படிப்புக் கட்டுரை 49
மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதம்—லேவியராகமம் கற்றுத்தரும் பாடங்கள்
“உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்.”—லேவி. 19:18.
பாட்டு 109 ஊக்கமாக அன்பு காட்டுங்கள்
இந்தக் கட்டுரையில்...a
1-2. போன கட்டுரையில் எதைப் பற்றிப் பார்த்தோம், இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் இருக்கிற சில நல்ல ஆலோசனைகளைப் பற்றிப் போன கட்டுரையில் பார்த்தோம். உதாரணத்துக்கு, 3-ஆம் வசனத்தில், அப்பா அம்மாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா கட்டளை கொடுத்திருந்தார். இன்றைக்கு அந்தக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிந்து, நம்முடைய அப்பா அம்மாவின் தேவைகளை எப்படிக் கவனித்துக்கொள்ளலாம், அவர்களை எப்படி ஆறுதல்படுத்தி உற்சாகப்படுத்தலாம், கடவுளிடம் நெருங்கிப் போக அவர்களுக்கு எப்படி உதவலாம் என்றெல்லாம் பார்த்தோம். அதோடு, ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஒரு கட்டளையையும் கடவுள் தன்னுடைய மக்களுக்குக் கொடுத்திருந்தார். இன்றைக்கு நாம் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் தினமும் செய்கிற வேலையிலிருந்து கொஞ்ச நேரத்தை ஒதுக்கி வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டோம். இப்படியெல்லாம் செய்யும்போது, லேவியராகமம் 19:2-ம் 1 பேதுரு 1:15-ம் சொல்கிறபடி பரிசுத்தமாக நடந்துகொள்ள நாம் முயற்சி செய்கிறோம் என்று அர்த்தம்.
2 இந்தக் கட்டுரையில், கடவுளைப் போலவே நாமும் எப்படிப் பரிசுத்தமாக இருக்கலாம் என்பதற்கான இன்னும் சில ஆலோசனைகளை லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்திலிருந்து பார்ப்போம். உடல் குறைபாடு உள்ளவர்களுக்குக் கருணை காட்டுவதைப் பற்றி... வியாபார விஷயங்களில் நேர்மையாக இருப்பதைப் பற்றி... மற்றவர்களிடம் அன்பு காட்டுவதைப் பற்றி... பார்க்கப்போகிறோம்.
உடல் குறைபாடு உள்ளவர்களுக்குக் கருணை காட்டுங்கள்
3-4. லேவியராகமம் 19:14 சொல்கிறபடி, காது கேட்காதவர்களிடமும் கண் தெரியாதவர்களிடமும் இஸ்ரவேலர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டியிருந்தது?
3 லேவியராகமம் 19:14-ஐ வாசியுங்கள். உடல் குறைபாடு உள்ளவர்களுக்குக் கருணை காட்டும்படி இஸ்ரவேலர்களுக்கு யெகோவா சொன்னார். உதாரணத்துக்கு, காது கேட்காத ஒருவரை சபித்துப் பேசக் கூடாது என்று அவர் சொன்னார். சபித்துப் பேசுவது என்றால், கெட்டது நடக்கும் என்று சொல்வது, மிரட்டுவது என்று அர்த்தம். காது கேட்காத ஒருவரை சபித்துப் பேசினால், அவரால் அதைப் புரிந்துகொள்ள முடியுமா? அவரால் அதற்குப் பதில்கூட சொல்ல முடியாதே! இப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிற ஒருவரை சபித்துப் பேசுவது எவ்வளவு பெரிய கொடுமை!
4 “கண் தெரியாதவனுக்கு முன்னால் எதையாவது போட்டு அவனைத் தடுக்கி விழ வைக்கக் கூடாது” என்றும் அதே வசனம் சொல்கிறது. “அந்தக் காலத்தில், மத்திய கிழக்குப் பகுதியில் [உடல் குறைபாடு உள்ளவர்களை] அநியாயமாக, கொடூரமாக நடத்துவது ஒரு பழக்கமாக இருந்தது” என்று ஒரு புத்தகம் சொல்கிறது. ஈவிரக்கமில்லாத சிலர் கண் தெரியாதவர்களைக் காயப்படுத்துவதற்காக, அல்லது கைதட்டி சிரிப்பதற்காக அவர்கள் முன்னால் எதையாவது போட்டு அவர்களைத் தடுக்கி விழ வைப்பார்கள். அப்படியென்றால், அவர்கள் நெஞ்சில் கொஞ்சம்கூட ஈரமில்லாமல் நடந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது, அல்லவா? உடல் குறைபாடு உள்ளவர்களுக்குக் கருணை காட்டுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிய வைப்பதற்காகத்தான் 14-ஆம் வசனத்தில் இந்தக் கட்டளையை யெகோவா கொடுத்திருக்கிறார்.
5. உடல் குறைபாடு உள்ளவர்களிடம் நாம் எப்படிக் கரிசனையாக நடந்துகொள்ளலாம்?
5 உடல் குறைபாடு உள்ளவர்களிடம் இயேசு கரிசனையாக நடந்துகொண்டார். யோவான் ஸ்நானகருடைய சீஷர்களிடம் இயேசு என்ன சொல்லி அனுப்பினார் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். “பார்வை இல்லாதவர்கள் பார்க்கிறார்கள், நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள், தொழுநோயாளிகள் சுத்தமாகிறார்கள், காது கேட்காதவர்கள் கேட்கிறார்கள், இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள்” என்று அவர் சொன்னார். இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்த “மக்கள் எல்லாரும் கடவுளைப் புகழ்ந்தார்கள்.” (லூக். 7:20-22; 18:43) உடல் குறைபாடு உள்ளவர்களிடம் இயேசுவைப் போலவே கரிசனையாக நடந்துகொள்ள நாம் ஆசைப்படுகிறோம். அதனால், அவர்களிடம் அன்பாக, அக்கறையாக, பொறுமையாக நடந்துகொள்கிறோம். இயேசுவைப் போல் அற்புதங்களைச் செய்கிற சக்தியை யெகோவா நமக்குக் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், பார்வை இல்லாதவர்களுக்கும், ஆன்மீக விதத்தில் பார்வை இல்லாதவர்களுக்கும் நல்ல செய்தியைச் சொல்வதற்கு அருமையான வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அதாவது, பூஞ்சோலை பூமியில் எந்தக் குறைபாடும் இல்லாமல் வாழலாம்... கடவுளோடு நல்ல நட்பை வைத்துக்கொள்ளலாம்... என்ற நல்ல செய்தியைச் சொல்வதற்கான வாய்ப்பு நமக்கு இருக்கிறது. (லூக். 4:18) சொல்லப்போனால், இந்த நல்ல செய்தியைக் கேட்ட நிறையப் பேர் ஏற்கெனவே கடவுளுக்குப் புகழ் சேர்த்திருக்கிறார்கள்.
வியாபார விஷயத்தில் நேர்மையாக இருங்கள்
6. பத்துக் கட்டளைகளை நன்றாகப் புரிந்துகொள்ள லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் இருக்கிற சில வசனங்கள் எப்படி உதவுகின்றன?
6 பத்துக் கட்டளைகளை நன்றாகப் புரிந்துகொள்ள லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் இருக்கிற சில வசனங்கள் உதவுகின்றன. உதாரணத்துக்கு, “நீங்கள் திருடக் கூடாது” என்று எட்டாவது கட்டளை சொல்கிறது. (யாத். 20:15) ‘மத்தவங்களுக்கு சொந்தமானத நான் எடுக்கறதில்லையே, அப்படின்னா, நான் இந்த கட்டளைக்கு கீழ்ப்படியறேன்னு தானே அர்த்தம்’ என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அவர் வேறு விதங்களில் திருடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
7. ஒரு வியாபாரி எந்த விதத்தில் எட்டாவது கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போக வாய்ப்பிருக்கிறது?
7 ‘மத்தவங்களுக்கு சொந்தமான எதையும் நான் திருடறது கிடையாது’ என்று ஒரு வியாபாரி பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், வியாபாரம் என்று வரும்போது அவர் நேர்மையாக நடந்துகொள்கிறாரா என்று யோசித்துப்பார்க்க வேண்டும். ஏனென்றால், லேவியராகமம் 19:35, 36-ல், “எதையாவது அளக்கும்போதோ எடை போடும்போதோ நீங்கள் ஏமாற்றக் கூடாது. சரியான தராசையும் சரியான எடைக்கல்லையும் சரியான படியையும் சரியான ஆழாக்கையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும்” என்று யெகோவா சொல்கிறார். ஒரு வியாபாரி மற்றவர்களை ஏமாற்றுவதற்காக கள்ளத் தராசுகளையோ போலி எடைக்கற்களையோ பயன்படுத்தும்போது அவர் ஒரு விதத்தில் திருடுகிறார் என்றுதான் அர்த்தம். லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் இருக்கிற இன்னும் சில வசனங்களிலிருந்து இந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
8. எட்டாவது கட்டளைக்குப் பின்னால் இருக்கிற நியமத்தைப் புரிந்துகொள்ள லேவியராகமம் 19:11-13 இஸ்ரவேலர்களுக்கு எப்படி உதவியது, அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 லேவியராகமம் 19:11-13-ஐ வாசியுங்கள். லேவியராகமம் 19:11-ன் ஆரம்ப வார்த்தைகள், “நீங்கள் திருடக் கூடாது” என்று சொல்கிறது. 13-ஆம் வசனம், “நீங்கள் மோசடி செய்யக் கூடாது” என்று சொல்கிறது. அப்படியென்றால், மோசடி செய்வது திருடுவதற்குச் சமம் என்று இதிலிருந்து புரிகிறது, இல்லையா? திருடக் கூடாது என்று எட்டாவது கட்டளை சொல்வதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். அந்தக் கட்டளைக்குப் பின்னால் இருக்கிற நியமத்தைப் புரிந்துகொள்ள லேவியராகமம் புத்தகம் இஸ்ரவேலர்களுக்கு ரொம்ப உதவியாக இருந்தது. நேர்மையில்லாமல் நடப்பதையும் திருடுவதையும் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பதை நாம் யோசித்துப்பார்ப்பது நல்லது. நம்மையே நாம் இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘லேவியராகமம் 19:11-13-ல் சொல்லியிருக்கிற விஷயத்த என்னோட வாழ்க்கைல எந்தளவுக்கு கடைப்பிடிக்கிறேன்? வேலை விஷயத்திலயும் வியாபார விஷயத்திலயும் நான் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கா?’
9. லேவியராகமம் 19:13-ல் சொல்லியிருக்கிற விஷயம் கூலியாட்களுக்கு எப்படி உதவியாக இருந்தது?
9 வியாபார விஷயத்தில் நேர்மையாக இருக்க வேண்டுமென்றால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதைப் பற்றி லேவியராகமம் 19:13-ன் கடைசிப் பகுதியில், “கூலியாளுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை அடுத்த நாள் காலைவரை நீங்களே வைத்திருக்கக் கூடாது” என்று சொல்லியிருக்கிறது. இஸ்ரவேலர்களின் காலத்தில், கூலியாட்களுக்குச் சேர வேண்டிய சம்பளத்தை அதே நாளில் கொடுக்க வேண்டியிருந்தது. இல்லையென்றால், அந்தக் கூலியாட்களால் தங்களுடைய குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள முடியாமல் போய்விடும். அதனால்தான், “அவன் வறுமையில் வாடுவதால், வயிற்றுப்பாட்டுக்கு அந்தக் கூலியைத்தான் நம்பியிருக்கிறான்” என்று யெகோவா சொன்னார்.—உபா. 24:14, 15; மத். 20:8.
10. லேவியராகமம் 19:13-லிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
10 இன்றைக்கு வேலை பார்க்கிற நிறைய பேர் இஸ்ரவேலர்களைப் போல் தினக்கூலி வாங்குவது இல்லை. மாத சம்பளமோ, வார சம்பளமோ வாங்குகிறார்கள். ஆனாலும், லேவியராகமம் 19:13-ல் சொல்லியிருக்கிற நியமம் இன்றைக்கும் பொருந்தும். முதலாளிகள் சிலர் தங்களிடம் வேலை செய்கிறவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற சம்பளம் கொடுப்பதில்லை. தொழிலாளிகளின் கஷ்டமான சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இப்படி நடந்துகொள்கிற முதலாளிகள் ஒருவிதத்தில், கூலியாளுக்குச் சேர வேண்டிய ‘சம்பளத்தை அவர்களே வைத்துக்கொள்கிறார்கள்.’ ஆனால், ஒரு யெகோவாவின் சாட்சி தன்னிடம் வேலை செய்கிறவரிடம் இப்படி நடந்துகொள்ள மாட்டார். லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்திலிருந்து நாம் வேறு என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.
உங்கள்மேல் அன்பு காட்டுவதுபோல் மற்றவர்கள்மேலும் அன்பு காட்டுங்கள்
11-12. லேவியராகமம் 19:17, 18-ல் இருக்கிற எந்த விஷயத்தை இயேசு அழுத்தம்திருத்தமாகச் சொன்னார்?
11 நாம் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் இன்னொரு விஷயத்தையும் செய்ய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். லேவியராகமம் 19:17, 18-ல் இதைப் பற்றிப் பார்க்கலாம். (வாசியுங்கள்.) “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்” என்ற தெளிவான கட்டளையை அவர் கொடுத்திருக்கிறார். நாம் கடவுளை சந்தோஷப்படுத்த விரும்பினால், இதைச் செய்வது ரொம்பவே முக்கியம்.
12 லேவியராகமம் 19:18-ல் இருக்கிற கட்டளை எந்தளவு முக்கியம் என்பதை இயேசு அழுத்தம்திருத்தமாகச் சொன்னார். ஒருசமயம், பரிசேயர்களில் ஒருவர் இயேசுவிடம் வந்து, “திருச்சட்டத்திலேயே மிக முக்கியமான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும். இதுதான் மிக முக்கியமான கட்டளை, முதலாம் கட்டளை” என்று சொன்னார். பின்பு, லேவியராகமம் 19:18-ல் இருக்கிற கட்டளையை மேற்கோள் காட்டி, “இதோடு சம்பந்தப்பட்ட இரண்டாம் கட்டளை இதுதான்: ‘உன்மேல் நீ அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்’” என்று சொன்னார். (மத். 22:35-40) மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதற்கு இன்னும் நிறைய வழிகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்திலிருந்து பார்க்கலாம்.
13. யோசேப்பு எப்படி லேவியராகமம் 19:18 சொல்கிறபடி நடந்துகொண்டார்?
13 மற்றவர்களிடம் அன்பு காட்ட ஒரு வழி, லேவியராகமம் 19:18-ல் சொல்லப்பட்டுள்ள ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது. “உங்கள் ஜனங்களை நீங்கள் பழிவாங்கக் கூடாது. அவர்கள்மேல் பகை வைத்திருக்கக் கூடாது” என்று அந்த வசனம் சொல்கிறது. இன்றைக்கு நிறைய பேர் கூடப் படிப்பவர்களிடம், கூட வேலை செய்கிறவர்களிடம், சொந்தக்காரர்களிடம், அல்லது வீட்டில் இருப்பவர்களிடம் கோபமாகவே இருப்பதை, அதுவும் வருஷக்கணக்காக அவர்கள்மேல் பகை வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். யோசேப்பின் பத்து அண்ணன்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர்கள் யோசேப்புமேல் பகையை வளர்த்துக்கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அவரைப் பழிவாங்கிவிட்டார்கள். (ஆதியாகமம் 37:2-8, 25-28) ஆனால், யோசேப்பு அவர்களிடம் அதே போல் நடந்துகொள்ளவில்லை. ஒரு பெரிய அதிகாரியான பின்பு அவர் நினைத்திருந்தால், தன்னுடைய அண்ணன்களைப் பழிவாங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள்மேல் அவர் பகையை வளர்த்துக்கொள்ளவில்லை, இரக்கம் காட்டினார். லேவியராகமம் 19:18 சொல்கிறபடி அவர் நடந்துகொண்டார்.—ஆதி. 50:19-21.
14. லேவியராகமம் 19:18-ல் இருக்கிற நியமத்துக்கு இன்றைக்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும் என்று எதை வைத்துச் சொல்கிறோம்?
14 நாம் கடவுளை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டால், யோசேப்பைப் போல் நடந்துகொள்ள வேண்டும். யோசேப்பு தன்னுடைய அண்ணன்களைப் பழிவாங்கவில்லை, அவர்களைத் தாராளமாக மன்னித்தார். இயேசுவும் தான் கற்றுக்கொடுத்த ஜெபத்தில் அதையே செய்யச் சொன்னார். நமக்கு எதிராகப் பாவம் செய்பவர்களை மன்னிக்கச் சொன்னார். (மத். 6:9, 12) அப்போஸ்தலன் பவுலும்கூட, ‘அன்புக் கண்மணிகளே, நீங்கள் பழிக்குப்பழி வாங்காதீர்கள்’ என்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கொடுத்தார். (ரோ. 12:19) அதுமட்டுமல்ல, “ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னித்துக்கொண்டே இருங்கள்” என்றும் அவர் சொன்னார். (கொலோ. 3:13) யெகோவாவின் நியமங்கள் என்றுமே மாறாது. லேவியராகமம் 19:18-ல் இருக்கிற நியமம் இன்றைக்கும் நமக்குப் பொருந்தும். அதற்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்.
15. மற்றவர்கள் செய்ததை மன்னித்து மறந்துவிட வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்லுங்கள்.
15 இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். மனக் காயம், உடலில் ஏற்படுகிற காயம் போன்றதுதான். நமக்கு ஏற்படுகிற காயங்கள் பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கலாம். சிலசமயம், காய்கறி வெட்டும்போது நம் விரலில் சிறிய காயம் ஏற்பட்டுவிடலாம். அந்தச் சமயத்தில் வலித்தாலும் சீக்கிரத்தில் அந்த வலி போய்விடும். இரண்டு மூன்று நாளில், அந்தக் காயம் இருந்த இடமே நமக்குத் தெரியாமல் போய்விடும். மற்றவர்களால் நமக்கு ஏற்படுகிற மனக் காயம்கூட சில சமயங்களில் அப்படித்தான் இருக்கும். உதாரணத்துக்கு, நம்முடைய நண்பர் யோசிக்காமல் ஏதாவது பேசிவிட்டாலோ செய்துவிட்டாலோ அந்தச் சமயத்தில் மனம் வலிக்கும்தான். ஆனால், அதை அப்போதே மன்னித்து மறந்துவிட முடியும். ஒருவேளை, நமது உடலில் ஏற்பட்ட காயம் பெரிதாக இருந்தால், அந்த இடத்தில் தையல்போட்டு கட்டுப்போட வேண்டியிருக்கலாம். அந்தப் புண்ணில் நாம் எப்போது பார்த்தாலும் கை வைத்துக்கொண்டிருந்தால், அது ஆறாது, இன்னும் பெரியதாகிவிடும். அதைப் போலவே, மற்றவர்கள் நம்மைப் புண்படுத்தியதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், அந்தக் காயம் இன்னும் பெரியதாகவே ஆகும். அப்படியென்றால், லேவியராகமம் 19:18-ல் இருக்கிற ஆலோசனைக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு நல்லது!
16. லேவியராகமம் 19:33, 34 சொல்கிறபடி, வேறு தேசத்து ஜனங்களிடம் இஸ்ரவேலர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டியிருந்தது, இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
16 மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டும் என்று யெகோவா சொன்னபோது, மற்ற இஸ்ரவேலர்களை மட்டுமல்ல, மற்ற இனத்தையும் தேசத்தையும் சேர்ந்தவர்களை நேசிக்க வேண்டும் என்றுதான் சொன்னார். அப்படியென்றால், இஸ்ரவேலர்கள் தங்கள் மத்தியில் குடியிருந்த வேறு தேசத்தாரிடமும் அன்பு காட்ட வேண்டியிருந்தது. இந்தத் தெளிவான கட்டளையை, லேவியராகமம் 19:33, 34-ல் நாம் பார்க்கிறோம். (வாசியுங்கள்.) வேறு தேசத்து ஜனங்களை “உங்கள் தேசத்து ஜனங்களைப் போலவே” நடத்த வேண்டும். உங்களை நேசிப்பது போல அவர்களையும் “நேசிக்க வேண்டும்” என்று யெகோவா அவர்களிடம் சொன்னார். உதாரணத்துக்கு, தங்களுடைய வயலில் சிந்துகிற கதிர்களைப் பொறுக்க வேறு தேசத்து ஜனங்களையும் ஏழைகளையும் அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரவேலர்களிடம் யெகோவா சொல்லியிருந்தார். (லேவி. 19:9, 10) வேறு தேசத்து ஜனங்களிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற நியமம் இன்று நமக்கும் பொருந்தும். (லூக். 10:30-37) எப்படி? இன்றைக்கு லட்சக்கணக்கான ஜனங்கள் தங்களுடைய நாட்டை விட்டுவிட்டு வேறு நாட்டுக்குக் குடிமாறிப் போயிருக்கிறார்கள். ஒருவேளை, உங்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் அப்படிக் குடிமாறி வந்தவர்கள் இருக்கலாம். அவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்துவது ரொம்ப முக்கியம்.
லேவியராகமம் 19-ஆம் அதிகாரம் சொல்லாத ஒரு முக்கியமான வேலை
17-18. (அ) லேவியராகமம் 19:2-ம் 1 பேதுரு 1:15-ம் நம்மை என்ன செய்யச் சொல்கின்றன? (ஆ) அப்போஸ்தலன் பேதுரு என்ன முக்கியமான வேலையைச் செய்யச் சொல்லியிருக்கிறார்?
17 கடவுளுடைய மக்கள் பரிசுத்தமாக நடந்துகொள்ள வேண்டுமென்று லேவியராகமம் 19:2-ம் 1 பேதுரு 1:15-ம் சொல்கின்றன. யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள என்ன செய்ய வேண்டுமென்று லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்திலுள்ள இன்னும் சில வசனங்கள் சொல்கின்றன. நாம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று புரிந்துகொள்ள உதவுகிற சில வசனங்களை மட்டும்தான் பார்த்தோம்.b இதில் இருக்கிற நியமங்கள் இன்றும் நமக்குப் பொருந்தும் என்பதைப் புரிந்துகொள்ள கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் உதவுகிறது. ஆனால், அப்போஸ்தலன் பேதுரு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
18 நாம் யெகோவாவை வணங்குகிறோம், மற்றவர்களுக்கு நல்லது செய்கிறோம். இருந்தாலும், ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்ய வேண்டுமென்று பேதுரு சொல்கிறார். நம்முடைய நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனையைக் கொடுப்பதற்கு முன்பு, “மும்முரமாகச் செயல்படுவதற்கு உங்கள் மனதைத் தயார்படுத்துங்கள்” என்றும் அவர் சொல்கிறார். (1 பே. 1:13, 15) எதைச் செய்வதற்கு மனதைத் தயார்படுத்த வேண்டும்? பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், ‘தங்களை அழைத்தவருடைய “மகத்துவங்களை எல்லா இடங்களிலும் அறிவிக்க”’ வேண்டும் என்று பேதுரு சொன்னார். (1 பே. 2:9) சொல்லப்போனால், இந்த முக்கியமான வேலையைச் செய்வதற்கான பாக்கியம் நம் எல்லாருக்குமே இருக்கிறது. மக்களுக்குச் செய்கிற உதவியிலேயே இதுதான் மிகப் பெரிய உதவி. கடவுளுடைய பரிசுத்த மக்களாக இருக்கிற நாம் விடாமல் மக்களுக்குப் பிரசங்கிக்கிறோம், ஆர்வமாக மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம். இது நமக்குக் கிடைத்த எவ்வளவு பெரிய பாக்கியம்! (மாற். 13:10) லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் இருக்கிற நியமங்களின்படி செய்வதற்கு நம்மால் முடிந்ததையெல்லாம் செய்யும்போது, நாம் கடவுளையும் மற்றவர்களையும் நேசிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். அதோடு, நம்முடைய நடத்தை எல்லாவற்றிலும் ‘பரிசுத்தமாக இருக்க’ ஆசைப்படுகிறோம் என்பதையும் காட்டுகிறோம்.
பாட்டு 111 நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்
a கிறிஸ்தவர்களாகிய நாம் திருச்சட்டத்தின் கீழ் இல்லை. ஆனால், நாம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது போன்ற நிறைய விஷயங்கள் அதில் இருக்கின்றன. மற்றவர்கள்மேல் அன்பு காட்டவும் யெகோவாவை சந்தோஷப்படுத்தவும் அவை நமக்கு உதவும். லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் இருக்கிற சில பாடங்கள் நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
b பாரபட்சமாக நடப்பது, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வது, இரத்தத்தைச் சாப்பிடுவது, ஆவிகளோடு பேசுவது, குறிசொல்வது, ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வது போன்ற விஷயங்களைப் பற்றி லேவியராகமம் புத்தகம் சொல்கிறவற்றை இந்தக் கட்டுரையிலும் போன கட்டுரையிலும் நாம் பார்க்கவில்லை.—லேவி. 19:15, 16, 26-29, 31.—இந்த இதழில் “வாசகர் கேட்கும் கேள்விகள்” பகுதியைப் பாருங்கள்.
c படவிளக்கம்: ஒரு சகோதரர், டாக்டரிடம் பேச காதுகேட்காத ஒரு சகோதரருக்கு உதவுகிறார்.
d படவிளக்கம்: பெயிண்டிங் தொழில் செய்கிற ஒரு சகோதரர் தன்னிடம் வேலை செய்கிறவருக்கு சம்பளம் கொடுக்கிறார்.
e படவிளக்கம்: சின்ன காயத்தை ஒரு சகோதரியால் மறக்க முடிகிறது, பெரிதாக ஏற்படுகிற ஒரு காயத்தையும் அவர் அதே போல் மறப்பாரா?