அதிகாரம் 37
நான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?
சரியா தவறா என்று டிக் போடுங்கள்:
யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் ஞானஸ்நானம் எடுப்பது அவசியம்.
❏ சரி
❏ தவறு
பாவம் செய்யாமல் இருப்பதற்குத்தான் முக்கியமாக ஞானஸ்நானம் எடுக்கிறோம்.
❏ சரி
❏ தவறு
ஞானஸ்நானம் மீட்புக்கு வழிநடத்தும்.
❏ சரி
❏ தவறு
நீங்கள் ஞானஸ்நானம் எடுக்காவிட்டால், என்ன செய்தாலும் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியதில்லை.
❏ சரி
❏ தவறு
உங்கள் நண்பர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் என்றால், நீங்களும் அதற்குத் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
❏ சரி
❏ தவறு
நீங்கள் கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ்கிறீர்களா? கடவுளுடைய நண்பராவதற்கு முயற்சி செய்கிறீர்களா? உங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுகிறீர்களா? அப்படியென்றால், ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி நீங்கள் யோசிப்பது இயல்புதான். ஆனால், அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதைத் தெரிந்துகொள்வதற்கு, மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் சரியா, தவறா என்று பார்க்கலாம்.
● யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் ஞானஸ்நானம் எடுப்பது அவசியம்.
சரி. ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று இயேசு தன்னுடைய சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தார். (மத்தேயு 28:19, 20) சொல்லப்போனால், இயேசுவே ஞானஸ்நானம் எடுத்தார். இயேசுவின் சீஷராக ஆவதற்கு நீங்களும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். ஆனால், அதற்கு ஏற்ற மனப் பக்குவம் உங்களுக்கு இருக்க வேண்டும்; ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்ற உண்மையான ஆசையும் உங்களுக்கு இருக்க வேண்டும்.
● பாவம் செய்யாமல் இருப்பதற்குத்தான் முக்கியமாக ஞானஸ்நானம் எடுக்கிறோம்.
தவறு. யெகோவாவுக்கு நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறோம் என்பதை எல்லாருக்கும் காட்டுவதற்குத்தான் ஞானஸ்நானம் எடுக்கிறோம். இது ஏதோவொரு தொழில் ஒப்பந்தம் போன்றது கிடையாது. தொழில் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, நாம் ஆசைப்படும் விஷயத்தைச் செய்ய நமக்கு அனுமதி இருக்காது, வேறு வழியில்லாமல்தான் அதற்குக் கட்டுப்பட்டு நடப்போம். ஆனால், யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பது அப்படியல்ல. யெகோவா கொடுத்திருக்கும் சட்டதிட்டங்களின்படி வாழ உண்மையிலேயே நாம் ஆசைப்படுவதால்தான் நம்முடைய வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கிறோம்.
● ஞானஸ்நானம் மீட்புக்கு வழிநடத்தும்.
சரி. ஞானஸ்நானம், மீட்புக்கு வழிநடத்துகிற முக்கியமான ஒரு படி என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 3:21) ஆனால், ஞானஸ்நானம் என்பது, பாதுகாப்புக்காக முன்கூட்டியே நாம் வாங்கி வைத்திருக்கும் காப்பீட்டுத் திட்டம் போன்றது கிடையாது. யெகோவாவை நேசிப்பதாலும், முழு இதயத்தோடு அவருக்கு என்றென்றும் சேவை செய்ய விரும்புவதாலும்தான் நாம் ஞானஸ்நானம் எடுக்கிறோம்.—மாற்கு 12:29, 30.
● நீங்கள் ஞானஸ்நானம் எடுக்காவிட்டால், என்ன செய்தாலும் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியதில்லை.
தவறு. யாக்கோபு 4:17 சொல்வது போல், “சரியானதைச் செய்ய ஒருவனுக்குத் தெரிந்திருந்தும் அதை அவன் செய்யாமல் இருந்தால், அது பாவம்”—அவன் ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும் சரி, எடுக்கவில்லை என்றாலும் சரி! அதனால், சரியானது எது என்று உங்களுக்குத் தெரிந்திருந்தால்... வாழ்க்கையில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கிற அளவுக்கு உங்களுக்கு மனப் பக்குவம் இருந்தால்... இதைப் பற்றி உங்கள் அப்பா அம்மாவிடமோ அனுபவமுள்ள ஒரு கிறிஸ்தவரிடமோ பேசுவது நல்லது. அப்படிச் செய்யும்போது, ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் எப்படித் தயாராகலாம் என்று தெரிந்துகொள்ள முடியும்.
● உங்கள் நண்பர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் என்றால், நீங்களும் அதற்குத் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
தவறு. ஞானஸ்நானம் என்பது நீங்களே மனப்பூர்வமாக எடுக்கும் முடிவாக இருக்க வேண்டும். (சங்கீதம் 110:3) ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறீர்களா? இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா? இந்த இரண்டு கேள்விகளுக்குமே ஆம் என்று நீங்கள் உறுதியாகப் பதில் சொல்லும்போதுதான் ஞானஸ்நானத்துக்குத் தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.—பிரசங்கி 5:4, 5.
உங்கள் வாழ்க்கையையே மாற்றும் ஒரு தீர்மானம்
ஞானஸ்நானம் உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அது நிறைய ஆசீர்வாதங்களை அள்ளித்தரும். அதேசமயத்தில், அது ஒரு பெரிய பொறுப்பு. ஏனென்றால், உங்களை யெகோவாவுக்கு அர்ப்பணித்தபோது நீங்கள் அவருக்கு கொடுத்த வாக்கை வாழ்நாளெல்லாம் காப்பாற்ற வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை எடுக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்படியென்றால், அதை நினைத்து நீங்கள் சந்தோஷப்படலாம்! ஏனென்றால், நீங்கள் முழு மனதோடு யெகோவாவுக்கு சேவை செய்வீர்கள், அவருக்காக வாழ்வதன் மூலம் அவர்மேல் அன்பு காட்டுவீர்கள். இது உண்மையிலேயே ஒரு பெரிய பாக்கியம்!—மத்தேயு 22:36, 37.
முக்கிய வசனம்
“உங்களுடைய உடலை உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும் கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள். சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி அவருக்குப் பரிசுத்த சேவை செய்யுங்கள்.”—ரோமர் 12:1.
டிப்ஸ்
ஆன்மீக முன்னேற்றம் செய்ய சபையில் யாரிடம் நீங்கள் உதவி கேட்கலாம் என்று யோசியுங்கள். அதற்கு உங்கள் அப்பா அம்மாவின் உதவியை எடுத்துக்கொள்ளுங்கள்.—அப்போஸ்தலர் 16:1-3.
உங்களுக்குத் தெரியுமா . . .?
ஞானஸ்நானம், நீங்கள் மீட்பு பெறுவதற்குத் தேவையான ‘அடையாளத்தின்’ முக்கியப் பாகமாக இருக்கிறது.—எசேக்கியேல் 9:4-6.
திட்டமிடுங்கள்.. செயல்படுங்கள்!
ஞானஸ்நானத்துக்குத் தயாராவதற்காக, பைபிளில் இருக்கும் இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் இன்னும் நிறைய தெரிந்துகொள்ளப்போகிறேன்: ...
ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி என் அப்பா அம்மாவிடம் இதையெல்லாம் கேட்கப்போகிறேன்: ...
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
● ஞானஸ்நானம் எடுப்பது ஏன் ரொம்ப முக்கியமான ஒரு தீர்மானம்?
● சில இளைஞர்கள் ஏன் அவசரப்பட்டு ஞானஸ்நானம் எடுத்துவிடுகிறார்கள்?
● சில இளைஞர்கள் ஏன் அர்ப்பணம் செய்வதையும் ஞானஸ்நானம் எடுப்பதையும் தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறார்கள்?
[சிறு குறிப்பு]
நான் ஞானஸ்நானம் எடுத்திருக்குறத மனசுல வெச்சிருக்குறதுனால நல்ல தீர்மானங்கள எடுக்க முடியுது, கெட்ட வழியில போய் பிரச்சனைகள்ல சிக்கிக்காம இருக்கவும் முடியுது.’’—ஹாலி
[பெட்டி/படம்]
ஞானஸ்நானம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஞானஸ்நானம் எதற்கு அடையாளமாக இருக்கிறது? தண்ணீரில் அமிழ்த்தி எடுக்கப்படுவது, நீங்கள் உங்களுக்காக வாழ்ந்த வாழ்க்கையின்படி இறந்து, யெகோவாவின் விருப்பத்தின்படி செய்யவே மறுபடியும் உயிரோடு வருவதற்கு அடையாளமாக இருக்கிறது.
யெகோவாவுக்கு என் வாழ்க்கையை அர்ப்பணிப்பதன் அர்த்தம் என்ன? இனி நீங்கள் அவருக்குத்தான் சொந்தம் என்றும், அவருடைய விருப்பத்துக்கு மட்டுமே உங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பீர்கள் என்றும் அவரிடம் வாக்குக் கொடுப்பதுதான் அதன் அர்த்தம். (மத்தேயு 16:24) ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே, உங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதாக அவரிடம் ஜெபத்தில் வாக்குக் கொடுப்பது முக்கியம்.
ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? கடவுளுடைய வார்த்தை சொல்வதுபோல் நடந்துகொள்ள வேண்டும். உங்கள் நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டும். ஜெபம் செய்வதன் மூலமும் பைபிளைப் படிப்பதன் மூலமும் யெகோவாவிடம் நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் கட்டாயப்படுத்துவதால் அல்ல, நீங்களாகவே விருப்பப்பட்டு யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும்.
ஞானஸ்நானம் எடுப்பதற்கு வயது வரம்பு இருக்கிறதா? வயது முக்கியம் அல்ல. ஆனால், யெகோவாவுக்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வதன் அர்த்தத்தை நீங்கள் நன்றாகப் புரிந்துவைத்திருக்க வேண்டும்.
ஞானஸ்நானம் எடுக்க எனக்கு ஆசை, ஆனால் என் அம்மா அப்பா என்னைக் காத்திருக்கச் சொல்கிறார்கள். அப்போது என்ன செய்வது? உங்களுக்கு இன்னும் அனுபவம் போதாது என்று அவர்கள் ஒருவேளை நினைக்கலாம். அவர்களுடைய ஆலோசனையைக் கேளுங்கள். யெகோவாவிடம் இன்னும் அதிகமாக நெருங்கிவருவதற்காக இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.—1 சாமுவேல் 2:26.
[பெட்டி/படம்]
ஒர்க் ஷீட்
ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?
கீழே இருக்கும் கேள்விகளையும் குறிப்புகளையும் பயன்படுத்தி, ஞானஸ்நானம் எடுப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று தெரிந்துகொள்ளுங்கள். பதில்களை எழுதுவதற்கு முன்பு, கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை பைபிளில் எடுத்துப் பார்க்க மறந்துவிடாதீர்கள்.
யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருப்பதை இப்போது என்னென்ன விதங்களில் நீங்கள் காட்டுகிறீர்கள்?—சங்கீதம் 71:5. ․․․․․
சரி எது, தவறு எது என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துவைத்திருப்பதை எப்படிக் காட்டியிருக்கிறீர்கள்?—எபிரெயர் 5:14. ․․․․․
நீங்கள் எவ்வளவு அடிக்கடி ஜெபம் செய்வீர்கள்?. ․․․․․
நீங்கள் என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்கிறீர்கள், நீங்கள் யெகோவாமேல் அன்பு வைத்திருப்பதை உங்கள் ஜெபங்கள் எப்படிக் காட்டுகின்றன?—சங்கீதம் 17:6. ․․․․․
இன்னும் நன்றாக ஜெபம் பண்ணுவதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்று இங்கே எழுதுங்கள். ․․․․․
நீங்கள் எவ்வளவு அடிக்கடி பைபிளைப் படிக்கிறீர்கள்?—யோசுவா 1:8. ․․․․․
தனிப்பட்ட படிப்பில் எதைப் பற்றியெல்லாம் படிக்கிறீர்கள்? ․․․․․
இன்னும் நன்றாகப் படிப்பதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்று இங்கே எழுதுங்கள். ․․․․․
நீங்கள் ஊழியத்தை நன்றாகச் செய்கிறீர்களா? (உதாரணங்கள்: பைபிள் விஷயங்களை உங்களால் மற்றவர்களிடம் விளக்கிச் சொல்ல முடியுமா? ஆர்வம் காட்டுகிறவர்களை மறுபடியும் போய் சந்திக்கிறீர்களா? ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்கிறீர்களா?)
❏ ஆம் ❏ இல்லை
உங்கள் அப்பா அம்மா உங்களோடு வரவில்லை என்றாலும் நீங்கள் ஊழியத்துக்குப் போகிறீர்களா?—அப்போஸ்தலர் 5:42.
❏ ஆம் ❏ இல்லை
ஊழியத்தை இன்னும் நன்றாகச் செய்வதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்று இங்கே எழுதுங்கள்.—2 தீமோத்தேயு 2:15. ․․․․․
நீங்கள் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்கிறீர்களா அல்லது அவ்வப்போதுதான் கலந்துகொள்கிறீர்களா?—எபிரெயர் 10:25. ․․․․․
கூட்டங்களில் நீங்கள் என்னென்ன விதங்களில் பங்கெடுக்கிறீர்கள்? ․․․․․
உங்கள் அப்பா அம்மா கூட்டங்களுக்கு வரவில்லை என்றாலும் நீங்கள் அதில் கலந்துகொள்கிறீர்களா (அவர்களுடைய அனுமதியோடு)?
❏ ஆம் ❏ இல்லை
நீங்கள் உண்மையிலேயே சந்தோஷத்தோடுதான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறீர்களா?—சங்கீதம் 40:8.
❏ ஆம் ❏ இல்லை
என்னென்ன சந்தர்ப்பங்களில், ஏதாவது கெட்டதைச் செய்யச்சொல்லி உங்கள் நண்பர்கள் ஆசைகாட்டியும் நீங்கள் முடியாது என்று சொல்லியிருக்கிறீர்கள்?—ரோமர் 12:2.
யெகோவாமேல் இருக்கும் அன்பை இன்னும் அதிகமாக்குவதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?—யூதா 20, 21.
உங்கள் அப்பா அம்மாவும் நண்பர்களும் யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டாலும் நீங்கள் தொடர்ந்து அவருக்குச் சேவை செய்வீர்களா?—மத்தேயு 10:36, 37.
❏ ஆம் ❏ இல்லை
[படம்]
கல்யாணத்தைப் போலவே ஞானஸ்நானமும் நம் வாழ்க்கையை மாற்றும். அதை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது