படிப்புக் கட்டுரை 15
மக்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
“வயல்களை ஏறெடுத்துப் பாருங்கள். அவை விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன.”—யோவா. 4:35.
பாட்டு 44 அறுவடை வேலையில் ஆனந்தம்!
இந்தக் கட்டுரையில்...a
1-2. யோவான் 4:35, 36-ல் இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?
லேசாக துளிர் விட்டிருக்கும் பார்லி வயல் வழியாக இயேசு நடந்துபோகிறார். (யோவா. 4:3-6) அந்தப் பயிர்கள் அறுவடைக்குத் தயாராவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் ஆக வேண்டும். ஆனால் இயேசு, “வயல்களை ஏறெடுத்துப் பாருங்கள். அவை விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன” என்று சொல்கிறார். (யோவான் 4:35, 36-ஐ வாசியுங்கள்.) பயிர்கள் அறுவடைக்குத் தயாராவதற்கு முன்பே இயேசு ஏன் அப்படிச் சொன்னார்?
2 மக்களைக் கூட்டிச்சேர்ப்பதைப் பற்றித்தான் இயேசு பேசினார் என்று தெரிகிறது. கொஞ்ச நேரத்துக்கு முன்பாக என்ன நடந்தது என்று இப்போது பார்க்கலாம். பொதுவாக, சமாரியர்களிடம் யூதர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இயேசு, ஒரு சமாரியப் பெண்ணிடம் பிரசங்கித்தார். அந்தப் பெண்ணும் இயேசு சொன்னதைக் கவனமாகக் கேட்டாள். அதோடு, சமாரியர்கள் நிறைய பேரிடம் போய் இயேசுவைப் பற்றிச் சொன்னாள். அதைக் கேட்ட சமாரியர்கள், இயேசுவிடமிருந்து இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவரைச் சந்திக்க வந்தார்கள். அந்தச் சமயத்தில், “வயல்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன” என்று இயேசு சொல்லிக்கொண்டிருந்தார். (யோவா. 4:9, 39-42) இதைப் பற்றி பைபிள் அறிஞர் ஒருவர் இப்படிச் சொன்னார்: “அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களைப் போல் மக்கள் இருந்தார்கள் என்பதை அவர்களுடைய ஆர்வம் காட்டியது.”
3. இயேசுவைப் போலவே நீங்களும் மக்களைப் பார்த்தால், என்ன செய்வீர்கள்?
3 நீங்கள் மக்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கிற பயிர்களைப் போல் பார்க்கிறீர்களா? அப்படிப் பார்த்தால், இந்த மூன்று விஷயங்களை நீங்கள் செய்வீர்கள்: ஒன்று, அவசர உணர்வோடு பிரசங்கிப்பீர்கள். ஏனென்றால், அறுவடைக் காலம் குறைவுதான்; நேரத்தை வீணடிப்பதற்கு இது சமயமல்ல. இரண்டு, நல்ல செய்தியை மக்கள் கேட்கும்போது நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். ‘அறுவடைக் காலத்தில் [ஜனங்கள்] சந்தோஷப்படுவார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (ஏசா. 9:3) மூன்று, மக்கள் எதிர்காலத்தில் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவார்கள் என்று நம்புவீர்கள். அதனால், அவர்கள் ஆர்வம் காட்டுகிற விஷயங்களைப் பற்றிப் பேசுவீர்கள்.
4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
4 சமாரியர்கள் இயேசுவின் சீஷர்களாக ஆக மாட்டார்கள் என்று இயேசுவைப் பின்பற்றிய சிலர் நினைத்திருக்கலாம். ஆனால், இயேசு அப்படி நினைக்கவில்லை. அவர்கள் எதிர்காலத்தில் தன்னுடைய சீஷர்களாக ஆவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. நம்முடைய ஊழியப் பகுதியில் இருக்கும் மக்களும் இயேசுவின் சீஷர்களாக ஆவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். இந்த விஷயத்தில், அப்போஸ்தலன் பவுல் நமக்கு நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறார். அவர் எப்படி மக்களின் நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொண்டார்? மக்கள் எதில் ஆர்வம் காட்டினார்கள் என்பதைப் பற்றி அவர் எப்படித் தெரிந்துகொண்டார்? மக்களை எதிர்கால சீஷர்களாக அவரால் எப்படிப் பார்க்க முடிந்தது? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
மக்களுடைய நம்பிக்கைகள் என்ன?
5. ஜெபக்கூடங்களில் இருந்தவர்களை பவுலால் ஏன் புரிந்துகொள்ள முடிந்தது?
5 பவுல் அடிக்கடி ஜெபக்கூடங்களில் பிரசங்கித்தார். உதாரணத்துக்கு, தெசலோனிக்கேயாவிலிருந்த ஜெபக்கூடத்துக்குப் போய் “[யூதர்களிடம்] மூன்று ஓய்வுநாட்களுக்கு வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார்.” (அப். 17:1, 2) பவுல் முன்பு ஒரு யூதராக இருந்ததால் ஜெபக்கூடங்களில் பிரசங்கிப்பது அவருக்குச் செளகரியமாக இருந்திருக்கலாம். (அப். 26:4, 5) யூதர்களை பவுலால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால், அவர்களிடம் நம்பிக்கையோடு பிரசங்கிக்க முடிந்தது.—பிலி. 3:4, 5.
6. அத்தேனே நகரத்து சந்தையில் இருந்தவர்களுக்கும் ஜெபக்கூடங்களில் இருந்தவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
6 தெசலோனிக்கேயாவிலிருந்தும் பெரோயாவிலிருந்தும் எதிரிகள் பவுலைத் துரத்தினார்கள். அதனால், அவர் அத்தேனே நகரத்துக்குப் போனார். அங்கே போனதற்குப் பின்பும், “ஜெபக்கூடத்தில் யூதர்களிடமும் கடவுளை வணங்கிய மற்றவர்களிடமும் . . . நியாயங்காட்டிப் பேசினார்.” (அப். 17:17) ஆனால், சந்தையில் அவர் பிரசங்கித்தபோது வேறு விதமான ஆட்களைச் சந்தித்தார். அவர்களில் தத்துவஞானிகளும் யூதரல்லாதவர்களும் இருந்தார்கள். பவுல் ஏதோ ‘புதிதாகக் கற்றுக்கொடுக்கிறார்’ என்று அவர்கள் நினைத்தார்கள். அதனால், “நீ சொல்கிற சில விஷயங்கள் விசித்திரமாக இருக்கின்றன” என்று சொன்னார்கள்.—அப். 17:18-20.
7. அப்போஸ்தலர் 17:22, 23 சொல்கிறபடி, மக்களுக்கு ஏற்றபடி பவுல் எப்படிப் பேசினார்?
7 அப்போஸ்தலர் 17:22, 23-ஐ வாசியுங்கள். ஜெபக்கூடத்தில் இருந்த யூதர்களிடம் பேசியதுபோல் அத்தேனே நகரத்தில் இருந்த யூதரல்லாதவர்களிடம் பவுல் பேசவில்லை. ‘இந்த மக்களோட நம்பிக்கைகள் என்ன?’ என்று அப்போது அவர் யோசித்திருப்பார். தன்னைச் சுற்றி என்னென்ன இருக்கின்றன என்பதையும் அவர் பார்த்தார். மக்களுடைய மத சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களைக் கவனித்தார். வேதவசனங்களில் இருக்கிற சத்தியங்களை அவர்களிடம் பேச ஆரம்பித்தபோது, அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களைச் சொல்லி ஆரம்பித்தார். ஒரு பைபிள் அறிஞர் இப்படிச் சொல்கிறார்: “யூதர்களும் கிறிஸ்தவர்களும் வழிபட்ட ‘உண்மைக் கடவுளை,’ பொய் மதத்தைச் சேர்ந்த கிரேக்கர்கள் வழிப்படவில்லை என்பதை யூதக் கிறிஸ்தவரான பவுல் தெரிந்துவைத்திருந்தார்.” அந்த அறிஞர் இப்படியும் சொல்கிறார்: “தான் அறிவிக்கிற கடவுள் அத்தேனே மக்களுக்குப் புதிதானவர் கிடையாது என்பதை அவர்களுக்குக் காட்டுவதற்கு அவர் முயற்சி செய்தார்.” இதிலிருந்து என்ன தெரிகிறது? அந்த மக்களுக்கு ஏற்ற மாதிரி பேசுவதற்கு பவுல் தயாராக இருந்தார். அவர்கள் வழிபடுவதற்கு முயற்சி செய்கிற “அறியப்படாத கடவுளிடமிருந்துதான்” தன்னுடைய செய்தி வந்திருப்பதாக அத்தேனே நகரத்து மக்களிடம் பவுல் சொன்னார். யூதரல்லாத அந்த மக்களுக்கு வேதவசனங்களைப் பற்றித் தெரியவில்லை என்பதற்காக பவுல் தன்னுடைய முயற்சியைக் கைவிட்டுவிடவில்லை. அறுவடைக்காக விளைந்து நிற்கும் பயிர்களைப் போல் பவுல் அவர்களைப் பார்த்தார். அவர்களுக்கு ஏற்ற மாதிரி நல்ல செய்தியைப் பிரசங்கித்தார்.
8. (அ) மக்களுடைய மத நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? (ஆ) ‘நாங்க வேற மதத்த சேர்ந்தவங்க’ என்று யாராவது சொன்னால் நீங்கள் எப்படிப் பதில் சொல்லலாம்?
8 பவுலைப் போலவே, சுற்றியிருக்கிற விஷயங்களை நன்றாகக் கவனியுங்கள். மக்களுடைய நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு, ஏதாவது அடையாளங்கள் கண்ணில்படுகின்றனவா என்று பாருங்கள். உதாரணத்துக்கு, அவர்களுடைய வீட்டில் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன? அவர்கள் வைத்திருக்கிற வண்டியில் ஏதாவது அடையாளம் தெரிகிறதா? அவர்களுடைய பெயர்... அவர்கள் உடை உடுத்துகிற விதம்... அவர்களுடைய முடி அலங்காரம்... அவர்கள் பயன்படுத்துகிற வார்த்தைகள்... இவற்றிலிருந்து அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்க முடிகிறதா? ‘நாங்க வேற மதத்த சேர்ந்தவங்க’ என்று சிலர் சொல்லலாம். யாராவது இப்படிச் சொன்னால், விசேஷ பயனியராக இருக்கும் ஃபுலுட்டுரா என்ற சகோதரி, “என்னோட மத நம்பிக்கைய உங்க மேல திணிக்கணுங்குறது என்னோட ஆசை இல்ல” என்று சொல்வாராம். பிறகு, ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு, “. . . இதபத்திதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்” என்று சொல்வாராம்.
9. மத நம்பிக்கையுள்ள ஒருவரிடம் நீங்கள் எப்படிப் பேசலாம்?
9 மத நம்பிக்கையுள்ள ஒருவரிடம் பேசும்போது, உங்களுக்கும் அவருக்கும் பொதுவாக இருக்கிற ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுங்கள். சிலர், இந்த உலகத்தில் நடக்கும் அநியாய அக்கிரமத்துக்குக் கடவுள் சீக்கிரத்தில் முடிவு கொண்டுவருவார் என்று நம்பலாம். வேறுசிலர், ஒரே கடவுளை வணங்கலாம். இன்னும் சிலர், இயேசுதான் நம் மீட்பர் என்று நம்பலாம். இப்படி, அவர்களுக்கும் உங்களுக்கும் பொதுவாக இருக்கிற விஷயத்தைப் பற்றிப் பேசுங்கள். அதுவும், அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டுகிற விதத்தில் பேசுங்கள்.
10. நாம் என்ன செய்ய முயற்சி எடுக்க வேண்டும், ஏன்?
10 தங்களுடைய மதத்திலிருக்கிற எல்லா விஷயங்களையும் மக்கள் நம்புவார்கள் என்று சொல்ல முடியாது. அதனால், ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடித்தால் மட்டும் போதாது. உண்மையில் அவர் எதை நம்புகிறார் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். “இன்னைக்கு நிறைய பேர், தத்துவங்கள மத நம்பிக்கைகளோட கலந்துட்டாங்க” என்று ஆஸ்திரேலியாவில் விசேஷ பயனியராக சேவை செய்யும் டேவிட் சொல்கிறார். அல்பேனியாவில் இருக்கிற டோனால்டோ இப்படிச் சொல்கிறார்: “‘எங்களுக்குனு ஒரு மதம் இருக்கு’னு சிலர் ஆரம்பத்துல சொல்றாங்க. ஆனா, அவங்களுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லங்குறத அதுக்கு அப்புறம்தான் ஒத்துக்குறாங்க.” அர்ஜென்டினாவில் மிஷனரி சேவை செய்யும் ஒரு சகோதரர் என்ன சொல்கிறார்? சிலர் திரித்துவத்தை நம்புவதாகவும், ஆனால் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்று என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்பதாகவும் சொல்கிறார். “தன்னோட மதத்துல இருக்குற எல்லாத்தையும் ஒருத்தரு நம்புறது இல்லங்குறத ஞாபகம் வைச்சிக்கிட்டா, அவருக்கும் நமக்கும் பொதுவா இருக்குற விஷயத்த கண்டுபிடிக்கிறது சுலபம்” என்று அந்த மிஷனரி சொல்கிறார். அதனால், மக்கள் உண்மையில் எதை நம்புகிறார்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். அப்படிச் செய்தால், பவுலைப் போலவே “எல்லா விதமான ஆட்களுக்கும் எல்லா விதமாகவும்” நம்மால் ஆக முடியும்.—1 கொ. 9:19-23.
மக்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது?
11. அப்போஸ்தலர் 14:14-17 சொல்வதுபோல், லீஸ்திராவில் இருந்த மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் பவுல் எப்படிப் பேசினார்?
11 அப்போஸ்தலர் 14:14-17-ஐ வாசியுங்கள். மக்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று பவுல் கண்டுபிடித்தார். பின்பு, அதற்குத் தகுந்தபடி பேசினார். உதாரணத்துக்கு, லீஸ்திராவில் இருந்த மக்களிடம் பேசியபோது, வேதவசனங்களைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதை மனதில் வைத்திருந்தார். அதனால், அவர்கள் ஆர்வம் காட்டிய விஷயங்களைப் பற்றிப் பேசினார். உதாரணத்துக்கு, அமோக விளைச்சலைப் பற்றியும் வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிப்பதைப் பற்றியும் பேசினார். அவர்களால் புரிந்துகொள்ள முடிந்த வார்த்தைகளையும் உதாரணங்களையும் பயன்படுத்தினார்.
12. ஒருவருடைய ஆர்வத்தை நீங்கள் எப்படித் தெரிந்துகொள்ளலாம், அதற்குத் தகுந்தபடி எப்படிப் பேசலாம்?
12 உங்களுடைய பகுத்தறியும் திறனைப் பயன்படுத்தி மக்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடியுங்கள். பிறகு, அதற்குத் தகுந்தபடி பேசுங்கள். ஒருவரைச் சந்திக்கும்போது அல்லது ஒருவருடைய வீட்டுக்குப் போகும்போது, அவர் எதில் ஆர்வம் காட்டுகிறார் என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அவரையும், சுற்றி நடக்கிற விஷயங்களையும் நன்றாகக் கவனியுங்கள். ஒருவேளை, அவருடைய வீட்டில் இருக்கும் தோட்டத்தில் அவர் வேலை செய்துகொண்டிருக்கலாம், புத்தகம் படித்துக்கொண்டிருக்கலாம், வண்டியை ரிப்பேர் செய்துகொண்டிருக்கலாம். அல்லது, வேறெதாவது செய்துகொண்டிருக்கலாம். பொருத்தமாக இருந்தால், அவர் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ அதை வைத்தே பேச்சை ஆரம்பிக்கலாம். (யோவா. 4:7) ஒருவருடைய உடையே அவரைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்லும்! உதாரணத்துக்கு, அவருடைய நாடு... தொழில்... அவருக்குப் பிடித்த விளையாட்டு அணி... இதைப் பற்றியெல்லாம் சொல்லும். “ஒரு தடவ, 19 வயசு பையனை நான் பார்த்தேன். பிரபலமான ஒரு பாடகரோட படம் அவனோட டி-ஷர்ட்டுல இருந்துச்சு. நான் அத பத்தி அவன்கிட்ட கேட்டேன். அந்த பாடகர ஏன் பிடிக்குங்குறத பத்தி அவனும் சொன்னான். எங்களோட பேச்சு பைபிள் படிப்புல போய் முடிஞ்சிது. இப்போ அவனும் நம்ம சகோதரன்தான்!” என்று சகோதரர் கூஸ்டாவோ சொல்கிறார்.
13. மற்றவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் பைபிள் படிப்பைப் பற்றி எப்படிச் சொல்லலாம்?
13 பைபிள் படிப்பைப் பற்றி ஒருவரிடம் சொல்லும்போது, அவருடைய ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் சொல்லுங்கள். அந்தப் படிப்பால் அவருக்கு என்ன பிரயோஜனம் என்பதையும் விளக்குங்கள். (யோவா. 4:13-15) பாபி என்ற சகோதரி ஒரு பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண்ணும் ஆர்வமாக அவரை வீட்டுக்குள் கூப்பிட்டார். வீட்டுக்குள் போன உடனே சுவரில் ஒரு சான்றிதழ் மாட்டியிருப்பதை பாபி கவனித்தார். அதிலிருந்து, அந்தப் பெண் கல்வியியல் துறையில் பேராசிரியராக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். ‘பைபிள் படிப்பு திட்டத்தின் மூலமாவும் எங்களோட கூட்டங்கள் மூலமாவும் நாங்களும் மத்தவங்களுக்கு கத்துக்கொடுக்கிறோம்’ என்று பாபி சொன்னார். அந்தப் பெண் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார். அடுத்த நாளே கூட்டத்துக்கு வந்தார். பிறகு, வட்டார மாநாட்டுக்கும் வந்தார். ஒரு வருஷம் கழித்து ஞானஸ்நானம் எடுத்தார். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னோட மறு சந்திப்புகளுக்கு எதுல ஆர்வம் இருக்கு? அவங்களோட ஆர்வத்த தூண்டுற மாதிரி பைபிள் படிப்ப பத்தி எப்படி சொல்லலாம்?’
14. ஒவ்வொருவருக்கும் தகுந்தபடி எப்படி பைபிள் படிப்பை நடத்தலாம்?
14 பைபிள் படிப்பை ஆரம்பித்ததற்குப் பிறகு, உங்களோடு படிக்கும் ஒவ்வொருவரையும் மனதில் வைத்து தயாரியுங்கள். அவர்களுடைய பின்னணியையும், அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எந்தெந்த வசனங்களை வாசிக்கலாம், எந்த வீடியோக்களைக் காட்டலாம், எந்த உதாரணங்களைப் பயன்படுத்தலாம் என்பதையெல்லாம் தயாரிக்கும்போதே முடிவு செய்யுங்கள். ‘எந்த விஷயம் இவங்களோட இதயத்த தொடும்’ என்றும் யோசியுங்கள். (நீதி. 16:23) அல்பேனியா நாட்டில் ஃப்ளோரா என்ற பயனியர் சகோதரியோடு சேர்ந்து ஒரு பெண் பைபிள் படிப்பு படித்துக்கொண்டிருந்தார். “உயிர்த்தெழுதல் நடக்குங்குறத என்னால ஏத்துக்கவே முடியல” என்று அந்தப் பெண் சொல்லியிருக்கிறார். அப்போது, ஃப்ளோரா என்ன செய்தார்? உயிர்த்தெழுதலை அவர் நம்பியே ஆக வேண்டும் என்பதற்காக அதைப் பற்றியே அவர் பேசிக்கொண்டிருக்கவில்லை. “இறந்தவங்கள மறுபடியும் உயிரோட எழுப்புவேன்னு வாக்கு கொடுத்த கடவுள பத்தி முதல்ல அவங்க தெரிஞ்சிக்கணும்னு நான் நினைச்சேன்” என்று ஃப்ளோரா சொல்கிறார். அதற்குப் பிறகு, ஒவ்வொரு தடவை படிப்பு நடத்தும்போதும் யெகோவாவின் அன்பு, ஞானம், வல்லமை ஆகியவற்றைப் பற்றி அவர் விளக்கியிருக்கிறார். கடைசியில், உயிர்த்தெழுதல்மீது அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை வந்தது. இப்போது, யெகோவாவுக்கு ஆர்வமாக அவர் சேவை செய்துகொண்டிருக்கிறார்.
மற்றவர்களை எதிர்கால சீஷர்களாகப் பாருங்கள்
15. அப்போஸ்தலர் 17:16-18-ன்படி, அத்தேனே நகரத்து மக்களுடைய எந்தப் பழக்கவழக்கங்கள் பவுலுக்குக் கஷ்டமாக இருந்தன, ஆனாலும் அவர் ஏன் முயற்சியைக் கைவிடவில்லை?
15 அப்போஸ்தலர் 17:16-18-ஐ வாசியுங்கள். அத்தேனே நகரம் முழுவதும் சிலைகள் இருந்தன. எங்கே பார்த்தாலும் ஒழுக்கக்கேடான செயல்கள் நிறைந்திருந்தன. பொய் மத தத்துவங்களையும் மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். அதோடு, அந்த மக்கள் பவுலை அவமானப்படுத்தினார்கள். சூழ்நிலைகள் அவ்வளவு மோசமாக இருந்தபோதும் அவர் தன்னுடைய முயற்சியைக் கைவிடவில்லை. ஏனென்றால், தன்னைப் பற்றி அவர் யோசித்துப்பார்த்திருப்பார். கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு, ‘துன்புறுத்துகிறவராகவும், கடவுளை நிந்திக்கிறவராகவும், திமிர்பிடித்தவராகவும்’ அவர் இருந்தார். (1 தீ. 1:13) பவுல்மீது இயேசு நம்பிக்கை வைத்ததைப் போல், அத்தேனே நகரத்து மக்கள்மீது பவுலும் நம்பிக்கை வைத்தார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை.—அப். 9:13-15; 17:34.
16-17. எல்லா தரப்பட்ட மக்களும் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆக முடியும் என்பதை எது காட்டுகிறது? ஓர் உதாரணம் கொடுங்கள்.
16 முதல் நூற்றாண்டில், பலதரப்பட்ட பின்னணியிலிருந்து வந்தவர்களும் இயேசுவின் சீஷர்களாக ஆனார்கள். கிரேக்க நகரமான கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் கடிதம் எழுதியபோது, அந்தச் சபையில் இருந்த சிலர் முன்பு படுமோசமான தவறுகளைச் செய்ததாகவும், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்ததாகவும் சொன்னார். ஆனால், அதற்குப் பின்பு அவர்கள் ‘சுத்தமாகக் கழுவப்பட்டதாக’ சொன்னார். (1 கொ. 6:9-11) பவுலின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால், அவ்வளவு மோசமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் இயேசுவின் சீஷர்களாக ஆவார்கள் என்று நினைத்திருப்பீர்களா?
17 இயேசுவின் சீஷர்களாக ஆவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்ய இன்று நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள். எல்லா தரப்பட்ட மக்களும் பைபிளின் செய்தியைக் கேட்க வாய்ப்பிருக்கிறது என்பதை ஆஸ்திரேலியாவில் விசேஷ பயனியர் சேவை செய்கிற யூகினா என்ற சகோதரி புரிந்துகொண்டார். ஒரு தடவை, வீட்டு மனைகள் வாங்குகிற, விற்கிற அலுவலகத்தில் அவர் ஒரு பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண் நிறைய பச்சை குத்தியிருந்தார். “ஆரம்பத்துல அவங்ககிட்ட பேசறதுக்கு தயங்கினேன். பேச ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் பைபிள்மேல அவங்களுக்கு நிறைய ஆர்வம் இருக்குனு தெரிஞ்சிக்கிட்டேன். சங்கீதப் புத்தகத்தில் இருந்த சில வசனங்களயும் அவங்க பச்சை குத்தியிருந்தாங்க” என்று யூகினா சொல்கிறார். அந்தப் பெண் பைபிள் படிக்க ஆரம்பித்தார், கூட்டங்களுக்கும் வந்தார்.b
18. மக்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவார்களா மாட்டார்களா என்று நாம் ஏன் முடிவு செய்யக் கூடாது?
18 நிறைய பேர் தன்னுடைய சீஷர்களாக ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான் வயல்கள் அறுவடைக்குத் தயாராக இருப்பதாக இயேசு சொன்னாரா? இல்லை! ஏனென்றால், கொஞ்ச பேர்தான் அவர்மீது விசுவாசம் வைப்பார்கள் என்று வேதவசனங்கள் முன்கூட்டியே சொல்லியிருந்தன. (யோவா. 12:37, 38) மற்றவர்களுடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் திறமை இயேசுவுக்கு இருந்தது. (மத். 9:4) தன்னுடைய சீஷர்களாக ஆக விரும்பிய சிலர்மீது அவர் அதிக கவனம் செலுத்தியிருந்தாலும் எல்லாரிடமும் அவர் ஆர்வமாகப் பிரசங்கித்தார். மற்றவர்களுடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் திறமை நமக்கு இல்லை. அதனால், நம்முடைய ஊழியப் பகுதியில் இருக்கிற மக்களைப் பற்றியோ தனி நபர்களைப் பற்றியோ நாம் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அவர்களையும் எதிர்கால சீஷர்களாகத்தான் பார்க்க வேண்டும். “நல்லா முன்னேறுவாங்கனு நினைச்சவங்கெல்லாம் பைபிள் படிப்பையே நிறுத்தியிருக்காங்க. முன்னேற மாட்டாங்கனு நினைச்சவங்கெல்லாம் நல்லா முன்னேறியிருக்காங்க. அதனால, கடவுளோட சக்தி நம்மள வழிநடத்தும்படி விடுறதுதான் நல்லதுங்குறத தெரிஞ்சுகிட்டேன்” என்று பர்கினா பாஸோவில் மிஷனரியாக சேவை செய்யும் சகோதரர் மார்க் சொல்கிறார்.
19. நம்முடைய ஊழியப் பகுதியில் இருக்கும் மக்களை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்?
19 மேலோட்டமாகப் பார்த்தால், நம்முடைய ஊழியப் பகுதியில் இருக்கும் நிறைய பேர் அறுவடைக்குத் தயாராக இல்லாத பயிர்களைப் போல தெரியலாம். ஆனால், வயல்கள் அறுவடைக்குத் தயாராக இருப்பதாக இயேசு சொன்னார்! அதனால், மக்களால் மாற்றங்கள் செய்ய முடியும்; கிறிஸ்துவின் சீஷர்களாக ஆக முடியும். எதிர்காலத்தில் சீஷர்களாக ஆகப் போகிறவர்களை ‘செல்வங்களாக’ யெகோவா நினைக்கிறார். (ஆகா. 2:7) யெகோவாவும் இயேசுவும் பார்ப்பதுபோல் மக்களை நாம் பார்த்தால், அவர்களுடைய பின்னணியையும் அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அப்போது, முன்பின் தெரியாதவர்களைப் போல் அவர்களை நாம் பார்க்க மாட்டோம். நம்முடைய எதிர்கால சகோதர சகோதரிகளாகப் பார்ப்போம்!
பாட்டு 142 எல்லாவித மக்களுக்கும் பிரசங்கிப்போம்!
a நம் ஊழியப் பகுதியில் இருக்கும் மக்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது முக்கியம். ஏனென்றால், நாம் அவர்களுக்குப் பிரசங்கிக்கும் விதத்தையும் கற்றுக்கொடுக்கும் விதத்தையும் அது பாதிக்கும். மக்களுடைய நம்பிக்கைகள் என்ன, அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்ற விஷயத்தில் இயேசுவும் அப்போஸ்தலன் பவுலும் கவனம் செலுத்தினார்கள். அதோடு, மக்களை எதிர்கால சீஷர்களாகவும் பார்த்தார்கள். அவர்களை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
b மக்களால் மாற்றங்கள் செய்ய முடியும் என்பதைக் காட்டும் நிறைய உதாரணங்கள், “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” என்ற தலைப்பில் வந்த தொடர் கட்டுரைகளில் இருக்கின்றன. இந்தத் தொடர் கட்டுரைகள், 2017-வரை காவற்கோபுரம் பத்திரிகையில் வந்துகொண்டிருந்தன. இப்போது, நம் வெப்சைட்டில் வருகின்றன. எங்களைப் பற்றி > அனுபவங்கள் என்ற தலைப்பில் பாருங்கள்.
c படங்களின் விளக்கம்: ஒரு தம்பதி வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது இதையெல்லாம் கவனிக்கிறார்கள்: (1) சுத்தமான, நிறைய பூச்செடிகள் இருக்கிற ஒரு வீடு (2) இளம் பிள்ளைகள் இருக்கிற ஒரு வீடு (3) உள்ளேயும் வெளியேயும் அசுத்தமாக இருக்கும் ஒரு வீடு (4) மத நம்பிக்கை உள்ளவர்கள் வாழ்கிற ஒரு வீடு. இந்த வீடுகளில் இருக்கும் ஒவ்வொருவரையும் எதிர்கால சீஷர்களாக நீங்கள் பார்ப்பீர்களா?