படிப்புக் கட்டுரை 34
‘தொடர்ந்து சத்தியத்தில் நடங்கள்’
‘தொடர்ந்து சத்தியத்தில் நடங்கள்.’—3 யோ. 4.
பாட்டு 111 நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்
இந்தக் கட்டுரையில்...a
1. நாம் எப்படி ‘சத்தியத்துக்கு’ வந்தோம் என்பதைப் பற்றிச் சொல்வது நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?
“நீங்க எப்படி சத்தியத்துக்கு வந்தீங்க?” இந்தக் கேள்விக்கு நீங்கள் நிறைய தடவை பதில் சொல்லியிருப்பீர்கள். ஒரு சகோதரரோடு அல்லது சகோதரியோடு நன்றாகப் பழகும்போது, நாம் முதலில் கேட்கிற கேள்விகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். நம்முடைய சகோதர சகோதரிகள் எப்படி சத்தியத்துக்கு வந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நாம் ஆசைப்படுகிறோம். சத்தியம் நமக்கு எந்தளவுக்குப் பிடிக்கும் என்பதையும் நாம் ரொம்ப ஆசையாகச் சொல்வோம். (ரோ. 1:11) இப்படி ஒவ்வொரு தடவை பேசும்போதும் சத்தியத்தை நாம் எந்தளவுக்கு ஒரு பொக்கிஷமாக நினைக்கிறோம் என்பதை யோசித்துப்பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, ‘தொடர்ந்து சத்தியத்தில் நடக்க’ வேண்டும் என்பதில், அதாவது யெகோவாவுடைய ஆசீர்வாதமும் ஆதரவும் கிடைக்கிற மாதிரி எப்போதும் நடந்துகொள்ள வேண்டும் என்பதில், இன்னும் உறுதியாக இருப்போம்.—3 யோ. 4.
2. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
2 இந்தக் கட்டுரையில், நாம் ஏன் சத்தியத்தை நேசிக்கிறோம் என்பதற்குச் சில காரணங்களைப் பார்க்கலாம். பிறகு, இந்த அருமையான பரிசை நாம் நேசிக்கிறோம் என்பதைத் தொடர்ந்து எப்படிக் காட்டலாம் என்பதையும் பார்க்கலாம். அப்படிச் செய்யும்போது யெகோவா நம்மை சத்தியத்தின் பக்கமாக ஈர்த்திருப்பதை நினைத்து நாம் ரொம்ப சந்தோஷப்படுவோம். (யோவா. 6:44) இந்த சத்தியத்தை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற நம்முடைய ஆசையும் அதிகமாகும்.
‘சத்தியத்தை’ நாம் ஏன் நேசிக்கிறோம்?
3. நாம் சத்தியத்தை நேசிப்பதற்கு முக்கியமான காரணம் என்ன?
3 சத்தியத்தை நாம் நேசிக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன. ரொம்ப முக்கியமான காரணம் என்னவென்றால், இந்த சத்தியத்தைக் கொடுத்த யெகோவாவை நாம் நேசிக்கிறோம். அவருடைய வார்த்தையான பைபிள் மூலமாக அவரைப் பற்றி நாம் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டோம். அவர் இந்த வானத்தையும் பூமியையும் படைத்த சர்வவல்லமையுள்ள கடவுளாக மட்டுமல்ல, நம்மை ரொம்ப அக்கறையாகப் பார்த்துக்கொள்கிற பாசமான ஒரு அப்பாவாகவும் இருப்பதை நாம் தெரிந்துகொண்டோம். (1 பே. 5:7) அவர் “இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர்” அதாவது, சத்தியமுள்ள கடவுள் என்று நமக்குத் தெரியும். (யாத். 34:6) யெகோவா நீதியை நேசிக்கிறவர். (ஏசா. 61:8) நாம் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது அவர் ரொம்ப வேதனைப்படுகிறார். நம்முடைய எல்லா கஷ்டங்களையும் சரியான சமயத்தில் முடிவுக்குக் கொண்டுவர அவர் ரொம்ப ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறார். (எரே. 29:11) அது எவ்வளவு அற்புதமான ஒரு சமயமாக இருக்கும்! யெகோவாவை உயிருக்கு உயிராக நேசிப்பதற்கு இவையெல்லாமே அருமையான காரணங்கள், இல்லையா?
4-5. அப்போஸ்தலன் பவுல் நம்முடைய நம்பிக்கையை ஏன் ஒரு நங்கூரத்தோடு ஒப்பிட்டுச் சொன்னார்?
4 நாம் சத்தியத்தை நேசிப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்கிறது? சத்தியத்தைத் தெரிந்துகொள்ளும்போது நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். பைபிள் சத்தியம் நமக்கு எதிர்கால நம்பிக்கையைக் கொடுக்கிறது. இந்த நம்பிக்கை எவ்வளவு விலைமதிப்புள்ளது என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். “அந்த நம்பிக்கை நம் உயிருக்கு நங்கூரம் போன்றது; அது உறுதியானது, நம்பகமானது” என்று சொன்னார். (எபி. 6:19) ஒரு கப்பல் அலைக்கழிக்கப்படாமல் இருப்பதற்கு நங்கூரம் எப்படி உதவி செய்கிறதோ அதேபோல் வாழ்க்கையில் வருகிற பிரச்சினைகளால் நாம் அலைக்கழிக்கப்படாமல் இருப்பதற்கு இந்த நம்பிக்கை நமக்கு உதவி செய்கிறது.
5 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இருந்த பரலோக நம்பிக்கையைப் பற்றி பவுல் இங்கே பேசிக்கொண்டிருக்கிறார். இருந்தாலும், பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை இருக்கிற கிறிஸ்தவர்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்தும். (யோவா. 3:16) உண்மையிலேயே, என்றென்றும் வாழும் நம்பிக்கையைப் பற்றித் தெரிந்துகொண்டது நம்முடைய வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது.
6-7. எதிர்காலத்தைப் பற்றி பைபிள் சொல்கிற சத்தியத்தைத் தெரிந்துகொண்டது ஈவானுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது?
6 ஈவான் என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் சின்ன வயதில் ஒரு யெகோவாவின் சாட்சி கிடையாது. அப்போதெல்லாம் சாவை நினைத்து அவர் ரொம்ப பயந்தார். அவரிடமிருந்த ஒரு புத்தகத்தில் இப்படி ஒரு வரியை வாசித்தார்: “நாளை என்பதே ஒருநாள் இல்லாமல் போய்விடும்.” அந்த வார்த்தைகள் அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. “அந்த வார்த்தைகள படிச்சதுக்கு அப்பறம் என்னால ராத்திரி தூங்கவே முடியல. எதிர்காலத்த பத்தியே யோசிச்சிட்டு இருந்தேன். வாழ்க்கையில அனுபவிக்க இன்னும் நிறைய இருக்கு. நான் உயிரோட இருக்க ஏதாவது காரணம் இருக்கும்” என்று அவர் நினைத்தார்.
7 டீனேஜ் வயதில் ஈவான் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். “பூஞ்சோலை பூமியில என்னென்னைக்கும் வாழ்ற வாய்ப்பு இருக்குனு நான் நம்ப ஆரம்பிச்சேன்” என்று அவர் சொல்கிறார். பைபிள் சத்தியத்தைத் தெரிந்துகொண்டது அவருக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது? “இப்பெல்லாம் நான் எதிர்காலத்த பத்தியோ சாவ பத்தியோ யோசிச்சிட்டு ராத்திரி எல்லாம் தூங்காம இருக்குறதில்ல” என்று அவர் சொல்கிறார். பைபிள் சத்தியத்தை ஈவான் எவ்வளவு பெரிய பொக்கிஷமாக நினைக்கிறார் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அந்த எதிர்கால நம்பிக்கையைப் பற்றி அவர் மற்றவர்களிடம் சந்தோஷமாக சொல்கிறார்.—1 தீ. 4:16.
8-9. (அ) இயேசு சொன்ன உவமையில் வருகிற அந்த மனிதன், தான் கண்டுபிடித்த பொக்கிஷத்தை எவ்வளவு மதிப்புள்ளதாக நினைத்தான்? (ஆ) சத்தியத்தை நீங்கள் எந்தளவுக்கு மதிப்புள்ளதாக நினைக்கிறீர்கள்?
8 பைபிள் சத்தியத்தில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியும் அடங்கியிருக்கிறது. இந்தச் சத்தியத்தை நிலத்தில் புதைந்திருந்த ஒரு பொக்கிஷத்தோடு ஒப்பிட்டு இயேசு சொன்னார். அதைப் பற்றி மத்தேயு 13:44-ல் இப்படிச் சொன்னார்: “பரலோக அரசாங்கம் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷத்தைப் போல் இருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டுபிடித்து, மறுபடியும் அங்கே மறைத்து வைக்கிறான்; பின்பு சந்தோஷத்தோடு போய், தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான்.” இங்கே ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? அந்த மனிதன் பொக்கிஷத்தைத் தேடிப் போகவில்லை. ஆனால், பொக்கிஷத்தைப் பார்த்தபோது அதற்காக பெரிய தியாகங்களைச் செய்தான். சொல்லப்போனால், அவனிடம் இருந்த எல்லாவற்றையுமே விற்றுவிட்டான். ஏன்? அந்தப் பொக்கிஷம் எவ்வளவு விலைமதிப்புள்ளது என்பதைப் புரிந்துவைத்திருந்தான். அதற்காக எதைத் தியாகம் செய்தாலும் தப்பில்லை என்று அவன் நினைத்தான்.
9 சத்தியத்தைப் பற்றி நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? நிச்சயம் அப்படித்தான் நினைப்பீர்கள்! யெகோவாவுக்கு சேவை செய்வதால் நமக்குக் கிடைக்கிற சந்தோஷம்... கடவுளுடைய அரசாங்கத்தில் என்றென்றும் வாழ்வதற்கு நமக்கு இருக்கிற நம்பிக்கை... இவற்றோடு ஒப்பிடும்போது இந்த உலகம் தருவதெல்லாம் ஒன்றுமே இல்லை. யெகோவாவோடு நெருக்கமான நட்பை வைத்துக்கொள்வதற்காக நாம் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம். ‘அவரை முழுமையாகப் பிரியப்படுத்துவதுதான்’ நம்முடைய பெரிய சந்தோஷமே!—கொலோ. 1:10.
10-11. வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு மைக்கேலை எது தூண்டியது?
10 யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டும் என்பதற்காக நிறைய பேர் பெரிய பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். சிலர், கவுரவமான வேலையை விட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், பணக்காரர்களாக ஆக வேண்டும் என்ற ஆசையை விட்டிருக்கிறார்கள். வேறுசிலர், யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றியிருக்கிறார்கள். மைக்கேலும் அப்படித்தான் செய்தார். சின்ன வயதில் அவர் ஒரு யெகோவாவின் சாட்சி கிடையாது. வளர்ந்த பிறகு, அவர் கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். “நல்லா உடற்பயிற்சி செஞ்சு என் உடம்ப ரொம்ப பலமா வைச்சிருக்கிறத நினைச்சு ரொம்ப பெருமைபட்டேன். என்னை யாராலயும் தோற்க்கடிக்க முடியாதுனுகூட சிலசமயங்கள்ல நினைச்சேன்” என்று அவர் சொல்கிறார். பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு, வன்முறையை யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்பதை மைக்கேல் புரிந்துகொண்டார். (சங். 11:5) அவருக்கு பைபிள் படிப்பு எடுத்த அந்தத் தம்பதியைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் கராத்தேய விட்டுடணும்னு அவங்க ஒரு நாளும் சொன்னதில்ல. ஆனா, பைபிள்ல இருக்குற சத்தியங்கள அவங்க எனக்கு தொடர்ந்து கத்துக்கொடுத்தாங்க.”
11 யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள, அவர்மேல் இருக்கிற அன்பு மைக்கேலுக்கு அதிகமானது. முக்கியமாக, யெகோவா தன்னை வணங்குபவர்களிடம் எவ்வளவு கரிசனையாக நடந்துகொள்கிறார் என்று தெரிந்துகொண்டது மைக்கேலின் மனதை ரொம்பவே தொட்டது. ஒருகட்டத்தில், அவருடைய வாழ்க்கையையே மாற்றுகிற ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று அவர் புரிந்துகொண்டார். “கராத்தேய விடுறதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா, யெகோவாவ சந்தோஷப்படுத்தணும்னா அதை செய்யணும்னு எனக்கு தெரிஞ்சிருந்தது. அவரை வணங்குறதுக்காக எதையும் தியாகம் செய்யலாம்னு நான் உறுதியாக நம்புனேன்” என்று மைக்கேல் சொல்கிறார். பைபிள் சத்தியம் எவ்வளவு விலைமதிப்புள்ளது என்பதை மைக்கேல் புரிந்துகொண்டார். வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு அதுதான் அவரைத் தூண்டியது.—யாக். 1:25.
12-13. பைபிள் சத்தியம் மைலிக்கு எப்படி உதவி செய்தது?
12 சத்தியம் எவ்வளவு விலைமதிப்புள்ளது என்பதைக் காட்டுவதற்காக, அதை இருட்டில் பிரகாசமாக எரிகிற ஒரு விளக்கோடு ஒப்பிட்டு பைபிள் சொல்கிறது. (சங். 119:105; எபே. 5:8) அஜர்பைஜானைச் சேர்ந்த மைலி என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். பைபிளைப் படித்ததால் அவருடைய மனதில் இருந்த நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. அதற்காக அவர் ரொம்ப நன்றியோடு இருக்கிறார். அவருடைய அப்பா ஒரு முஸ்லிம், அம்மா யூத மதத்தைச் சேர்ந்தவர். மைலி என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்: “கடவுள் இருக்கிறாரா இல்லையானு எனக்கு சந்தேகம் வந்ததில்லை. ஆனா, மனசுல சில கேள்விகள் இருந்துச்சு. ‘மனுஷன கடவுள் ஏன் படைச்சாரு? வாழுறப்போ அவன் கஷ்டப்படுறது போதாதுனு நரகத்துலயும் போய் கஷ்டப்படணுமா? அதுக்குதான் அவனை படைச்சாரா’னு அடிக்கடி யோசிப்பேன். நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும், அதுக்கு கடவுள்தான் காரணம்னு மக்கள் சொல்றாங்க. ‘அப்படீன்னா நாம கஷ்டப்படுறத பார்த்து கடவுள் சந்தோஷப்படுறாரா?’னு யோசிப்பேன்.”
13 மைலி தன்னுடைய மனதில் இருந்த எல்லா கேள்விகளுக்கும் பதிலைத் தேடிக்கொண்டே இருந்தார். கொஞ்சம் நாட்களுக்குப் பிறகு அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார், சத்தியத்துக்கு வந்தார். “பைபிள் சொல்ற விஷயங்கள் எல்லாம் எதார்த்தமா இருந்ததால நான் வாழ்க்கைய வித்தியாசமா பார்க்க ஆரம்பிச்சேன். பைபிள்ல இருக்குற விஷயங்கள் எல்லாம் நம்புற மாதிரி இருந்ததுனால எனக்கு உண்மையான சந்தோஷம் கிடைச்சுது” என்று அவர் சொல்கிறார். மைலியைப் போல், நாம் எல்லாரும் யெகோவாவைப் புகழ்கிறோம். ஏனென்றால், ‘இருளிலிருந்து தன்னுடைய அற்புதமான ஒளியின் பக்கம் நம்மை அவர் அழைத்திருக்கிறார்.’—1 பே. 2:9.
14. பைபிள் சத்தியத்தை இன்னும் அதிகமாக நேசிப்பதற்கு நாம் என்ன செய்யலாம்? (“சத்தியத்தை வேறு எவற்றோடு எல்லாம் ஒப்பிடலாம்?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
14 பைபிள் சத்தியத்தை நாம் எவ்வளவு உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்கு இது வெறும் சில உதாரணங்கள்தான். இன்னும் நிறைய உதாரணங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும். சத்தியத்தை நேசிக்க வேறு என்ன காரணங்கள் இருக்கின்றன என்பதை உங்கள் தனிப்பட்ட படிப்பில் ஆராய்ச்சி செய்துபாருங்கள். சத்தியத்தை எந்தளவுக்கு அதிகமாக நேசிக்கிறோமோ அந்தளவுக்கு அதன்மேலுள்ள அன்பைச் செயலில் காட்ட நாம் முயற்சி செய்வோம்.
சத்தியத்தை நேசிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
15. சத்தியத்தை நாம் நேசிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு ஒரு வழி என்ன?
15 பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் தவறாமல் படிப்பதன் மூலம் சத்தியத்தை நாம் நேசிக்கிறோம் என்பதைக் காட்டலாம். நாம் எத்தனை வருஷங்கள் சத்தியத்தில் இருந்தாலும் சரி, நாம் படிப்பதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இந்தப் பத்திரிகையின் முதல் இதழ் (ஆங்கிலம்) இப்படிச் சொன்னது: “சத்தியம், அழகான ஒரு சின்ன பூவைப்போல் இருக்கிறது. ஆனால், அதை நெருக்கிபோடும் அளவுக்கு அதைச் சுற்றி களைகள் மாதிரி நிறைய பொய்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு பூவைக் கண்டுபிடிக்க நீங்கள் கவனமாகத் தேட வேண்டும். . . . ஒரு பூவைக் கண்டுபிடித்ததும், அதுபோதும் என்று இருந்துவிடக் கூடாது. . . . அது மாதிரி இன்னும் நிறைய பூக்களைத் தொடர்ந்து தேட வேண்டும்.” படிப்பது கஷ்டம்தான். ஆனால், அதற்காக நீங்கள் எடுக்கிற முயற்சிகளுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
16. பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? (நீதிமொழிகள் 2:4-6)
16 பைபிளை வாசிப்பதும், அதை ஆராய்ச்சி செய்து படிப்பதும் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், சத்தியத்தை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு, ‘அதை விடாமல் தேடுங்கள், தொடர்ந்து தேடுங்கள்’ என்று யெகோவா நம்மிடம் சொல்கிறார். (நீதிமொழிகள் 2:4-6-ஐ வாசியுங்கள்.) அப்படி முயற்சி எடுத்து படிக்கும்போது நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். கோரீ என்ற சகோதரர், அவர் பைபிளை எப்படிப் படிப்பார் என்பதைப் பற்றிச் சொல்கிறார். அவர் ஒருசமயத்தில் ஒரு வசனத்தை எடுத்துக்கொள்வார். “அதுல இருக்கிற எல்லா அடிக்குறிப்புகளையும், இணை வசனங்களையும் பார்ப்பேன். கூடுதலா ஆராய்ச்சியும் செய்வேன். . . . இப்படி செய்யுறப்போ பைபிள்ல இருந்து என்னால நிறைய விஷயங்கள கத்துக்க முடியுது!” என்று அவர் சொல்கிறார். நாம் அவரைப் போல படித்தாலும் சரி, வேறு விதத்தில் படித்தாலும் சரி, நேரம் எடுத்து பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்கும்போது, சத்தியத்தை எவ்வளவு உயர்வாக நினைக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.—சங். 1:1-3.
17. சத்தியத்தின்படி வாழ்வது என்றால் என்ன? (யாக்கோபு 1:25)
17 நாம் பைபிள் சத்தியத்தைப் படித்தால் மட்டும் போதாது. அதிலிருந்து முழுமையாக நன்மையடைய வேண்டும் என்றால் சத்தியத்தின்படி வாழ வேண்டும். அப்போதுதான் சத்தியம் நமக்கு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும். (யாக்கோபு 1:25-ஐ வாசியுங்கள்.) நாம் சத்தியத்தின்படி வாழ்கிறோமா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? எந்தெந்த விஷயங்களை எல்லாம் நாம் நன்றாக செய்து கொண்டிருக்கிறோம், எந்தெந்த விஷயங்களில் இன்னும் முன்னேற வேண்டியிருக்கிறது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வது உதவியாக இருக்கும் என்று ஒரு சகோதரர் சொல்கிறார். அதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொல்கிறார்: “முன்னேற்றப் பாதையில் நாம் எதுவரை போயிருந்தாலும் சரி, அதே பாதையில் தொடர்ந்து சீராக நடக்க வேண்டும்.”—பிலி. 3:16.
18. ‘தொடர்ந்து சத்தியத்தில் நடப்பதற்கு’ நம்மால் முடிந்த எல்லாவற்றையும் ஏன் செய்ய வேண்டும்?
18 ‘தொடர்ந்து சத்தியத்தில் நடப்பதற்கு’ நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது நமக்குக் கிடைக்கிற நன்மைகளைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! நம்முடைய வாழ்க்கையே நல்ல விதமாக மாறிவிடும். நம்மைப் பார்த்து யெகோவாவும் மற்றவர்களும் சந்தோஷப்படுவார்கள். (நீதி. 27:11; 3 யோ. 4) சத்தியத்தை நேசிப்பதற்கும் அதன்படி வாழ்வதற்கும் இதைவிட நல்ல காரணங்கள் இருக்க முடியுமா?
பாட்டு 144 கண் முன் பரிசை வைப்போம்!
a பொதுவாக நம்முடைய நம்பிக்கைகளை ‘சத்தியம்’ என்று சொல்வோம். அதன்படி வாழும்போது நாம் சத்தியத்தில் இருப்பதாக சொல்கிறோம். நாம் சத்தியத்துக்குப் புதிதாக வந்திருந்தாலும் சரி, ரொம்ப வருஷங்களாக சத்தியத்தில் இருந்தாலும் சரி, அதை ஏன் நேசிக்கிறோம் என்பதை யோசித்துப்பார்ப்பது நம் எல்லாருக்குமே பிரயோஜனமாக இருக்கும். அப்படிச் செய்யும்போது யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருப்போம்.