடைய சிருஷ்டிகருடன் பலமான உறவை நாளுக்குநாள் வளர்த்து, “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்” பார்க்கும்படி செய்கிறது.’—சங். 34:8.
6 பயனியர்களுக்கு, சாதகமான சூழ்நிலை மட்டுமல்லாமல் பலமான விசுவாசம், கடவுளிடமும் அயலாரிடமும் மெய்யான அன்பு, தியாக மனப்பான்மை ஆகியவையும் இருக்க வேண்டும். (மத். 16:24; 17:20; 22:37-39) என்றாலும், செய்யும் தியாகங்களைவிட பயனியர் ஊழியத்தின் ஆசீர்வாதங்கள் கணக்கிலடங்காதவை என்பதற்கு எங்குமுள்ள பயனியர்களின் பளிச்சிடும் முகங்களே அத்தாட்சி அளிக்கின்றன. (மல். 3:10) இத்தகைய ஆசீர்வாதங்களை பயனியர்கள் மட்டுமே அனுபவிப்பதில்லை; அவர்களுடைய அருமையான மனப்பான்மையால் அவர்களுடைய குடும்பத்தினரும் சபையாரும்கூட பெரிதும் பலனடைகிறார்கள்.—பிலி. 4:23, NW.
[கேள்விகள்]
1, 2. பயனியர் ஊழியத்தால் என்ன ஆசீர்வாதங்களைப் பெறுவது நிச்சயம், ஏன்?
3, 4. பயனியர் ஊழியம் யெகோவாவை சார்ந்திருக்க ஒருவருக்கு எவ்வாறு கற்பிக்கிறது, இவ்வாறு சார்ந்திருப்பது ஆவிக்குரிய வகையில் வளர எவ்வாறு உதவுகிறது?
5. யெகோவாவிடம் நெருங்கி வர பயனியர் ஊழியம் ஒருவருக்கு எவ்வாறு உதவுகிறது?
6. பயனியர்களுக்கு என்னவெல்லாம் இருக்க வேண்டும், அவர்களைத் தவிர வேறு யாரும் பலனடைகிறார்கள்?