பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
“ஆசைப்பட்டது எல்லாமே எனக்குக் கிடைத்தது”
பிறந்த வருஷம்: 1962
பிறந்த நாடு: கனடா
என்னைப் பற்றி: ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்ந்தேன்
என் கடந்தகால வாழ்க்கை
கனடாவில் இருக்கிற கியுபெக் மாகாணத்திலேயே மிகப் பெரிய நகரம் மான்ட்ரீல்; அங்குதான் நான் பிறந்தேன். எனக்கு ஒரு அக்கா, இரண்டு தம்பிகள். அம்மாவும் அப்பாவும் எங்களைப் பாசமாக வளர்த்தார்கள்; ரோஸ்மான்ட் என்ற இடத்தில் எங்கள் வாழ்க்கை அமைதியான நீரோடை போல் ஓடிக்கொண்டிருந்தது.
சின்ன வயதிலிருந்தே எனக்கு பைபிள் என்றால் ரொம்பப் பிடிக்கும். என்னுடைய 12-வது வயதில், இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி புதிய ஏற்பாட்டில் ரசித்துப் படித்தது எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அவர், மற்றவர்களிடம் காட்டிய அன்பும் கரிசனையும் என் மனதைத் தொட்டது; அதனால், அவரைப் போல ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், வளரவளர அந்த ஆசை படிப்படியாக மறைந்துபோனது, கெட்ட ஆட்களோடு பழக ஆரம்பித்தேன்.
என் அப்பா ஸாக்ஸோஃபோன் (Saxophone) இசைக்கருவி வாசிப்பவர். தன்னுடைய இசைக்கருவியை தந்தது மட்டுமில்லாமல், இசைமேல் தணியாத தாகத்தையும் அவர் எனக்குள் ஏற்படுத்தினார். அதற்குப் பிறகு, இசைதான் என்னுடைய உயிர்மூச்சானது. இசை எனக்கு ரொம்பப் பிடித்திருந்ததால், கிட்டார் (Guitar) வாசிக்கக் கற்றுக்கொண்டேன். சீக்கிரத்தில், சில நண்பர்களோடு சேர்ந்து ராக் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தேன்; நாங்கள் நிறைய இசை நிகழ்ச்சிகளை நடத்தினோம். இசை உலகத்தின் பிரபலமான தயாரிப்பாளர்கள் சிலர் அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு எனக்கு வாய்ப்பு தர முன்வந்தார்கள். ஒரு பெரிய ரெக்கார்ட் கம்பெனியின் கான்ட்ராக்ட் எனக்குக் கிடைத்தது. என்னுடைய இசை ரொம்பவே பிரபலமானது; கியுபெக் முழுக்க ரேடியோவில் தவறாமல் ஒலிபரப்பப்பட்டது.
நான் ஆசைப்பட்டது எல்லாமே எனக்குக் கிடைத்தது. இளம் வயதிலேயே பேரும்புகழும் பெற்றேன். எனக்குப் பிடித்த வேலை செய்து கைநிறைய பணம் சம்பாதித்தேன். தினமும் காலையில், உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்குப் போனேன், பேட்டிகள் கொடுத்தேன், ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தேன், டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். ராத்திரியில், இசை நிகழ்ச்சிகள் நடத்தினேன், பார்ட்டிகளுக்குப் போனேன். ரசிகர் கூட்டத்தின் தொல்லையால் ஏற்பட்ட மன அழுத்தத்தைச் சமாளிக்க இளம் வயதிலிருந்தே மதுபானம் குடிக்க ஆரம்பித்தேன்; பிறகு, போதைப் பொருள்களையும் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் நடந்துகொண்டேன்; ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்ந்தேன்.
சிலர் என்னுடைய வாழ்க்கை முறையைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள். ஏனென்றால், வெளித்தோற்றத்தில் நான் ரொம்பச் சந்தோஷமாக இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால், அடிமனதில் வெறுமை உணர்வு என்னை வாட்டி வதைத்தது, அதுவும் தனிமையில் இருந்தபோது ரொம்பவே வாட்டி வதைத்தது. மனச்சோர்வும் கவலையும் என்னை ஆட்டிப்படைத்தது. நான் புகழின் உச்சியில் இருந்தபோது, என்னுடைய தயாரிப்பாளர்களில் இரண்டு பேர் திடீரென்று எய்ட்ஸ் (AIDS) நோயால் இறந்துபோனார்கள். எனக்குப் பயங்கர அதிர்ச்சி! இசையை நான் நேசித்தாலும், என்னுடைய வாழ்க்கை முறையை நான் ரொம்பவே வெறுத்தேன்.
பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது
நான் புகழின் உச்சியில் இருந்தாலும்கூட, இந்த உலகத்தில் ஏதோவொன்று படுமோசமாக இருப்பது போல உணர்ந்தேன். இல்லையென்றால், இந்த உலகத்தில் ஏன் இந்தளவு அநியாயம் நடக்க வேண்டும் என்று யோசித்தேன். கடவுள் ஏன்தான் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சும்மா இருக்கிறாரோ என்று யோசித்தேன். இதற்கெல்லாம் பதில் கிடைக்க வேண்டுமென்று நான் அடிக்கடி ஜெபம் செய்தேன். ஒருமுறை இசை நிகழ்ச்சிகளுக்காகச் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஓய்வெடுக்க கொஞ்ச நேரம் கிடைத்தது. அப்போது மறுபடியும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். படித்த நிறைய விஷயங்கள் எனக்குப் புரியவில்லை என்றாலும், இந்த உலகத்தின் முடிவு சீக்கிரம் வரப்போகிறது என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
பைபிளைப் படித்துக்கொண்டிருந்தபோது, வனாந்தரத்தில் இயேசு ஒரு சமயம் 40 நாட்களுக்கு விரதம் இருந்ததைப் பற்றிய பதிவைப் படித்தேன். (மத்தேயு 4:1, 2) அதனால், ‘நானும் இயேசு மாதிரியே விரதமிருந்தா, ஒருவேளை கடவுள் எனக்கும்கூட தன்னை வெளிப்படுத்துவார்’ என்று நினைத்துக்கொண்டு, விரதமிருக்க ஒரு தேதியைக் குறித்தேன். நான் விரதம் இருக்கப்போவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, யெகோவாவின் சாட்சிகள் இரண்டு பேர் என் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்; அவர்களுக்காக நான் ஏற்கெனவே காத்துக்கொண்டிருந்தவன் போல அவர்களை வீட்டுக்குள் அழைத்தேன். ஜாக் என்ற யெகோவாவின் சாட்சியுடைய முகத்தைப் பார்த்து, “நாம இந்த உலகத்தோட கடைசி நாட்கள்லதான் வாழ்றோம்னு எப்படித் தெரிஞ்சுக்கறது?” என்று கேட்டேன். உடனே அவர் தன்னுடைய பைபிளைத் திறந்து 2 தீமோத்தேயு 3:1-5-ஐ வாசித்துக் காட்டி விளக்கினார். அதற்குப் பிறகு, அந்த இரண்டு பேரிடமும் கேள்விக்குமேல் கேள்வி கேட்டேன். அவர்கள் கொடுத்த பதில்கள் நியாயமானதாக இருந்தன, எனக்குத் திருப்தியளித்தன. எல்லா பதில்களையும் அவர்கள் பைபிளிலிருந்தே காட்டினார்கள், அப்படியே அசந்துபோனேன். அவர்களுடைய சில சந்திப்புகளுக்குப் பிறகு, விரதமிருக்கத் தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.
யெகோவாவின் சாட்சிகளிடம் தவறாமல் பைபிள் படிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நாட்களிலேயே, என்னுடைய நீளமான தலைமுடியை வெட்டினேன்; அங்கிருந்த ராஜ்ய மன்றம் ஒன்றில் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குப் போனேன். ராஜ்ய மன்றத்தில் இருந்தவர்கள் என்னை அன்பாக வரவேற்ற விதம் என் மனதை நெகிழ வைத்தது; ‘இதுதான் சத்தியம்!’ என்பதை எனக்கு உணர்த்தியது.
பைபிள் படிப்பிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களைக் கடைப்பிடிப்பதற்கு, வாழ்க்கையில் பெரிய பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. முதலாவது, போதைப் பழக்கத்தை நிறுத்த வேண்டியிருந்தது, ஒழுக்கக்கேடான வாழ்க்கையை விட்டொழிக்க வேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, சுயநலமாக யோசிப்பதை நிறுத்திவிட்டு, மற்றவர்கள்மீது அதிக அக்கறை காட்ட வேண்டியிருந்தது. நான் ஒற்றைப் பெற்றோராக இருந்ததால், என் இரண்டு பிள்ளைகளுடைய உணர்ச்சிப்பூர்வ தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதனால், என்னுடைய இசைப் பயணத்தை விட்டுவிட்டு, குறைந்த சம்பளத்துக்கு ஒரு ஃபேக்டரியில் வேலைக்குச் சேர்ந்தேன்.
இந்த மாற்றங்களையெல்லாம் செய்வது எனக்குச் சுலபமாக இருக்கவில்லை. போதைப் பழக்கத்தை விட்டுவிட முயற்சி செய்தபோது, உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன; அதற்குப் பிறகு சில சமயங்களில், இந்தப் பழக்கத்தை விட முடியாமல் கஷ்டப்பட்டேன். (ரோமர் 7:19, 21-24) ஒழுக்கக்கேடான வாழ்க்கை முறையை விடுவது ரொம்பவே சிரமமாக இருந்தது. அதோடு, என்னுடைய புதிய வேலை என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தது; குறைந்த வருமானம் என் மனதைச் சோர்ந்துபோகச் செய்தது. ஓர் இசைக் கலைஞனாக இரண்டே மணிநேரத்தில் சம்பாதித்த பணத்தை, மூன்று மாதம் பாடுபட்டுச் சம்பாதிக்க வேண்டியிருந்தது.
இப்படிப்பட்ட கஷ்டமான மாற்றங்களைச் செய்வதில் உறுதியாயிருக்க ஜெபம் எனக்கு உதவி செய்தது. பைபிளைத் தவறாமல் வாசித்ததும்கூட ரொம்பவே உதவியது. சில பைபிள் வசனங்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தின. அதில் ஒன்று, 2 கொரிந்தியர் 7:1. கிறிஸ்தவர்கள் தங்களுடைய ‘உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லா கறைகளையும் நீக்கி தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளும்படி’ அது சொல்கிறது. கெட்ட பழக்கங்களை விட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்த இன்னொரு வசனம் பிலிப்பியர் 4:13. “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது” என்று அந்த வசனம் சொல்கிறது. கடைசியில், யெகோவா தேவன் என்னுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தார்; பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றைக் கடைப்பிடிக்கவும் உதவி செய்தார். அதனால் என்னுடைய வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்கத் தீர்மானித்தேன். (1 பேதுரு 4:1, 2) பிறகு 1997-ல், ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனேன்.
எனக்குக் கிடைத்த நன்மைகள்
என்னுடைய பழைய வாழ்க்கை முறையை விடாமல் இருந்திருந்தால், நான் இப்போது கண்டிப்பாக உயிரோடு இருந்திருக்க மாட்டேன். ஆனால் இப்போது, நான் உண்மையான சந்தோஷத்தை அனுபவித்து வருகிறேன். என் அன்பு மனைவி எல்வி, எனக்குக் கடவுள் கொடுத்த பரிசு என்றுதான் சொல்ல வேண்டும்! நாங்கள் இருவரும் இப்போது முழுநேர ஊழியர்களாக, மற்றவர்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்கிறோம். இதனால், நான் அதிக சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறேன். யெகோவா என்னை அவரிடம் ஈர்த்திருப்பதை நினைத்து நான் ரொம்பவே சந்தோஷப்படுகிறேன்.—யோவான் 6:44.