ஏரோது
யூதர்களை ஆட்சி செய்த ஓர் அரச பரம்பரையின் குடும்பப் பெயர். இந்த ஆட்சியாளர்கள் ரோமர்களால் நியமிக்கப்பட்டார்கள். மகா ஏரோதுதான் அப்படி முதன்முதலில் நியமிக்கப்பட்டவன். எருசலேம் ஆலயத்தைத் திரும்பக் கட்டியவனும், இயேசுவைத் தீர்த்துக்கட்டுவதற்காகப் பிள்ளைகளைக் கொல்லும்படி கட்டளையிட்டவனும் இவன்தான். (மத் 2:16; லூ 1:5) இவனுடைய ஆட்சிக்குட்பட்ட சில பகுதிகளை ஆளுவதற்கு, இவனுடைய மகன்களான ஏரோது அர்கெலாயுவும் ஏரோது அந்திப்பாவும் நியமிக்கப்பட்டார்கள். (மத் 2:22) கால்பங்கு தேசத்தை ஆட்சி செய்த ஏரோது அந்திப்பா, “ராஜா” என்று அழைக்கப்பட்டான். இவன், இயேசு ஊழியம் செய்த மூன்றரை வருஷ காலப்பகுதி முழுவதிலும், அப்போஸ்தலர் 12-ஆம் அதிகாரத்திலுள்ள சம்பவங்கள் நடந்த காலப்பகுதி வரையிலும் ஆட்சி செய்தான். (மாற் 6:14-17; லூ 3:1, 19, 20; 13:31, 32; 23:6-15; அப் 4:28; 13:1) அதற்குப் பின்பு, மகா ஏரோதுவின் பேரனான முதலாம் ஏரோது அகிரிப்பா, ஆட்சிக்கு வந்த கொஞ்சக் காலத்திலேயே தேவதூதரால் கொல்லப்பட்டான். (அப் 12:1-6, 18-23) பிறகு, இவனுடைய மகனான இரண்டாம் ஏரோது அகிரிப்பா ராஜாவானான்; யூதர்கள் ரோமர்களுக்கு எதிராகக் கலகம் செய்த காலம்வரை இவன் ஆட்சி செய்தான்.—அப் 23:35; 25:13, 22-27; 26:1, 2, 19-32.