படிப்புக் கட்டுரை 4
‘கடவுளுடைய சக்தி ஊர்ஜிதப்படுத்துகிறது’
“நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்பதை அந்தச் சக்தி நம் மனதில் ஊர்ஜிதப்படுத்துகிறது.”—ரோ. 8:16.
பாட்டு 147 விசேஷ சொத்து
இந்தக் கட்டுரையில்...a
1-2. கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று மெய்சிலிர்க்கவைக்கும் என்ன சம்பவம் நடந்தது?
கி.பி. 33! பெந்தெகொஸ்தே நாள்!! ஞாயிற்றுக்கிழமை காலை!!! எருசலேமிலிருந்த ஒரு வீட்டின் மாடி அறையில் 120 சீஷர்கள் ஒன்றுகூடி வந்திருக்கிறார்கள். (அப். 1:13-15; 2:1) எருசலேமிலேயே இருக்கும்படி கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் இயேசு அவர்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தார். எதற்காக? ஒரு விசேஷ பரிசைப் பெற்றுக்கொள்வதற்காக! (அப். 1:4, 5) அடுத்து என்ன நடந்தது?
2 “அப்போது, திடீரென்று பலத்த காற்று வீசுவது போன்ற சத்தம் வானத்திலிருந்து வந்தது.” அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதும் அந்தச் சத்தம் கேட்டது. பிறகு, ‘நெருப்பு போன்ற நாவுகள்’ அந்தச் சீஷர்களின் தலையின் மீது தோன்றியது. அவர்கள் எல்லாரும் “கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டார்கள்.” (அப். 2:2-4) இப்படி, அற்புதமான விதத்தில் தன்னுடைய சக்தியை அவர்கள்மீது யெகோவா பொழிந்தார். (அப். 1:8) கடவுளுடைய சக்தியால் அபிஷேகம்b செய்யப்பட்ட முதல் தொகுதியினர் இவர்கள்தான்! இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்யும் நம்பிக்கையை இவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
ஒருவர் அபிஷேகம் செய்யப்படும்போது என்ன நடக்கிறது?
3. பரலோகத்தில் வாழ்வதற்காக கடவுளுடைய சக்தி தங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறதா என்ற சந்தேகம் பெந்தெகொஸ்தே நாளிலிருந்த 120 சீஷர்களுக்கு வந்திருக்குமா? விளக்குங்கள்.
3 அந்த மாடி அறையில் நீங்களும் இருந்திருந்தால், நெருப்பு போன்ற நாவுகள் உங்கள் தலையின் மேல் வந்து அமர்ந்திருக்கும். வெவ்வேறு மொழிகளில் பேச ஆரம்பித்திருப்பீர்கள். (அப். 2:5-12) அன்று நடந்த அந்தச் சம்பவம் உங்கள் நெஞ்சைவிட்டு நீங்காமல் இருந்திருக்கும். கடவுளுடைய சக்தியால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதில் உங்களுக்குத் துளிகூட சந்தேகம் இருந்திருக்காது. ஆனால், அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் எல்லாரும் இப்படி அற்புதமான விதத்தில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதுமட்டுமல்ல, வாழ்க்கையின் ஏதோ ஒரு சமயத்தில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். இதெல்லாம் நமக்கு எப்படித் தெரியும்? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
4. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஞானஸ்நானம் எடுத்த உடனே அபிஷேகம் செய்யப்பட்டார்களா? விளக்குங்கள்.
4 எந்தச் சமயத்தில் ஒரு நபர் அபிஷேகம் செய்யப்படுகிறார் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம். கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று 120 சீஷர்கள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படவில்லை. அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டு கொஞ்ச நேரம் கழித்து 3,000 பேர் அபிஷேகம் செய்யப்பட்டார்கள்; ஞானஸ்நானம் எடுத்த உடனே இவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டார்கள். (அப். 2:37, 38, 41) ஆனால், காலங்கள் போகப் போக எல்லாருமே அப்படி அபிஷேகம் செய்யப்படவில்லை. உதாரணத்துக்கு, ஞானஸ்நானம் எடுத்து கொஞ்ச நாள் கழித்துதான் சமாரியர்கள் அபிஷேகம் செய்யப்பட்டார்கள். (அப். 8:14-17) கொர்நேலியு மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடைய விஷயத்தில் வழக்கத்துக்கு மாறான ஒரு சம்பவம் நடந்தது. ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டார்கள்!—அப். 10:44-48.
5. ஒருவர் அபிஷேகம் செய்யப்படும்போது என்ன நடக்கும் என்று 2 கொரிந்தியர் 1:21, 22 சொல்கிறது?
5 கடவுளுடைய சக்தியால் ஒருவர் அபிஷேகம் செய்யப்படும்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம். பரலோகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், ‘கடவுள் என்னை போய் தேர்ந்தெடுத்திருக்கிறாரே’ என்று ஆரம்பத்தில் நினைக்கலாம். வேறுசிலர், அப்படி நினைக்காமல் இருக்கலாம். எப்படியிருந்தாலும் சரி, பரலோகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொல்கிறார்: ‘நீங்கள் . . . நம்பிக்கை வைத்த பின்பு, வாக்குறுதி கொடுக்கப்பட்ட கடவுளுடைய சக்தியால் அவர் மூலம் நீங்கள் முத்திரைc போடப்பட்டீர்கள். . . . உங்களுடைய ஆஸ்தியைப் பெறுவீர்கள் என்பதற்கு அவருடைய சக்தியே உத்தரவாதமாக இருக்கிறது.’ (எபே. 1:13, 14, அடிக்குறிப்பு) தான் அந்தக் கிறிஸ்தவர்களைத் தேர்ந்தெடுத்திருப்பதைத் தெளிவுபடுத்துவதற்குத் தன்னுடைய சக்தியைக் கடவுள் பயன்படுத்துகிறார். அந்தக் கிறிஸ்தவர்கள் பூமியில் அல்ல, பரலோகத்தில் என்றென்றும் வாழ்வார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு கடவுளுடைய சக்தி “உத்தரவாதமாக [முன்பணமாக]” கொடுக்கப்பட்டிருக்கிறது.—2 கொரிந்தியர் 1:21, 22-ஐ வாசியுங்கள்.
6. பரலோக வாழ்க்கைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் கடைசிவரை உண்மையாக இருப்பது ஏன் முக்கியம்?
6 ஒருவர் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதற்காக அவர் கண்டிப்பாக பரலோகத்துக்குப் போய்விடுவார் என்று சொல்லிவிட முடியாது. பரலோகத்துக்குப் போவதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதில் அவர் நிச்சயமாக இருக்கலாம். ஆனாலும், இந்த அறிவுரைக்கு அவர் கீழ்ப்படிய வேண்டும்: “சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டும் இருப்பதால், கடைசிவரை அதற்குத் தகுதியுள்ளவர்களாக இருப்பதற்கு இன்னும் ஊக்கமாக முயற்சி செய்யுங்கள். நீங்கள் இவற்றைச் செய்துவந்தால் ஒருபோதும் தகுதியில்லாதவர்களாக ஆகிவிட மாட்டீர்கள்.” (2 பே. 1:10) இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒருவர் கடவுளுடைய சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர் கடைசிவரை உண்மையாக இருந்தால்தான் பரலோகத்துக்குப் போக முடியும்.—பிலி. 3:12-14; எபி. 3:1; வெளி. 2:10.
ஒரு கிறிஸ்தவர் பரலோகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரா என்பது அவருக்கு எப்படித் தெரியும்?
7. பரலோக வாழ்க்கைக்காகத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை கிறிஸ்தவர்கள் எப்படித் தெரிந்துகொள்வார்கள்?
7 ‘பரிசுத்தவான்களாவதற்கு அழைப்புப் பெற்ற’ ரோமர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தில் இதற்கான பதில் இருக்கிறது. “கடவுளுடைய சக்தி நம்மை அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி பயப்பட வைப்பதில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்படுவதற்கு வழிநடத்தி, அவரை ‘அபா, தகப்பனே!’ என்று கூப்பிட வைக்கிறது. நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்பதை அந்தச் சக்தி நம் மனதில் ஊர்ஜிதப்படுத்துகிறது” என்று பவுல் எழுதினார். (ரோ. 1:2; 8:15, 16) பரலோகத்துக்குப் போவதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கடவுள் தன்னுடைய சக்தியின் மூலம் அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறார்.—1 தெ. 2:12.
8. ஒன்று யோவான் 2:20, 27 வசனங்களிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?
8 பரலோகத்துக்குப் போவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடைய மனதில் எந்தச் சந்தேகமும் வராத விதத்தில் யெகோவா அந்த விஷயத்தை ஊர்ஜிதப்படுத்துகிறார். (1 யோவான் 2:20, 27-ஐ வாசியுங்கள்.) மற்ற எல்லாரையும் போலவே பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் சபைக் கூட்டங்களுக்கு வந்து யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்பதை வேறு யாரும் ஊர்ஜிதப்படுத்த வேண்டியதில்லை. ஏனென்றால், இந்தப் பிரபஞ்சத்திலேயே அதிக வல்லமைவாய்ந்த தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி யெகோவா அவர்களுக்கு ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார்!
அவர்கள் ‘மறுபடியும் பிறக்கிறார்கள்’
9. ஒருவர் பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது அவருக்குள் என்ன மாற்றம் நடப்பதாக எபேசியர் 1:18 சொல்கிறது?
9 பரலோகத்துக்குப் போவதற்காகக் கடவுள் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது, அவருக்குள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது மற்றவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், அவர்கள் பரலோகத்துக்குப் போவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படவில்லையே! அதனால், அதைப் பற்றிப் புரிந்துகொள்வது கஷ்டமாகத்தானே இருக்கும்? அதுமட்டுமல்ல, பூமியில் என்றென்றும் வாழ்வதற்காகத்தான் கடவுள் மனிதர்களைப் படைத்தார், பரலோகத்தில் வாழ்வதற்கு அல்ல. (ஆதி. 1:28; சங். 37:29) ஆனால், பரலோகத்தில் வாழ்வதற்காகச் சிலரை அவர் தேர்ந்தெடுக்கும்போது, அவர்களுடைய நம்பிக்கைகளையும் யோசிக்கும் விதத்தையும் முழுமையாக மாற்றிவிடுகிறார். அதனால், பரலோகத்தில் வாழ்வதற்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.—எபேசியர் 1:18-ஐ வாசியுங்கள்.
10. ‘மறுபடியும் பிறப்பது’ என்றால் என்ன? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
10 ஒருவர் பரலோகத்துக்குப் போவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும்போது அவர் ‘மறுபடியும் பிறக்கிறார்,’ அதாவது ‘மேலிருந்து பிறக்கிறார்.’d இப்படி ‘மறுபடியும் பிறக்கிற’ ஒருவர், அதாவது ‘கடவுளுடைய சக்தியால் பிறக்கிற’ ஒருவர், எப்படி உணருவார் என்பதைப் பரலோக நம்பிக்கை இல்லாதவர்களுக்கு முழுமையாகப் புரியவைப்பது கஷ்டம் என்று இயேசுவும் சொன்னார்.—யோவா. 3:3-8, அடிக்குறிப்பு.
11. ஒருவர் பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது அவருடைய யோசனைகள் எப்படி மாறுகின்றன?
11 கிறிஸ்தவர்கள் பரலோகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, இந்தப் பூமியில் என்றென்றும் வாழவேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஆசையாக இருந்தது. எல்லா அக்கிரமங்களையும் துடைத்தழித்துவிட்டு இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக யெகோவா மாற்றப்போகிற காலத்துக்காக அவர்கள் ஆர்வமாகக் காத்திருந்தார்கள். சொல்லப்போனால், இறந்துபோன தங்கள் குடும்பத்தாரை அல்லது நண்பர்களை பூஞ்சோலை பூமியில் வரவேற்பதைப் பற்றிகூட அவர்கள் கற்பனை செய்திருப்பார்கள். ஆனால் கடவுளுடைய சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர்கள் வேறு விதமாக யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை பிடிக்காமல் போய்விட்டதால்தான் அவர்கள் அப்படி யோசிக்கிறார்களா? மனச்சோர்வால் அல்லது பயங்கரமான வேதனைகளை அனுபவித்ததால் தங்கள் மனதை மாற்றிக்கொண்டார்களா? பூமியில் என்றென்றும் வாழ்வது சலிப்புத்தட்டும் என்று நினைத்ததால் அவர்கள் அப்படி யோசித்தார்களா? இல்லவே இல்லை! அவர்கள் யோசிக்கும் விதத்தையும் அவர்களுடைய நம்பிக்கையையும் யெகோவாதான் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி மாற்றினார்.
12. ஒன்று பேதுரு 1:3, 4 சொல்கிறபடி, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் தங்களுடைய நம்பிக்கையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
12 பரலோகத்துக்குப் போவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அவ்வளவு பெரிய பாக்கியத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தனக்குத் தகுதி இல்லை என்று நினைக்கலாம். ஆனால், யெகோவா தன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் ஒரு நொடிகூட அவருக்கு வராது. பரலோகத்தில் வாழப்போவதை நினைத்து அவர் ரொம்பவே சந்தோஷப்படுவார்; அதற்காக நன்றியோடு இருப்பார்.—1 பேதுரு 1:3, 4-ஐ வாசியுங்கள்.
13. தங்களுடைய தற்போதைய வாழ்க்கையைப் பற்றிப் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
13 அப்படியென்றால், தாங்கள் சீக்கிரமாகவே இறந்துவிட வேண்டும் என்று பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ஆசைப்படுகிறார்களா? இந்தக் கேள்விக்கு அப்போஸ்தலன் பவுல் பதில் கொடுக்கிறார். அவர்களுடைய உடலை (பூமிக்குரிய உடலை) ஒரு கூடாரத்துக்கு ஒப்பிட்டு பவுல் இப்படிச் சொன்னார்: “சொல்லப்போனால், இந்தக் கூடாரத்தில் இருக்கிற நாம் மனபாரத்தின் காரணமாகக் குமுறுகிறோம். ஏனென்றால், இதைக் களைந்துபோட நாம் விரும்புவதில்லை, மற்றொன்றை அணிந்துகொள்ளவே விரும்புகிறோம். சாவுக்குரிய ஒன்றுக்குப் பதிலாக வாழ்வுக்குரிய ஒன்றையே பெற விரும்புகிறோம்.” (2 கொ. 5:4) இந்தப் பூமியில் வாழ்வது சலிப்புத்தட்டுகிறது என்றோ, அதனால் சீக்கிரமாகவே இறந்துவிட வேண்டும் என்றோ அவர்கள் நினைப்பதில்லை. அதற்குப் பதிலாக, வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்றும், குடும்பத்தோடும் நண்பர்களோடும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இருந்தாலும், தங்களுடைய மகத்தான நம்பிக்கையை அவர்கள் எப்போதும் மனதில் வைத்திருக்கிறார்கள்.—1 கொ. 15:53; 2 பே. 1:4; 1 யோ. 3:2, 3; வெளி. 20:6.
பரலோகத்துக்குப் போவதற்கு உங்களை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறாரா?
14. பரலோக வாழ்க்கைக்காக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று எதை வைத்து சொல்ல முடியாது?
14 இப்போது, இந்த முக்கியமான கேள்விகளை யோசித்துப்பாருங்கள்: யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரிகிறதா? பிரசங்க வேலையை படுசுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத் தீ உங்களுக்குள் பற்றியெரிகிறதா? “கடவுளுடைய ஆழமான காரியங்களை” ஆராய்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் இருக்கிறதா? (1 கொ. 2:10) உங்கள் ஊழியத்தில் யெகோவா அருமையான பலன்களை அள்ளித் தந்திருப்பதாக நினைக்கிறீர்களா? மற்றவர்களுக்கு யெகோவாவைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கும் முக்கியமான கடமை உங்களுக்கு இருப்பதாக உணருகிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் யெகோவா பல அற்புதமான விஷயங்களைச் செய்திருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தக் கேள்விகளுக்கு ‘ஆமாம்’ என்று பதில் சொன்னால், யெகோவா உங்களைப் பரலோகத்துக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று அர்த்தமா? இல்லை! நிச்சயமாக இல்லை!! ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் சரி, பூமிக்குரிய நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் சரி, கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருமே இப்படியெல்லாம் யோசிக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவருடைய நம்பிக்கை எதுவாக இருந்தாலும் யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்து இதையெல்லாம் செய்ய உதவுவார். சொல்லப்போனால், ‘பரலோகத்துக்கு போறதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கேனா இல்லையா’ என்று நீங்கள் யோசித்தாலே நீங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றுதான் அர்த்தம்! யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்த விஷயத்தில் எந்தச் சந்தேகமும் இருக்காது! அவர்களுக்கு உறுதியாகத் தெரியும்!!
15. கடவுளுடைய சக்தியைப் பெற்ற எல்லாருமே பரலோகத்துக்குப் போவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று ஏன் சொல்ல முடியாது?
15 கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொண்ட நிறைய பேரைப் பற்றி பைபிள் சொல்கிறது. இருந்தாலும், பரலோகத்தில் வாழ்வதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தாவீதைப் பற்றி யோசித்துப்பாருங்கள். கடவுளுடைய சக்தி அவரை வழிநடத்தியது. (1 சா. 16:13) யெகோவாவைப் பற்றிய ஆழமான விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கும், பைபிளின் சில பகுதிகளை எழுதுவதற்கும் அந்தச் சக்தி அவருக்கு உதவியது. (மாற். 12:36) ஆனாலும், “தாவீது பரலோகத்துக்கு ஏறிப்போகவில்லை” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (அப். 2:34) அடுத்ததாக, யோவான் ஸ்நானகரைப் பற்றி யோசித்துப்பாருங்கள். ‘கடவுளுடைய சக்தியால் அவர் நிரப்பப்பட்டிருந்தார்.’ (லூக். 1:13-16) மனுஷராகப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகரைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்று இயேசு சொன்னார். ஆனாலும், பரலோக வாழ்க்கைக்காக யோவான் ஸ்நானகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார். (மத். 11:10, 11) அற்புதமான காரியங்களைச் செய்வதற்கு யெகோவா தன்னுடைய சக்தியை இவர்களுக்குக் கொடுத்தார். ஆனால், இவர்களைப் பரலோகத்துக்குத் தேர்ந்தெடுப்பதற்காக அவர் அந்தச் சக்தியைப் பயன்படுத்தவில்லை. அப்படியென்றால், பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைவிட இவர்களுடைய விசுவாசம் குறைவாக இருந்தது என்று அர்த்தமா? இல்லை! பூஞ்சோலை பூமியில் யெகோவா இவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார்.—யோவா. 5:28, 29; அப். 24:15.
16. இன்றிருக்கும் கடவுளுடைய ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் எதற்காகக் காத்திருக்கிறார்கள்?
16 இன்றிருக்கிற கடவுளுடைய ஊழியர்களில் பெரும்பாலானவர்களுக்குப் பரலோக நம்பிக்கை இல்லை. ஆபிரகாம், சாராள், தாவீது, யோவான் ஸ்நானகர், பழங்காலத்தில் வாழ்ந்த நிறைய ஆண்கள் மற்றும் பெண்களைப் போலவே இவர்களும் பூமியில் என்றென்றும் வாழத்தான் காத்திருக்கிறார்கள்.—எபி. 11:10.
17. எந்தெந்த கேள்விகளுக்கான பதில்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்?
17 பரலோக வாழ்க்கைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்றும் நம் மத்தியில் இருப்பதால், இப்போது சில கேள்விகள் வருகின்றன. (வெளி. 12:17) பரலோக வாழ்க்கைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும்? உங்கள் சபையில் இருக்கிற ஒருவர் நினைவுநாள் சின்னங்களில் பங்கெடுத்தால், அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லிக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனால் நீங்கள் கவலைப்பட வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு அடுத்த கட்டுரை பதில் சொல்லும்.
a கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளிலிருந்து சில கிறிஸ்தவர்களுக்கு யெகோவா அருமையான ஒரு நம்பிக்கையைக் கொடுத்துவருகிறார். அதுதான், இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்யும் நம்பிக்கை! அப்படி ஆட்சி செய்வதற்கு தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை அந்தக் கிறிஸ்தவர்கள் எப்படித் தெரிந்துகொள்வார்கள்? ஒருவர் அப்படித் தேர்ந்தெடுக்கப்படும்போது என்ன நடக்கிறது? ஆர்வத்தைத் தூண்டுகிற இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஜனவரி 2016 காவற்கோபுரத்தில் வந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் இது எழுதப்பட்டிருக்கிறது.
b வார்த்தைகளின் விளக்கம்: கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்படுவது: இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வதற்கு யெகோவா தன்னுடைய சக்தியின் மூலம் மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அந்தச் சக்தியின் மூலம் அவர்களுக்கு எதிர்கால நம்பிக்கையை, அதாவது ‘உத்தரவாதத்தை,’ கொடுக்கிறார். (எபே. 1:13, 14) பரலோகத்துக்குத்தான் அவர்கள் போவார்கள் என்பதை அந்தச் சக்தி “ஊர்ஜிதப்படுத்துகிறது,” அதாவது தெளிவுபடுத்துகிறது.—ரோ. 8:16.
c வார்த்தைகளின் விளக்கம்: முத்திரை: பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு அல்லது மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்குக் கொஞ்சம் முன்பு அவர்களுக்குக் கிடைக்கும் முத்திரைதான் நிரந்தரமான முத்திரை.—எபே. 4:30; வெளி. 7:2-4; ஏப்ரல் 2016 காவற்கோபுரத்தில் வெளிவந்த “வாசகர் கேட்கும் கேள்விகள்” என்ற பகுதியைப் பாருங்கள்.
d இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள ஏப்ரல் 1, 2009 ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 3-12-ஐப் பாருங்கள்.
பாட்டு 151 கடவுளுடைய மகன்கள் வெளிப்படுதல்
e பட விளக்கம்: விசுவாசத்தின் காரணமாக நாம் சிறையில் இருந்தாலும் சரி, சுதந்திரமாகப் பிரசங்கித்துக்கொண்டிருந்தாலும் சரி, பூஞ்சோலை பூமியில் சந்தோஷமாக வாழவே நாம் ஆசை ஆசையாகக் காத்திருக்கிறோம்.