குடும்பங்கள் கடவுளிடம் நெருங்கிவர...
1. வாராந்தர ஓய்வுநாள் இஸ்ரவேல் குடும்பங்களுக்கு எப்படிப் பயனளித்தது?
1 வாராந்தர ஓய்வுநாளை அனுசரிக்கும்படி இஸ்ரவேல் மக்களுக்கு யெகோவா கட்டளையிட்டார்; அவர் செய்த இந்த அன்பான ஏற்பாடு அவர்களுடைய குடும்பங்களுக்கு மிகுந்த பயனளித்தது. அந்த நாளில், அவர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளை நிறுத்திவிட்டார்கள்; யெகோவா செய்த நன்மைகளைப் பற்றியும் அவரோடு தங்களுக்குள்ள பந்தத்தைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தார்கள். பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளின் இருதயத்தில் திருச்சட்டத்தைப் பதியவைக்க அந்த நாளைப் பயன்படுத்திக்கொண்டார்கள். (உபா. 6:6, 7) இவ்வாறு, யெகோவாவின் மக்கள் வாரந்தோறும் ஓய்வுநாளில் தங்களுடைய வழிபாட்டிற்குக் கவனம் செலுத்தினார்கள்.
2. ஓய்வுநாள் சட்டம், யெகோவாவைப் பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது?
2 இன்று, கிறிஸ்தவக் குடும்பங்கள் ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்ப்பதில்லை. என்றாலும், ஓய்வுநாள் சட்டம் அவரைப் பற்றி கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒரு விஷயத்தைக் கற்பிக்கிறது. அதாவது, அவரது மக்களுடைய ஆன்மீக நலனில் அவர் அதிக அக்கறை காட்டி வந்திருக்கிறார் என்பதைக் கற்பிக்கிறது. (ஏசா. 48:17, 18) இன்று, யெகோவா தம்முடைய அன்பான அக்கறையை வெளிக்காட்டுகிற ஒரு வழி... குடும்ப வழிபாடு!
3. குடும்ப வழிபாட்டின் நோக்கம் என்ன?
3 குடும்ப வழிபாட்டின் நோக்கம் என்ன? ஜனவரி 2009 முதற்கொண்டு, தேவராஜ்ய ஊழியப் பள்ளியும் ஊழியக் கூட்டமும் நடத்தப்படுகிற அதே மாலை நேரத்திற்கு சபை புத்தகப் படிப்பு மாற்றப்பட்டது. இவ்வாறு மாற்றப்பட்டதற்கு ஒரு காரணம், குடும்பங்கள் ஒவ்வொரு வாரமும் குடும்ப வழிபாட்டிற்காக ஒரு மாலை நேரத்தை ஒதுக்க வேண்டும்... அதன் மூலம் யெகோவாவுடன் உள்ள தங்களுடைய பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்... என்பதே. நடைமுறைக்கு ஒத்துவந்தால், முன்பு சபை புத்தகப் படிப்பு நடத்தப்பட்ட அதே மாலை நேரத்தில் குடும்பப் படிப்பை நடத்தும்படி நமக்கு அறிவுறுத்தப்பட்டது; பைபிளை ஆற அமரக் கலந்தாலோசிப்பதற்கும், குடும்பத்தார் எதிர்ப்பட்டு வருகிற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விஷயங்களைப் படிப்பதற்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது.
4. குடும்ப வழிபாட்டை ஒரு மணிநேரத்திற்குள் முடித்துவிட வேண்டுமா? விளக்குங்கள்.
4 முன்பெல்லாம்... சபை புத்தகப் படிப்பில் கலந்துகொள்வதற்காக, உடை உடுத்துவது, பயணம் செய்வது என நிறைய நேரத்தை நாம் செலவிட வேண்டியிருந்தது. நம்மில் அநேகர், ஒரு மணிநேர புத்தகப் படிப்புக்காக அந்த மாலை நேரம் முழுவதையுமே செலவழிக்க வேண்டியிருந்தது. இப்போது சபைக் கூட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், குடும்பமாக யெகோவாவை வழிபட அந்த மாலை நேரத்தை நம்மால் ஒதுக்க முடிகிறது. எனவே, குடும்ப வழிபாட்டை ஒரு மணிநேரத்தில் முடித்துக்கொண்டால் போதும் என்று நாம் நினைக்க வேண்டியதில்லை. மாறாக, நம் குடும்பத்தாரின் தேவைகளுக்கு ஏற்ப நாம் நேரம் ஒதுக்க வேண்டும்; அதே சமயத்தில் அவர்களுடைய வரையறைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
5. கலந்தாலோசிப்புக்காகவே முழு நேரத்தையும் செலவிட வேண்டுமா? விளக்குங்கள்.
5 கலந்தாலோசிப்புக்காகவே முழு நேரத்தையும் செலவிட வேண்டுமா? தம்பதிகளாக இருந்தாலும் சரி பிள்ளைகளை உடையவர்களாக இருந்தாலும் சரி, பைபிள் விஷயங்களை அவர்கள் ஒன்றுசேர்ந்து கலந்தாலோசிக்கும்போது, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துகிறார்கள். (ரோ. 1:12) அதோடு, ஒருவருக்கொருவர் நெருங்கி வருகிறார்கள். எனவே குடும்ப வழிபாட்டில், பைபிள் விஷயங்களைக் கலந்தாலோசிப்பதற்கே அதிக முக்கியத்துவம் தர வேண்டும். என்றாலும், குடும்ப அங்கத்தினர்கள் தனியாகப் படிப்பதற்கும் கொஞ்ச நேரத்தை ஒதுக்கலாம். இதை எப்படிச் செய்யலாம்? குடும்பக் கலந்தாலோசிப்புக்குப் பிறகு, அவர்கள் எல்லாருமே தனித்தனியாகத் தொடர்ந்து படிக்கலாம்; அந்தச் சமயத்தில் கூட்டங்களுக்குத் தயார் செய்து முடிக்கலாம் அல்லது பத்திரிகைகளை வாசிக்கலாம். சொல்லப்போனால், சில குடும்பங்கள் அந்த மாலை நேரத்தில் டிவி நிகழ்ச்சிகளை அறவே பார்ப்பதில்லை.
6. கலந்தாலோசிப்பை எப்படி நடத்தலாம்?
6 கலந்தாலோசிப்பை எப்படி நடத்தலாம்? குடும்ப வழிபாட்டை கேள்வி-பதில் முறையில்தான் நடத்த வேண்டும் என்ற அவசியமில்லை. அநேக குடும்பத்தார், அதை உற்சாகமானதாய்... சுவாரஸ்யமானதாய்... ஆக்குவதற்காக, வாரநாள் கூட்டங்களில் இருப்பதைப் போன்ற ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கிறார்கள். தாங்கள் கலந்தாலோசிக்கிற விஷயங்களைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொள்கிறார்கள், அவற்றை வெவ்வேறு விதத்தில் கையாளுகிறார்கள். உதாரணமாக, முதலில் அவர்கள் எல்லாரும் பைபிளைச் சேர்ந்து படிக்கிறார்கள்; பின்பு, கூட்டங்களுக்குக் கொஞ்சம் தயாரிக்கிறார்கள்; அதன்பிறகு, ஊழியத்தில் பேசப்போவதை ஒத்திகை பார்க்கிறார்கள். இது சம்பந்தமாக, பக்கம் 6-ல் சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
7. எப்படிப்பட்ட சூழல் இருக்கும்படி பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும்?
7 எப்படிப்பட்ட சூழல் இருக்கும்படி பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும்? உங்கள் குடும்பத்தார் நன்றாகக் கற்றுக்கொள்வதற்கு... அன்பான, ரம்மியமான சூழல் நிலவ வேண்டும். வானிலை நன்றாக இருந்தால், சில சமயங்களில் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்தும் படிக்கலாம். தேவைப்பட்டால், சிறிது இடைவேளை விட்டுப் பின்பு தொடரலாம். சில குடும்பங்கள் படித்துமுடித்த பிறகு சிற்றுண்டி சாப்பிடுகிறார்கள். பிள்ளைகளைத் திட்டவோ கண்டிக்கவோ குடும்ப வழிபாட்டு நேரத்தைப் பயன்படுத்தாதபடி பெற்றோர் கவனமாய் இருக்க வேண்டும்; என்றாலும், பிள்ளைகளிடம் தாங்கள் கவனித்த ஏதோவொரு பிரச்சினையை அல்லது அவர்களுடைய நடவடிக்கைகளில் தெரிகிற ஏதோவொரு மாற்றத்தைப் பற்றிப் பேச கொஞ்ச நேரத்தை ஒதுக்கலாம். ஆனால், ஒரு பிள்ளையை உணர்ச்சிப்பூர்வமாகப் பாதிக்கிற தனிப்பட்ட பிரச்சினையைப் பற்றி அந்த வாரத்திலேயே வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்; மற்ற பிள்ளைகளுக்கு முன்பு பேசினால் அந்தப் பிள்ளை தர்மசங்கடமாக உணர வாய்ப்பிருக்கிறது. ஆம், நாம் சந்தோஷமுள்ள கடவுளை வழிபடுவதால் குடும்ப வழிபாட்டு நேரம்... சந்தோஷம் தருகிற நேரமாக இருக்க வேண்டும், சலிப்புத் தட்டுகிற நேரமாக இருக்கக்கூடாது.—1 தீ. 1:11.
8, 9. குடும்பத் தலைவர்கள் எப்படித் தயாரிக்கலாம்?
8 குடும்பத் தலைவர் எப்படித் தயாரிக்கலாம்? குடும்ப வழிபாட்டிற்காக ஒவ்வொரு வாரமும் குடும்பத் தலைவர் தயாரித்தால், குடும்பத்தார் அதிக நன்மை அடைவார்கள்; குடும்ப வழிபாட்டில்... எந்த விஷயத்தைக் கலந்தாலோசிப்பது, அதை எப்படிச் சிறந்த விதத்தில் கலந்தாலோசிப்பது என்பதையெல்லாம் முன்கூட்டியே அவர் தீர்மானிக்க வேண்டும். (நீதி. 21:5) அது சம்பந்தமாக, அவர் தனது மனைவியிடமும் ஆலோசனை கேட்கலாம். (நீதி. 15:22) குடும்பத் தலைவர்களே... இதுபற்றி உங்கள் பிள்ளைகளிடமும் சில சமயங்களில் நீங்கள் கேட்கலாம், அல்லவா? இப்படிச் செய்தால், உங்கள் பிள்ளைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது... என்ன பிரச்சினை இருக்கிறது... என்பதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வீர்கள்.
9 பெரும்பாலும், குடும்ப வழிபாட்டிற்குத் தயாரிப்பதற்காகக் குடும்பத் தலைவர் நிறைய நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியம் இருக்காது. குடும்ப வழிபாட்டில் சில அம்சங்கள் தவறாமல் இடம்பெற்றுவரலாம்... அந்த அம்சங்கள் குடும்பத்தாருக்கும் சுவாரஸ்யமானவையாக இருக்கலாம்... எனவே, குடும்ப வழிபாட்டு நிகழ்ச்சிகளை அவர் வாராவாரம் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு வாரமும், குடும்ப வழிபாட்டை முடித்த கையோடு, அடுத்த வாரத்திற்காக அவர் தயாரித்துவிடலாம்; ஏனென்றால், குடும்பத்தாரின் ஆன்மீகத் தேவைகள் அப்போது அவருடைய மனதில் பசுமையாக இருக்கும். குடும்பத் தலைவர்கள் சிலர் அடுத்த வாரத்திற்கான நிகழ்ச்சி நிரலை எழுதி எல்லாரும் பார்க்கிற மாதிரியான ஓர் இடத்தில், ஒருவேளை ஃபிரிட்ஜின் மேல் ஒட்டி வைக்கிறார்கள். இப்படிச் செய்வதால், அடுத்த வார குடும்ப வழிபாட்டிற்காகக் குடும்பத்தார் ஆசையோடு காத்திருக்கிறார்கள்; ஒருவேளை அதற்காகத் தயாரிக்க வேண்டியிருந்தால், போதிய நேரமெடுத்து நன்றாகத் தயாரிக்கிறார்கள்.
10. தனியாக இருப்பவர்கள், குடும்ப வழிபாட்டு நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?
10 நான் மட்டும் தனியாக இருந்தால்? தனியாக இருப்பவர்கள் குடும்ப வழிபாட்டு நேரத்தை தனிப்பட்ட படிப்புக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பைபிளை வாசிப்பது, கூட்டங்களுக்காகத் தயாரிப்பது, காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வாசிப்பது ஆகியவற்றை அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட படிப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோக... சில பிரஸ்தாபிகள் ஏதாவதொரு விஷயத்தைக் கூடுதலாக ஆராய்ச்சி செய்தும் படிக்கிறார்கள். அவ்வப்போது... பைபிள் விஷயங்களை உற்சாகமாய்க் கலந்துரையாடுவதற்காக வேறொரு பிரஸ்தாபியையோ குடும்பத்தையோ தன்னோடு சேர்ந்துகொள்ளும்படி அவர்கள் அழைக்கலாம்.
11, 12. குடும்ப வழிபாட்டைத் தவறாமல் நடத்துவதால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன?
11 குடும்ப வழிபாட்டைத் தவறாமல் நடத்துவதால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன? உண்மை வணக்கத்தில் உள்ளப்பூர்வமாய் ஈடுபடுகிறவர்கள் யெகோவாவிடம் நெருங்கி வருவார்கள். அதோடு, குடும்பமாகச் சேர்ந்து யெகோவாவை வழிபடுகிறவர்கள் குடும்ப பந்தத்தையும் பலப்படுத்திக்கொள்வார்கள். ஒரு தம்பதியர் தாங்கள் பெற்றிருக்கிற பலன்களைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்கள்: “நாங்கள் இரண்டு பேருமே பயனியர்களாக இருக்கிறோம்; எங்களுக்குப் பிள்ளைகள் இல்லை. இருந்தாலும், குடும்ப வழிபாட்டு நேரம் எப்போது வருமென்று ஆசை ஆசையாய்க் காத்திருப்போம். யெகோவாவோடு எங்களுக்கு இருக்கிற பந்தமும் சரி எங்கள் இருவருக்கிடையில் இருக்கிற பந்தமும் சரி, நாளுக்கு நாள் பலமாகி வருவதை எங்களால் நன்றாகவே உணர முடிகிறது. ஒவ்வொரு வாரமும் குடும்ப வழிபாட்டு நாள் அன்று காலையில் எழும்போதே, ‘இன்றைக்கு என்ன நாள்..? குடும்ப வழிபாட்டு நாள்!’ என்று சொல்லிக்கொள்வோம்.”
12 குடும்ப வழிபாடு, ஓய்வுஒழிச்சலே இல்லாமல் வேலைபார்க்கிற குடும்பத்தாருக்கும் கைகொடுத்திருக்கிறது. உதாரணமாக, இரண்டு மகன்களை வளர்த்துக்கொண்டு, ஒழுங்கான பயனியர் ஊழியமும் செய்துவருகிற ஓர் ஒற்றைத் தாய் இப்படி எழுதினார்: “முன்பெல்லாம், எங்கள் வீட்டில் குடும்பப் படிப்பு ஒழுங்காகவே நடக்காது. நான் ரொம்ப களைத்துப்போயிருப்பேன்... நினைத்தால் நடத்துவேன்... இல்லையென்றால் விட்டுவிடுவேன். இதற்காக நேரம் கண்டுபிடிப்பது பெரிய சவாலாக இருந்தது. குடும்ப வழிபாட்டுக்கென்று ஒரு மாலை நேரத்தை ஒதுக்க உதவியதற்காக நான் உங்களுக்கு மனதார நன்றி சொல்கிறேன். இப்போது எங்கள் வீட்டில் குடும்பப் படிப்பு தவறாமல் நடக்கிறது; அதனால் நிறைய நன்மையும் கிடைக்கிறது.”
13. குடும்ப வழிபாட்டிலிருந்து முழுமையாகப் பலன் அடைய குடும்பங்கள் என்ன செய்ய வேண்டும்?
13 ஓய்வுநாள் ஏற்பாட்டைப் போலவே... குடும்ப வழிபாடும் குடும்பங்களுக்கு யெகோவா தந்த பரிசு! (யாக். 1:17) இஸ்ரவேல் குடும்பங்கள் ஓய்வுநாள் ஏற்பாட்டை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டபோது ஆன்மீக ரீதியில் அதிகளவு பலன் அடைந்தார்கள். அவ்வாறே, குடும்ப வழிபாட்டு நேரத்தை நாம் எந்தளவு நன்றாகப் பயன்படுத்துகிறோமோ அந்தளவு நம் குடும்பங்களும் பலன் அடையும். (2 கொ. 9:6; கலா. 6:7, 8; கொலோ. 3:23, 24) இந்த ஏற்பாட்டைச் சிறந்த விதத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! அப்படிச் செய்தால், “எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் . . . கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்” என்று சங்கீதக்காரன் சொன்னதைப் போலவே உங்கள் குடும்பத்தாரும் சொல்வார்கள்.—சங். 73:28.
[பக்கம் 5-ன் சிறுகுறிப்பு]
நாம் சந்தோஷமுள்ள கடவுளை வழிபடுவதால் குடும்ப வழிபாட்டு நேரம்... சந்தோஷம் தருகிற நேரமாக இருக்க வேண்டும், சலிப்புத் தட்டுகிற நேரமாக இருக்கக்கூடாது
[பக்கம் 6-ன் பெட்டி]
பாதுகாத்திடுங்கள்
குடும்ப வழிபாட்டுக்கு... சில ஆலோசனைகள்
பைபிள்:
• வாராந்தர பைபிள் வாசிப்பிலிருந்து ஒரு பகுதியைச் சேர்ந்து வாசியுங்கள். அந்தப் பகுதி, ஒருவர் விவரிப்பது போன்றும், அதில் வரும் கதாபாத்திரங்கள் உரையாடுவது போன்றும் இருந்தால்... விவரணைப் பகுதியை ஒருவரும், கதாபாத்திரங்கள் உரையாடும் பகுதியை மற்றவர்களுமாக மாறிமாறி வாசிக்கலாம்.
• பைபிள் வாசிப்புப் பகுதி நாடக பாணியில் இருந்தால்... அதை நடித்துப் பாருங்கள்.
• பைபிள் வாசிப்புப் பகுதியை முன்கூட்டியே வாசிக்கும்படி உங்கள் குடும்ப அங்கத்தினர்களிடம் சொல்லுங்கள்; அப்படி வாசிக்கும்போது அவர்களுடைய மனதில் வருகிற ஓரிரு கேள்விகளை எழுதிவைக்கச் சொல்லுங்கள். குடும்ப வழிபாட்டின்போது, அந்தக் கேள்விகளை எல்லாருமாகச் சேர்ந்து ஆராய்ச்சி செய்யுங்கள்.
• ஒவ்வொரு வாரமும் ஒரு பைபிள் வசனத்தை ஓர் அட்டையில் எழுதுங்கள்; அதை மனப்பாடம் செய்யுங்கள், அதன் அர்த்தத்தையும் சொல்லுங்கள். அந்த அட்டைகளையெல்லாம் சேர்த்து வையுங்கள்; பின்பு, அவற்றை வாராவாரம் எடுத்துப் பார்த்து, எத்தனை பைபிள் வசனம் உங்களுக்கு மனப்பாடமாகத் தெரிகிறது என்று பாருங்கள்.
• பைபிளின் ஆடியோ பதிவை ஓடவிட்டு... உங்கள் பைபிளிலிருந்து அந்தப் பகுதியைக் கவனித்துக்கொண்டே வாருங்கள்.
கூட்டங்கள்:
• கூட்டங்களுக்கான ஒரு பகுதியைச் சேர்ந்து தயாரியுங்கள்.
• வரும் வாரத்திற்காக அட்டவணையிடப்பட்ட பாடல்களைப் பழகிப் பாருங்கள்.
• யாருக்காவது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சு இருந்தால்... அல்லது ஊழியக் கூட்டத்தில் நடிப்பு இருந்தால்... அதை எப்படிச் செய்வது என்று கலந்தாலோசியுங்கள்; பின்னர் குடும்பத்தாருக்கு முன்பு ஒத்திகை பாருங்கள்.
குடும்பத்தின் தேவைகள்:
• இளைஞர் கேட்கும் கேள்விகள் அல்லது பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகங்களிலிருந்து சில பகுதிகளைக் கலந்தாலோசியுங்கள்.
• பள்ளியில் எழக்கூடிய ஒரு பிரச்சினையை எப்படிச் சமாளிக்கலாம் என்று ஒத்திகை பாருங்கள்.
• பிள்ளைகளின் இடத்தில் பெற்றோரும் பெற்றோரின் இடத்தில் பிள்ளைகளும் இருப்பதாக வைத்துக்கொண்டு ஒத்திகை பாருங்கள்; அந்த ஒத்திகை, ஏதோவொரு விஷயத்தின் பேரில் பிள்ளைகள் ஆராய்ச்சி செய்து பெற்றோரிடம் நியாயங்காட்டிப் பேசுவதாக இருக்கலாம்.
ஊழியம்:
• அந்த வாரக் கடைசியில், ஊழியத்தில் சந்திக்கிற ஆட்களிடம் எப்படிப் பேசுவீர்கள் என்பதை ஒத்திகை பாருங்கள்.
• நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தின்போது அல்லது விடுமுறை நாட்களின்போது ஊழியத்தில் அதிகமாக ஈடுபட உங்கள் குடும்பத்தார் என்னென்ன இலக்குகளை வைக்கலாம் எனக் கலந்தாலோசியுங்கள்.
• ஊழியத்தில் வீட்டுக்காரர் கேட்கக்கூடிய கேள்விகளில் சிலவற்றை குடும்பத்தாரிடம் குறிப்பிட்டு, அவற்றுக்கான பதிலை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதற்குக் கொஞ்ச நேரம் கொடுங்கள்; பின்பு அவற்றை ஒத்திகை பாருங்கள்.
கூடுதல் ஆலோசனைகள்:
• தற்போதைய பத்திரிகைகளிலிருந்து ஒரு கட்டுரையைச் சேர்ந்து வாசியுங்கள்.
• தற்போதைய பத்திரிகைகளில் அவரவருக்குப் பிடித்த ஒரு கட்டுரையை முன்கூட்டியே வாசிக்கும்படி குடும்ப அங்கத்தினர்களிடம் சொல்லிவிடுங்கள்; அந்தக் கட்டுரையில் உள்ளவற்றைக் சுருக்கமாகச் சொல்லச்சொல்லுங்கள்.
• அவ்வப்போது, உங்கள் குடும்ப வழிபாட்டில் கலந்துகொள்ளும்படி ஒரு பிரஸ்தாபியையோ ஒரு தம்பதியரையோ அழையுங்கள்; அவர்களுடைய அனுபவங்களையும் கேளுங்கள்.
• நம் வீடியோக்களில் ஒன்றைப் போட்டுப் பார்த்து அவற்றைக் குறித்துக் கலந்துபேசுங்கள்.
• விழித்தெழு! பத்திரிகையில் வருகிற... “இளைஞர் கேட்கின்றனர்” பகுதியைக் கலந்தாலோசியுங்கள்.
• காவற்கோபுர பத்திரிகையில் வருகிற... “பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்ற பகுதியைக் கலந்தாலோசியுங்கள்.
• தற்போதைய இயர்புக் அல்லது கடந்த மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரசுரத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்துக் கலந்துரையாடுங்கள்.
• ஒரு மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, அதன் சிறப்பம்சங்களைக் குறித்துப் பேசுங்கள்.
• தாவரங்கள், மிருகங்கள் என யெகோவா படைத்திருக்கிற ஏதோவொன்றை ரசித்துப் பாருங்கள்; பின்பு, அவரைப் பற்றி அது என்ன கற்பிக்கிறது என்பதைக் கலந்துபேசுங்கள்.
• பைபிள் காலத்துப் பொருள்களின் குட்டி ‘மாடல்’-களையோ ஒரு வரைபடத்தையோ ஓர் அட்டவணையையோ சேர்ந்து தயாரியுங்கள்.