அதிகாரம் 9
உலக அழிவு நெருங்கிவிட்டதா?
1. எதிர்காலத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள என்ன வழி இருக்கிறது?
நீங்கள் எப்போதாவது செய்திகளைப் பார்த்துவிட்டு, ‘உலகம் இப்படியே போனால் அவ்வளவுதான்!’ என்று யோசித்திருக்கிறீர்களா? உலகத்தில் எங்கு பார்த்தாலும் சோக சம்பவங்களும் கொடூர சம்பவங்களும் நடப்பதைப் பார்க்கும்போது, சீக்கிரத்தில் உலகம் அழிந்துவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். உண்மையிலேயே உலகம் அழிந்துவிடுமா? எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று தெரிந்துகொள்ள வழி இருக்கிறதா? இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தைப் பற்றி மனிதர்களால் சொல்ல முடியாது, யெகோவா தேவனால் மட்டும்தான் சொல்ல முடியும். நம்முடைய எதிர்காலத்தைப் பற்றியும் இந்தப் பூமியின் எதிர்காலத்தைப் பற்றியும் அவர் பைபிளில் சொல்லியிருக்கிறார்.—ஏசாயா 46:10; யாக்கோபு 4:14.
2, 3. இயேசுவின் சீஷர்கள் எதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார்கள்? இயேசு அவர்களுக்கு என்ன பதில் சொன்னார்?
2 உலகம் அழியும் என்று பைபிள் சொல்வது உண்மைதான். ஆனால் இந்தப் பூமி, அதாவது நாம் வாழும் இந்தக் கிரகம், அழியும் என்று அது சொல்வதில்லை; இந்த உலகத்தில் நடக்கிற அக்கிரமம் முடிவுக்கு வரும் என்றுதான் அது சொல்கிறது. கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை ஆட்சி செய்யும் என்று இயேசு மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (லூக்கா 4:43) கடவுளுடைய அரசாங்கம் எப்போது வருமென்று தெரிந்துகொள்ள இயேசுவின் சீஷர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அதனால் அவரிடம், “இதெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். (மத்தேயு 24:3) இயேசு அவர்களிடம் எந்தத் தேதியையும் சொல்லவில்லை. ஆனால், இந்த உலகத்தின் முடிவுக்கு முன்பு என்ன நடக்குமென்று சொன்னார். அவர் சொன்னதெல்லாம் இப்போது நடந்துவருகின்றன.
3 அதற்கான அத்தாட்சிகளை இந்த அதிகாரத்தில் பார்க்கலாம். முதலில், பரலோகத்தில் நடந்த ஒரு போரைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். அப்போதுதான், இந்தப் பூமியில் நிலைமை ஏன் படுமோசமாக இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
பரலோகத்தில் நடந்த போர்
4, 5. (அ) இயேசு ராஜாவான பிறகு பரலோகத்தில் என்ன நடந்தது? (ஆ) சாத்தான் பூமிக்குத் தள்ளப்பட்ட பிறகு நிலைமை எப்படி இருக்கும் என்று வெளிப்படுத்துதல் 12:12 சொல்கிறது?
4 அதிகாரம் 8-ல் நாம் பார்த்தபடி, 1914-ல் இயேசு பரலோகத்தில் ராஜாவானார். (தானியேல் 7:13, 14) அதன் பிறகு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துதல் புத்தகம் இப்படி விவரிக்கிறது: “பரலோகத்தில் போர் ஆரம்பித்தது. மிகாவேலும் [அதாவது, இயேசுவும்] அவருடைய தூதர்களும் ராட்சதப் பாம்போடு [அதாவது, சாத்தானோடு] போர் செய்தார்கள். அந்த ராட்சதப் பாம்பும் அதனுடைய தூதர்களும் எதிர்த்துப் போர் செய்தார்கள்.”a அந்தப் போரில் சாத்தானும் அவனோடு சேர்ந்த கெட்ட தூதர்களும் தோற்றுப்போய், இந்தப் பூமிக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போது, மற்ற தேவதூதர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! ஆனால், பூமியில் இருக்கும் மக்களுக்கு “ஐயோ, கேடு! ஏனென்றால், பிசாசு தனக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று தெரிந்து பயங்கர கோபத்தோடு வந்திருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 12:7, 9, 12.
5 சாத்தான் இந்தப் பூமியில் பயங்கரமான பிரச்சினைகளை உண்டாக்கி வருகிறான். கொஞ்சக் காலத்தில் கடவுள் அவனை அழித்துவிடுவார் என்று அவனுக்குத் தெரியும்; அதனால் அவன் மிகவும் ஆவேசத்தோடு இருக்கிறான். கடைசி நாட்களில் என்ன நடக்குமென்று இயேசு சொன்னதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.—பின்குறிப்பு 24-ஐப் பாருங்கள்.
கடைசி நாட்கள்
6, 7. நம்முடைய காலத்தில் போரினாலும் பஞ்சத்தினாலும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் என்ன?
6 போர். “ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:7) மனித சரித்திரத்திலேயே நம் காலத்தில்தான் அதிகமான ஆட்கள் போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1914-ம் வருஷத்திலிருந்து போர்களால் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இறந்துபோயிருக்கிறார்கள் என்று உலக சம்பவங்களை ஆராய்ச்சி செய்யும் ஒரு அமைப்பு சொல்கிறது. 100 வருஷங்களில் மட்டும் (அதாவது, 1900 முதல் 2000 வரை) போர்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதற்கு முன்பு 1,900 வருஷங்களாக நடந்த போர்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம். போரினால் எத்தனை கோடி மக்களுக்கு வேதனையும் வலியும் உண்டாகியிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.
7 பஞ்சம். ‘பல இடங்களில் பஞ்சங்கள் ஏற்படும்’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:7) இதுவரை இல்லாத அளவுக்கு நம்முடைய காலத்தில் உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும், நிறைய பேர் போதுமான உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஏன்? ஏனென்றால், அவர்களிடம் போதுமான பணம் இல்லை. அதனால், தேவையான உணவை வாங்கவோ தாங்களாகவே பயிர் செய்து சாப்பிடுவதற்கு ஒரு நிலத்தை வாங்கவோ அவர்களால் முடிவதில்லை. நூறு கோடிக்கும் அதிகமானவர்கள் மிகக் குறைவான பணத்தை வைத்துதான் தினமும் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். உணவுப் பற்றாக்குறையினால் ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான பிள்ளைகள் இறந்துபோவதாக உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.
8, 9. நிலநடுக்கங்களையும் நோய்களையும் பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறியிருக்கின்றன?
8 நிலநடுக்கங்கள். “பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும்” என்று இயேசு தீர்க்கதரிசனம் சொன்னார். (லூக்கா 21:11) ஒவ்வொரு வருஷமும் பல இடங்களில் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1900-த்திலிருந்து, நிலநடுக்கங்களால் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கிறார்கள். முன்பைவிட இப்போது தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்திருப்பதால் நிலநடுக்கங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடிந்தாலும், நிறைய பேர் நிலநடுக்கங்களால் இன்னும் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
9 நோய்கள். ‘கொள்ளைநோய்கள் உண்டாகும்’ என்று இயேசு சொன்னார். கொடிய நோய்கள் வேகமாகப் பரவி நிறைய பேருடைய உயிரைப் பறிக்கும் என்று அவர் அர்த்தப்படுத்தினார். (லூக்கா 21:11) டாக்டர்கள் எத்தனையோ நோய்களைக் குணப்படுத்தினாலும், அவர்களால் குணப்படுத்த முடியாத நோய்களும் இருக்கின்றன. சொல்லப்போனால், ஒவ்வொரு வருஷமும் காசநோய் (டிபி), மலேரியா, காலரா போன்ற நோய்களால் கோடிக்கணக்கான மக்கள் இறந்துபோவதாக ஒரு அறிக்கை சொல்கிறது. அதுமட்டுமல்ல, கடந்த 40 வருஷங்களில் 30 புதிய நோய்களை டாக்டர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்; அவற்றில் சில நோய்களுக்கு மருந்தே இல்லை.
கடைசி நாட்களில் மக்களின் சுபாவம்
10. இன்று 2 தீமோத்தேயு 3:1-5 எப்படி நிறைவேறிவருகிறது?
10 “கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” என்று 2 தீமோத்தேயு 3:1-5 சொல்கிறது. கடைசி நாட்களில் இப்படிப்பட்ட ஆட்கள்தான் அதிகமாக இருப்பார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் விவரித்தார்:
சுயநலக்காரர்கள்
பண ஆசைபிடித்தவர்கள்
அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்கள்
உண்மையில்லாதவர்கள்
பந்தபாசம் இல்லாதவர்கள்
சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்கள்
கொடூரமானவர்கள்
கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்கள்
பக்திமான்கள்போல் காட்டிக்கொண்டு, கடவுளுக்குப் பிடிக்காததைச் செய்கிறவர்கள்
11. பொல்லாதவர்களுக்கு என்ன நடக்குமென்று சங்கீதம் 92:7 சொல்கிறது?
11 நீங்கள் வாழும் பகுதியில் நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்களா? உலகம் முழுவதும் நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால், கடவுள் சீக்கிரத்தில் நடவடிக்கை எடுப்பார். ‘பொல்லாதவர்கள் களைகளை போல முளைக்கும்போதும், அக்கிரமக்காரர்கள் எல்லாரும் செழிக்கும்போதும், அவர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள் என்பது உறுதி’ என்று அவர் பைபிளில் வாக்குக் கொடுத்திருக்கிறார்.—சங்கீதம் 92:7.
கடைசி நாட்களில் நடக்கும் நல்ல விஷயங்கள்
12, 13. கடைசி நாட்களில் யெகோவா நமக்கு என்ன கற்றுக்கொடுத்திருக்கிறார்?
12 கடைசி நாட்களில் இந்த உலகத்தில் பயங்கரமான பிரச்சினைகளும் வேதனைகளும் இருக்கும் என்று பைபிள் சொன்னது. அதேசமயத்தில், நல்ல விஷயங்கள் நடக்கும் என்றும் அது சொன்னது.
13 பைபிளைப் புரிந்துகொள்ளுதல். கடைசி நாட்களைப் பற்றி எழுதும்போது, ‘உண்மையான அறிவு பெருகும்’ என்று தானியேல் தீர்க்கதரிசி குறிப்பிட்டார். (தானியேல் 12:4) பைபிளை எப்போதும் இல்லாத அளவுக்குத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் சக்தியைக் கடவுள் தன்னுடைய மக்களுக்குக் கொடுப்பார் என்று அவர் அர்த்தப்படுத்தினார். முக்கியமாக 1914-ம் வருஷத்திலிருந்து யெகோவா இதைத்தான் செய்திருக்கிறார். உதாரணத்துக்கு, அவருடைய பெயரின் முக்கியத்துவத்தைப் பற்றியும், பூமியை அவர் படைத்ததற்கான காரணத்தைப் பற்றியும், மீட்புவிலையைப் பற்றியும், இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும், உயிர்த்தெழுதலைப் பற்றியும் அவர் கற்றுக்கொடுத்திருக்கிறார். நம்முடைய எல்லா பிரச்சினைகளையும் கடவுளுடைய அரசாங்கத்தால்தான் தீர்த்துவைக்க முடியும் என்பதை நாம் தெரிந்துகொண்டோம். சந்தோஷமாக இருப்பது எப்படி, கடவுளுக்குப் பிரியமாக வாழ்வது எப்படி என்றெல்லாம் கற்றுக்கொண்டோம். ஆனால், இதுபோன்ற விஷயங்களைக் கற்றுக்கொண்ட பிறகு கடவுளுடைய ஊழியர்கள் என்ன செய்கிறார்கள்? இன்னொரு தீர்க்கதரிசனம் இதற்குப் பதில் தருகிறது.—பின்குறிப்பு 21-ஐயும் 25-ஐயும் பாருங்கள்.
14. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை யார் பிரசங்கிக்கிறார்கள், எங்கெல்லாம் பிரசங்கிக்கிறார்கள்?
14 உலகம் முழுவதும் நல்ல செய்தி பிரசங்கிக்கப்படுதல். கடைசி நாட்களில், ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும்’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:3, 14) இப்போது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை 230-க்கும் அதிகமான நாடுகளில், 700-க்கும் அதிகமான மொழிகளில் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கிறார்கள். அதோடு, ‘எல்லா தேசங்களையும் இனங்களையும்’ சேர்ந்த மக்களுக்கு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் அது மனிதர்களுக்குச் செய்யப்போகிற நன்மைகளைப் பற்றியும் சொல்லித் தருகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9) அதற்காக அவர்கள் பணம் வாங்குவதில்லை. இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தின்படியே நிறைய பேர் அவர்களை வெறுத்தாலும் துன்புறுத்தினாலும், யாராலுமே அவர்களுடைய பிரசங்க வேலையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.—லூக்கா 21:17.
நீங்கள் என்ன செய்வீர்கள்?
15. (அ) நாம் கடைசி நாட்களில்தான் வாழ்கிறோம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஏன்? (ஆ) யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கும் கீழ்ப்படியாதவர்களுக்கும் என்ன நடக்கும்?
15 நாம் கடைசி நாட்களில்தான் வாழ்கிறோம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? கடைசி நாட்களைப் பற்றி பைபிள் சொல்லியிருக்கும் எத்தனையோ தீர்க்கதரிசனங்கள் இன்று நிறைவேறிவருகின்றன. சீக்கிரத்தில், நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை யெகோவா நிறுத்திவிடுவார்; அப்போது, “முடிவு” வரும். (மத்தேயு 24:14) இந்த முடிவு அர்மகெதோனைக் குறிக்கிறது. அப்போது, கடவுள் எல்லா அக்கிரமத்துக்கும் முடிவுகட்டுவார். தனக்கும் தன் மகனுக்கும் கீழ்ப்படியாத எல்லாரையும் அழித்துவிடுவார். இயேசுவையும் வல்லமையுள்ள தேவதூதர்களையும் பயன்படுத்தி அதைச் செய்வார். (2 தெசலோனிக்கேயர் 1:6-9) அதன் பிறகு, சாத்தானாலும் அவனுடைய பேய்களாலும் மக்களை ஏமாற்ற முடியாது. கடவுளுக்கும் அவருடைய அரசாங்கத்துக்கும் கீழ்ப்படிந்து நடக்க விரும்புகிற எல்லாருமே, கடவுளுடைய ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேறுவதைக் கண்கூடாகப் பார்ப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 20:1-3; 21:3-5.
16. முடிவு நெருங்கிவிட்டதால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
16 சாத்தான் ஆட்சி செய்யும் இந்த உலகம் சீக்கிரத்தில் முடிவுக்கு வரும். அதனால், ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று நம்மையே கேட்டுக்கொள்வது ரொம்ப முக்கியம். நீங்கள் பைபிளை நன்றாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். அதனால், பைபிள் படிப்புக்கு நீங்கள் முக்கியத்துவம் தர வேண்டும். (யோவான் 17:3) பைபிளைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதற்காக யெகோவாவின் சாட்சிகள் வாராவாரம் கூட்டங்களை நடத்துகிறார்கள். அந்தக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். (எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.) நீங்கள் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டால், அதைச் செய்ய பயப்படாதீர்கள். நீங்கள் மாற்றங்களைச் செய்யும்போது, யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் நட்பு பலமாகும்.—யாக்கோபு 4:8.
17. முடிவு வரும்போது நிறைய பேருக்கு ஏன் அதிர்ச்சியாக இருக்கும்?
17 “இரவில் திருடன் வருவதுபோல்,” அதாவது யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பொல்லாதவர்களுக்கு அழிவு வருமென்று அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். (1 தெசலோனிக்கேயர் 5:2) நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்கான அத்தாட்சிகளை நிறைய பேர் அசட்டை செய்வார்கள் என்று இயேசு சொன்னார். “நோவாவின் நாட்களில் நடந்தது போலவே மனிதகுமாரனின் பிரசன்னத்தின்போதும் நடக்கும். எப்படியென்றால், பெருவெள்ளம் வருவதற்கு முந்தின காலத்தில், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். நோவா பேழைக்குள் நுழைந்த நாள்வரை அப்படித்தான் இருந்தார்கள். பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை; மனிதகுமாரனுடைய பிரசன்னத்தின்போதும் அப்படியே நடக்கும்” என்று அவர் சொன்னார்.—மத்தேயு 24:37-39.
18. இயேசு என்ன எச்சரிக்கையைக் கொடுத்தார்?
18 “பெருந்தீனியாலும் குடிவெறியாலும் வாழ்க்கைக் கவலைகளாலும்” நம் கவனம் சிதறிவிடக் கூடாதென்று இயேசு எச்சரித்தார். ஒரு “கண்ணியைப் போல்” திடீரென முடிவு வரும் என்று அவர் சொன்னார். “பூமி முழுவதும் குடியிருக்கிற எல்லார்மேலும் அது வரும்” என்றும் அவர் சொன்னார். பிறகு, “விழித்திருந்து எப்போதும் மன்றாடுங்கள் [அதாவது, மிகவும் உருக்கமாக ஜெபம் செய்யுங்கள்]. அப்படிச் செய்தால்தான், நடக்கப்போகிற இவை எல்லாவற்றிலிருந்தும் உங்களால் தப்பிக்க முடியும், மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கவும் முடியும்” என்று சொன்னார். (லூக்கா 21:34-36) இயேசு கொடுத்த எச்சரிக்கையைக் கேட்டு நடப்பது ஏன் ரொம்ப முக்கியம்? ஏனென்றால், சாத்தானுடைய பொல்லாத உலகம் ரொம்ப சீக்கிரத்தில் அழிக்கப்படும். யெகோவாவும் இயேசுவும் யாரையெல்லாம் அங்கீகரிக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் அந்த அழிவில் தப்பித்து, புதிய உலகத்தில் என்றென்றும் வாழ்வார்கள்.—யோவான் 3:16; 2 பேதுரு 3:13.
a மிகாவேல் என்பது இயேசு கிறிஸ்துவின் இன்னொரு பெயர். கூடுதலான தகவலுக்குப் பின்குறிப்பு 23-ஐப் பாருங்கள்.