காவற்கோபுரத்தில் மனதை மகிழ்விக்கும் மாற்றங்கள்!
1 ஜனவரி 2008 முதற்கொண்டு காவற்கோபுரம் இரண்டு வித்தியாசமான பதிப்புகளாக, அதாவது ஒன்று பொதுமக்களுக்கான பதிப்பாகவும் மற்றொன்று கிறிஸ்தவ சகோதரர்களுக்கான பதிப்பாகவும் வெளிவரும் என்ற மனதை மகிழ்விக்கும் அறிவிப்பை இந்த வருட ஆரம்பத்தில் சபைகள் பெற்றன. ‘எந்த விதத்தில் இந்த இரண்டு பத்திரிகைகளும் வித்தியாசமானவையாய் இருக்கும்? தனித்தனி பதிப்புகளாக இருப்பதால் என்னென்ன நன்மைகள்? இந்தப் பதிப்புகளில் புதிய அம்சங்கள் இருக்குமா? இந்தியாவில் என்னென்ன மொழிகளில் எந்தெந்த பதிப்புகள் வெளிவரும்?’ என்றெல்லாம் ஒருவேளை நீங்கள் யோசித்திருக்கலாம்.
2 வித்தியாசங்கள்: ஆங்கிலத்தில் 1-ஆம் தேதியிட்ட வெளியீடு பொதுமக்களுக்கான பதிப்பாகும். இதில் வெளியிடப்படும் எல்லா கட்டுரைகளும் பொதுமக்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்படும். 15-ஆம் தேதியிட்ட வெளியீடு படிப்புக்கான பதிப்பாகும்; இது வெளி ஊழியத்தில் வினியோகிக்கப்பட மாட்டாது. மாதம் முழுவதற்கும் தேவையான படிப்புக் கட்டுரைகளும் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களுக்கு அதிக உதவியாக இருக்கும் இதர கட்டுரைகளும் இதில் வெளிவரும். பொதுமக்களுக்கான காவற்கோபுர பதிப்பு யெகோவாவின் சாட்சிகளின் ஆர்வத்தை மட்டுமல்ல, முக்கியமாய், சாட்சிகளாக இல்லாதிருந்தும் பைபிளை உயர்வாய் மதிக்கிறவர்களின் ஆர்வத்தையும் தூண்டும். விழித்தெழு! பத்திரிகையோ, நமது மதநம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள், பிற மதத்தவர்களென இன்னும் பலதரப்பட்டவர்களைச் சென்றெட்டும் விதத்திலேயே தயாரிக்கப்படும்.
3 பயன்கள்: யெகோவாவின் சாட்சிகளாய் இல்லாதவர்கள் புரிந்துகொள்வதற்காக, “பயனியர்” போன்ற பதங்களை படிப்புக்கான பதிப்பில் இனிமேலும் விளக்குவதற்கான அவசியம் இருக்காது. அதோடு, யெகோவாவின் சாட்சிகளையும் ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் செய்கிற பைபிள் மாணாக்கர்களையும் மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட தகவல்கள் இதில் இடம்பெறும். பொதுமக்களுக்கான பதிப்பைப்பற்றி என்ன சொல்லலாம்? தகவல்களும் எழுத்துநடையும் பொதுமக்களை மனதில் வைத்து தயாரிக்கப்படுவதால், யெகோவாவின் சாட்சியாய் இல்லாதவர் ஒரு பக்கத்தைக்கூட விட்டுவிடாமல் முழுமையாய் ரசித்துப் படிக்க முடியும். இந்த ஒவ்வொரு வெளியீட்டையும் வாசிக்கும்போது, உண்மையில் யெகோவாவின் சாட்சிகள் எல்லாரும் பயன் அடைவார்கள்.
4 புதிய அம்சங்கள்: பொதுமக்களுக்கான காவற்கோபுர பதிப்பில், மனதை மகிழ்விக்கும் புதிய அம்சங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ஓர் அம்சம், மிக எளிய நடையில் அடிப்படை பைபிள் போதனைகளைச் சிந்திக்கும். மற்றொரு அம்சம், குடும்பங்களுக்கு பைபிள் எப்படி உதவும் என்பதைக் காட்டும். பைபிள் படிப்பில் இளம் பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் பயிற்சி கட்டுரையும் காணப்படும். யெகோவாவின் குணங்களைப்பற்றி சொல்கிற, குறிப்பிட்ட பைபிள் வசனங்களை சிறப்பித்துக்காட்டுகிற கட்டுரையும் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறும்.
5 இந்திய மொழிகளில்: கன்னடம், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, மலையாளம், வங்காளி, ஹிந்தி ஆகிய மொழிகளில் காவற்கோபுர பத்திரிகை, படிப்புக்கான பதிப்பு மாதாந்தர வெளியீடாகவும் பொதுமக்களுக்கான பதிப்பு காலாண்டு வெளியீடாகவும் வெளிவரும். ஆனால், குஜராத்தி, மிசோ, நேப்பாளி ஆகிய மொழிகளில் இரண்டு பதிப்புகளிலிருந்தும் எடுக்கப்பட்ட கட்டுரைகள் கலந்து மாதாந்தர வெளியீடாக மட்டுமே வெளிவரும். இவை 1-ஆம் தேதியிடப்பட்ட பதிப்புகளாக வெளிவரும்; இவற்றில், படிப்புக்கான பதிப்பிலுள்ள எல்லா படிப்புக் கட்டுரைகளும் பொதுமக்களுக்கான பதிப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளும் காணப்படும். இந்த ஒவ்வொரு மொழியிலும், 2007, டிசம்பர் 15 ஆங்கில பதிப்பிலுள்ள படிப்புக் கட்டுரைகள், தனி சிற்றேடாக வெளியிடப்படும்.
6 காவற்கோபுர பத்திரிகைக்கான இந்தப் புதிய ஏற்பாட்டை யெகோவா ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறோம். விழித்தெழு! பத்திரிகையோடு இந்தப் பத்திரிகையும் நித்திய ஜீவனைப் பெற தகுதியுள்ள இன்னும் அநேகருக்கு நற்செய்தியை அறிவிப்பதாக.—மத். 10:11.