கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கடவுளையும் மற்றவர்களையும் நேசிக்க எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?
திருச்சட்டத்துக்குக் கிறிஸ்தவர்கள் கட்டுப்பட்டவர்களாக இல்லையென்றாலும், அதனுடைய இரண்டு மிக முக்கியமான கட்டளைகள், அதாவது கடவுளையும் மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்ற கட்டளைகள், நம்மிடமிருந்து யெகோவா எதை எதிர்பார்க்கிறார் என்பதைக் காட்டுகின்றன. (மத் 22:37-39) அதுபோன்ற அன்பு இயல்பாகவே வருவதில்லை; நாம்தான் அதை வளர்க்க வேண்டும். இதை எப்படி வளர்ப்பது? ஒரு வழி, தினமும் பைபிளைப் படிப்பது! கடவுளுடைய சுபாவத்தின் வெவ்வேறு அம்சங்களை நாம் வசனங்களிலிருந்து தெரிந்துகொள்ளும்போது, “யெகோவா எவ்வளவு இனிமையானவர்” என்பது புரியும். (சங் 27:4) அப்போது, அவர்மேல் இருக்கும் அன்பு அதிகமாகும்; அவரைப் போலவே நாம் யோசிக்க ஆரம்பிப்போம். அப்படி யோசிக்கும்போது, மற்றவர்களுக்காகத் தியாகம் செய்யுமளவுக்கு அவர்களை நேசிக்க வேண்டுமென்ற கட்டளை உட்பட, கடவுளுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதற்கான தூண்டுதல் நமக்குக் கிடைக்கும். (யோவா 13:34, 35; 1யோ 5:3) பைபிளை சுவாரஸ்யமாக படிப்பதற்கு இதோ மூன்று வழிகள்:
உங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்துங்கள், உணர்ந்து பாருங்கள். நீங்கள் அங்கே இருப்பதுபோல் கற்பனை செய்யுங்கள். என்ன பார்க்கிறீர்கள்? கேட்கிறீர்கள்? முகருகிறீர்கள்? அந்தப் பதிவில் வரும் கதாபாத்திரங்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள்?
வித்தியாசமான முறைகளில் படித்துப் பாருங்கள். சில முறைகள்: சத்தமாகப் படியுங்கள், அல்லது ஆடியோ பதிவைக் கேட்டுக்கொண்டே அந்தப் பதிவை உங்கள் பைபிளில் பாருங்கள். ஒவ்வொரு அதிகாரமாக படிப்பதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட பைபிள் கதாபாத்திரத்தையோ குறிப்பிட்ட ஒரு தலைப்பையோ தேர்ந்தெடுத்துப் படியுங்கள். உதாரணத்துக்கு, இயேசுவைப் பற்றி, பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பில் இருக்கும் இணைப்புகள் A7 அல்லது B12-ஐப் படித்துப் பாருங்கள். தினவசனம் எந்த அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறதோ, அந்த முழு அதிகாரத்தையும் படியுங்கள். பைபிள் புத்தகங்களை, அவை எழுதப்பட்ட கால வரிசையின்படி படியுங்கள்.
புரிந்து படியுங்கள். நிறையப் பக்கங்களை படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக, வெறுமனே வாசித்துக்கொண்டே போகாதீர்கள். ஒரு நாளைக்கு ஒரு அதிகாரத்தைப் படித்தால்கூட, நன்றாகப் புரிந்து படியுங்கள்; தியானித்துப் பாருங்கள். என்ன சூழலில் அது எழுதப்பட்டிருக்கிறது என்பதையும், அதன் முழு விவரங்களையும் யோசித்துப் பாருங்கள். வரைபடங்களையும் இணைவசனங்களையும் பயன்படுத்துங்கள். உங்களுக்குப் புரியாத விஷயங்களில் ஏதாவது ஒன்றைப் பற்றியாவது ஆராய்ச்சி செய்யுங்கள். முடிந்தால், படிப்பதற்கு செலவிட்ட அதே அளவு நேரத்தை தியானிப்பதற்கும் செலவிடுங்கள்.