பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
மொடாக் குடியனாக இருந்த ஒருவர் தன்னையே எப்படி மாற்றிக்கொண்டார் என்று பாருங்கள்…
”நான் ஒரு மொடாக் குடியனாக இருந்தேன்“—லூக்கா ஷாட்ஸ்
பிறந்த வருஷம்: 1975
பிறந்த நாடு: ஸ்லோவேனியா
என்னைப் பற்றி: மொடாக் குடியன்
கடந்த காலம்: நான் லுஜுபுல்ஜானா என்ற இடத்தில் பிறந்தேன். அது ஸ்லோவேனியாவின் தலைநகரம். நான்கு வயதுவரை என்னுடைய வாழ்க்கை ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு என் அப்பா தற்கொலை செய்துகொண்டார். என்னையும் என்னுடைய அண்ணனையும் வளர்ப்பதற்கு என் அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டார்.
15 வயதில் நான் என்னுடைய பாட்டி வீட்டுக்குப் போனேன். அதற்குப் பிறகு அங்கேதான் வளர்ந்தேன். அங்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தேன். ஏனென்றால், அங்கே நிறைய நண்பர்கள் இருந்தார்கள், ரொம்ப சுதந்திரமாகவும் இருந்தேன். என் வீட்டில்கூட நான் அப்படி இருந்ததில்லை. சிலர், வார இறுதி நாட்களில் குடிப்பார்கள். எனக்கு 16 வயது இருக்கும்போது அவர்களோடு சேர்ந்து பழக ஆரம்பித்தேன். தலைமுடியை நீளமாக வளர்த்தேன். ரவுடிகள் போல டிரெஸ் பண்ண ஆரம்பித்தேன். புகை பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டேன்.
வித்தியாசமான நிறைய போதைப்பொருள்களை எடுத்துக்கொண்டேன். அவையெல்லாம் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காக அப்படிச் செய்தேன். ஆனால், எல்லாவற்றையும்விட எனக்குக் குடிப்பதுதான் பிடித்திருந்தது. அதனால், நிறைய குடித்தேன். ஆரம்பத்தில் இரண்டு அல்லது மூன்று கிளாஸ் ஒயின் மட்டும் குடித்தேன். போகப்போக, ஒரே நேரத்தில் பாட்டில் பாட்டிலாக குடிக்க ஆரம்பித்தேன். நான் எவ்வளவு குடித்திருந்தாலும், நான் குடித்திருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது. அவ்வளவு ‘ஸ்டெடியாக’ இருப்பேன். என்மீது வரும் மதுபான வாசனையை வைத்துதான் அவர்களால் கண்டுபிடிக்க முடியும். அதுவும், நான் லிட்டர் கணக்கில் ஒயின் அல்லது பீர் குடித்திருக்கிறேன் என்றோ, ஓட்காவோடு கலந்து குடித்திருக்கிறேன் என்றோ யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
நிறைய சமயங்களில் நானும் என்னுடைய நண்பர்களும் ராத்திரியில் கிளப்புக்கு போய் குடிப்போம். மற்றவர்கள் குடிப்பதைவிட இரண்டு மடங்கு அதிகமாக நான் குடித்திருப்பேன். ஆனாலும், அவர்கள் தள்ளாடும்போது நான் அவர்களுக்கு உதவி செய்து அவர்களை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுபோய் விடுவேன். ஒருநாள், என்னுடைய நண்பன் ஒருவன் என்னை “மொடாக் குடியன்” என்று சொல்லிவிட்டான். அது என்னுடைய காதில் விழுந்துவிட்டது. எங்கள் ஊரில், மற்றவர்களைவிட அதிகமாக குடிக்கிறவர்களை கேவலப்படுத்துவதற்காக சொல்கிற வார்த்தை இது. அதனால், எனக்கு ரொம்ப கஷ்டமாகிவிட்டது.
வாழ்க்கையில் நான் என்ன செய்துகொண்டு இருக்கிறேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். நான் எதற்குமே லாயக்கு இல்லாதவன் என்று தோன்றியது. வாழ்க்கையில் உருப்படியாக எதுவுமே செய்யாமல், ஏனோ தானோ என்றுதான் நான் வாழ்ந்துகொண்டு இருந்தேன்.
பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது: என் கூடப்படித்த நண்பர் ஒருவர் மற்றவர்களிடம் ரொம்ப அன்பாக நடந்துகொண்டதை நான் கவனித்தேன். அவர் முன்பெல்லாம் அப்படி இல்லை. இப்போது ஒரு நல்ல நபராக மாறியிருந்தார். அவரால் எப்படி மாற முடிந்தது என்று யோசித்தேன். அதனால், அவரிடம் பேசுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு வர சொன்னேன். யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிள் படிப்பதாக அவர் சொன்னார். அவர் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றியும் என்னிடம் சொன்னார். அவையெல்லாமே எனக்கு ரொம்ப புதிதாக இருந்தது. ஏனென்றால், நான் சர்ச்சுக்குப் போனதும் இல்லை, பைபிளைப் படித்ததும் இல்லை. அவர் சொன்னதைக் கேட்ட பிறகு, யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தேன், பைபிளையும் படிக்க ஆரம்பித்தேன்.
பைபிளைப் படித்தபோது நிறைய உண்மைகளைக் கற்றுக்கொண்டேன். அவற்றைக் கற்றுக்கொண்ட பிறகு, என் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்ற உண்மையைத் தெரிந்துகொண்டேன். (2 தீமோத்தேயு 3:1-5) அதோடு, கடவுள் சீக்கிரத்தில் கெட்டவர்களை இந்த பூமியிலிருந்து அழித்துவிட்டு நல்லவர்களை மட்டும் பூஞ்சோலை பூமியில் முடிவில்லாமல் வாழ வைக்கப்போகிறார் என்பதையும் கற்றுக்கொண்டேன். (சங்கீதம் 37:29) அந்த நல்ல மக்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டுமென்றால், கெட்ட பழக்கங்கள் எல்லாவற்றையும் கண்டிப்பாக நிறுத்தியே ஆக வேண்டும் என்று புரிந்துகொண்டேன். அப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆசையும் எனக்கு அதிகமாக இருந்தது.
பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட உண்மைகளை என் நண்பர்களிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் என்னைக் கேலி செய்தார்கள். அவர்கள் அப்படிச் செய்தது ஒரு விதத்தில் நல்லதுதான்! அவர்கள் உண்மையிலேயே நல்ல நண்பர்கள் இல்லை என்பதை அது எனக்குப் புரிய வைத்தது. நான் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக ஆனதற்கு முக்கிய காரணமே, இந்த மாதிரி நண்பர்கள்தான்! ஏனென்றால், ‘எப்படா சனி ஞாயிறு வரும் நாம குடிக்கலாம்’ என்று அவர்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள்.
என்னுடைய பழைய நட்பையெல்லாம் நான் தூக்கியெறிந்துவிட்டு, யெகோவாவின் சாட்சிகளோடு பழக ஆரம்பித்தேன். அங்கு எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். என் வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்கு அவர்கள் உதவினார்கள். ஏனென்றால், அவர்கள் யெகோவாவை நேசித்தார்கள்; அவருக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். அதனால், மொடாக் குடிகாரனாக இருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக மாறினேன்.
எனக்குக் கிடைத்த நன்மைகள்: ‘தண்ணி அடிச்சாதான் சந்தோஷம்’ என்று ஒருகாலத்தில் நினைத்தேன். இப்போது, அப்படிப்பட்ட எண்ணம் கொஞ்சம்கூட இல்லை. அதற்காக நான் யெகோவாவுக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறேன். பழைய மாதிரியே நான் வாழ்ந்துகொண்டு இருந்திருந்தால் என் வாழ்க்கை என்ன ஆகியிருக்குமோ! ஆனால், இப்போது என் வாழ்க்கை ரொம்ப நன்றாக இருக்கிறது.
ஏழு வருஷங்களாக ஸ்லோவேனியாவில் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் நான் சேவை செய்துகொண்டிருக்கிறேன். யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருக்குச் சேவை செய்வது என் வாழ்க்கையை பிரயோஜனமுள்ளதாக ஆக்கியிருக்கிறது.