திடீரென்று ஒழுக்கநெறி சீரழிந்தபோது
ஒழுக்கத் தராதரங்கள் திடீரென்று சீரழியத் துவங்கியது எப்போது என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? உங்கள் வாழ்நாளில் என்று சொல்வீர்களா? அல்லது உங்களைவிட வயதான உறவினர்கள் மற்றும் நண்பர்களின் காலத்தில் என்று சொல்வீர்களா? 1914-ஆம் ஆண்டில் மூண்ட முதல் உலகப் போர், சரித்திரம் கண்டிராத ஒழுக்கச் சீர்குலைவு நிறைந்த ஒரு சகாப்தத்தைத் தொடங்கி வைத்திருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். 1914-ஆம் ஆண்டின் சந்ததி என்ற ஆங்கில புத்தகத்தில் சரித்திரப் பேராசிரியர் ராபர்ட் வோல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “1914-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓர் உலகம் முடிந்து இன்னொரு உலகம் தோன்றியது என்பதை அந்தச் சமயத்தில் வாழ்ந்தவர்களால் மறுக்கவே முடியாது.”
சரித்திராசிரியர் நார்மன் கேன்டர் இவ்வாறு தெரிவிக்கிறார்: “எல்லா இடங்களிலும், ஏற்கெனவே சரிந்துகொண்டிருந்த சமூக நடத்தைக்கான தராதரங்கள் இப்போது தரைமட்டமாயின. அரசியல்வாதிகளும் ராணுவத் தலைவர்களும் தாங்கள் பேணிப் பாதுகாக்க வேண்டிய கோடிக்கணக்கான மக்களைக் கசாப்புக்கடை மிருகங்களைப்போல நடத்தியிருக்கும்போது, இனிமேல் அன்றாட வாழ்க்கையில் மக்கள் ஒருவரையொருவர் மிருகத்தனமாக நடத்துவதை எந்தத் தார்மீகக் கொள்கையாலோ மதக் கொள்கையாலோ எப்படித் தடுத்து நிறுத்தமுடியும்? . . . முதல் உலகப் போரின்போது [1914-18] நடைபெற்ற பல்லாயிரக்கணக்கான படுகொலைகள் மனித உயிரை மலிவான பொருளாக ஆக்கிவிட்டன.”
ஆங்கில சரித்திராசிரியரான ஹெச். ஜி. வெல்ஸ் விரிவான தகவல்களோடு தான் எழுதிய சரித்திரத்தின் சுருக்கம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், பரிணாமக் கொள்கை எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டதோ அதற்குப் பிறகுதான் “நாகரிகம், சீர்குலைவை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியது” என்று குறிப்பிடுகிறார். ஏன் அப்படி? மனிதன் வெறும் ஓர் உயர்வகை மிருகமே என்ற முடிவுக்குச் சிலர் வந்ததே அதற்குக் காரணம். பரிணாமவாதியாக இருந்த ஹெச். ஜி. வெல்ஸ் 1920-ல் இவ்வாறு எழுதினார்: “கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடும் இந்திய செந்நாய் (காட்டு நாய்) போல மனிதனும் ஒரு சமூக விலங்கு என்று அவர்கள் நினைத்தார்கள். . . . எனவே எப்படி பெரிய பலமுள்ள நாய்கள் [சாதுவான மற்ற நாய்களை] தாக்கி அடிபணிய வைக்கின்றனவோ, அதேபோல் மனிதர் கூட்டத்திலும் பலவான்கள் அப்பாவிகளை அடிபணியச் செய்வது தவறு அல்ல என்றும் அவர்கள் நினைத்தார்கள்.”
உண்மைதான், கேன்டர் குறிப்பிட்டபடி, சரி எது தவறு எது என்பதைக் குறித்த மக்களுடைய தராதரங்களை முதல் உலகப் போர் முற்றிலும் தலைகீழாக்கிவிட்டது. அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “பழைய தலைமுறையினருடைய அரசியல், உடை, பாலியல் ஒழுக்கநெறிகள் என எல்லாமே செல்லரித்துப் போனதாகக் கருதப்பட்டது.” பரிணாமக் கொள்கையை ஆதரிப்பதன் மூலமும், போரிடும் நாடுகளைத் தூண்டிவிடுவதன் மூலமும் கிறிஸ்தவ போதனைகளை இழிவுபடுத்திய சர்ச்சுகள், ஒழுக்கச் சீர்குலைவுக்கு முக்கியக் காரணமாக விளங்கின. பிரிட்டிஷ் படைப்பகுதித் தலைவர் ஃபிராங்க் க்ரோஷர் இவ்வாறு சொன்னார்: “இரத்த வெறியைத் தூண்டிவிட்டதே கிறிஸ்தவ சர்ச்சுகள்தான்; அவற்றை நாம் தாராளமாக பயன்படுத்திக்கொண்டோம்.”
ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒழுக்க நெறிகள்
முதல் உலகப் போரைப் பின்தொடர்ந்த பத்தாண்டுகள், அதாவது 1920-கள் செல்வச் செழிப்புமிக்க ஆண்டுகள் என்பதாக அழைக்கப்பட்டன; அப்போது பாரம்பரிய மதிப்பீடுகளும் ஒழுக்கநெறிசார்ந்த கட்டுப்பாடுகளும் ஒதுக்கித் தள்ளப்பட்டன, அதற்குப் பதிலாக மனம்போன போக்கில் வாழும் முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. சரித்திராசிரியர் ஃபிரட்ரிக் லூயிஸ் ஆலன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “யுத்தத்தைப் பின்தொடர்ந்த பத்து வருடங்களை கெட்ட நடத்தைகளின் பத்தாண்டுகள் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். . . . முதல் உலகப் போருக்கு முந்தைய சகாப்தம் முடிவடைந்தபோது, வாழ்க்கைக்கு ஓரளவு நிறைவையும் அர்த்தத்தையும் தந்த மதிப்பீடுகளும் சுவடு தெரியாமல் போயின. அதற்கு மாற்றீடான மதிப்பீடுகள் எளிதில் கண்டுபிடிக்கப்படவில்லை.”
1930-களில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தார்கள்; அதனால் அநேகர் கட்டுப்பாடாக வாழத் துவங்கினார்கள். ஆனால் அந்தப் பத்தாண்டுகளின் முடிவில், அதைவிட படுமோசமான சீரழிவை ஏற்படுத்திய மற்றொரு போரை உலகம் சந்தித்தது; அதுவே, இரண்டாம் உலகப் போர். உடனடியாக, நாடுகள் பயங்கரமான போர்க் கருவிகளைத் தயாரிக்க ஆரம்பித்தன; இது பொருளாதார மந்தநிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனால் மனிதக் கற்பனைகளையும் விஞ்சிவிடுகிற துன்பங்களையும் பயங்கரங்களையும் உலகம் சந்தித்தது. போர் முடிவடைந்தபோது, நூற்றுக்கணக்கான நகரங்கள் சின்னாபின்னமாகிக் கிடந்தன; ஜப்பானின் இரண்டு நகரங்கள் ஒவ்வொன்றிலும் போடப்பட்ட ஒரு அணுகுண்டு அந்நகரங்களை சாம்பல் காடாக்கியது! லட்சோப லட்சம் பேர் கொடூரமான சித்திரவதை முகாம்களில் மாண்டார்கள். ஒட்டுமொத்தமாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட கிட்டத்தட்ட ஐந்து கோடி உயிர்களை இப்போர் காவு கொண்டது.
இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் நிலவிய படுபயங்கரமான சூழ்நிலைகளின்போது, காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஒழுக்கத் தராதரங்களை மக்கள் உதறித்தள்ளினார்கள்; அதற்குப் பதிலாக தங்களுடைய இஷ்டப்படி வாழத் துவங்கினார்கள். காதல், செக்ஸ் மற்றும் போர்—மாறிவரும் மதிப்பீடுகள், 1939-45, என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிட்டது: “போர்க்காலத்தில் ஒழுக்கநெறியின் பிடி தளர்த்தப்பட்டதாகத் தோன்றியது. அதனால் போர்க்களத்தில் அனுமதிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட கட்டுப்பாடற்ற நடத்தை வீடுகளையும் ஆக்கிரமித்தது. . . . விரைவில் போர்க்கால அவசரத்தன்மையும் பரபரப்பும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை படிப்படியாக அரித்துப் போட்டன; அநேகருக்கு போர்முனையில் இருப்பதுபோலவே வீட்டிலுள்ள வாழ்க்கையும் மதிப்பற்றதாகவும் குறுகியதாகவும் தோன்றியது.”
சதா சாவைப் பற்றிய பயம் பீடித்ததால், உணர்ச்சிப்பூர்வமான உறவுகளுக்காக, அதுவும் குறுகியகாலமே நீடித்த உறவுகளுக்காகவும்கூட மக்கள் மிகவும் ஏங்கினார்கள். அத்தகைய கொந்தளிப்பான வருடங்களில் நிலவிய தறிகெட்ட வாழ்க்கை முறையை நியாயப்படுத்தும் விதமாக பிரிட்டனிலுள்ள குடும்பத்தலைவி ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் உண்மையில் ஒழுக்கங்கெட்டவர்களாக இல்லை; ஆனால் போர் நடந்து கொண்டிருந்ததால் அப்படி ஆக வேண்டியதாகிவிட்டது.” அமெரிக்கப் போர்வீரர் ஒருவர் இவ்வாறு ஒத்துக் கொள்கிறார்: “பெரும்பாலான மக்கள் எங்களை ஒழுக்கங்கெட்டவர்களாகக் கருதினார்கள். ஆனால், நாங்கள் இளைஞர்கள், நாளைக்கு உயிரோடு இருப்போமா என்று எங்களுக்கே தெரியாது.”
போரைத் தப்பிப்பிழைத்த பலர் தாங்கள் கண்ட கொடூரமான காட்சிகளை மறக்கமுடியாமல் திண்டாடினார்கள். அப்போது குழந்தைகளாக இருந்தவர்கள் உள்பட சிலர் பழைய நினைவுகளால் இன்றும்கூட அவதிப்படுகிறார்கள், அதாவது அந்த அதிர்ச்சியான சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதைப்போல உணருகிறார்கள். அநேகர் விசுவாசத்தையும் அதோடு ஒழுக்க ரீதியில் தீர்மானம் எடுக்கும் திறனையும் இழந்துவிட்டார்கள். சரி எது தவறு எது என்ற தராதரத்தை வலியுறுத்துகிற எந்த அதிகாரத்தையும் மதிக்காமல் ஒழுக்கநெறிகளை தங்கள் மனம்போன போக்கில் மாற்றிக் கொண்டார்கள்.
நடத்தைக்குரிய புதிய தராதரங்கள்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மக்களின் பாலியல் நடத்தைகளைக் குறித்து ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இதுபோன்று 1940-ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஒன்று, கின்ஸி அறிக்கை என அறியப்பட்டது; இது 800-க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டது. இதுபோன்ற ஆய்வுகளின் விளைவாக, அதுவரை இலைமறைவு காய்மறைவாக விவாதிக்கப்பட்ட செக்ஸ் விஷயங்களை அநேகர் வெளிப்படையாகவே பேசத் துவங்கினார்கள். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களையும், மற்ற நெறிபிறழ்வான பாலியல் நடத்தையில் ஈடுபடுகிறவர்களையும் பற்றி அந்த அறிக்கையில் வெளியான புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என பின்னர் கண்டறியப்பட்டது. இருந்தாலும்கூட, போருக்குப் பின்வந்த காலங்களில் ஏற்பட்ட படுமோசமான ஒழுக்கச் சீர்குலைவை இந்த ஆய்வு வெளிச்சம்போட்டுக் காட்டியது.
சில காலங்களுக்கு, ஒழுக்கமாயிருப்பதைப் போன்று காட்டிக்கொள்ள மக்கள் முயன்றார்கள். உதாரணமாக, ரேடியோவில், திரைப்படங்களில், டிவி நிகழ்ச்சிகளில் ஒழுக்கங்கெட்ட விஷயங்கள் தணிக்கை செய்யப்பட்டன. ஆனால், இது அதிக காலத்துக்கு நீடிக்கவில்லை. அமெரிக்காவின் முன்னாள் கல்வித்துறைச் செயலர் வில்லியம் பென்னட் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இருந்தாலும், 1960-களில் அமெரிக்காவின் ஒழுக்கநிலை, கலாச்சார சீர்கேடு எனும் அதலபாதாளத்தை நோக்கி விரைவாகவும் தடையில்லாமலும் சரியத் துவங்கியது.” அதோடு இது மற்ற அநேக நாடுகளிலும் காணப்பட்டது. ஆனால், ஒழுக்கச் சீரழிவு 1960-களில் அதிகரித்ததற்குக் காரணம் என்ன?
இந்தப் பத்தாண்டுகளில்தான் பெண்கள் விடுதலை இயக்கமும் புதிய ஒழுக்கநெறி என அழைக்கப்பட்ட பாலின புரட்சியும் ஒரே சமயத்தில் உதயமாயின. மேலும், சிறந்த கருத்தடை மாத்திரைகளும் உற்பத்தி செய்யப்பட்டன. கருத்தரிக்கும் பயமில்லாமல் செக்ஸில் ஈடுபட முடிந்ததால், “ஃப்ரீ லவ்” அதாவது “எந்த பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளாமல் இருவர் பாலுறவு கொள்ளும்” வழக்கம் சகஜமானது.
அதே சமயத்தில், பத்திரிகைகளும், திரைப்படங்களும், டிவி நிகழ்ச்சிகளும் தங்கள் ஒழுக்கநெறிகளைத் தளர்த்திக் கொண்டன. முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிபிக்னேவ் பிரேஷின்சி டிவி நிகழ்ச்சிகளில் காட்டப்படுகிற மதிப்பீடுகளைக் குறித்து பிற்பாடு இவ்வாறு சொன்னார்: “அவை சுயதிருப்தியை முக்கியப்படுத்திப் பேசுகின்றன, கொடூரமான அடிதடியையும் மூர்க்கத்தனத்தையும் இயல்பானவையாகக் காட்டுகின்றன; [அதோடு] கட்டுப்பாடற்ற செக்ஸையும் ஊக்குவிக்கின்றன.”
1970-களில், வீடியோகேஸட் ரெக்கார்டர் (விசிஆர்) பிரபலமடையத் துவங்கியது. மக்கள் திரையரங்குகளுக்குச் சென்று காணத் துணிந்திராத அப்பட்டமான, இழிவான செக்ஸ் காட்சிகளை இப்போது தங்கள் வீடுகளில் அந்தரங்கமாகக் கண்டுகளிக்க முடிந்தது. சமீப காலமாக, உலகமுழுவதுமுள்ள நாடுகளில் கம்ப்யூட்டர் வைத்திருக்கும் எவராலும் இன்டர்நெட் மூலமாக மிகக் கீழ்த்தரமான ஆபாசத்தைப் பார்க்க முடிகிறது.
இதன் விளைவுகள் பல வழிகளில் பீதியளிக்கின்றன. அமெரிக்கச் சிறையில் வார்டனாக பணிபுரியும் ஒருவர் சமீபத்தில் இவ்வாறு சொன்னார்: “பத்து ஆண்டுகளுக்கு முன்பு இச்சிறைக்கு வரும் இளைஞர்களிடம் சரி எது தவறு எது என்பதைக் குறித்து என்னால் பேச முடிந்தது. ஆனால் இப்போது இங்கு வரும் இளைஞர்களுக்கு நான் எதைப்பற்றி பேசுகிறேன் என்பதையே புரிந்துகொள்ள முடிவதில்லை.”
வழிகாட்டுதல் எங்கே கிடைக்கும்?
ஒழுக்கநெறி சம்பந்தமாக வழிகாட்டும்படி உலகிலுள்ள சர்ச்சுகளின் உதவியை நம்மால் நாட முடியாது. இயேசுவும் அவருடைய முதல் நூற்றாண்டு சீஷர்களும் நீதியுள்ள நெறிகளைக் கடைப்பிடித்தனர். அதைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, சர்ச்சுகள் இந்த உலகத்தோடு கைகோர்த்துக் கொண்டு அதன் தீமைகளில் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. ஓர் எழுத்தாளர் பின்வருமாறு கேட்டார்: “இதுவரை நடந்த எந்த போர்களிலாவது கடவுள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார் என எவராவது மார்தட்டிக் கொள்ளாமல் இருந்ததுண்டா?” கடவுளுடைய ஒழுக்கத் தராதரங்களைக் கடைப்பிடிக்கும் விஷயத்தைக் குறித்ததில், பல வருடங்களுக்கு முன்பு நியு யார்க் சிட்டி மதகுரு ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நகர பேருந்தில் பயணிப்பதற்குக்கூட உங்களிடம் சில தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன; ஆனால் நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சர்ச்சில் அங்கத்தினராக தொடர்ந்திருக்க முடியும்.”
தெளிவாகவே, இந்த உலகின் படுமோசமான ஒழுக்கச் சீர்குலைவு, உடனடியாக ஏதாவது செய்யப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் என்ன செய்யப்பட வேண்டும்? எத்தகைய மாற்றம் தேவைப்படுகிறது? அதை யாரால் செய்ய முடியும்? எவ்வாறு செய்ய முடியும்?
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“முதல் உலகப் போரின்போது [1914-18], நடைபெற்ற பல்லாயிரக்கணக்கான படுகொலைகள் மனித உயிரை மலிவான பொருளாக ஆக்கிவிட்டன”
[பக்கம் 6-ன் பெட்டி]
நன்னெறி Vs மதிப்பீடுகள்
நன்னெறியைத் தெளிவாக வகையறுக்க முடிந்தது. அதன்படி, ஒரு நபர் நேர்மையானவராக, உண்மையுள்ளவராக, ஒழுக்கமுள்ளவராக, கண்ணியமானவராக இருப்பார் அல்லது இருக்க மாட்டார். இப்போது, “நன்னெறிக்கு” பதிலாக “மதிப்பீடு” என்ற பதத்தை மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது; இதைக் குறித்து சரித்திராசிரியர் கர்ட்ரூட் ஹிம்மல்ஃபார்ப் தான் எழுதிய சமுதாயத்தின் ஒழுக்கச் சீர்குலைவு என்ற ஆங்கிலப் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒவ்வொருவரும் தங்களுக்கென்று சொந்த மதிப்பீடுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை இருக்கிறது . . . ஆனால், நன்னெறியைப்பற்றி அப்படிச் சொல்ல முடியாது.”
மதிப்பீடுகள் என்பது “நம்பிக்கைகளை, அபிப்பிராயங்களை, மனப்பான்மைகளை, உணர்ச்சிகளை, பழக்கவழக்கங்களை, மரபுகளை, முன்னுரிமைகளை, தப்பெண்ணங்களை, இன்னும் விசித்திரமான நடத்தைகளைக்கூட உட்படுத்தலாம்; தனிப்பட்ட ஒருவரோ, தொகுதியோ சமுதாயமோ எந்தச் சமயத்திலும், எந்தக் காரணத்துக்காகவும் எதை வேண்டுமானாலும் மதிப்பீடாக கருதலாம்.” தற்போதைய நெறிகெட்ட சமுதாயத்தில், சூப்பர்மார்க்கெட்டில் மளிகை சாமான்களைத் தேர்ந்தெடுப்பதைப் போலவே மக்கள் தங்கள் சொந்த மதிப்பீடுகளைத் தேர்ந்தெடுப்பதை நியாயமாக நினைக்கின்றனர். ஆனால், இந்நிலை நீடிக்குமானால், உண்மையான நன்னெறியும் ஒழுக்கநெறியும் என்னவாகும்?
[பக்கம் 6, 7-ன் படம்]
மட்டமான பொழுதுபோக்கு மிக எளிதாகக் கிடைக்கிறது