எல்லா வகை மனிதரும் இரட்சிக்கப்படுவார்கள்
1 கடவுளுடைய தகுதியற்ற தயவு, இரட்சிப்பு என்னும் பாதைக்கு வழி வகுத்துள்ளது. “எல்லா வகை மனிதரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” யெகோவா சித்தமுள்ளவராயிருக்கிறார். (1 தீ. 2:3, 4, NW) யெகோவாவிடம் நல்ல பெயர் எடுப்பது, நாம் பேசும் மொழியையோ பண அந்தஸ்தையோ திறமைகளையோ அல்லது நம்முடைய வெளி தோற்றத்தையோ சார்ந்தில்லை. மாறாக இயேசுவின் மீட்கும் பலியின்மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தையே சார்ந்திருக்கிறது. (யோவா. 3:16, 36) கடவுளுடைய உடன் வேலையாட்களாக இருக்கும் நாம், பாரபட்சம் பார்ப்பதை வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டும். ஏனெனில், பாரபட்சம் பார்த்தால் யெகோவா ஏற்றுக்கொள்ள விரும்பும் ஜனங்களை நாம் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடலாம்.
2 நியாயந்தீர்ப்பதைத் தவிருங்கள்: யெகோவா உள்ளான மனுஷனைப் பார்க்கிறார்; ஜனங்களைப் பகைமையோடோ பாரபட்சத்தோடோ பார்ப்பதில்லை. (1 சா. 16:7) அதோடு அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கமுடியும் என்றும் பார்க்கிறார். எனவே, தம்மை பிரியப்படுத்த விரும்புபவர்களை அவர் மனதுக்கு இனிமையானவர்களாக கருதுகிறார். (ஆகா. 2:7) கடவுளைப் போலவே நாமும் மற்றவர்களைக் கருதுகிறோமா?
3 ஊழியத்தில் நாம் சந்திக்கும் சில ஜனங்களின் வெளி தோற்றத்தைப் பார்த்து நாம் அதிர்ச்சியடையலாம். அவர்கள் கந்தரகோளமாக அல்லது அடக்கமில்லாமல் உடை அணிந்திருக்கலாம். பெரிதாக தாடி வளர்த்திருக்கலாம். அல்லது ஏழைகளாக இருக்கலாம். சிலர் வீடு வாசலின்றி இருக்கலாம். சிலர் நம்மிடம் கடுகடுப்பாக நடந்துகொள்ளலாம். இவர்களெல்லாம் யெகோவாவின் வணக்கத்தாராக ஆவதற்கு வாய்ப்பே இல்லை என்று முடிவுகட்டிவிடுவதற்கு பதிலாக நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ‘ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களுமாய்’ இருந்தோம். (தீத். 3:3) இதை நாம் மனதார உணரும்போது அனைவருக்கும் ஆவலோடு பிரசங்கிப்போம். வெளி தோற்றத்தைப் பார்க்கும்போது அதற்கு தகுதியில்லாதவர்கள் என்று தோன்றினால்கூட அவர்களுக்கும் பிரசங்கிப்போம்.
4 பாரபட்சமற்ற நம் கடவுளைப் பின்பற்றுங்கள்: யெகோவாவின் வணக்கத்தாராக ஆவதற்கு லாயக்கற்றவர்கள் என்று மற்றவர்களால் ஒதுக்கப்பட்ட ஜனங்களுக்கு உதவ, இயேசு கிறிஸ்து நேரம் ஒதுக்கினார். (லூக். 8:26-39) அதற்காக அவர்களுடைய தவறான பழக்கவழக்கங்களை அவர் கண்டும்காணாமல் விட்டுவிடவில்லை. மாறாக ஜனங்கள் சந்தர்ப்ப சூழலால்தான் தவறான வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அறிந்திருந்தார். (லூக். 7:37, 38, 44-48) இவ்வாறு அவர் அவர்களைப் புரிந்துகொண்டார். ‘மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்.’ (மாற். 6:34) அவருடைய முன்மாதிரியை நம்மால் இன்னும் முழுமையாகப் பின்பற்ற முடியுமா?
5 அப்போஸ்தலன் பவுல் மீது கல்லெறிந்தார்கள், அடித்து உதைத்தார்கள், சிறையில் அடைத்தார்கள். (அப். 14:19; 16:22, 23) இப்படி அவரைக் கொடூரமாக நடத்தியதற்காக அவர்கள்மேல் கோபப்பட்டாரா? சில தேசத்தாருக்காகவும் இனத்தாருக்காகவும் தன்னுடைய நேரத்தை வீணாக்குவதாக நினைத்தாரா? இல்லவே இல்லை. ‘எல்லா வகை மனிதரிலும்’ நேர்மை இதயம் உள்ளவர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று அவர் அறிந்திருந்தார். அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதில் அவர் குறியாக இருந்தார். நம் பிராந்தியத்தில் இருக்கும் வெவ்வேறு பின்னணியையும் கலாச்சாரத்தையும் சேர்ந்தவர்களை நாமும் பவுலைப்போலவே பார்க்கிறோமா?
6 நம்முடைய பாரபட்சமற்ற கடவுளைப் பின்பற்றுபவர்களாக, அவருடைய தகுதியற்ற தயவின் பலனை அனைவரும் அனுபவிக்க எல்லோருக்கும் அழைப்புவிடுப்போமாக.—அப். 10:34, 35.
[கேள்விகள்]
1. யெகோவாவிடம் நல்ல பெயர் எடுப்பது எதைச் சார்ந்திருக்கிறது?
2, 3. ஜனங்களின் வெளி தோற்றத்தைப் பார்த்து நியாயந்தீர்க்காமலிருக்க எது நமக்கு உதவும்?
4, 5. இயேசு, பவுல் ஆகியோரின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
6. நம்முடைய பாரபட்சமற்ற கடவுளைப் நாம் எப்படி பின்பற்றலாம்?