பைபிளின் கருத்து
வழிநடத்துதலுக்காக ஏன் பைபிளை நாட வேண்டும்?
“வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” —2 தீமோத்தேயு 3:16, 17.
உங்கள் வாழ்க்கையில் வழிநடத்துதலைப் பெறுவதற்காக நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? கற்பனைக்கு எட்டிய அத்தனை விஷயங்கள் சம்பந்தமாகவும் ஆலோசனைகளுக்கு இன்று பஞ்சமே இல்லை. அப்படியிருந்தும், வழிநடத்துதலுக்காக அநேகர் பழம்பெரும் புத்தகமான பைபிளைத்தான் நாடுகிறார்கள்.
ஆனால், பெரும்பான்மையினர் பைபிளை அற்பமாக நினைக்கிறார்கள், குறிப்பாக தகவல் துறையும் நவீன தொழில்நுட்பத் துறையும் வளர்ந்துவரும் இக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பைபிள் இக்காலத்துக்கு ஒத்துவராத புத்தகம் என்று மதிப்பிற்குரிய சில ஆசிரியர்களும் விஞ்ஞானிகளும் கருதுகிறார்கள். இது சரியா? இன்று வழிநடத்துதலுக்கு எங்குமே பஞ்சம் இல்லாதபோது, ஒருவர் ஏன் பைபிளை நாட வேண்டும்?
சத்திய புத்தகம்
ஒரு சமயம், இயேசு கிறிஸ்து கிணற்றருகில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு சமாரியப் பெண்ணிடம் பேசினார். அவளிடம் இவ்வாறு கூறினார்: “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.” (யோவான் 4:24) இந்த வார்த்தைகள் கடவுளுக்குப் பிரியமான வணக்கமுறை ஒன்று இருக்கிறதென்பதைக் காட்டுகின்றன. நம் வணக்கம் உண்மையானதாய் இருக்க வேண்டுமானால், கடவுள் தம்மைப் பற்றி பைபிளில் சொல்லியிருப்பதற்கு இசைவாக நாம் அவரை வணங்க வேண்டும். கடவுளுடைய வார்த்தையான அதில் சத்தியம் அடங்கியிருக்கிறது.—யோவான் 17:17.
அநேக மதங்கள் பைபிளை நம்புவதாகச் சொல்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான கருத்துகளையே போதிக்கின்றன. இதன் விளைவாக, பைபிள் உண்மையிலேயே என்ன போதிக்கிறது என்பது பற்றிய குழப்பம் நிலவுகிறது. இயேசு, கடவுளா அல்லது கடவுளின் மகனா? மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறதா, இல்லையா? நரகம் என்றொரு இடம் உண்மையில் இருக்கிறதா? சாத்தான் நிஜமான ஓர் ஆளா? கிறிஸ்தவராக இருப்பது எதை உட்படுத்துகிறது? நம் சிந்தனைகளும் செயல்களும் கடவுளுக்கு முக்கியத்துவமுடையதாக இருக்கின்றனவா? திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்வது உண்மையான அன்புக்கு அடையாளமா? மதுபானம் குடிப்பது தவறா?a இந்த விஷயங்களைப் பற்றிய சத்தியத்தை தாங்கள் போதிப்பதாக அநேக மதங்கள் சொல்லிக்கொள்கின்றன. ஆனால் அவற்றின் கோட்பாடுகள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. அவை எல்லாமே உண்மையாக இருக்க முடியாது.—மத்தேயு 7:21-23.
அப்படியென்றால், கடவுளைப் பற்றிய உண்மையையும், அவருக்குப் பிரியமான வணக்க முறையையும் நீங்கள் எப்படித் தெரிந்துகொள்வீர்கள்? உங்களுக்கு ஏதோவொரு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? முடிந்தவரை, அந்த அறுவை சிகிச்சையில் நிபுணராக விளங்கும் மருத்துவர் ஒருவரையே தீவிரமாகத் தேடுவீர்கள். அந்த மருத்துவர் பெற்றுள்ள கல்வியையும் அனுபவத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்வீர்கள், பிறகு அவரைச் சந்தித்துப் பேசுவீர்கள். கடைசியில், எல்லா ஆதாரங்களையும் ஒத்துப்பார்த்து அவர் ஒரு சிறந்த மருத்துவர் என்பதை உறுதிசெய்த பிறகுதான், அந்த மருத்துவர்மீது முழு நம்பிக்கை வைப்பீர்கள், அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வீர்கள். அவரைப் பற்றி மற்றவர்களுக்கு வித்தியாசமான அபிப்பிராயம் இருக்கலாம். ஆனால் அந்த மருத்துவர்மீது உங்களுக்குள்ள நம்பிக்கை இப்போது ஆதாரப்பூர்வமாக இருக்கும்.
அதேவிதமாக, கிடைத்திருக்கும் ஆதாரங்களை நீங்கள் நேர்மையாகவும் முழுமையாகவும் ஆராய்ந்து பார்த்தால், கடவுள் மீதும் பைபிள் மீதும் உங்களால் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும். (நீதிமொழிகள் 2:1-4) உண்மையான வணக்க முறை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குப் பதிலைக் கண்டுபிடிக்க பின்வரும் இவ்விரண்டில் ஒன்றை நீங்கள் செய்யலாம்: மனிதர்களின் முரணான போதனைகளையும் அபிப்பிராயங்களையும் ஆராயலாம், அல்லது பைபிளின் கருத்தை ஆராயலாம்.
துல்லியமானது, நடைமுறையானது
பைபிளை நீங்கள் அலசி ஆராய்ந்தால் “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது [“ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது, NW]; . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது”b என்பதற்கான போதிய ஆதாரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். (2 தீமோத்தேயு 3:16, 17) உதாரணமாக, பைபிளில் நுட்ப விவரங்கள் அடங்கிய தீர்க்கதரிசனங்கள் ஏராளம் உள்ளன. இதன் நிறைவேற்றங்களுக்குச் சரித்திரம் சான்றளிக்கிறது. (ஏசாயா 13:19, 20; தானியேல் 8:3-8, 20-22; மீகா 5:2) பைபிள் ஓர் அறிவியல் புத்தகம் அல்ல என்றாலும், அது அறிவியல் பூர்வமாகத் துல்லியமாய் இருக்கிறது. இயற்கை, ஆரோக்கியம் பற்றிய உண்மைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னரே பைபிள் பதிவு செய்துள்ளது.—லேவியராகமம் 11:27, 28, 32, 33; ஏசாயா 40:22.
மேலும், ஞானமான தீர்மானங்கள் எடுப்பதற்கு பைபிள் நமக்கு உதவுகிறது. குடும்ப வாழ்க்கைக்கு, உடல் நலத்திற்கு, மன நலத்திற்கு, வியாபாரத்திற்கு, தினசரி காரியங்களுக்கு என பைபிளில் ஏராளமான நடைமுறை ஆலோசனைகள் உள்ளன. நீதிமொழிகள் 2:6, 7 இவ்வாறு சொல்கிறது: “கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்து வைத்திருக்கிறார்.” வழிநடத்துதலுக்காக பைபிளை நாடினால், ‘நன்மை தீமையின்னதென்று பகுத்தறியும்’ திறனை நீங்கள் பயிற்றுவிக்கலாம்.—எபிரெயர் 5:14.
கடவுளுடைய வார்த்தை வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளவும் நமக்கு உதவுகிறது. (யோவான் 17:3; அப்போஸ்தலர் 17:26, 27) அது உலக நிலைமைகளின் அர்த்தத்தை விளக்குகிறது. (மத்தேயு 24:3, 7, 8, 14; 2 தீமோத்தேயு 3:1-5) பூமியிலிருந்து தீமையைக் கடவுள் எப்படி அகற்றப்போகிறார் என்றும் பரிபூரண ஆரோக்கியத்தையும் நிரந்தர வாழ்க்கையையும் மனிதகுலம் எப்படிச் சந்தோஷமாக அனுபவிக்கப்போகிறது என்றும் பைபிள் சொல்கிறது.—ஏசாயா 33:24; தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:3, 4.
பைபிள் உண்மையிலேயே நம்பகமான, நடைமுறையான ஞானத்தின் பிறப்பிடம் என்பதை லட்சோபலட்சம் பேர் தனிப்பட்ட விதமாக உணர்ந்திருக்கிறார்கள். இனி வரும் எல்லா விழித்தெழு! பத்திரிகைகளிலும் “பைபிளின் கருத்து” என்ற தலைப்பில் கட்டுரைகள் இடம்பெற இருக்கின்றன, இவற்றைக் கருத்தூன்றி படிக்குமாறு விழித்தெழு! பிரசுரிப்பாளர்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறார்கள். அப்படிச் செய்வீர்களானால், உங்கள் சொந்த வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த ஆலோசனைகளை பைபிள்தான் தருகிறது என்பதற்கான இன்னும் அநேக அத்தாட்சிகளைக் காண்பீர்கள்.
நீங்கள் யோசித்ததுண்டா?
◼ கடவுளுக்குப் பிரியமான வணக்க முறை எது?—யோவான் 4:24.
◼ கடவுளுடைய ஞானத்திலிருந்து பயன் அடைய நீங்கள் என்ன செய்ய வேண்டும்?—நீதிமொழிகள் 2:1-4.
◼ எவ்விதத்தில் பைபிள் நடைமுறையான வழிநடத்துதலுக்குப் பிறப்பிடமாய் இருக்கிறது?—எபிரெயர் 5:14.
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! பத்திரிகையில் தவறாமல் வெளிவருகிற “பைபிளின் கருத்து” என்ற கட்டுரையில் இவற்றிற்கும் இன்னும் பிற கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும்.
b பைபிள் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதற்கான அத்தாட்சிகளை பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் பாருங்கள்; இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது.