குறுமை வடிவம்
இது பெயர்ச்சொல்லின் ஒரு வடிவம். சின்னதாக இருப்பதைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, “மீன்கள்,” “படகு” ஆகியவற்றுக்கான கிரேக்க வார்த்தைகள் குறுமை வடிவத்தில் இருக்கும்போது, ‘சிறிய மீன்கள்,’ ‘சிறிய படகு’ என்று மொழிபெயர்க்கப்படுகின்றன. (மத் 15:34; மாற் 3:9) குறுமை வடிவம் அளவை மட்டும் குறிக்காமல், இளமை, பாசம், நட்பு ஆகியவற்றையும், சிலசமயங்களில் வெறுப்பையும்கூட குறிக்கிறது.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், பாசத்தையும் நட்பையும் காட்டுவதற்காகக் குறுமை வடிவங்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, மனத்தாழ்மையுள்ள தன் சீஷர்களை இயேசு ‘ஆட்டுக்குட்டிகள்’ என்று அழைத்தார். (யோவா 21:15-17) அதேபோல், சக கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் யோவான் “சின்னப் பிள்ளைகளே” என்று அழைத்தார்.—1யோ 2:1, 12, 28; 3:7, 18; 4:4; 5:21.