அதிகாரம் 118
யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம்
மத்தேயு 26:31-35 மாற்கு 14:27-31 லூக்கா 22:24-38 யோவான் 13:31-38
பதவி பற்றி இயேசு ஆலோசனை கொடுக்கிறார்
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவார்
அன்புதான் இயேசுவின் சீஷர்களுக்கு அடையாளம்
இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களோடு இருந்த கடைசி இரவில், மனத்தாழ்மையாகச் சேவை செய்வதைப் பற்றிய அருமையான பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். இது ஏன் தேவையாக இருந்தது? ஏனென்றால், அவர்களுக்கு ஒரு பலவீனம் இருக்கிறது. அவர்களுக்குக் கடவுள்மேல் அதிகமான அன்பு இருப்பது உண்மைதான். ஆனாலும், தங்களில் யார் உயர்ந்தவர் என்ற எண்ணம் இன்னமும் அவர்கள் மனதுக்குள் இருக்கிறது. (மாற்கு 9:33, 34; 10:35-37) அவர்களுடைய பலவீனம் இப்போது மறுபடியும் தலைகாட்டுகிறது.
“தங்களில் யார் மிக உயர்ந்தவர் என்பதைப் பற்றி அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம்” ஏற்படுகிறது. (லூக்கா 22:24) இதைப் பார்த்து இயேசுவுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. அவர் இப்போது என்ன செய்வார்?
அவர்களுடைய எண்ணம் சரியில்லை என்பதற்காகவும், அவர்கள் நடந்துகொண்டது சரியில்லை என்பதற்காகவும் இயேசு அவர்களைத் திட்டவில்லை. அதற்குப் பதிலாக, பொறுமையாகப் பேசி அவர்களுக்குப் புரிய வைக்கிறார். இயேசு அவர்களிடம், “மற்ற தேசத்து ராஜாக்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள், மக்கள்மேல் அதிகாரம் உள்ளவர்கள் ‘மக்கள் தொண்டர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். நீங்களோ அப்படி இருக்கக் கூடாது. . . . யார் உயர்ந்தவர்? சாப்பிட உட்கார்ந்திருப்பவரா அல்லது பணிவிடை செய்பவரா?” என்று கேட்கிறார். பிறகு, தான் எப்போதும் அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்ததை ஞாபகப்படுத்துகிறார். “நான் உங்கள் மத்தியில் பணிவிடை செய்பவனாக இருக்கிறேன்” என்று சொல்கிறார்.—லூக்கா 22:25-27.
அப்போஸ்தலர்களிடம் சில குறைகள் இருந்தாலும், கஷ்டமான சூழ்நிலைகளில் அவர்கள் இயேசுவுடன் நிலைத்திருந்தார்கள். அதனால், “ஒரு அரசாங்கத்துக்காக என் தகப்பன் என்னோடு ஒப்பந்தம் செய்திருப்பதுபோல் நானும் உங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறேன்” என்று சொல்கிறார். (லூக்கா 22:29) அவர்கள் இயேசுவை உண்மையோடு பின்பற்றுகிறார்கள். அவர்களோடு ஒரு ஒப்பந்தத்தைச் செய்வதன்மூலம், அவர்கள் பரலோக அரசாங்கத்தில் தன்னுடன் ஆட்சி செய்வார்கள் என்ற உறுதியை இயேசு அவர்களுக்குக் கொடுக்கிறார்.
அப்போஸ்தலர்களுக்கு இந்த அருமையான நம்பிக்கை இருந்தாலும், இப்போது அவர்கள் பாவத்தன்மையுள்ள மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். “கோதுமையைப் புடைத்தெடுப்பதுபோல் உங்கள் எல்லாரையும் புடைத்தெடுக்க வேண்டும் என்று சாத்தான் கேட்டிருக்கிறான்” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 22:31) அதோடு, “இன்று ராத்திரி எனக்கு நடக்கப்போவதைப் பார்த்து நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள்; ஏனென்றால், ‘நான் மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையில் இருக்கிற ஆடுகள் சிதறி ஓடும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” என அவர்களை எச்சரிக்கிறார்.—மத்தேயு 26:31; சகரியா 13:7.
அப்போது பேதுரு, “உங்களுக்கு நடக்கப்போவதைப் பார்த்து மற்ற எல்லாரும் உங்களைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஓடிப்போகவே மாட்டேன்!” என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார். (மத்தேயு 26:33) அன்று ராத்திரி, சேவல் இரண்டு தடவை கூவுவதற்கு முன்பு, பேதுரு தன்னைத் தெரியாதென்று சொல்லிவிடுவார் என்று பேதுருவிடம் இயேசு சொல்கிறார். ஆனாலும், “நீ விசுவாசத்தை விட்டுவிடாமல் இருக்க வேண்டுமென்று உனக்காக மன்றாடியிருக்கிறேன். நீ மனம் திருந்தியதும் உன் சகோதரர்களைப் பலப்படுத்து” என்று சொல்கிறார். (லூக்கா 22:32) அப்போதும் பேதுரு, “நான் உங்களோடு சாக வேண்டியிருந்தாலும் உங்களைத் தெரியாது என்று சொல்லவே மாட்டேன்” என்று அடித்துச் சொல்கிறார். (மத்தேயு 26:35) மற்ற எல்லா சீஷர்களும் அதையே சொல்கிறார்கள்.
அப்போது இயேசு, “இன்னும் கொஞ்ச நேரம்தான் நான் உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனாலும், ‘நான் போகிற இடத்துக்கு உங்களால் வர முடியாது’ என்று நான் யூதர்களிடம் சொன்னதையே இப்போது உங்களிடமும் சொல்கிறேன்” என்கிறார். பிறகு, “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று சொல்கிறார்.—யோவான் 13:33-35.
அவர்களோடு இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கப்போவதாக இயேசு சொன்னதைக் கேட்டதும், பேதுரு அவரிடம், “எஜமானே, நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்கிறார். அதற்கு இயேசு, “நான் போகிற இடத்துக்கு என் பின்னால் வர இப்போது உன்னால் முடியாது, ஆனால் பிற்பாடு வருவாய்” என்று சொல்கிறார். பேதுருவுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. அதனால், “எஜமானே, இப்போது உங்கள் பின்னால் வர என்னால் ஏன் முடியாது? உங்களுக்காக என் உயிரையே கொடுப்பேன்” என்று சொல்கிறார்.—யோவான் 13:36, 37.
கலிலேயாவில் பிரசங்கிப்பதற்காக, உணவுப் பையோ பணப் பையோ இல்லாமல் அவர்களை அனுப்பியதை இயேசு இப்போது ஞாபகப்படுத்துகிறார். (மத்தேயு 10:5, 9, 10) பிறகு அவர்களிடம், “உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?” என்று கேட்கிறார். அவர்கள், “இல்லை!” என்று சொல்கிறார்கள். ஆனால், இனிவரும் நாட்களில் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? இயேசு அவர்களிடம், “இப்போதோ, பணப் பையை வைத்திருப்பவன் அதைக் கொண்டுபோகட்டும், அதுபோல உணவுப் பையையும் கொண்டுபோகட்டும். வாள் இல்லாதவன் தன்னுடைய மேலங்கியை விற்று ஒரு வாளை வாங்கிக்கொள்ளட்டும். ‘அக்கிரமக்காரர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார்’ என்று எழுதப்பட்டிருக்கிற வேதவசனம் என்னில் நிறைவேற வேண்டும் என்பதற்காக இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். என்னைப் பற்றி எழுதப்பட்டதெல்லாம் நிறைவேறி வருகிறது” என்று சொல்கிறார்.—லூக்கா 22:35-37.
கெட்டவர்கள், அதாவது அக்கிரமக்காரர்களுக்குப் பக்கத்தில், தான் ஒரு மரக் கம்பத்தில் அறையப்படப்போவதைப் பற்றி இயேசு இங்கே சொல்கிறார். அதற்குப் பிறகு, அவருடைய சீஷர்கள் கடுமையான துன்புறுத்தலைச் சந்திப்பார்கள். தாங்கள் தயாராக இருப்பதாக அப்போஸ்தலர்கள் நினைக்கிறார்கள். அதனால் அவர்கள், “எஜமானே, இதோ! இங்கே இரண்டு வாள்கள் இருக்கின்றன” என்று சொல்கிறார்கள். அதற்கு அவர், “இது போதும்” என்று சொல்கிறார். (லூக்கா 22:38) அவர்களிடம் வாள்கள் இருப்பதால், இயேசு அதை வைத்து சீக்கிரத்தில் இன்னொரு முக்கியமான பாடத்தைக் கற்பிப்பார்.