உங்களுக்குத் தெரியுமா?
காசு மாற்றுபவர்கள் ஏன் எருசலேம் ஆலயத்தில் இருந்தார்கள்?
▪ இயேசு தாம் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு, ஆலயத்தில் நடந்துவந்த பயங்கரமான ஓர் அநியாயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். அதைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘இயேசு ஆலயத்தில் . . . விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டும் இருந்த எல்லாரையும் வெளியே துரத்தினார்; காசு மாற்றுபவர்களின் மேஜைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். பின்பு அவர்களிடம், “‘என் வீடு ஜெப வீடு என்று அழைக்கப்படும்’ என எழுதப்பட்டிருக்கிறது. நீங்களோ அதைக் கொள்ளையர் குகையாக்குகிறீர்கள்” என்று சொன்னார்.’—மத். 21:12, 13.
முதல் நூற்றாண்டில் யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் பல்வேறு நாடுகளிலிருந்தும் நகரங்களிலிருந்தும் எருசலேமிலிருந்த ஆலயத்திற்கு வந்தார்கள்; அப்போது, தங்கள் நாட்டு நாணயங்களைக் கொண்டு வந்தார்கள். இருந்தாலும், வருடாந்தர ஆலய வரியைக் கட்டுவதற்கு... பலி செலுத்த வேண்டிய மிருகங்களை வாங்குவதற்கு... மனமுவந்து நன்கொடைகள் வழங்குவதற்கு... அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயங்களைத்தான் அவர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. ஆகவே, காசு மாற்றுபவர்கள் அவர்கள் கொண்டுவந்த பல்வேறு நாணயங்களை மாற்றிக்கொடுத்தார்கள், அதற்காகக் கட்டணம் வசூலித்தார்கள். யூத பண்டிகைகள் நெருங்கிவந்த சமயங்களில், ஆலயத்தில் புறதேசத்தாருக்குரிய பிரகாரத்தில் மேஜைகள் போட்டு கடைகள் வைத்தார்கள்.
ஆலயத்தை “கொள்ளையர் குகையாக்குகிறீர்கள்” என்று சொல்லி காசு மாற்றுபவர்களை இயேசு கண்டனம் செய்ததிலிருந்து, அவர்கள் எக்கச்சக்கமாய்க் கட்டணம் வசூலித்தார்கள் எனத் தெரிகிறது. (w11-E 10/01)