உபாகமம்
26 பின்பு அவர், “உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு அங்கே குடியிருக்கும்போது, 2 உங்கள் கடவுளாகிய யெகோவா தரும் தேசத்தின் முதல் விளைச்சல் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சத்தை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு, உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு அதைக் கொண்டுபோக வேண்டும்.+ 3 அந்தச் சமயத்தில் பொறுப்பில் இருக்கிற குருவானவரிடம் போய், ‘யெகோவா நமக்குத் தருவதாக நம் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ நான் வந்துவிட்டேன் என்பதை யெகோவாவின் முன்னிலையில் இன்று அறிக்கையிடுகிறேன்’ என்று சொல்ல வேண்டும்.
4 அந்தக் கூடையை உங்கள் கையிலிருந்து குருவானவர் வாங்கி, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பலிபீடத்துக்கு முன்னால் வைப்பார். 5 அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் நீங்கள், ‘அரமேயராக+ இருந்த என் மூதாதை நாடோடியாக* வாழ்ந்துவந்தார். பின்பு, கொஞ்சம் பேராக இருந்த அவருடைய குடும்பத்தாருடன்+ எகிப்துக்குப் போய்+ அன்னியனாகக் குடியிருந்தார். அதன்பின், அங்கே பலம்படைத்த மிகப் பெரிய தேசமாக ஆனார்.+ 6 எகிப்தியர்கள் எங்களை மோசமாக நடத்தினார்கள், அடக்கி ஒடுக்கினார்கள், கொத்தடிமைபோல் வேலை வாங்கினார்கள்.+ 7 அதனால், எங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவிடம் முறையிட்டோம். யெகோவா எங்கள் மன்றாட்டைக் கேட்டார். எங்களுடைய வேதனையையும் துன்பத்தையும் கொடுமையையும் பார்த்தார்.+ 8 கடைசியில், யெகோவா பயங்கரமான செயல்களையும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து,+ தன்னுடைய கைபலத்தாலும் மகா வல்லமையாலும் எங்களை எகிப்தைவிட்டு வெளியே கொண்டுவந்தார்.+ 9 அவர் எங்களை இங்கே கொண்டுவந்து, பாலும் தேனும் ஓடுகிற இந்தத் தேசத்தைக் கொடுத்தார்.+ 10 யெகோவா எனக்குத் தந்த நிலத்தின் முதல் விளைச்சலை இப்போது கொண்டுவந்திருக்கிறேன்’+ என்று சொல்ல வேண்டும்.
பின்பு, அதை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் வைத்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவை வணங்க வேண்டும். 11 உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா செய்த நன்மைகளுக்காக நீங்களும் லேவியர்களும் உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களும் சந்தோஷப்பட வேண்டும்.+
12 மூன்றாம் வருஷத்தில், அதாவது பத்திலொரு பாகத்தைச் செலுத்துகிற வருஷத்தில்,+ உங்கள் விளைச்சல் எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை எடுத்துவைக்க வேண்டும். லேவியர்களுக்கும், உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும், அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும்,* விதவைகளுக்கும் அவற்றைக் கொடுக்க வேண்டும். அவர்கள் உங்களுடைய நகரங்களில் திருப்தியாகச் சாப்பிடுவார்கள்.+ 13 பின்பு நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம், ‘நீங்கள் கட்டளை கொடுத்தபடியே, இந்தப் பரிசுத்த பங்கு முழுவதையும் என் வீட்டிலிருந்து எடுத்து லேவியர்களுக்கும், வேறு தேசத்து ஜனங்களுக்கும், அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் கொடுத்துவிட்டேன்.+ உங்கள் கட்டளைகளை நான் மீறவோ அசட்டை செய்யவோ இல்லை. 14 துக்கம் அனுசரிக்கும்போது அவற்றைச் சாப்பிடவில்லை, தீட்டாக இருக்கும்போது அவற்றைத் தொடவில்லை, இறந்தவர்களுக்காக அவற்றில் எதையும் கொடுக்கவில்லை. என் கடவுளாகிய யெகோவா சொன்னபடியே நடந்திருக்கிறேன், நீங்கள் கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். 15 அதனால், உங்கள் பரிசுத்த வீடாகிய பரலோகத்திலிருந்து உங்கள் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைப் பார்த்து அவர்களை ஆசீர்வதியுங்கள். எங்கள் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே+ நீங்கள் எங்களுக்குத் தந்த தேசமாகிய பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை+ ஆசீர்வதியுங்கள்’+ என்று சொல்ல வேண்டும்.
16 இந்த விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று உங்கள் கடவுளாகிய யெகோவா இன்று கட்டளை கொடுக்கிறார். நீங்கள் அவற்றை முழு இதயத்தோடும்+ முழு மூச்சோடும் பின்பற்ற வேண்டும். 17 நீங்கள் யெகோவாவின் வழியில் நடந்து, அவருடைய விதிமுறைகளையும்+ கட்டளைகளையும்+ நீதித்தீர்ப்புகளையும்+ கடைப்பிடித்து, அவருடைய பேச்சைக் கேட்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். அதனால், அவர் உங்கள் கடவுளாக இருப்பாரென்று இன்றைக்கு உங்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். 18 நீங்களும், யெகோவா வாக்குறுதி தந்தபடியே அவருடைய ஜனங்களாகவும் விசேஷ சொத்தாகவும் இருப்பீர்கள்+ என்றும், அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவீர்கள் என்றும் இன்று வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். 19 நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான ஜனங்களாக இருந்தால்,+ அவர் சொன்னபடியே, அவர் உருவாக்கிய மற்ற எல்லா தேசத்தாருக்கும் மேலாக உங்களை உயர்த்தி+ பேர்புகழும் மகிமையும் தருவார்” என்றார்.