பைபிளில் ரகசிய வார்த்தைகளா?
இஸ்ரேலிய பிரதம மந்திரி இஷாக் ரபீனின் படுகொலை 1995-ல் சம்பவித்தது; அது நடந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஒரு பத்திரிகை எழுத்தாளர் ஏதேதோ சொல்லிக் கொண்டார். அதாவது, அந்தச் சம்பவத்தைப் பற்றிய ஒரு முன்னறிவிப்பு, தொடக்கத்திலிருந்த எபிரெய பைபிளின் மூலவாக்கியத்தில் மறைந்திருந்ததாம்; கம்ப்யூட்டர் தொழில்நுட்ப உதவியுடன், அவர் அதைக் கண்டுபிடித்தாராம். அந்தப் படுகொலைக்கு ஓர் ஆண்டுக்கு முன்பாகவே அந்தப் பிரதம மந்திரியை எச்சரிக்க முயற்சி செய்தும் பயனில்லாமல் போயிற்று என இந்தப் பத்திரிகை எழுத்தாளர் மைக்கல் ட்ரோஸ்னின் எழுதினார்.
பைபிள் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதற்கு இந்த மறைமுகமான செய்தி முழுமையான நிரூபணத்தை அளிக்கிறது என்று உரிமைபாராட்டும் மற்ற புத்தகங்களும் கட்டுரைகளும் இப்போது பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ரகசிய செய்தி அதில் இருக்கிறதா? பைபிள் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை நம்புவதற்கு ரகசிய செய்தியா ஆதாரம்?
புதியதோர் கருத்தா?
பைபிள் எழுத்துக்களில் ரகசிய செய்தி மறைந்திருக்கிறதென்ற இந்தக் கருத்து புதிதல்ல. இது, கபாலா என்றழைக்கப்படும் யூத வேதாந்தத்தின் (Cabala) அல்லது பாரம்பரிய யூத இறைமை கோட்பாட்டு தொகுதியின் முக்கிய கருத்தாகும். யூத வேதாந்த போதகர்களின்படி, பைபிள் வாக்கியங்களை வாசித்தவுடன் கிடைக்கும் அர்த்தம், அதன் உண்மையான அர்த்தம் அல்ல. எபிரெய பைபிள் மூலவாக்கியத்தின் தனி எழுத்துக்களை அடையாளங்களாக கடவுள் பயன்படுத்தினார் என்றும், அவற்றை சரியான முறையில் புரிந்துகொள்கையில் என்னென்னவோ உண்மைகள் புலப்படுகின்றன என்றும் அவர்கள் நம்புகிறார்கள். பைபிள் மூலவாக்கியத்திலுள்ள ஒவ்வொரு எபிரெய எழுத்தும் அதனதற்குரிய இடத்தில் திட்டவட்டமான நோக்கத்துடன் கடவுளால் வைக்கப்பட்டது என்பது அவர்களுடைய கருத்து.
ஆதியாகமத்திலுள்ள சிருஷ்டிப்பு விவரப் பதிவில் பயன்படுத்தப்பட்ட எபிரெய எழுத்துக்களில் நம்ப முடியாத வகையில் அறிவுக்கெட்டாத மறைபொருள் இருப்பதாக மறைஞானிகளான இந்த யூதர்கள் நம்புகிறார்கள் என பைபிள் வார்த்தைகளை ஆராயும் ஜெஃப்ரி சாட்டினோவர் கருதுகிறார். அவர் எழுதுவதாவது: “சுருக்கமாக கூறினால், ஆதியாகமம் வெறும் ஒரு விவரிப்பு அல்ல; சிருஷ்டிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கருவி, அதாவது சிருஷ்டிப்பை பற்றி கடவுளுடைய மனதிலிருந்த புளூபிரின்ட், காணும் வடிவில்.”
ஸ்பெய்னில் சரகோஸ்ஸாவில் வாழ்ந்த மறைபொருள் கோட்பாட்டாளர் 13-வது நூற்றாண்டு ரபி பாச்யா பென் அஷெர், மூலவாக்கியத்தில் ஆதியாகமத்தின் ஒரு பகுதியில், ஒவ்வொரு 42-வது எழுத்தையும் வாசிப்பதன்மூலம் தனக்கு கிடைத்த ரகசிய தகவலைப் பற்றி எழுதினார். மறைத்து வைக்கப்பட்ட ரகசிய செய்திகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் எழுத்துக்களை விட்டுவிட்டு வாசிக்கும் இந்த முறையே இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
ரகசிய செய்தியை “வெளிப்படுத்த” கம்ப்யூட்டர்கள்
கம்ப்யூட்டர் காலத்திற்கு முன்பு, இந்த முறையில் பைபிளின் மூலவாக்கியத்தை ஆராயும் திறமை மனிதனுக்கு இந்தளவுக்கு இருக்கவில்லை. எனினும், ஆகஸ்ட் 1994-ல் புள்ளியியல் சார்ந்த அறிவியல் (ஆங்கிலம்) என்ற பத்திரிகை ஒரு கட்டுரையைப் பிரசுரித்தது. அதில், எருசலேமின் எபிரெய பல்கலைக்கழகப் பேராசிரியர் எலியாஹு ரிப்ஸும் அவரோடு சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், அதிர்ச்சி தரும் சில காரியங்களை வலியுறுத்திக் கூறினார்கள். ஆதியாகமத்தின் எபிரெய மூலவாக்கியத்தில், எழுத்துக்களுக்கு இடையேயுள்ள எல்லா இடைவெளிகளையும் நீக்கி, சமதூரம் தாவித்தாவி செல்வதன்மூலம், பிரசித்தி பெற்ற 34 ரபீக்களின் பெயர்களும், அவற்றோடுகூட அவர்களுடைய பிறப்பு அல்லது இறப்பு போன்ற மற்ற தகவல்களும் ரகசியமாய் மறைந்திருந்ததைத் தாங்கள் கண்டுபிடித்ததாக விளக்கினார்கள்.a மறுபடியும் மறுபடியும் சோதித்தப் பின்பு, ஆதியாகமத்தில் ரகசிய தகவல் தற்செயலாக பதிவுசெய்து வைக்கப்படவில்லை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அவை ஏவப்பட்டு எழுதப்பட்டவை; வேண்டுமென்றே ரகசிய செய்தி மறைவாய் வைக்கப்பட்டுள்ளது என்ற தங்கள் முடிவை பிரசுரித்தார்கள்.
இந்த முறையைக் கொண்டே பத்திரிகை எழுத்தாளர் டிராஸ்னின், எபிரெய பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களில் மறைந்துள்ள தகவலை தேடும் முயற்சியில் தன் சொந்த சோதனைகளைச் செய்தார். பைபிள் வாக்கியத்தில் ஒவ்வொரு 4,772 எழுத்துக்களுக்கு ஒருமுறை, இஷாக் ரபீனின் பெயரை கண்டதாக டிராஸ்னின் சொல்கிறார். பைபிள் வாக்கியத்தில், வரிக்கு 4,772 எழுத்துக்கள் என்ற கணக்கில் வரிசைப்படுத்தி, உற்றுப்பார்க்கையில் ரபீனுடைய பெயரை (செங்குத்தாக) தான் கண்டதாக சொல்கிறார். அதற்குக் குறுக்கே ஒரு வரி சென்றது (கிடைமட்டமாக, உபாகமம் 4:41). அதை “கொல்லவிருக்கும் கொலையாளி” என்று டிராஸ்னின் மொழிபெயர்த்தார்.
உண்மையில் பார்த்தால் வேண்டுமென்றே இல்லாமல், கைப்பிசகாய் ஒரு மனிதனை கொன்றவனைப் பற்றியே உபாகமம் 4:41 பேசுகிறது. ஆகவே, விஞ்ஞானத்திற்கு பொருந்தாத டிராஸ்னினின் தற்போக்கான கருத்தை வைத்து, எந்த மூலவாக்கியத்திலும் அதைப் போன்ற செய்திகளைக் கண்டுபிடிக்கலாம் என்று சொல்லி, பலர் அதைக் குறைகூறி வாதாடியிருக்கிறார்கள். ஆனால் டிராஸ்னின் தன் போக்கிலேயே பிடிவாதமாக நின்று, இவ்வாறு சவால் விட்டார்: “என்னிடத்தில் குறை காண்போர், மாபி டிக்கில் [நாவலில்] பிரதம மந்திரியின் கொலையைப் பற்றி மறைந்திருக்கும் செய்தியைக் காட்டட்டும், அப்போது அவர்கள் சொல்வதை நம்புகிறேன்.”
தேவாவியால் ஏவப்பட்டதன் நிரூபணமா?
ஆஸ்திரேலிய நாஷனல் பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயன்ஸ் துறைப் பேராசிரியர் பிரென்டன் மெக்கே, டிராஸ்னினுடைய சவாலை ஏற்று மாபி டிக்கின்b ஆங்கில பிரதியின் உதவியோடு விரிவான கம்ப்யூட்டர் ஆராய்ச்சிகளைச் செய்தார். டிராஸ்னின் விவரித்த அதே முறையைப் பயன்படுத்தி, இந்திரா காந்தி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், ஜான் எஃப். கென்னடி, ஆப்ரஹாம் லிங்கன், இன்னும் மற்றவர்களுடைய படுகொலைகளின் “முன்னறிவிப்புகளைக்” கண்டதாக மெக்கே உரிமைபாராட்டுகிறார். இஷாக் ரபீனின் கொலையையும்கூட மாபி டிக் “தீர்க்கதரிசனம் சொன்னது” என்று அவர் கண்டுபிடித்தார்.
ஆதியாகமத்தின் எபிரெய வாக்கியத்திற்குத் திரும்புகையில், ரிப்ஸும் அவருடைய உடனுழைப்பாளர்களும் செய்த சோதனையின் விளைவுகளையும்கூட, பேராசிரியர் மெக்கேயும் அவருடைய உடனுழைப்பாளர்களும் சவால் விட்டிருக்கின்றனர். வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் ஏவப்பட்ட இரகசிய செய்திக்கும் சம்பந்தமே இல்லை, ஆராய்ச்சியாளர்கள் உபயோகிக்கும் வழிமுறைகளோடுதான் சம்பந்தப்பட்டிருக்கிறது. அதாவது இவர்கள் பகுத்தறிவை உபயோகித்து இப்படிப்பட்ட விஷயங்களை சொல்கின்றனர் என்பதே குற்றச்சாட்டு. இந்தக் குறிப்பின்பேரில் அறிஞர்களுக்கிடையே விவாதம் தொடருகிறது.
அத்தகைய மறைமுக செய்திகள், “ஸ்டான்டர்டு” அல்லது “ஒரிஜினல்” வாக்கியத்தில் வேண்டுமென்றே ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டது என்று சொல்லப்படுகையில் மற்றொரு பிரச்சினை எழும்புகிறது. ரிப்ஸும் அவரோடு சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் தங்கள் ஆராய்ச்சியை “பொதுவாக ஏற்கப்படும் ஆதியாகம மூலவாக்கியத்தின் அடிப்படையில்” செய்ததாக சொல்கிறார்கள். டிராஸ்னின் இவ்வாறு எழுதுகிறார்: “மூல எபிரெய மொழியில் இப்போதுள்ள எல்லா பைபிள்களிலுள்ள வார்த்தைகளும் எழுத்துக்கு எழுத்து மாறாமல் இருக்கின்றன.” ஆனால் இவ்வாறுதான் உள்ளதா? “அடிப்படையான” ஒரு மூலவாக்கியத்திற்கு மாறாக, வெவ்வேறு பூர்வ கையெழுத்துப் பிரதிகளில் ஆதாரங்கொண்ட எபிரெய பைபிளின் பல்வேறு பதிப்புகள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. பைபிள் செய்திதான் மாறவில்லை; தனிப்பட்ட கையெழுத்துப் பிரதிகளிலுள்ள வார்த்தைகளோ ஆங்காங்கே மாறியும் உள்ளனவே.
இன்று பல மொழிபெயர்ப்புகள் லெனின்கிராட் கையெழுத்துப் பிரதியை அடிப்படையாக கொண்டவை. இது, முழுமையான, மிகப் பூர்வ எபிரெய மசோரெட்டிக் கையெழுத்துப் பிரதி; பெரும்பாலும் பொ.ச. 1000-ம் ஆண்டில் நகல் எடுக்கப்பட்டது. ஆனால் ரிப்ஸும் டிராஸ்னினும், கொரன் என்ற வேறொரு மூலவாக்கியத்தைப் பயன்படுத்தினார்கள். ஆனால், லெனின்கிராட் கையெழுத்துப் பிரதி, “டிராஸ்னின் பயன்படுத்தின கொரன் பதிப்பிலிருந்து, உபாகமத்தில் மட்டுமே 41 எழுத்துக்கள் வேறுபடுகின்றன” என்று ஆர்த்தடாக்ஸ் ரபீயும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணித மேதையுமாக இருந்த ஷ்லோமோ ஸ்டர்ன்பர்க் விளக்கமளிக்கிறார். சவக்கடல் சுருள்களில், 2,000-த்திற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு நகல் எடுக்கப்பட்ட பைபிள் மூலவாக்கிய பகுதிகளும் அடங்கியுள்ளன. இந்தச் சுருள்களில் ஒவ்வொரு வார்த்தைக்கான எழுத்துக்கள், பிற்பட்ட மசோரெட்டிக் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து பெரும்பாலும் வேறுபடுகின்றன. உயிரெழுத்து குறிப்புகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததால், சில சுருள்களில், உயிரெழுத்து தொனிகளைக் குறிப்பதற்கு எழுத்துக்கள் ஏராளமாய் சேர்க்கப்பட்டிருந்தன. மற்ற சுருள்களில், குறைவான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. கையிருப்பிலுள்ள பைபிள் கையெழுத்துப் பிரதிகள் எல்லாவற்றையும் ஒப்பிட்டுக் காண்பது, பைபிள் மூலவாக்கியத்தின் அர்த்தம் மாறாமல் இருக்கிறதென்று காட்டுகிறது. எனினும், ஒவ்வொரு வார்த்தைகளுக்கான எழுத்துக்களும், எழுத்துக்களின் எண்ணிக்கையும், கையெழுத்துப் பிரதிகள் ஒன்றுக்கொன்றில் வேறுபடுகின்றன என்றும் அது தெளிவாக காட்டுகிறது.
ரகசிய செய்திகள் இருப்பதை முற்றிலும் மாறாத ஒரு மூலவாக்கியத்தை வைத்துத் தேடிப்பார்த்துத்தான் முடிவுசெய்ய முடியும். ஓர் எழுத்து மாறினாலும் ஒத்திசைவு இருக்காது; அப்படியே ஏதாவது ஒரு செய்தி அதில் இருந்தாலும், அந்தச் செய்தியும் முற்றிலுமாக மாறிவிடும். பைபிளின் மூலம் கடவுள் தம்முடைய செய்தியைப் பாதுகாத்து வைத்திருக்கிறார். ஆனால், நூற்றாண்டுகளினூடே ஏற்படும் ஒவ்வொரு வார்த்தைக்கான எழுத்துக்களிலும் மாற்றங்கள் ஏற்படாத வகையில் நுணுக்கமாக அவர் பாதுகாத்து வைக்கவில்லை. இது, பைபிளில் ஒரு ரகசிய செய்தியை அவர் மறைத்து வைக்கவில்லை என்று காட்டுகிறதல்லவா?—ஏசாயா 40:8; 1 பேதுரு 1:24, 25.
நமக்கு பைபிள் எழுத்துக்களில் ரகசிய செய்தி வேண்டுமா?
“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுல் மிகத் தெளிவாய் எழுதினார். (2 தீமோத்தேயு 3:16, 17) பைபிளிலுள்ள தெளிவான நேரடியான செய்தி, புரிந்துகொள்வதற்கோ பொருத்திப் பயன்படுத்துவதற்கோ மிகக் கடினமாக இல்லை; ஆனால் பல ஆட்கள் அதற்கு கவனம் செலுத்துவதில்லை. (உபாகமம் 30:11-14) பைபிள் தேவாவியால் ஏவப்பட்டது என்பதற்கு அதில் வெளிப்படையாக கொடுக்கப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்களே உறுதியான ஆதாரத்தை அளிக்கின்றன.c மறைக்கப்பட்ட செய்தியைப்போல், பைபிள் தீர்க்கதரிசனங்கள் குருட்டாம்போக்கானவை அல்ல.—2 பேதுரு 1:19-21, தி.மொ.
“நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (2 பேதுரு 1:16) பைபிள் எழுத்துக்களில் ரகசிய செய்தி மறைக்கப்பட்டுள்ளது என்ற பொதுக் கருத்து, யூத இறைமை கோட்பாட்டில் வேர்கொண்டுள்ளது. தேவாவியால் ஏவப்பட்ட பைபிளின் தெளிவான அர்த்தத்தை மறைத்து, கருத்தைப் புரட்டும் ‘சாமர்த்தியமான கட்டுக்கதைகளை’ பயன்படுத்துகிறது. எபிரெய வேதவாக்கியங்கள்தாமே, இத்தகைய மர்ம வியாக்கியானத்தை முற்றிலும் கண்டனம் செய்கின்றன.—உபாகமம் 13:1-5; 18:9-13.
கடவுளை அறியும்படி நமக்கு உதவிசெய்கிற பைபிளின் தெளிவான செய்தியும் போதனையும் நமக்கு கிடைத்திருப்பதற்கு நாம் எவ்வளவு சந்தோஷப்பட வேண்டும்! அவரவரின் சொந்த வியாக்கியானமாகவும், கம்ப்யூட்டர் உதவியால் கிடைக்கும் குருட்டாம்போக்கான கருத்தாகவும் இருக்கும் ரகசிய செய்திகளைத் தேடி நம்முடைய சிருஷ்டிகரைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சி செய்வதைப் பார்க்கிலும் இது மிக மேலானது.—மத்தேயு 7:24, 25.
[அடிக்குறிப்புகள்]
a எபிரெயுவில், எண்களின் மதிப்புகளும் எழுத்துக்களால் குறிக்கப்படலாம். அதனால்தான் இந்தத் தேதிகளும் எண்களின் உருவில் அல்லாமல் எபிரெய வாக்கியத்தில் காணப்பட்ட எழுத்துக்களின் உருவிலேயே புரிந்துகொள்ளப்பட்டது.
b எபிரெயு மொழி உயிரெழுத்துக்கள் இல்லாத ஒரு மொழி. சூழமைவின்படி, உயிரெழுத்தின் தொனி வாசகரால் இடையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. சூழமைவை கவனியாமல் விட்டால், வேறு உயிரெழுத்தின் ஒலிகளை இடையில் சேர்ப்பதன் மூலம் ஒரு வார்த்தையின் அர்த்தமே முழுமையாக மாற்றப்படலாம். ஆங்கில மொழி திட்டமான உயிரெழுத்துக்களை உடையது. இது இத்தகைய வார்த்தை ஆராய்ச்சியை இன்னும் அதிக கடினமாகவும் வரம்புக்குட்படுத்துவதாகவும் ஆக்குகிறது.
c பைபிள் தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டதைக் குறித்தும் அதன் தீர்க்கதரிசனத்தைக் குறித்தும் கூடுதலான தகவலுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்துள்ள எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டைப் பாருங்கள்.