மெய் வணக்கமும் புறமதமும் மோதிய இடம்
பூர்வ எபேசுவின் இடிபாடுகளில், அதாவது துருக்கியின் மேற்குக் கரையோரப் பகுதியில், நூறு வருடங்களுக்கும் மேலாக புதைபொருள் ஆராய்ச்சி மும்முரமாக நடைபெற்று வந்திருக்கிறது. இங்கு பல கட்டடங்கள் திரும்பக் கட்டப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் இங்கு கண்டெடுத்த பல பொருட்களை ஆய்வு செய்து நிறைய விளக்கம் தந்திருக்கின்றனர். துருக்கியில் சுற்றுலாப் பயணிகளைச் சுண்டியிழுக்கும் இடங்களில் ஒன்றாக எபேசு பட்டணமும் இருப்பதற்கு இவையே காரணம்.
எபேசுவைப் பற்றி என்ன தெரிய வந்துள்ளது? சிறப்பு வாய்ந்த அந்தப் பூர்வ பெருநகரம் இன்று எவ்வாறு விவரிக்கப்படுகிறது? எபேசுவின் இடிபாடுகளையும் ஆஸ்திரியாவில் வியன்னாவிலுள்ள எபேசு கண்காட்சியகத்தையும் போய் பார்த்தால் மெய் வணக்கமும் புறமதமும் எவ்வாறு எபேசுவில் மோதியது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். முதலில், எபேசுவின் பின்னணிக்குச் சற்று கவனம் செலுத்தலாம்.
அநேகர் கைப்பற்ற விரும்பிய இடம்
பொ.ச.மு. 11-வது நூற்றாண்டின்போது யூரேஷியாவில் அமைதிக் குலைந்தது, பலரும் அங்கிருந்து குடிமாறிச் சென்றார்கள். அச்சமயத்தில்தான் அயோனிய கிரேக்கர்கள் ஆசியா மைனரின் மேற்குக் கரையோரப் பகுதியில் குடியேறத் தொடங்கினார்கள். அந்த ஆரம்ப குடியேறிகள் தெய்வத் தாய் வழிபாட்டில் ஈடுபட்ட மக்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டார்கள். இந்தத் தேவதைதான் பின்பு எபேசுவின் ஆர்டிமிஸ் ஆனாள்.
பொ.ச.மு. 7-ம் நூற்றாண்டின் மத்திபத்தில் வடக்கே இருந்த கருங்கடல் பகுதியிலிருந்து ஸமிரியர் என்ற நாடோடிகள் ஆசியா மைனரை சூறையாட வந்தார்கள். பிறகு, கிட்டத்தட்ட பொ.ச.மு. 550-ல் லிடியா நாட்டு அரசன் க்ரோயஸஸ் அப்பகுதியின் மீது ஆட்சி செய்தான். இந்த வலிமை வாய்ந்த அரசன் செல்வ செழிப்போடு வாழ்ந்ததால் அவன் பெயர் கொடிகட்டிப் பறந்தது. பெர்சிய அரசன் கோரேசு தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கையில் அயோனிய பட்டணங்களைக் கைப்பற்றினார். அவற்றுள் எபேசுவும் ஒன்று.
பொ.ச.மு. 334-ல் மக்கெதோனியாவைச் சேர்ந்த அலெக்சாந்தர் பெர்சியாவுக்கு எதிராக போர் தொடுத்து எபேசுவின் புதிய அரசரானார். பொ.ச.மு. 323-ல் அலெக்சாந்தரின் அகால மரணத்திற்குப் பிறகு எபேசுவை யார் ஆட்சி செய்வது என்று அவரது தளபதிகளுக்குள் போட்டி எழுந்தது. பொ.ச.மு. 133-ல் பெர்கமுவின் அரசன் மூன்றாம் அட்டலஸுக்கு வாரிசு இல்லாதிருந்ததால், தன் மரணத்திற்குப் பிறகு எபேசு பட்டணத்தை ரோமர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்தான். இப்படியாக எபேசு, ஆசியாவிலிருந்த ரோம மாகாணத்தின் பாகமானது.
மெய் வணக்கம் புறமதத்துடன் மோதியது
அப்போஸ்தலன் பவுல் தனது இரண்டாவது மிஷனரி பயணத்தின் இறுதியில், அதாவது பொ.ச. முதல் நூற்றாண்டில் எபேசுவுக்கு வந்தார். அப்போது அங்குக் கிட்டத்தட்ட 3,00,000 பேர் குடியிருந்தார்கள். (அப்போஸ்தலர் 18:19-21) தனது மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது பவுல் மறுபடியும் எபேசுவுக்கு வந்தார்; அப்போது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி புது பலத்துடன் ஆலயத்தில் பிரசங்கித்தார். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு யூதர்கள் கடுமையாக எதிர்த்ததால், திறன்னு என்பவருடைய வித்தியாசாலையில் தினமும் பிரசங்கிக்க தீர்மானித்தார். (அப்போஸ்தலர் 19:1, 8, 9) அங்கு அவர் இரண்டு வருடங்கள் பிரசங்கித்தார்; அதோடு அற்புத குணப்படுத்துதல், பொல்லாத ஆவிகளை விரட்டுதல் போன்ற புதுமைகளையும் செய்தார். (அப்போஸ்தலர் 19:10-17) இதனால் அநேகர் சாட்சிகளானார்கள் என்பதில் ஆச்சரியமேதுமில்லை! ஆம், யெகோவாவின் வார்த்தை எங்கும் பரவியது. மாயவித்தைக்காரர்கள் அநேகர் தங்களுடைய விலைமதிப்பு வாய்ந்த புத்தகங்களை மனமுவந்து எரித்தார்கள்.—அப்போஸ்தலர் 19:19, 20.
பவுலின் சிறப்பு வாய்ந்த பிரசங்கத்தைக் கேட்டு ஆர்டிமிஸ் தேவதையை வழிபடுவதைப் பலர் விட்டுவிட்டார்கள்; அதேசமயத்தில், அது புறமத வழிபாட்டை ஆதரித்தவர்களின் கோபத்தையும் கிளறியது. ஆர்டிமிஸ் தேவதைக்கு வெள்ளியில் சிறந்த கோயில் சிற்பங்கள் செய்வது கொள்ளை லாபம் தரும் தொழிலாக இருந்தது. வெள்ளித்தட்டான்களுடைய தொழிலுக்கே மோசம் வந்தபோது தெமேத்திரியு என்ற ஒருவன் அவர்களைக் கலவரம் செய்ய தூண்டிவிட்டான்.—அப்போஸ்தலர் 19:23-32.
“எபேசியருடைய தியானாளே [“ஆர்டிமிஸே,” NW] பெரியவள்” என்று மக்கள் இரண்டு மணிநேரம் கோஷம் போட்டபின் கலவரம் ஓய்ந்தது. (அப்போஸ்தலர் 19:34) அதன் பிறகு பவுல் தனது சக கிறிஸ்தவர்களை மறுபடியும் உற்சாகப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். (அப்போஸ்தலர் 20:1) அவர் மக்கெதோனியாவிற்குப் புறப்பட்டு சென்றும் ஆர்டிமிஸ் வழிபாடு தலைதூக்கவில்லை, அது மெல்ல மெல்ல மறைந்து போனது.
ஆர்டிமிஸின் கோயில் அழிகிறது
எபேசுவில் ஆர்டிமிஸின் வழிபாடு வேரூன்றி இருந்தது. க்ரோயஸஸ் அரசரின் காலத்துக்கு முன் அங்கு சிபலி என்ற தெய்வத் தாய் முக்கிய தெய்வமாக வழிபடப்பட்டு வந்தாள். சிபலிக்கும் கிரேக்க தெய்வங்களுக்கும் இடையே புராண ரீதியில் வம்சாவளி தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் கிரேக்கர்களும் கிரேக்கரல்லாதவர்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தெய்வத்தை உருவாக்க முடியும் என்று க்ரோயஸஸ் நம்பினார். இவருடைய உதவியுடன் பொ.ச.மு. 6-ம் நூற்றாண்டின் மத்திபத்தில் சிபலிக்கு அடுத்தபடியாக ஆர்டிமிஸுக்குக் கோயில் எழுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்தக் கோயில் கிரேக்க கட்டிடக் கலைக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. இது போன்ற பிரமாண்டமான கட்டிடத்தைக் கட்டுவதற்கு இவ்வளவு பெரிய பளிங்கு கற்களைப் பயன்படுத்தியதாகச் சரித்திரமே இல்லை. இந்தக் கோயில் பொ.ச.மு. 356-ல் தீக்கு இரையானது. பழைய மகிமை குன்றாதபடி இக்கோயில் திரும்பக் கட்டப்பட்டபோது, அது வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் இடமாகவும் யாத்திரீகர்களைக் கவர்ந்திழுக்கும் இடமாகவும் ஆனது. 73 மீட்டர் அகலமும் 127 மீட்டர் நீளமுள்ள மேடையின் மீது ஏறக்குறைய 50 மீட்டர் அகலமும் 105 மீட்டர் நீளமுமுள்ள கோயில் திரும்பக் கட்டப்பட்டது. ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக அது கருதப்பட்டது. இருப்பினும், பலர் இதை விரும்பவில்லை. எபேசுவின் தத்துவ அறிஞர் ஹெராக்ளைட்டஸ் பலிபீடத்திற்குச் செல்லும் இருண்ட நடைபாதையை இழிவான காரியங்களின் இருளுக்கு ஒப்பிட்டார். மேலும் அக்கோயிலுக்கு செல்வோரின் ஒழுக்க தராதரங்களை மிருகங்களுடையதைவிட படுகேவலமானதாகக் கருதினார். என்றாலும், அநேகர் எபேசுவிலுள்ள ஆர்டிமிஸின் கோயில் அழியவே அழியாது என்று நினைத்தார்கள். ஆனால் சரித்திரம் அதன் கதையை மாற்றிவிட்டது. “பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் முடிவிற்குள் ஆர்டிமிஸையும் புகழ்பெற்ற இன்னும் பல தெய்வங்களையும் மக்கள் வழிபடுவது திடீரென்று குறைய ஆரம்பித்தது” என்று எஃபிஸாஸ்—டே நொய்யி ஃபுயிரா (எஃபிசஸ்—த நியூ கைடு) என்ற புத்தகம் சொல்கிறது.
பொ.ச. மூன்றாம் நூற்றாண்டில் எபேசு பட்டணத்தைக் கடும் நிலநடுக்கம் தாக்கியது. அதுமட்டுமல்ல கருங்கடலில் பயணித்த காத்தியர்கள் ஆர்டிமிஸ் கோயிலின் கண்கவர் சொத்துக்களைக் கொள்ளையடித்து அதனை தீக்கு இரையாக்கினார்கள். “தன் உறைவிடத்தையே பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தோல்வி கண்ட ஆர்டிமிஸ், இனி எப்படி பட்டணத்தின் காவல் தேவதையாக இருக்க முடியும்?” என்று மேலே குறிப்பிடப்பட்ட புத்தகம் கேட்கிறது.—சங்கீதம் 135:15-18.
முடிவாக பொ.ச. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் பேரரசர் முதலாம் தியடோஷியஸ், ‘கிறிஸ்தவத்தை’ தேசிய மதமென உறுதிப்படுத்தினார். ஒரு காலத்தில் புகழ்பெற்ற கோயிலாக விளங்கிய ஆர்டிமிஸ் கோயிலின் கட்டிட வேலைப்பாடுகள் சீக்கிரத்திலேயே கட்டிட பொருட்களின் கற்சுரங்கமானது. ஆர்டிமிஸின் வழிபாடு சுவடு தெரியாமல் போனது. இந்தக் கோயிலை உலக அதிசயங்களுள் ஒன்றென ஒரு சித்திரக்கவி புகழ்ந்து பாடினதைக் குறித்து ஒரு பார்வையாளர் சொல்லுகையில், “இன்று அது மிகப் பரிதாபமான நிலையிலுள்ள பாழடைந்த கட்டிடம் மட்டுமே” என்கிறார் அவர்.
ஆர்டிமிஸிலிருந்து “தெய்வத்தின் தாயாக”
எபேசு சபையின் மூப்பர்களை பவுல் எச்சரிக்கையில், தான் சென்ற பிறகு “கொடிதான ஓநாய்கள்” போன்றவர்கள் எழும்புவார்கள் என்றும் சபையில் சிலர் ‘மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள்’ என்றும் சொன்னார். (அப்போஸ்தலர் 20:17, 29, 30) அவர் சொன்னது போலவே நடந்தது. எபேசுவில் பொய் மதம் விசுவாசதுரோக கிறிஸ்தவத்தின் வடிவில் தழைத்தோங்கியதாக சம்பவங்கள் காட்டுகின்றன.
பொ.ச. 431-ல், எபேசுவில் மூன்றாவது கிறிஸ்தவ திருச்சபை பிரிவுகளின் மாநாடு நடைபெற்றது. அங்கு கிறிஸ்துவின் தன்மையைக் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. “கிறிஸ்து ஒரேவொரு தன்மையை, அதாவது தெய்வீக தன்மையை உடையவர் . . . என்ற அலெக்சாந்திரியா பட்டணத்தாரின் கருத்தே மேலோங்கி நின்றது” என்று எஃபிஸாஸ்—டே நொய்யி ஃபுயிரா என்ற புத்தகம் விளக்குகிறது. இது அநேக பாதிப்புகளை ஏற்படுத்தியது. “எபேசுவில் எடுக்கப்பட்ட முடிவான தீர்மானத்தின்படி, கிறிஸ்துவை சுமந்தவள் என்ற ஸ்தானத்திலிருந்து தெய்வத்தை சுமந்தவள் என்ற ஸ்தானத்திற்கு மரியாளை உயர்த்தியது அவளை வழிபடுவதற்கு வழிசெய்தது மட்டுமல்லாமல் முதன்முறையாக சர்ச்சுக்குள் மிகப் பெரிய கருத்து வேறுபாட்டையும் புகுத்தியது. . . . இந்த விவாதம் இந்நாள்வரை தொடர்ந்திருக்கிறது.”
இப்படியாக சிபலி மற்றும் ஆர்டிமிஸின் வழிபாடு மறைந்து “தெய்வத்தை சுமந்தவள்” அல்லது “தெய்வத்தின் தாய்” என்றழைக்கப்படும் மரியாளின் வழிபாடு உருவானது. மேற்குறிப்பிடப்பட்ட புத்தகம் சொல்கிறபடி, “எபேசுவில் மரியாளின் வழிபாடு இன்றுவரை பாரம்பரியமாக இருந்து வருகிறது. . . . ஆர்டிமிஸின் வழிபாட்டை விளக்காமல் மரியாளின் வழிபாட்டை விளக்க முடியாது.”
சரித்திரத்தின் குப்பை தொட்டியில்
ஆர்டிமிஸ் வழிபாடு மங்கியதைத் தொடர்ந்து எபேசு பட்டணம் வீழ்ச்சியடைந்தது. எபேசுவில் ஏற்பட்ட நில நடுக்கங்கள், மலேரியா, துறைமுகத்தில் படிப்படியாகச் சேறுபடிதல் ஆகியவை அந்த இடத்தைக் குடியிருப்புக்கு லாயக்கற்றதாகச் செய்தன.
பொ.ச. ஏழாம் நூற்றாண்டில், இஸ்லாம் மிகப் பெரிய அளவில் பரவத் தொடங்கியிருந்தது. அதன் கொள்கையால் அரேபிய இன சமுதாயங்களை இணைத்ததோடு அது நிறுத்திக்கொள்ளவில்லை. பொ.ச. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகள் முழுவதிலும் அரேபிய கப்பற்படை எபேசுவைக் கொள்ளையடித்தது. அப்பட்டணத்தின் துறைமுகம் முழுவதும் சேற்றால் நிரப்பப்பட்டு, இடிபாடுகளே எஞ்சியபோது அது தரைமட்டமாவது நிச்சயமானது. ஒருகாலத்தில் சீரும் சிறப்புமிக்க பெருநகராக திகழ்ந்த எபேசுவில் (இன்று ஸெல்சூக் என்று அழைக்கப்படுகிற) ஆயாஸோலூக் என்ற சிறிய குடியிருப்பு மட்டுமே எஞ்சியுள்ளது.
எபேசுவின் இடிபாடுகள் வழியாக ஒரு சுற்றுலா
ஒரு காலத்தில் எபேசு புகழின் உச்சியிலிருந்ததை ஒருவர் புரிந்துகொள்ள அதன் இடிபாடுகளைப் போய் பார்க்க வேண்டும். மேல் நுழைவாயிலிலிருந்து சுற்றுலாவைத் தொடங்கினால் முதலில் கூரிடாஸ் தெருவிலிருந்து செல்ஸஸ் நூலகம் வரை ஒரு சிறப்புப்பார்வை கிடைக்கும். இந்தத் தெருவின் வலது பக்கத்தில் பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒடியம் என்ற சிறிய அரங்கம் உங்கள் கவனத்தை ஈர்க்கும். கிட்டத்தட்ட 1,500 இருக்கை வசதிகளைக் கொண்ட இந்த அரங்கம் ஒரு பேரவைக் கூடமாக மட்டுமல்லாமல் பொது மக்களின் பொழுதுபோக்குக் கூடமாகவும் பயன்படுத்தப்பட்டது. கூரிடாஸ் தெருவின் இருபுறமும் வரிசையாக கட்டிடங்கள் நின்றன. அவற்றுள் சில: அரசு விவகாரங்களை அலசி ஆராய்ந்த ஸ்டேட் அகோரா, ஹேட்ரியன் கோயில், சில பொது நீரூற்றுகள், மலைச்சரிவில் கட்டப்பட்ட எபேசு பட்டணத்துப் பிரபலங்களுடைய வீடுகள்.
பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில் நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கும் செல்ஸஸ் நூலகத்தின் அழகு உங்களை மயக்கிவிடும். அமர்ந்து படிப்பதற்குரிய அதன் பெரிய அறையின் மாடங்களில் ஏகப்பட்ட சுருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்நூலகத்தின் அழகிய முகப்பில் இருந்த நான்கு சிலைகள், செல்ஸஸ் போன்ற ரோம அரசாங்க ஊழியரிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட அடிப்படை குணங்களைச் சித்தரித்துக் காட்டின. அதாவது ஸோஃபீயா (ஞானம்), ஆரிடீ (ஒழுக்கம்), அநீயா (பக்தி), எபீஸ்டீமீ (அறிவு அல்லது புரிந்துகொள்ளுதல்) ஆகியவை. இதன் ஒரிஜினல் சிலைகளை வியன்னாவிலுள்ள எபேசு கண்காட்சியகத்தில் பார்க்க முடியும். அந்நூலகத்தின் முன்னறைக்குப் பக்கத்தில் இருக்கும் பெரிய கதவு வழியாக வெளியேறினால் டெட்ராகானோஸ் அகோரா என்ற சந்தைக்கு வந்துவிடுவோம். இந்த மாபெரும் சதுக்கத்தில் மக்கள் தங்களுடைய தினசரி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்; இந்தச் சதுக்கத்தைச் சுற்றி உலாவுவதற்குக் கூரையுடன்கூடிய நடைபாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அடுத்தபடியாக நீங்கள் மிகப் பெரிய அரங்கத்திற்கு செல்லும் பளிங்கு சாலைக்கு வருவீர்கள். இந்த அரங்கம் ரோமப் பேரரசின் ஆட்சி காலத்தில் இறுதியாக விஸ்தரிக்கப்பட்டு 25,000 பேர் உட்காரும் அளவுக்கு பெரிதாக கட்டப்பட்டது. இதன் முகப்பு ஏராளமான தூண்களாலும் சிற்பங்களாலும் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவற்றைப் பார்க்கும்போது வெள்ளித்தட்டான் தெமேத்திரியு அங்கு கூடிவந்திருந்த ஜனங்களின் மத்தியில் கலவரத்தை உசுப்பிவிட்டதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடியும்.
மிகப் பெரிய அரங்கத்திலிருந்து பட்டணத்து துறைமுகம் வரை நீண்டு செல்லும் தெரு பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். அதன் நீளம் சுமார் 500 மீட்டர்; அகலம் 11 மீட்டர். அதன் இருபுறமும் தூண்கள் வரிசையாக நின்றன. உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த அரங்க ஜிம்னேஸியமும் துறைமுக ஜிம்னேஸியமும்கூட இந்தத் தெருவில்தான் இருந்தன. தெருவின் முனையில் இருக்கும் மிகச் சிறந்த துறைமுக நுழைவாயில் உலகையே சுற்றி வருவதற்கு வாசலாக அமைந்தது. உலகத்தின் வியக்க வைக்கும் சில இடிபாடுகளைக் காண வந்த நம் சுற்றுலாப் பயணம் இத்துடன் முடிவுக்கு வருகிறது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இப்பெருநகர், அதோடு இன்னும் பல நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றின் மரத்தாலான ஒரு மாடல் வியன்னாவிலுள்ள கண்காட்சியகத்தில் இருக்கிறது.
கண்காட்சியகத்தைப் பார்த்துவிட்டு எபேசுவின் ஆர்டிமிஸ் தேவதையின் சிலையைப் பார்த்தால் எபேசுவிலிருந்த பூர்வ கிறிஸ்தவர்கள் எவ்வளவு சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்திருப்பார்கள் என்பதை நம் மனம் நிச்சயம் அசைபோடும். ஆவியுலகத் தொடர்பில் மூழ்கி மதத் தப்பெண்ணத்தால் குருடாக்கப்பட்டிருந்த பட்டணத்தில் அவர்கள் வாழ வேண்டியிருந்தது. ஆர்டிமிஸ் தேவதையை வழிபட்டவர்கள் ராஜ்ய செய்தியைக் கடுமையாக எதிர்த்தார்கள். (அப்போஸ்தலர் 19:19; எபேசியர் 6:12; வெளிப்படுத்துதல் 2:1-3) ஆதரிப்போர் அநேகர் இல்லாத இப்படிப்பட்ட சூழலிலும் மெய் வணக்கம் வேர்கொண்டது. பூர்வகால ஆர்டிமிஸின் வழிபாட்டை போலவே நம் நாளைய பொய் மதம் முடிவுக்கு வரும்போதும் உயிருள்ள கடவுளின் மெய் வணக்கம் நிச்சயம் நிலைத்து நிற்கும்.—வெளிப்படுத்துதல் 18:4-8.
[பக்கம் 26-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மக்கெதோனியா
கருங்கடல்
ஆசியா மைனர்
எபேசு
மத்தியதரைக் கடல்
எகிப்து
[பக்கம் 27-ன் படம்]
ஆர்டிமிஸ் கோயிலின் இடிபாடுகள்
[பக்கம் 28, 29-ன் படங்கள்]
1. செல்ஸஸ் நூலகம்
2. ஆரிடீ ‘குளோஸ்-அப்’ காட்சி
3. மிகப் பெரிய அரங்கிற்கு செல்லும் பளிங்கு சாலை