வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
நோவா எத்தனை சுத்தமான மிருகங்களைப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டார்—சுத்தமான ஒவ்வொன்றிலும் ஏழு மிருகங்களையா, ஏழு ஜோடிகளையா?
நோவா பேழையைக் கட்டி முடித்த பிறகு யெகோவா அவரிடம் பின்வருமாறு சொன்னார்: “நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். . . . நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும் [“ஏழுகளாகவும்,” NW] சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும் [“இரண்டை மட்டும்,” NW] . . . சேர்த்துக்கொள்.” (ஆதியாகமம் 7:1-3) இதற்கான மூல எபிரெய வார்த்தையை, ஈஸி டு ரீட் வர்ஷன், பொது மொழிபெயர்ப்பு, கத்தோலிக்க பைபிள் போன்ற சில மொழிபெயர்ப்புகள் ‘ஏழு ஜோடி’ என மொழிபெயர்த்திருக்கின்றன.
மூல மொழியில் ‘ஏழுகள்’ என்ற வார்த்தை, சொல்லர்த்தமாக “ஏழு ஏழு” என்பதை அர்த்தப்படுத்துகிறது. (ஆதியாகமம் 7:2) எனினும், எபிரெய மொழியில் ஓர் எண்ணைத் திரும்பவும் குறிப்பிடுவது, எப்போதுமே அந்த எண்களை ஒன்றாகக் கூட்ட வேண்டுமென அர்த்தப்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு, 2 சாமுவேல் 21:20, ‘கைகளில் அவ்வாறு விரல்களும் கால்களில் அவ்வாறு விரல்களும்’ இருந்த ‘நெட்டையான ஒரு மனுஷனைப்பற்றி’ சொல்கிறது. எபிரெய மொழியில் ‘ஆறு’ என்ற எண் இருமுறை வந்துள்ளது. எனினும் இது, அந்த ராட்சதனுக்கு ஒவ்வொரு கையிலும் ஆறு ஜோடி (அதாவது, 12) விரல்களும் ஒவ்வொரு காலிலும் ஆறு ஜோடி விரல்களும் இருந்ததென அர்த்தப்படுத்துவதில்லை. எபிரெய மொழியின் இலக்கண விதிப்படி இருமுறை குறிப்பிடுவது, ஒவ்வொரு கையிலும் காலிலும் இருந்த விரல்களைப் பிரித்துக் காட்டுவதையே குறிக்கிறது.
ஆக, ஆதியாகமம் 7:9, 15-ல் “ஜோடு” என்பது இருமுறை குறிப்பிடப்பட்டிருப்பது இரண்டு ஜோடிகளை அல்லது நான்கை அர்த்தப்படுத்தாததைப் போலவே, ஆதியாகமம் 7:2-ல் “ஏழு ஏழு” எனக் குறிப்பிடப்பட்டிருப்பது ஏழு ஜோடிகளை அல்லது 14-ஐ அர்த்தப்படுத்துவதில்லை. எனவே, சுத்தமான மிருகங்களில் ‘ஏழுகளும்’ அசுத்தமான மிருகங்களில் ‘இரண்டு மட்டும்’ பேழைக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
எனினும், ஆதியாகமம் 7:2-ல் ‘ஏழுகள்’ என்பதற்கு முன்பாக “ஆணும் பெண்ணுமாக” என்று சொல்லப்பட்டிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? இது, சுத்தமான மிருகங்கள் ஒவ்வொன்றிலும் ஏழு ஜோடிகளைச் சேர்த்துக்கொள்ளும்படி நோவாவுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டதாக சிலரை நினைக்க வைத்திருக்கிறது. ஆயினும், சுத்தமான மிருகங்கள் இனப்பெருக்கத்துக்காக மட்டுமே பாதுகாக்கப்படவில்லை. பேழையைவிட்டு வெளியே வந்ததும் ‘நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவற்றைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டதாக’ ஆதியாகமம் 8:20 சொல்கிறது. ஒவ்வொரு வகை சுத்தமான மிருகங்களிலும் ஏழு மிருகங்களை நோவா கைவசம் வைத்திருந்தது, அவற்றில் ஒன்றைப் பலி செலுத்த அவருக்கு உதவியாய் இருந்தது; மீதமுள்ள மூன்று ஜோடிகள் தங்கள் இனத்தைப் பெருக்குவதற்கு உதவியாய் இருந்தது.