உண்மை—உண்மையிலேயே முக்கியமா?
‘எது உண்மை, எது பொய் என்றே தெரியவில்லை’ என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? ‘எனக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் நான் நம்புவேன், உண்மை என்ன என்பதெல்லாம் எனக்கு முக்கியமல்ல’ என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். உண்மை என்ற ஒன்று இல்லவே இல்லை என்றுதான் உலகம் முழுவதும் இன்றைக்கு நிறையப் பேர் நம்புகிறார்கள்.
இன்றைக்கு மட்டுமல்ல, 2000 வருஷங்களுக்கு முன்பே மக்கள் இப்படி யோசித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ரோம ஆளுநர் பொந்தியு பிலாத்து, “சத்தியமா? அது என்ன?” என்று இயேசுவிடம் ரொம்ப நக்கலாகக் கேட்டார். (யோவான் 18:38) அதற்கான பதிலைத் தெரிந்துகொள்ளும்வரை அவர் காத்துக்கொண்டிருக்கவில்லை. ஆனால் நமக்கு அந்தக் கேள்வி ரொம்ப முக்கியம். அதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவி செய்கிறது. உலகமே குழப்பத்தில் இருந்தாலும் உண்மை எது, பொய் எது என்று நம்மால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியும்.
உண்மை என்ற ஒன்று இருக்கிறதா?
இருக்கிறது. நம்பகமான, சரியான விஷயத்தைக் குறிப்பதற்கு பைபிளில் “சத்தியம்,” அதாவது உண்மை, என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யெகோவாa தேவனை, ‘சத்தியத்தின் கடவுள்’ என்று பைபிள் சொல்கிறது. ஏனென்றால், சத்தியத்தின் ஊற்றுமூலமே அவர்தான். (சங்கீதம் 31:5) கடவுள் சொல்லிக் கொடுத்திருக்கும் உண்மைகள் பைபிளில் இருக்கின்றன. அந்தச் சத்தியத்தை, ஒளிக்கு ஒப்பிட்டு அது சொல்கிறது. ஏனென்றால், குழப்பம் நிறைந்த இந்த உலகத்தில் அதுதான் நமக்கு வழிகாட்டுகிறது.—சங்கீதம் 43:3; யோவான் 17:17.
உண்மைகளை நாம் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
பைபிள் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நாம் நம்ப வேண்டுமென்று கடவுள் எதிர்பார்ப்பதில்லை. அதோடு, மனதுக்குச் சரியென்று படுவதையெல்லாம் நம்பாமல், நம் சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி அதை ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்று கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். (ரோமர் 12:1) நாம் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்... “முழு மனதோடு” அவர்மீது அன்பு காட்ட வேண்டும்... என்று ஆசைப்படுகிறார். பைபிளில் சொல்லியிருப்பது எல்லாம் உண்மைதானா என்று நம்மை நாமே நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்.—மத்தேயு 22:37, 38; அப்போஸ்தலர் 17:11.
பொய்யின் ஆரம்பம் எது?
கடவுளுடைய எதிரியான பிசாசாகிய சாத்தானிடமிருந்துதான் பொய் ஆரம்பித்தது என்று பைபிள் சொல்கிறது. அவன்தான், ‘பொய்க்குத் தகப்பன்’ என்றும் அது சொல்கிறது. (யோவான் 8:44) முதல் முதலில் படைக்கப்பட்ட மனிதர்களிடம் கடவுளைப் பற்றி அவன் பொய் சொன்னான். (ஆதியாகமம் 3:1-6, 13, 17-19; 5:5) அன்றிலிருந்து அவன் பொய்யைப் பரப்பிக் கொண்டிருக்கிறான். கடவுளைப் பற்றிய உண்மைகளையும் மறைத்துக் கொண்டிருக்கிறான்.—வெளிப்படுத்துதல் 12:9.
ஏன் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் பொய்யாக இருக்கிறது?
நாம் வாழும் காலத்தை ‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்கிறது. முன்பு இல்லாத அளவுக்கு மக்களை ஏமாற்றும் வேலையை சாத்தான் ரொம்ப மும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறான். இன்றிருக்கும் மக்களும், ‘மற்றவர்களை ஏமாற்றினாலும் பரவாயில்லை, நமக்கு நல்லது நடந்தால் போதும்’ என்று நினைத்து பொய்களை அள்ளி வீசுகிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, 13) இன்றைக்கு நிறைய மதங்களிலும் பொய் கலந்திருக்கிறது. நம் காலத்தைப் பற்றி பைபிள் முன்பே இப்படிச் சொல்லியிருக்கிறது: மக்கள் ‘அவர்களுடைய காதுகளுக்கு இனிமையாக இருக்கிற விஷயங்களைக் கேட்பதற்காக, அவர்களுக்கென்று போதகர்களைச் சேர்த்துக்கொள்வார்கள். சத்தியத்தைக் காதுகொடுத்துக் கேட்க மாட்டார்கள்.’—2 தீமோத்தேயு 4:3, 4.
உண்மை ஏன் ரொம்ப முக்கியம்?
உண்மையாக இருக்கிறவர்களைத்தான் மக்கள் நம்புவார்கள். நம்பிக்கை இல்லையென்றால் நட்பும் இருக்காது, மக்களுக்குள் ஒற்றுமையும் இருக்காது. உண்மைகளை அடிப்படையாக வைத்துதான் தன்னை வணங்க வேண்டுமென்று கடவுளும் எதிர்பார்க்கிறார். அதனால்தான், “அவரை வணங்குகிறவர்கள் அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் [அவரை] வணங்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். (யோவான் 4:24) பொய்யான மதம் எது என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் அதிலிருந்து வெளியே வருவதற்கும் பைபிளிலிருக்கும் உண்மைகள் நமக்கு எப்படி உதவி செய்யும் என்பதைத் தெரிந்துகொள்ள, “கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்” என்ற தலைப்பில் வருகிற தொடர் கட்டுரைகளைப் பாருங்கள்.
நாம் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று கடவுள் ஏன் ஆசைப்படுகிறார்?
நாம் எல்லாருமே என்றென்றும் வாழ வேண்டுமென்று கடவுள் நினைக்கிறார். அதற்கு அவரைப் பற்றிய உண்மைகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். (1 தீமோத்தேயு 2:4) எது சரி, எது தவறு என்று கடவுள் சொல்கிறாரோ அதைத் தெரிந்துகொண்டு அதன்படி வாழும்போது அவரோடு நெருக்கிய நண்பர்களாக இருக்க முடியும். (சங்கீதம் 15:1, 2) இந்த உண்மைகளை நாம் எல்லாரும் கற்றுக்கொள்வதற்காகத்தான் இயேசுவைக் கடவுள் பூமிக்கு அனுப்பினார். இயேசு சொன்ன விஷயங்களை எல்லாம் நாம் கேட்டு நடக்க வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறார்.—மத்தேயு 17:5; யோவான் 18:37.
பொய் இல்லாத உலகத்தைக் கடவுள் கொண்டுவருவாரா?
நிச்சயம் கொண்டுவருவார். ‘நான் நன்றாக இருந்தால் போதும்’ என்பதற்காக மற்றவர்களை ஏமாற்றும் மக்களை கடவுளுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. பொய்யிலே புரளும் மக்களை அழிக்கப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 5:6) அவர் சொன்ன இந்த விஷயம் நடக்கும்போது இன்னொரு வாக்குறுதியும் நிறைவேறும், “உண்மை பேசுகிற உதடுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.”—நீதிமொழிகள் 12:19.
a யெகோவா என்பதுதான் கடவுளுடைய தனிப்பட்ட பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற தலைப்பில் இருக்கும் கட்டுரையைப் பாருங்கள்.