‘நன்றியறிதல் உள்ளவர்களாய் இருங்கள்’
1 இயேசு பத்து குஷ்டரோகிகளைச் சுகப்படுத்தினார். ஆனால், அவர்களில் ஒருவன் மட்டுமே திரும்பி வந்து அவருக்கு நன்றி தெரிவித்தான். அப்போது, “சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?” என்று அவர் கேட்டார். (லூக். 17:11-19) நம்மைப் பொறுத்ததில், தாராளமும் அன்புமிக்க நம் பரலோகத் தகப்பனான யெகோவா தேவன் நன்மையான சகல பரிசையும் பூரணமான சகல வரத்தையும் நமக்கு அளித்திருக்கிறார்; இவற்றை நாம் மதிப்பதும், இவற்றுக்கு நன்றியை வெளிக்காட்டுவதும் முக்கியம், அல்லவா?—கொலோ. 3:15; யாக். 1:17.
2 என்னென்ன காரணங்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்? மீட்கும்பலி எனும் மிகப் பெரிய பரிசை கடவுள் மனிதகுலத்திற்கு அளித்திருப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். (யோவா. 3:16) நம்மை தம்மிடம் இழுத்துக் கொண்டிருப்பதற்காகவும் நாம் யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். (யோவா. 6:44) அதோடு, உலகெங்குமுள்ள சபைகளில் நாம் அனுபவித்து வரும் ஒற்றுமைக்காகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். (சங். 133:1-3) இது போன்று யெகோவா கொடுத்திருக்கும் எத்தனையோ பரிசுகள் நிச்சயம் உங்கள் நினைவுக்கு வரலாம். இஸ்ரவேலரோ, யெகோவா தங்களுக்காக செய்த அனைத்தையும் மறந்து நன்றிகெட்டவர்களாய் நடந்துகொண்டார்கள்; அவர்களைப்போல் ஆவதற்கு நாம் ஒருபோதும் விரும்பமாட்டோம்.—சங். 106:12, 13.
3 நன்றியை வெளிக்காட்டுங்கள்: இயேசு சுகப்படுத்தியபோது அந்தப் பத்து குஷ்டரோகிகளும் சந்தோஷப்பட்டாலும் அவர்களில் ஒருவன் மட்டுமே நன்றியை வெளிக்காட்டினான். (லூக். 17:15) ஊழியத்தில் ஊக்கமாய்ப் பங்குகொள்வதன்மூலம் நாமும் நன்றியை வெளிக்காட்டுகிறோம். நம்முடைய பரலோகத் தகப்பன் செய்திருக்கும் அனைத்துக் காரியங்களுக்காகவும் நாம் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோமா? அப்படியென்றால், அவரைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதன்மூலம் அவருடைய அன்பையும் தாராள குணத்தையும் பின்பற்றத் தூண்டப்படுவோம். (லூக். 6:45) இப்படி யெகோவா நமக்காக செய்திருக்கிற ‘அதிசயங்களையும் . . . யோசனைகளையும் [அதாவது, திட்டங்களையும்]’ பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது, அவரிடம் நமக்குள்ள அன்பும் நன்றியுணர்வும் அதிகரிக்கும்.—சங். 40:5.
4 நன்றியை வெளிக்காட்ட மற்றவர்களைத் தூண்டுங்கள்: யெகோவாவுக்கு நன்றியை வெளிக்காட்ட நம் பிள்ளைகளுக்கும் பைபிள் மாணாக்கர்களுக்கும் எப்படியெல்லாம் உதவலாம் என நாம் யோசிக்க வேண்டும். இப்படி உதவ பெற்றோருக்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, யெகோவாவின் படைப்புகளைப்பற்றிப் பிள்ளைகளிடம் அவர்கள் பேசலாம். (ரோ. 1:20) பைபிள் படிப்பு நடத்தும்போது, “யெகோவாவின் எந்தக் குணத்தைப்பற்றி இது நமக்குச் சொல்கிறது?” என்று மாணாக்கரிடம் நாம் கேட்கலாம். யெகோவாவிடம் இவருக்கு நன்றியுணர்வு அதிகரிக்க அதிகரிக்க, அவரிடமுள்ள அன்பும், அவருக்குப் பிரியமாய் நடக்க வேண்டுமென்ற ஆசையும் அதிகரிக்கும்.
5 இந்தக் கடைசி காலத்தில் அநேகர் நன்றி அறியாதவர்களாய் இருக்கிறார்கள். (2 தீ. 3:1, 2) தம்மை உண்மையாய் வழிபடுகிறவர்கள், ஊழியத்தில் ஊக்கமாய்ப் பங்குகொள்வதன்மூலம் நன்றியை வெளிக்காட்டுவதைப் பார்க்கும்போது யெகோவா எவ்வளவாய் ஆனந்தப்படுவார்!—யாக். 1:22-25.