அடையாளங்களின் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பது வெகு முக்கியம்!
“என் மகன் ஆன்ட்ரேயாஸுக்கு சாதாரண தலைவலி என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் அவனுக்குப் பசியில்லாமல் போனது, ஜுரத்தில் உடம்பு நெருப்பாய் கொதித்தது. தலைவலியால் துடியாய்த் துடித்தான். என்ன செய்வதென்று தெரியாமல் ரொம்பவும் கவலைப்பட ஆரம்பித்தேன். என் கணவர் வீட்டிற்கு வந்ததுமே, ஆன்ட்ரேயாஸை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போனோம். அவனுக்கிருந்த அறிகுறிகளையெல்லாம் பார்த்துவிட்டு, உடனடியாக அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகச் சொன்னார். அவனுக்கு வந்திருந்தது சாதாரண தலைவலி அல்ல, அதைவிட சீரியஸான ஒன்று என்பது அப்போது தெரிந்தது. மூளை சவ்வு அழற்சி நோய் அவனைத் தாக்கியிருந்தது. சிகிச்சைக்குப் பின், சீக்கிரத்திலேயே குணமானான்.”—கெர்ட்ரூட், ஜெர்மனியிலுள்ள ஒரு தாய்.
கெர்ட்ரூட்டின் நிலை ஒருவேளை ஏராளமான பெற்றோர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். தங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லாததைச் சுட்டிக்காட்டுகிற அறிகுறிகளை அவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். எல்லா வியாதிகளுமே சீரியஸானவை அல்ல என்றாலும், சுகவீனத்திற்கான ஏதாவது அறிகுறி தங்கள் குழந்தைகளிடம் தென்பட்டால் பெற்றோர்கள் அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளவே முடியாது. அந்த அறிகுறிகளைக் கவனிப்பதும் தக்க நடவடிக்கை எடுப்பதும் நிலைமையைப் பெருமளவு மாற்றக்கூடும். அது ஒரு சீரியஸான விஷயம்.
உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டுமல்ல, வேறு காரியங்களுக்கும் இது பொருந்தும். இதற்கு ஓர் உதாரணம் டிசம்பர் 2004-ல், இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி பேரழிவாகும். ஆஸ்திரேலியா, ஹவாய் போன்ற இடங்களிலிருந்த அரசாங்க நிறுவனங்கள், வட சுமத்திரா தீவில் மிகப் பெரியளவில் பூகம்பம் நிகழ்வதற்கான அறிகுறிகள் தென்படுவதைக் கண்டன, அதன் பின்விளைவாக என்னென்ன ஆபத்துகள் நேரிடலாம் என்பதையும் கணித்தன. ஆனால் அபாயகரமான அந்தப் பகுதிகளில் வசித்தவர்களுக்கு, அது பற்றிய எச்சரிப்பைப் பெறுவதற்கும் அதற்கேற்றாற்போல் நடவடிக்கை எடுப்பதற்கும் எந்த வழியும் இல்லாமல்போனது. விளைவு: 2,20,000-க்கும் அதிகமான உயிர்கள் பரிதாபமாய் பலியாயின.
அதைவிட முக்கியமான அடையாளங்கள்
இயேசு கிறிஸ்து பூமியிலிருந்தபோது, தமக்குச் செவிகொடுத்துக்கொண்டிருந்த ஜனங்களிடம் அடையாளங்களைக் கவனித்து, அதற்கேற்றாற்போல் நடக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். மிக மிக முக்கியமான ஒரு விஷயத்தையும் அவர் அப்போது சொன்னார். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?”—மத்தேயு 16:1-3.
“காலங்களின் அடையாளங்களை” பற்றி இயேசு குறிப்பிட்டபோது, முதல் நூற்றாண்டிலிருந்த அந்த யூதர்கள், அவர்கள் வாழ்ந்து வந்த காலத்தின் அவசரத்தன்மையை உணர்ந்திருக்க வேண்டும் என்பதையே அவர் சுட்டிக்காட்டினார். ஏனெனில் யூத ஒழுங்குமுறை சீக்கிரத்தில் மிகப் பெரிய ஆபத்தைச் சந்திக்க இருந்தது, இதனால் அவர்கள் எல்லோருமே பாதிக்கப்பட இருந்தார்கள். மரிப்பதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் இயேசு தம்முடைய சீஷர்களிடம் மற்றொரு அடையாளத்தைப் பற்றி, அதாவது தம்முடைய பிரசன்னத்தின் அடையாளத்தைப் பற்றிச் சொன்னார். அன்று அவர் சொன்ன விஷயம், இன்று எல்லோருக்குமே அதிமுக்கியமாய் இருக்கிறது.